சாதியினால் இந்துக்களின் தர்ம நெறிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. பொதுநலம் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்றுவிட்டது. உதவுகின்ற உணர்ச்சியையும் அது அழித்துவிட்டது. மக்களின் பொதுக்கருத்து ஒன்று ஏற்படுவதையும் சாதி சாத்தியம் அற்றதாக்குகிறது. இந்து மதத்தவன் ‘பொதுமக்கள்' என்று கருதுவது, தன் சாதியினரையே; தன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாக இருக்கிறான். தன் சாதிக்கு மட்டுமே அவன் விசுவாசம் உள்ளவனாக இருக்கிறான்.

நல்ல இயல்புகளை சாதி அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக அல்லாமல், இங்கு சாதி ஒழுக்கமே இருக்கிறது. இரக்கத்துக்கு உரியவர்களுக்கு இரங்கும் எண்ணம் சாதியில் இல்லை. தகுதியானவர்களைப் பாராட்டுவதும் இல்லை. தேவை உள்ளவர்களுக்குக் கொடுப்பதும் இல்லை. இதனால் துன்பத்தில் வருந்துவோரை எவரும் திரும்பிப் பார்ப்பதும்கூட இல்லை. தர்ம உணர்ச்சி இருக்கிறது. அது தம் சாதி யினரோடு தொடங்கி, தம் சாதியினரோடு முடிந்து விடுகிறது. இரக்க உணர்ச்சி இருக்கிறது. அது மற்ற சாதி மனிதர்களிடம் காட்டப்படுவதில்லை. நல்லவரும் உயர்ந்தவருமான பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து அங்கீகரிப்பானா?

சாதிக்காக தேசத் துரோகம் செய்யும் இந்துக்கள்

தலைவன் தன் சாதியைச் சேர்ந்தவனாக இருந்தால் மட்டுமே, ஓர் இந்து அந்தத் தலைவனின் வழி நடப்பான். (‘மகாத்மா'வின் கதை வேறு). தலை வன் பார்ப்பனராய் இருந்தால் மட்டுமே - பார்ப்பனர் அந்தத் தலைவனைப் பின்பற்றி நடப்பான். ‘காயஸ் தன்' தலைவனை மட்டுமே ‘காயஸ்தன்' பின்பற்றுவான். ஒரு மனிதனின் சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவனுடைய திறமையைப் போற்றுகிற தன்மை இந்துக்களிடம் இல்லை. திறமை உள்ளவன் தன் சாதிக்காரனாக இருந்தால் மட்டுமே திறமையைப் போற்றும் தன்மை இருக்கிறது. சாதி உணர்வின் காரணமாகவே "ஒருவன் நல்லவனாக இருந்தாலும் சரி கெட்டவனாக இருந்தாலும் சரி, அவன் செய்தது சரியாக இருந்தால் என்ன, தவறாக இருந்தால் என்ன'' என்கிற மிக மோசமான மனப்பான்மை மேலோங்கி வருகிறது. நல்லவைகளுக்கு ஆதரவாக நிற்பதா, தீயவைகளுக்கு ஆதரவாக இல்லாமல் போவதா என்பதல்லாமல், சாதிக்கு ஆதரவாக இருப்பதா, இல்லையா என்பதுதான் பிரச்சனையாக ஆகிவிடுகிறது. தம் சாதி நலன்களுக்காக இந்துக்கள் தேசத்துரோகம் செய்து விடவில்லையா?

14

சாதி உருவாக்கி உள்ள மோசமான விளைவுகளை நான் விளக்கமாகவே கூறிவிட்டேன். இதைக் கேட்டு உங்களில் சிலர் சலித்துப் போயிருந்தால், அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இனி பிரச்சினையின் ஆக்கப்பூர்வமான பகுதிபற்றி பேச முற்படுகிறேன்.

சாதியை நீங்கள் விரும்பவில்லையானால், நீங்கள் உருவாக்க விரும்புகிற உன்னத சமூகம் வேறு என்ன என்ற கேள்வி கிளம்பும். என்னைக் கேட்டால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகமே நான் உருவாக்க விரும்புவது. ஏன் அத்தகைய சமூகம் ஏற்படக்கூடாது? சகோதரத்துவத்துக்கு என்ன எதிர்ப்பு இருந்து விட முடியும்? அப்படி எதையும் என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

சகோதரத்துவம் ஜனநாயகத்தின் மறுபதிப்பு

உன்னத சமூகம் இயக்கத்தன்மை உள்ளதாக இருக்க வேண்டும். சமூகத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றங்களை மற்ற பகுதிகளுக்குப் பரப்புவதற்கான வழிவகைகள் கொண்டதாக இருக்க வேண்டும். அந்தச் சமூகத்தில் பலவகைப்பட்ட கருத்துகளும் திட்டமிட்டுப் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கும் - பரப்பப்படுவதற்கும் இடம் இருக்க வேண்டும். மற்ற அமைப்புகளோடு தொடர்பு கொள்வதற்கான பல வகைப்பட்ட சுதந்திரமான வழிகள் இருக்க வேண்டும். அதாவது, சமூகக் கலப்பு ஏற்பட வேண்டும். அதற்குப் பெயர்தான் சகோதரத்துவம். சகோதரத்துவம் என்பது, ஜனநாயகத்தின் மற்றொரு பெயர்தான்.

ஜனநாயகம் என்பது, ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. முக்கியமாக அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை. வழி வழியாகக் கொடுக்கப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு அது. சாரத்தில் அது சமூக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கே ஆகும்.

தன்னுரிமையை எதிர்க்கிறவர் யாருண்டு? மனிதர்கள் தன்னுரிமையுடன் இயங்கும் - வாழும் - உரிமையை சிலர் மறுக்கிறார்கள். ஆனால், உழைத்து உண்டு உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான கருவிகளையோ, பொருள்களையோ, சொத்தையோ வைத்திருக்கும் உரிமையை அவர்கள் எதிர்ப்பதில்லை. மனிதரிடம் அமைந்திருக்கிற ஆற்றல்களை, திறமைக்கேற்ற முறையில் பயன்படுத்தி உயர்வடையும் உரிமையை ஏன் அனுமதிக்கக் கூடாது?

சாதியின் ஆதரவாளர்கள், சொத்துரிமையையும் உயிர் வாழும் உரிமையையும் அங்கீகரிக்கிறார்கள். ஆனால், ஒருவர் தன் தொழிலைத் தானே தேர்ந்தெடுக்கும் தன்னுரிமையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவதில்லை. இத்தகைய தன்னுரிமையை மறுப்பது, அடிமைத்தனத்தை நீட்டிப்பதே ஆகும். ஏனெனில், சட்டப்பூர்வமாக அடிமைகளாய் வைத்திருப்பது மட்டும்தான் அடிமைத்தனம் என்பதில்லை. தன் நடத்தையை கட்டுப்படுத்துகிற விதமான மற்றவர்களின் நோக்கங்களுக்கு, ஒருவர் உட்பட வேண்டும் என்று நிர்பந்திக்கிற சமூக நிலைமையும் அடிமைத்தனமே ஆகும். சட்டப்பூர்வ அடிமைத்தனம் உருவாகி விடுகிறது. சிலர் தம் விருப்பத்துக்கு மாறாக விதிக்கப்பட்ட தொழிலையே செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் நிலவுகிற சாதி அமைப்பு போன்ற அமைப்புகளில், இவ்வித அடிமைத்தனம் காணப்படுகிறது.

சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் பதில் சொல்லட்டும்

சமத்துவத்துக்கு மறுப்பு இருக்க முடியுமா? சமத்துவம் என்கிற முழக்கமே பிரெஞ்சுப் புரட்சியின்போது முன்வைக்கப்பட்ட முழக்கங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய முழக்கம். சமத்துவத்துக்கு எதிராகக் கூறப்படும் வாதங்கள் பொருத்தமானவையாக இருக்கலாம். எல்லா மனிதர்களும் சமமானவர்கள் இல்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டியதே. ஆனால், அதனால் என்ன பலன்? சமத்துவம் என்பது கற்பனையாக இருக்கலாம். இருப்பினும், அதையே வழிகாட்டும் லட்சியமாக ஏற்றாக வேண்டும்.

ஒருவருடைய ஆற்றல் - 1. இயற்கையாக அøமயும் உடல்வாகு 2. பெற்றோரின் வளர்ப்பு, கல்வி, அறிவியலறிவு போன்ற ச மூக ரீதியாக அடையும் திறன்கள் 3. தன்சொந்த முயற்சி ஆகியவற்றை சார்ந்து உள்ளது. இந்த மூன்று அம்சங்களிலும் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் மனிதர்கள் சமநிலை இல்லாதவர்கள்தான். ஆனால், மனிதர்கள் தமக்குள் சமநிலை இல்லாதவர்களாக இருப்பதாலேயே - நாம் அவர்களை ஏற்றத்தாழ்வோடுதான் நடத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி. சமத்துவத்தை எதிர்ப்போர் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். மக்கள் மேற்கொள்கிற முயற்சிகள் சமமாக இல்லாதவரை, அவர்களை சமமாக நடத்த முடியாது என்பதை தனிமனித வாத பார்வையில் இருந்து வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தனிமனிதனையும் முழுமையாக வளர்த்தெடுப்பதற்கு, முடிந்த அளவுக்கு ஊக்கம் தருவதும் விரும்பக் கூடியதே.

ஆனால், முதல் இரண்டு அம்சங்களில் மனிதர்களிடையே உள்ள சமமற்ற நிலைக்காக அவர்களை ஏற்றத் தாழ்வாக நடத்துவது சரிதானா? பிறப்பு, வளர்ப்பு, குடும்பப் பெருமை, தொழில் தொடர்புகள், பரம்பரைச் சொத்து முதலியவற்றைப் பெற்றிருக்கிறவர்களே - இந்தப் பந்தயத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது வெளிப்படை. இப்படிப்பட்ட சூழலில் தேர்வானது தகுதி அடிப்படையில் அமையாது. சிறப்பான உரிமைகளைப் பெற்று இருப்பவர்களைத் தேர்ந்தெடுப்பதாகவே அமையும். எனவே, நாம் எல்லா மக்களையும் முதலிரண்டு அம்சங்களிலும் முடிந்தவரை சரிநகர் சமானமாகக் கருத வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஒரு சமூக அமைப்பானது, தனக்குத் தேவையான - தகுதியான மனிதர்களைப் பெருமளவில் தேர்ந்தெடுக்க விரும்பும் பட்சத்தில், தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அது முடிந்தவரை எல்லாரையும் சமநிலை கொண்டவர்களாக ஆக்கினால் மட்டும்தானே அது சாத்தியம் ஆகும்? ஆகவேதான் நம்மால் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்கிறேன்.

சமத்துவத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதற்கான இன்னொரு காரணம் இருக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களின் ஒட்டுமெõத்த நலனைக் கருத்தில் கொண்டே திட்டமிட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு தனிமனிதரின் குணாம்சத்தையும் பிரித்துப் பார்த்து, அதற்கு ஏற்ற மாதிரி அவர்களைத் தனித் தனியாக மதிப்பிடும் அளவுக்கு அவர்களுக்கு நேரமோ, அறிவோ இருப்பதில்லை.

எனவே, எளிமையான - நடை முறைக்கு ஏற்ற ஒரு பொது விதியை அவர் பின்பற்றியாக வேண்டும். அந்த விதி எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக நடத்துவது என்பது, எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்பதால் அல்ல. மக்களைப் பலவிதமாக கறாராக வகை பிரிப்பது சாத்தியம் இல்லை என்பதுதான். சமத்துவம் என்கிற கோட்பாடு போலியானது என்பது அப்பட்டமான உண்மை. ஆனாலும், பொதுவாகப் பார்க்குமிடத்து மேலே சொன்ன வழியிலேயே அரசியலில் ஒருவர் செயல்பட முடியும். ஏனெனில், இந்த வழியே நடை முறை சாத்தியம் ஆனதாக இருக்கிறது.
Pin It