சீர்திருத்தவாதிகளில் ஒரு பிரிவினர் வேறொரு கருத்தை முன்øவக்கிறார்கள். ‘ஆரிய சமாஜத்தார்' என்பது அவர்கள் பெயர். நான்கு வர்ணங்களைக் கொண்ட சமூக அமைப்பே அவர்களின் லட்சியம். அதாவது, இந்தியாவில் இருக்கிற நாலாயிரம் சாதிகளையும் நான்கு வர்ணங்களாக சுருக்கி விட வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள். தங்கள் கொள்கையை கவர்ச்சி உள்ளதாக ஆக்கவும், தங்கள் கொள்கைக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்யவும் - தாம் கூறுகிற நான்கு வர்ணங்கள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல; ‘குணத்தை' அதாவது தகுதியையே அடிப்படையாகக் கொண்டது என்று விவேகமாகக் கூறுகிறார்கள்.

முதலாவதாக, ஆரிய சமாஜிகளின் நால்வர்ணத்தின் கீழ் இந்து சமூகத்தில் தனிமனிதனின் நிலை அவனுடைய தகுதியையே பொருத்ததாக இருக்குமானால் - பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற முத்திரைகளை மக்கள் மீது ஏன் சுமத்த வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கற்றறிந்த ஒரு மனிதனுக்கு பார்ப்பன முத்திரை குத்தப்படாமல் இருந்தாலும், அவன் கவுரவிக்கப்பட வேண்டும். சத்திரியன் என்ற பட்டம் கட்டப்படாத நிலையிலும், வீரன் ஒருவன் எல்லாராலும் மதிக்கப்பட வேண்டும். அய்ரோப்பிய சமூகம் தன் வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் நிரந்தரமான பட்டம் (சாதி முத்திரை) எதையும் சூட்டாமலே கவுரவித்து வரும்போது, இந்து சமூகத்துக்கு அது இயலாமல் போனது எப்படி என்பதே கேள்வி. இதை ‘ஆரிய சமாஜிகள்' எண்ணிப் பார்க்கவும் தயாராக இல்லை.

சாதிப் பெயர்களைக் கைவிட வேண்டும்

இந்த நிரந்தரப் பட்டங்களை (சாதிப் பெயர்) தொடர்வதற்கு வேறொரு ஆட்சேபøணயும் இருக்கிறது. மனிதர்களையும் பொருட்களையும் பற்றி மக்களின் எண்ணத்திலும் உணர்விலும் மனப்பாங்கிலும் ஏற்படும் மாறுதலே சீர்திருத்தம் என்பது. சில குறிப்பிட்ட பெயர்கள் சில குறிப்பிட்ட கருத்துகளோடும் உணர்வுகளோடும் இணைந் தவையாக உள்ளன. இந்தக் கருத்துகளும் உணர்வுகளுமே மனிதர்களைப் பற்றியும் பொருள்களைப் பற்றியும் தனிமனிதனின் மனப்போக்கு என்ன என்பதையும் தீர்மானிக்கின்றன. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் திட்ட வட்டமான, நிலையான ஒரு கருத்தை ஒவ்வொரு இந்துவின் மனதிலும் ஏற்படுத்தி இருக்கின்றன. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஏணிப்படி அமைப்பே அந்தக் கருத்து.

இந்தப் பெயர்கள் நீடிக்கின்ற வரை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகி÷யாரை பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளாக ஏணிப்படி வரிசையில் எண்ணிப் பார்க்கிற போக்கும், அதற்கு ஏற்றபடி நடந்து கொள்கிற போக்கும் இந்துக்களிடம் தொடரத்தான் செய்யும். இந்துக்களின் சிந்தனை யில் இந்தப் போக்கு இல்லாமல் போவதற்குப் பயிற்றுவித்தாக வேண்டும். ஆனால், பழைய சாதி முத்திரைகள் தொடர்ந்து நீடித்து மனிதனின் மனதில் பழைய கருத்துகளையே நினைவுபடுத்திக் கொண்டிருக்கையில் இது எப்படிச் சாத்தியம்?

மக்களின் மனதில் புதிய கருத்துகள் பதியவைக்கப்பட வேண்டுமென்றால், மக்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டியாக வேண்டும். பழைய சாதிப் பெயர்களையே தொடர்வது சீர்திருத்தத்தைப் பயனற்றது ஆக்கிவிடும். பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவினைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற முடைநாற்றம் வீசுகிற பெயர்களால், தகுதியை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணத்தை அழைப்பது சூழ்ச்சியே ஆகும்.

16

பழைய முத்திரைகளோடு கூடிய இந்த நான்கு வர்ணத்தை நான் அடியோடு வெறுக்கிறேன், எதிர்க்கிறேன். நால்வர்ண முறையை நான் எதிர்ப்பது, வெறும் உணர்வுகளின் அடிப்படையில் அல்ல. அதை நான் எதிர்ப்பதற்கு வலுவான காரணங்கள் என்னிடம் உள்ளன. இந்தத் திட்டத்தை நுணுக்கமாக ஆராய்ந்தால், ஒரு சமூ க அமைப்பு என்கிற முறையில் நால் வர்ண முறை நடைமுறை சாத்தியம் அற்றது என்பது எனக்கு தெளிவாகப் புரிகிறது. அது தீமை பயக்கக்கூடியது; பரிதாபகரமான தோல்வியை சந்தித்த ஒன்று.

சாதி - பிறப்பை அடிப்படையாகக் கொண்டது

நடைமுறையில் நான்கு வர்ணம், பல சிரமங்களை உண்டாக்கும். ஆரிய சமாஜத்தார் இதையும் எண்ணிப் பார்க்கவில்லை. சாதிக்கு அடிப்படையாக இருக்கிற கொள்கையும், வர்ணத்துக்கு அடிப்படையாக இருக்கிற கொள்கையும் வேறுவேறானவை. அவை அடிப்படையில் வேறுபட்டவை என்பது மட்டும் அல்ல; அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று எதிரானவையும் கூட. சாதி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. வர்ணம் தகுதியை அடிப்படையாகக் கொண்டது. தகுதியே இல்லாமல் பிறப்பின் அடிப்படையிலேயே அந்தஸ்தில் இருக்கிற மனிதர்களை, அந்த அந்தஸ்தை விட்டுவிடுமாறு நீங்கள் எப்படி கட்டாயப்படுத்தப் போகிறீர்கள்?

பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டுள்ள ஒரு மனிதனுக்கு, தகுதியின் அடிப்படையில் உரிய இடத்தை உங்களால் வாங்கித் தர முடியுமா? வர்ண அமைப்பை நிலைநிறுத்துவதற்கு, முதல் கட்டமாக நீங்கள் சாதி அமைப்பைத் தகர்த்து எறிந்தாக வேண்டி வரும். இது உங்களால் முடியுமா? பிறப்பை அடிப் படையாகக் கொண்ட நான்காயிரம் சாதிகளை, தகுதியை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணங்களாக சுருக்க உங்களால் எப்படி முடியும்? நால்வர்ண அமைப்பின் ஆதரவாளர்கள் சந்திக்க வேண்டி இருக்கும் முதல் பிரச்சனையே இதுதான்.

நால்வர்ண அமைப்பை நிலை நிறுத்துவதில் வெற்றிகாண விரும்பினால், அவர்கள் சந்திக்க வேண்டிய இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. மக்களை திட்டவட்டமான நான்கு வகுப்பினராகப் பிரிக்க முடியும் என்ற ஊகத்தின் அடிப்படையில் அமைந்தது நால் வர்ண அமைப்பு. நடைமுறையில் இது சாத்தியமா? இதைப்பொறுத்த மட்டிலும் நால்வர்ண கருத்து, பிளேட்டோவின் கருத்தோடு நெருங்கி உள்ளது. மக்கள் இயற்கையாகவே மூன்று பிரிவினராய் அமைந்து உள்ளதாக பிளேட்டோ நம்பினார். பிளேட்டோவைப் பொறுத்தமட்டில், 1. சிலருக்கு அடிப்படை வேட்கைகள் மேலோங்கி இருக்கும். எனவே, அவர்கள் தொழிலாளர்களாக / வணிகர்களாக உள்ளனர் 2. சிலருக்கு அடிப்படை வேட்கைகளுக்கும் மேலோக வீரதீர உணர்ச்சி மேலோங்கி இருக்கும். எனவே, இவர்கள் நாட்டின் போர் வீரர்களாகவும் உள்நாட்டு அமைதியின் காவலர்களாகவும் உள்ளனர் 3. பிறரிடம் பிரபஞ்ச தத்துவங்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் மிகுந்து காணப்படும். எனவே, இவர்கள் மக்களுக்கு நீதிகளை வகுத்துத் தருபவர்களாக உள்ளனர்.

நான்கு வெவ்வேறான வகுப்பினராக மக்களை வகைப்படுத்துவது சாத்தியம்தான் என்று நால்வர்ண அமைப்பு நம்பிவருகிறது. அந்த மட்டில் பிளேட்டோவின் ‘குடியரசு' என்ற நூல் எத்தகைய விமர்சனத்துக்கு ஆளானதோ, அதே விமர்சனம் நால்வர்ண அமைப்புக்கும் பொருந்தும். கறாரான ஒரு சில பிரிவுகளாக அனைத்து மக்களையும் பிரித்து அடைத்து விடும்போக்கு, மனிதனையும் மனிதனின் ஆற்றலையும் பற்றிய மிக மேலோட்டமான ஒரு கண்ணோட்டத்தையே குறிக்கிறது என்பதே - பிளேட்டோவைப்பற்றிய முக்கிய விமர்சனம் ஆகும்.

ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். அவன் ஒவ்வொரு தனிவகுப்பாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பிளேட்டோவிடம் இல்லை. எண்ணற்ற விதமான தன்மைகள் சமுதாயத்தில் உள்ளன. இந்தத் தன்மைகளில் சில பல அம்சங்களின் இணையே ஒரு தனிமனிதன். இதை பிளேட்டோ புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு தனிமனிதனிடம் குறிப்பிட்ட விதமான சில அறிவும் திறனும் உள்ளதாக அவர் நினைத்தார். இது தவறான ஒன்றாகும்.

நால்வர்ண அமைப்பு தோல்வியைத் தரும்

மக்களை தனித்தனியான ஒரு சில பிரிவுகளாகப் பிரிப்பது என்பது, மனிதனைப் பற்றிய மிக மேலோட்டமான கண்ணோட்டம். அப்படிப் பிரிப்பது தவறு என்று இன்றைய அறிவியல் உணர்த்தி உள்ளது. தனிமனிதர்களின் தன்மைகள் எண்ணற்ற விதத்தில் மாறக் கூடியதாக இருக்கின்றன. எனவே, மனிதர்களைப் பல்வேறு அடுக்குகளாகத் தரம்பிரித்து, அவர்களை அதற்கேற்ற விதமாக மட்டுமே பயன்படுத்துவது என்பது, அவர்களின் தன்மைகளை முழுமையாகப் பயன்படுத்துவதாகாது.

தனிமனிதன் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்னும் கருத்துக்கு ஏற்றபடி, மனிதர்களை தனித்தனி பெட்டிகளில் போட்டு அடைத்து வைப்பது, சாத்தியம் அற்றதாக இருப்பதால்தான் - பிளேட்டோவின் ‘குடியரசுத்' திட்டம் தோல்வியைத் தழுவியது.

இதே காரணத்துக்காகவே நால்வர்ண அமைப்பும் தோல்வி அடையும். தொடக்கத்தில் நான்கு வகுப்புகளாக இருந்தவை இப்போது நான்கு ஆயிரம் சாதிகளாகப் பிரிந்துள்ள நிலையில், மக்களை திட்ட வட்டமான நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது சாத்தியமற்றது.

நால்வர்ண அமைப்பை நிறுவுவதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. நால்வர்ண அமைப்பு நிறுவப்பட்டு விட்டாலும்கூட, அதைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது எப்படி என்பதே அந்தப் பிரச்சனை. நால்வர்ண அமைப்பு வெற்றிகரமாக இயங்குவதற்கு, அந்த அமைப்பை அங்கீகரிக்கக் கூடிய ஒரு குற்றவியல் சட்ட அமைப்பு ஒரு முக்கியமான தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வர்ணமாற்றம் என்பது, நால்வர்ண அமைப்பை ஆதரிப்பவர்கள் நிரந்தரமாக சந்திக்க வேண்டிய பிரச்சனையாக இருந்துவரும். எனவே, வர்ணத்தை மாற்றிக் கொள்வது தண்டிக்கப்பட வேண்டிய ஒரு குற்றமாக ஆக்கப்பட்டால் ஒழிய, மக்கள் தத்தம் வகுப்புகளில் நீடித்து இருக்க மாட்டார்கள்.

இப்படி மனித இயற்கைக்கு முற்றிலும் மாறானதாக இருப்பதால், நால்வர்ண அமைப்பு அடியோடு நொறுங்கிப் போகும். தன் சொந்த பலத்தால் மட்டுமே அந்த அமைப்பு நீடிக்க முடியாது. அதற்குக் குற்றவியல் சட்டங்களின் அங்கீகாரம் வேண்டும். ராமாயணத்தில் ராமன் சம்புகனைக் கொல்வதாக வரும் கதை இதைத்தான் நிரூபிக்கிறது. சம்புகனை காரணம் எதுவும் இல்லாமல் ராமன் கொன்றதாக சிலர் நிந்திப்பதாகத் தோன்றுகிறது. சம்புகனைக் கொன்றதற்காக ராமனைத் தூற்றுவது என்பது மொத்த நிலைமையையும் தவறாகப் புரிந்து கொள்வதாகும்.

ராம ராஜ்யம் என்பது, நால்வர்ண அமைப்øப அடிப்படையாகக் கொண்ட ஒரு ராஜ்யம். ஓர் அரசன் என்கிற முறையில் நால்வர்ண அமைப்பைக் கட்டிக்காக்க வேண்டியது ராமனின் கடமையாக இருந்தது. சம்புகன் தன் வர்ணமாகிய சூத்திர வர்ணத்தை விட்டு பார்ப்பனனாக மாற விரும்புகிறான். எனவே, சம்புகனைக் கொல்வது, ராமன் என்கிற அந்த அரசனின் கடமையாகிறது. ராமன் சம்புகனைக் கொன்றதற்கான காரணம் இதுதான். ஆக, நால்வர்ண அமைப்பைக் கட்டிக்காக்க குற்றவியல் அதிகாரம் தேவையாகிறது என்பதையும் இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. குற்றவியல் அதிகாரம் தேவை என்பது மட்டுமல்ல; குற்றத்துக்கு வழங்கப்படுகிற தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.

எனவேதான், ராமன் சம்புகனுக்கு குறைவான தண்டனையை அளிக்கவில்லை. அதனால்தான் வேதம் ஓதுகிற சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்பதும், வேதம் ஓதப்படுவதைக் கேட்கிற சூத்திரனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது போன்ற - கடுமையான தண்டனைகளை மநுஸ்மிருதி விதித்திருக்கிறது. தங்களால் மக்களை நான்கு தனித்தனி வர்ணங்களாக வெற்றிகரமாகப் பிரித்து விட முடியும் என்றும், மநுஸ்மிருதி விதித்திருக்கும் கடும் தண்டனைகளை மீண்டும் அதே தீவிரத்துடன் நடைமுறைப்படுத்துமாறு - இந்த இருபதாம் நூற்றாண்டின் நவீன சமூகத்தினரைத் தூண்டிவிடத் தங்களால் முடிகிறது என்றும் நால்வர்ண அமைப்புக்கு ஆதரவாக இருப்பவர்களால் உறுதியாகக் கூற முடியுமா?

பெண்களை மதத்தலைவர்களாக இந்து மதம் ஏற்குமா?

நால்வர்ண அமைப்பை ஆதரிப்பவர்கள், தம் அமைப்பில் பெண்களின் நிலை என்ன என்பதையும் எண்ணிப் பார்க்கவில்லை. பெண்களும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்படுவார்களா அல்லது தம் கணவரின் வர்ணம் எதுவோ, அந்த வர்ணத்தில் இருக்க அனுமதிக்கப்படுவார்களா? ஒரு மனிதரின் சமூக நிலை அவருடைய சொந்தத் தகுதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது, நால்வர்ண அமைப்பின் அடிப்படைக் கொள்கை.

அப்படி இருக்கையில், ஒரு பெண்ணின் சமூக நிலை அவரது திருமணத்தினால் நிர்ணயிக்கப்படும் என்றால், அந்த அடிப்படைக் கொள்கைக்கு என்ன கதி ஏற்படும்? அல்லது பெண்களை அவர்கள் சொந்தத் தகுதிக்கு ஏற்றபடி பிரிக்க வேண்டும் என்றால், அவ்வாறு பிரிப்பது பெயரளவில்தான் இருக்குமா அல்லது உண்மையாக இருக்குமா? பெயரளவுக்குத்தான் என்றால் அதனால் பயன் இருக்காது. இந்நிலையில் நால்வர்ணத்தை ஆதரிப்பவர் அவ்வமைப்பு பெண்களுக்கு அல்ல என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியதாகும். உண்மையாகத்தான் என்றால், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ள நால்வர்ண ஆதரவாளர்கள் தயாரா? பெண்களை மதகுருக்களாகவும் படைவீரர்களாகவும் ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

பெண்களை ஆசிரியர்கள் ஆகவும் வழக்கறிஞர்களாகவும் ஏற்றுக் கொள்ள இந்துக்கள் பழகிவிட்டனர். பெண்களை சாராயம் காய்ச்சுகிறவர்களாகவும் கசாப்புக் கடைக்காரர்களாகவும் ஏற்றுக் கொள்ளவும் இந்து சமூகம் பழகிவிடக் கூடும். ஆனால், பெண்களை மதகுருக்களாகவும் படை வீரர்களாகவும் இருக்க அனுமதிக்கும் என்று சொல்ல உண்மையிலேயே துணிச்சல் வேண்டும். ஆனால், பெண்களுக்கும் நால்வர்ணப் பிரிவினையை ஏற்படுத்துவதன் தர்க்க ரீதியான பின் விளைவு அதுவாகத்தான் இருக்கும். இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது, நால்வர்ண அமைப்பை மீண்டும் வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என நம்புகிறவன் - எதிர்பார்க்கிறவன் - பிறவி முட்டாளாகத்தான் இருக்க முடியும்.
Pin It