I

சூத்திரர்கள் என்பவர்கள் யார், அவர்கள் எவ்வாறு நான்காவது வருணத்தினராயினர் என்பதற்கான விளக்கக் குறிப்பு எதுவும் பிராமண எழுத்தாளர்கள் தருவதில்லை என்பதை இதுவரை கூறியவற்றிலிருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, இந்த விஷயம் குறித்து மேலைய எழுத்தாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம். சூத்திரர்களின் மரபு மூலம் குறித்து மேலைய எழுத்தாளர்கள் ஒரு திட்டவட்டமான கோட்பாட்டைக் கொண்டுள்ளனர். இந்தக் கோட்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர்கள் அனைவரும் உடன்பாடான கருத்தைக் கொண்டிருக்க வில்லை என்றாலும் சில விஷயங்களில் அவர்களிடம் ஓரளவு ஒற்றுமை காணப்படுகிறது. அத்தகைய விஷயங்கள் வருமாறு:

1) வேத இலக்கியத்தை, வேத நூல்களைத் தோற்றுவித்த மக்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.

2) ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்து இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள்.

3) இந்தியாவின் பூர்வீக மக்கள் தாசர்கள் மற்றும் தசியுக்கள் எனப்படுபவர்கள்; இவர்கள் இனவழியில் ஆரியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.

4) ஆரியர்கள் வெள்ளை இனத்தினர். தாசர்களும் தசியுக்களும் கறுப்பு இனத்தினர்.

5) ஆரியர்கள் தாசர்களையும் தசியுக்களையும் வெற்றி கண்டனர்.

6) தாசர்களும் தசியுக்களும் ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு, அடிமைகளாக்கப்பட்ட பிறகு சூத்திரர்கள் என அழைக்கப்பட்டனர்.

7) ஆரியர்கள் நிறப் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்தனர்; எனவே சதுர்வருண அமைப்புமுறையை உருவாக்கினர்; இதன்மூலம் வெள்ளை இனத்தினரைத் தாசர்கள், தசியுக்கள் போன்ற கறுப்பு இனத்தினரிடமிருந்து பிரித்தனர்.

ambedkar 267இவைதாம் இந்தோ-ஆரிய சமுதாயத்தில் சூத்திரர்களின் மரபுமூலத்தையும் நிலையையும் குறித்து மேலைய கோட்பாட்டில் அடங்கியுள்ள பிரதான அம்சங்களாகும். இந்தக் கோட்பாடு ஏற்புடையதா, இல்லையா என்பது வேறுவிஷயம். ஆனால் ஒரு சமூக நிகழ்வுப்போக்கை தெய்வீக அருள் நிகழ்வுப்போக்காகப் படம் பிடித்துக் காட்டுவதற்குப் பிராமணிய கோட்பாடுகள் தரும் நீண்ட, சலிப்பூட்டும், அலுப்பூட்டும் விளக்கங்களைப் படித்த பிறகு, ஒரு சமூக உண்மை குறித்து இயல்பான விளக்கம் தரமுயலும் ஒரு கோட்பாடு நம் முன்னர் இருப்பது கண்டு எவரும் நிம்மதி உணர்வு பெறாமல் இருக்க முடியாது என்று இந்த மேலைய கோட்பாட்டைப் பற்றி நிச்சயமாகக் கூறமுடியும்.

பிராமனியக் கோட்பாடுகளைப் பொறுத்தவரையில் மதிகேடான ஒரு மனத்திலிருந்து உதித்த பொருளற்ற, விவேகமற்ற உணர்ச்சி கொந்தளிப்புகள் என்று கூறுவதைத் தவிர அவை குறித்து வேறு எதுவும் சொல்வதிற்கில்லை. இந்தக் கோட்பாடுகள் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகின்றன. நவீன கோட்பாட்டைப் பொறுத்தவரையில், தவறிப்போன வழியைக் கண்டுபிடிக்கவாவது குறைந்தபட்சம் அது உதவுகிறது.

இந்தக் கோட்பாட்டின் தகைமையைச் சோதிப்பதற்கு அதனைப் பகுதிப் பகுதியாகப் பரிசீலிப்பதும், ஒவ்வொரு பகுதியும் எந்த அளவுக்குச் சான்றை ஆதாராமாகக் கொண்டிருக்கிறது என்பதைக் காண்பதுமே மிகச் சிறந்த வழியாகும். இந்தக் கோட்பாட்டின் முழுக்கட்டுமானமும் ஆரிய இனத்தைச் சேர்ந்த ஒருவகை மக்கள் வாழ்ந்தார்கள் என்ற அனுமானத்தின் அடித்தளத்தின்மீது அமைந்திருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினையைப் பற்றி முதலில் பரிசீலிப்பது உசிதமாக இருக்கும்.

ஆரிய இனம் என்பது என்ன? ஆரிய இனம் குறித்த பிரச்சினையை ஆராய்வதற்கு முன்னர் “இனம்” என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பதை நிச்சயித்துக் கொள்ளவேண்டும். இந்தப் பிரச்சினையை இங்கு எழுப்புவது அவசியமாகிறது. ஏனென்றால் ஒரு மக்களை இனம் என்று தவறாக எடுத்துக்கொள்வது சாத்தியமே. இந்த தவறுக்கு மிகச் சிறந்த உதாராணமாக இருப்பவர்கள் யூதர்கள். யூதர்கள் ஓர் இனம் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். வெளிப்பார்வைக்கு அவர்கள் இவ்வாறு ஓர் இனமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆராய்ச்சி வல்லுநர்களின் தீர்ப்பு என்ன? யூதர்களைப் பற்றிப் பேராசிரியர் ரிப்ளே (ரிப்ளே டபிள்யூ. இ. ஐரோப்பாவின் இனங்கள், பக்கம் 400) பின்வருமாறு கூறுகிறார்;

“நமது இறுதிமுடிவு இதுதான்: இது புதிராக, விந்தையாக இருந்தாலும் உண்மை என்று உறுதிகூறுகிறோம். யூதர்கள் ஓர் இனமல்ல. மக்கள்திரள்தான். இதனை அவர்களது முகங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. தனித்துவமான முறையில் அவர்கள் பெற்றிருக்கும் இதர இயல்புகளைப் பொறுத்தவரையில் – அவை கணிசமாக உள்ளன – மூதாதையர்களின் வழியிலல்லாமல் தலைமுறை தலைமுறையாக அவர்களே உருவாக்கிக் கொண்டவையாகும்.”

இனம் என்பது என்ன? இனம் என்பதை சில குறிப்பிட்ட பண்புக்கூறுகளை மரபு ரீதியாகப் பெற்ற ஒரு மக்கள் தொகுதி எனக் கூறலாம். பின்கண்ட பண்புக்கூறுகளைக் கொண்ட மக்களை ஓர் இனம் என்று ஒரு சமயம் கருதப்பட்டது: 1. தலையின் வடிவம், 2. ரோமம் மற்றும் கண்களின் நிறம், 3.தோலின் நிறம், 4. உடல்வாகு. நிறமும் உடல்வாகுவும் தட்பவெட்ப நிலைக்கும் உறைவிடத்துக்கும் ஏற்ப மாறக்கூடிய இயல்புகள், எனவே, மக்களின் இனத்தை நிர்ணயிப்பதற்கு அவற்றை ஓர் அளவுகோலாகக் கொள்ளக்கூடாது என்ற பொதுவான கருத்து இன்று நிலவுகிறது. ஒரே நிலையான அம்சம் மனித தலையின் அமைப்பு வடிவம்தான். இவ்வாறு கூறும்போது தலையின் நீளம், அகலம், உயரம் முதலிய பொதுப் பரிமாணங்களையே இங்கு குறிப்பிடுகிறோம். மக்களின் இனத்தை நிர்ணயிப்பதற்கு மனித இன ஆராய்ச்சியாளர்களும் மனித உடலமைப்பு ஆராய்ச்சியாளர்களும் மனிதனது தலையின் அமைப்பையே மிகச் சிறந்த அளவுகோலாகக் கொள்கின்றனர்.

ஒரு தனிநபரது இனத்தை நிர்ணயிப்பதற்குத் தலையின் வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதை மனித இன ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஞ்ஞானமாக உருவாக்கி இருக்கின்றனர். இந்த விஞ்ஞானம் மனித உடல் சார்ந்த அளவை இயல் விஞ்ஞானம் எனப்படுகிறது. இந்த உடல் சார்ந்த அளவை இயல் விஞ்ஞானம் தலையில் அமைப்பை நிர்ணயிப்பதற்கு இரண்டு வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது.

அவை: 1.மண்டை ஓட்டின் நீளத்துக்கும் அகலத்துக்கும் இடையே உள்ள சதவீத அளவைக் காட்டும் குறியீடு. 2. முகத்தின் அளவைக் காட்டும் குறியீடு. இந்தக் குறியீடுதான் இனத்தைப் புலப்படுத்துகிறது. முதலாவது குறியீடு செவிகளுக்கு மேலே தலையின் அகலத்தை முன் நெற்றியிலிருந்தும் பின்பக்கம் வரையுள்ள அதன் நீளத்தை சதவீதத்தில் குறிப்பதாகும். இந்த நீளத்தை 100 என்று வைத்துக் கொண்டால், அகலம் அதன் ஒரு பின்னமாக கணிக்கப்படுகிறது. தலை விகிதாசாரப்படிபரந்ததாகக் காணப்படும்போது அதாவது மேலிருந்து கீழே பரந்ததாகக் காணப்படும்பொழுது – அதாவது மேலிருந்து கீழே பார்க்கையில் முற்றிலும் வட்டவடிவில் தென்படும்போது – இந்தக் குறியீடு அதிகரிக்கிறது. இந்தக் குறியீடு 80க்கு மேல் உயர்ந்தால் அது குறுந்தலை எனப்படும்.

75க்குக் கீழ் தாழ்ந்தால் நீண்டதலை எனப்படும். குறியீடு 75க்கும் 80க்கும் இடைப்பட்டதாக இருக்குமாயின் அது நடுத்தரத்தலை எனப்படும். இவை தொழில்நுட்பப்பதங்கள். இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பரிசீலிக்கப்படும்போது, இந்தப் பதங்கள் ஆய்வு நூல்களில் அடிக்கடி தோன்றும். இந்தப் பதங்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதை அறியாதவர்களால் இது குறித்த விவாதத்தை அறிவுத்திறத்தோடு புரிந்துகொள்வது மிகவும் கடினம். எனவே, இவற்றைச் சற்று எளியமுறையில் விவரிப்பது பயனுள்ளதாக இருக்கும். நடுத்தர தலை என்பது மண்டை ஓட்டின் அகலம் அதன் நீளத்தில் ஐந்தில் நான்கு பங்குக்கும் கீழே இருந்தால் அது நீண்ட தலையைக் குறிக்கும்.

முகக் குறியீடு என்பது தலை மற்றும் முக அமைப்பின் வீதாசாரங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர சம்பந்தத்தைக் குறிக்கிறது. பெரும்பாலானவர்கள் விஷயத்தில் தலை பரந்ததாக இருந்தால் முகம் உருண்டதாக இருக்கும்; நெற்றியிலிருந்து முகவாய்க் கட்டை வரையிலான உயரத்துடன் ஒப்பிடும்போது கன்ன எலும்புகள் பெரியவையாக இருக்கும். அளவுகள் எடுப்பதில் ஒருமித்த கருத்து இல்லாததன் காரணமாக சரியானபடி ஒப்பீடுகள் செய்வது கடினமாக இருக்கிறது. இருப்பினும் நீண்ட தலை நீள்முகம், குறுந்தலை வட்டமுகம் என்ற விதியைக் கடைப்பிடிப்பது உசிதமாக இருக்கும்.

இனங்கள் பற்றி ஆராய்வதில் பேராசிரியர் ரிப்ளே மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். மனித உடல் சார்ந்த அளவை இயல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அதாவது மண்டை ஓட்டின் அளவுக் குறியீடு, முக அமைப்புக்குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஐரோப்பிய மக்கள் மூன்று இனங்களைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். அவரது முடிவுகள் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. (ரிப்ளே, ஐரோப்பிய இனங்கள், பக்கம் 121.)

இனம் என்ற பதத்தின் நேர் அர்த்தத்தில் பார்க்கும்போது ஆரிய இனம் என்று ஒன்றிருக்கிறதா? இது விஷயத்தில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவதாகத் தோன்றுகிறது. ஆரிய இனம் இருப்பதை ஒரு கருத்து ஆதரிக்கிறது. இதன்படி ஆரிய இனத்தைச் சேர்ந்த ஒருவரது அங்க அடையாளங்கள் பின்வருமாறு இருக்கும்:

ஆரிய இனவகையைச் சேர்ந்தவரது தலை நீண்டிருக்கும்; மூக்கு நேராக, நேர்த்தியுடன் செதுக்கப்பட்டது போன்றிருக்கும்; முகம் நீண்டு செவ்வொழுங்கோடு குறுகியதாக இருக்கும்; உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்தவையாக இருக்கும்; காது, மூக்கு, நெற்றியிடையேயான கோண அளவு தூக்கலானதாக இருக்கும். உயரமான ஆகுருதி; பருமனாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் ஒரே சீரான நல்ல உருவமைப்பு.

மற்றொரு கருத்து பேராசிரியர் மாக்ஸ் முல்லருடையது. அவரது கருத்துப்படி இந்தச் சொல் மூன்று வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. மொழி விஞ்ஞானம் என்று தலைப்பில் அவர் ஆற்றிய உரைகளில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

ஆர் அல்லது ஆரா என்னும் சொற்களில் உழுது பண்படுத்திய நிலத்தின் மிகத் தொன்மையான பெயர்களில் ஒன்றைக் காண்கிறேன். இந்தச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து மறைந்துவிட்டன. ஆனால் கிரேக்க மொழியில் எரா என்னும் சொல்லாக அவை நிலைத்து நின்றுவிட்டன. இதிலிருந்து ஆரிய என்னும் பதம் ஆரம்பத்தில் நில உரிமையாளர் அல்லது நிலசாகுபடியாளரையும் வைஸ் என்னும் பதத்திலிருந்து தோன்றிய வைசிய என்னும் சொல் குடும்பத் தலைவரையும் குறிப்பதாக இருந்திருக்க வேண்டும். மனுவின் புதல்வியின் பெயரான இதா என்பது பண்படுத்தப்பட்ட நிலத்தின் மற்றொரு பெயராகும்; அநேகமாக இது ஆரா என்னும் சொல்லின் திரிபாக இருக்கக்கூடும்.

ஐரோப்பிய இனங்கள்

  தலை முகம் ரோமம் கண்கள் உடல்வாகு மூக்கு
1.டியூட்டானிக் இனம் நீண்டது நீண்டது அடர்த்தியற்றது நீலம் உயரமானது குறுகியது
2.ஆல்பைன் (கெல்டிக்குகள்) வட்டமானது பரந்தது செந்தவிட்டு நிறம் மங்கலான பழுப்பு நிறம் நடுத்தர பருமன்

பரந்து அகன்றது

3.மத்திய தரைக் கடல் பகுதி யைச் சேர்ந்த இனத்தினர் நீண்டது நீண்டது தவிட்டு நிறம் அல்லது கறுப்பு கறுப்பு நடுத்தரமான ஒல்லி

அதிகம் பரந்து அகன்றது

நிலத்தை உழுவது அல்லது பயிரிடுவது என்னும் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இது இரண்டாவதொரு பொருளிலும் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து பேராசிரியர் மாக்ஸ் முல்லர் பின்கண்டவாறு கூறுகிறார்:

ஆரிய என்பதன் சொல்லாக்க விளக்கம் நிலத்தை உழுபவன் அல்லது பயிர் செய்பவன் என்பதைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும். துரேனிய இனத்தவருக்கு மாறான முறையில் ஆரியர்களே இந்த பெயரை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டும என்று தோன்றுகிறது. துரா என்னும் சொல் குதிரை வீரரின் மின்னல் வேகத்தை குறிக்கிறது

மூன்றாவதாக ஆரிய என்னும் இந்த சொல் வைசியர்களைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் அப்போது மக்களில் பெரும்பகுதியினராக இருந்துவந்தனர். இந்தக் கருத்துக்கு பேராசிரியர் மாக்ஸ் முல்லர் பாணினியை (iii.i.103) ஆதாரமாகக் கொள்கிறார். அடுத்து இதில் நான்காவதொரு கருத்தும் உள்ளது. ஆரிய என்னும் சொல் பிற்காலத்தில் தோன்றியது என்பதே அக்கருத்து. ‘உயர்குடி மரபுமூலம் கொண்டவர்கள்’ என்று இதற்குப் பொருள்.

எனினும் ஆரிய இனம் குறித்த பிரச்சினையில் மாக்ஸ் முல்லர் இவற்றை எல்லாம் விட மிக முக்கியமான ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறிவதாவது: (சொற்களின் வரலாறு, பக்கங்கள் 89 மற்றும்120-121)

குருதி தொடர்பைப் பொறுத்தவரையில் ஆரிய இனம் என்று எதுவும் இல்லை; விஞ்ஞான மொழி அர்த்தத்தில் ஆரியன் என்பதை அறவே இனத்துக்கு பயன்படுத்த முடியாது. ஆரியன் என்பது மொழியைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. நாம் ஆரிய இனம் என்று பேசும்போதெல்லாம் ஆரிய மொழியையே அது குறிக்கிறது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும்.

                     *          *          *          *

ஆரியர்கள் என்று சொல்லும்போது இரத்தத்தையோ, எலும்புகளையோ, ரோமத்தையோ அல்லது மண்டைஓட்டையோ குறிப்பிடவில்லை என்பதை நான் திரும்ப திரும்ப கூறியிருக்கிறேன். ஆரிய மொழி பேசுபவர்களையே நான் குறிப்பிடுகிறேன். இந்துக்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஜெர்மானியர்கள், கெல்டியர்கள், ஸ்லாவ்கள் போன்றோருக்கும் இது பொருந்தும். அவர்களைப்பற்றி நான் பேசும்போது உடல் உறுப்புகள் அமைப்பியல் அடிப்படையில் பேசவில்லை. நீல நிற நயனங்களும், செவ்விய கேசசமுடைய ஸ்காண்டினேவியர்கள் வெற்றியாளர்களாவோ அல்லது தோல்வியுற்றவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் தங்களுடைய கோமான்களுடைய மொழியையோ அல்லது குடிமக்களது மொழியையோ ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம்.

ஆனால் அவர்களுடைய மொழியைத் தவிர்த்து வேறு எதையும் நான் குறிப்பிடவில்லை. இந்துக்களையும், கிரேக்கர்களையும், ரோமானியர்களையும், ஜெர்மானியர்களையும், கெல்ட்டுகளையும், ஸ்லாவ்களையும் குறிப்பிடும்போது அவர்களுடைய மொழியை வைத்தே குறிப்பிடுகிறேன். கறுப்புநிற இந்துக்கள் கூட செவ்விய தோற்றமுடைய ஸ்காண்டினேவியர்களை விடவும் ஆரிய மொழியையும் எண்ணத்தையும் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

நான் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதாகத் தோன்றக்கூடும். ஆனால் இத்தகைய முக்கியமான விஷயங்களில் இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. என்னை பொறுத்தவரையில் ஆரிய இனத்தையும், ஆரிய இரத்தத்தையும், ஆரியக் கண்களையும், ஆரிய ரோமத்தையும் பற்றிப் பேசும் ஒரு மனித இன ஆய்வியலாளர் எவ்வாறு ஒரு பாபாத்மாவோ அவ்வாறே நீள்தலையினர் பேசும் மொழியின் அகராதி பற்றியும் குறுத்தலையினர் பேசும் மொழியின் இலக்கணத்தையும் பற்றிப்பேசும் ஒரு மொழி நூலாராய்ச்சியாளரும பாபாத்மாவே ஆவார்.

இது பாபிலோனிய மொழிக் குழப்பத்தைவிடவும் மோசமானது. இது அப்பட்டமான திருட்டாகும். மொழிகளை வகைப்படுத்த நாம் நமது சொந்தத் துறைச் சொற்களை உருவாக்கி இருக்கிறோம். இதே போன்று மனிதஇன ஆய்வாளர்களும் மண்டை ஓடுகளையும், ரோமத்தையும், இரத்தத்தையும் வகைப்படுத்த தமது சொந்த துறைச் சொற்களை உருவாக்கிக் கொள்ளட்டும்.

பேராசிரியர் மாக்ஸ் முல்லர் ஆரிய இனக் கோட்பாட்டில் ஒரு சமயம் நம்பிக்கை வைத்திருந்தவர் என்பதையும், அந்தக் கோட்பாட்டைப் பரப்புவதில் பெரும்பங்கு வகித்தவர் என்பதையும் அறிந்தவர்கள் அவரது இந்தக் கருத்தைப் பெரிதும் போற்றி வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட இரு கருத்துக்கும் பரஸ்பரம் முரண்பட்டவையாக உள்ளன என்பது தெள்ளத்தெளிவு. ஒரு கருத்தின்படி ஆரிய இனம் உடலகூறியலின் அடிப்படையில் இருந்துவந்தது. சில பாரம்பரிய இயல்புகளையும் ஒரு குறிப்பிட்ட மண்டைஓடு மற்றும் முகக் குறியீடுகளையும் அது பெற்றிருந்தது. ஆனால் மாக்ஸ் முல்லரின் கருத்துப்படி ஆரிய இனம் ஒரு பொதுமொழியைப் பேசும் மக்கள் என்ற ரீதியில், மொழி அடிப்படையில்தான் இருந்துவந்தது.

இந்தக் கருத்துமோதலில் ஒருவர் பின்வருமாறு வினவலாம்: வேத நூல்கள் எண்பிக்கும் செய்தி என்ன? வேதநூல்களை ஆராய்ந்து பார்த்தால் ரிக்வேதத்தில் இரண்டு சொற்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். ஒன்று ‘அ’ குறிலில் முடியும் ‘அர்ய’ என்னும் சொல்; மற்றொன்று ‘அ’ நெடிலில் முடியும் ‘ஆர்ய’ என்னும் சொல். இவற்றில் குறிலில் முடியும். ‘அர்ய’ என்னும் சொல் ரிக்வேதத்தில் 88 (இது சம்பந்தமாக ரிக் வேதத்தில் காணப்படும் குறிப்புகளின் பட்டியலை அட்டவணை 1ல் காண்க.) இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? அது (இந்த சொல் எந்த இடத்தில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு அட்டவணை II பார்க்க) பின்கண்ட நான்கு வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது: 1.பகைவன், 2.நன் மதிப்பிற்குரியவர், 3.இந்தியாவின் பெயர், 4.உடையவன், வைசியன் அல்லது குடிமகன் ‘ஆரிய’ என்னும் சொல் ரிக்வேதத்தில் 31 இடங்களில் வருகிறது. (குறிப்புகளின் பட்டியலை அட்டவணை IIIல் காண்க) எனினும் எந்த இடத்திலும் இனத்தைக் குறிப்பதற்கு அச்சொல் பயன்படுத்தப்படவில்லை.

மேலே கூறியவற்றிலிருந்து வேதங்களில் இடம்பெற்றிருக்கும் ‘ஆரிய’ மற்றும் ‘அர்ய’ என்னும் பதங்கள் எவ்வகையிலும் இனத்தை அர்த்தப்படுத்தும் முறையில் பயன்படுத்தப்படவில்லை என்ற சிறிதும் சர்ச்சைக்கிடமற்ற முடிவுக்கு வரமுடியும்.

இங்கு ஒருவர் பின்வருமாறு கேட்கக்கூடும். இது விஷத்தில் மனிதஉடல் சார்ந்த அளவை நூல் என்ன கூறுகிறது? ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் நீண்ட தலைகளைக் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வருணை மட்டுமே போதாது. ஏனென்றால் பேராசிரியர் ரிப்ளே தந்துள்ள அட்டவணையில் நீண்ட தலைகளையுடைய இரண்டு இனங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு இனங்களில் எது ஆரிய இனம் என்று தெரியவில்லை.

II

இனி அடுத்த வாதத்துக்கு – அதாவது ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்துவந்து, இந்தியாவின்மீது படையெடுத்து, சுதேசிமக்களை வென்றார்கள் என்ற வாதத்துக்கு வருவோம். இவற்றைத் தனித்தனியாக ஆராய்வோம்.

ஆரிய இனம் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தது? ஆரிய இனத்தின் ஆதிநாயகம் என்ன என்பதை நிர்ணயிப்பதில் பலதரப்பட்ட மிகவும் குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன. ஆரிய இனத்தின் பூர்வீக தாயகத்தை பொது அகராதியைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று பென்ஃபே கூறுகிறார். இந்த விஷயத்தில் அவரது கருத்துக்களை பேராசிரியர் ஐசக் டெய்லர் ‘பின்கண்டவாறு இரத்தினச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறுகிறார்:

ஆரிய மொழிகள் அனைத்துக்கும் பொதுவான அகராதியை ஆராய்ந்து பார்த்தால், மொழிவாரிப் பிரிவினைக்கு முன்னர் ஆரியர்கள் எங்கு வாழ்ந்தனர் என்ற கேள்விக்கு விடை கிடைக்கக் கூடும். பூர்வீக ஆரியர்கள் கரடி, ஓநாய் போன்ற சில மிருகங்களையும், பீச் (புங்கமரம்) பிர்ச் (பூர்ச்சமரம்) போன்ற சில குறிப்பிட்ட மரங்களையும் அறிந்தவர்கள், இவை எல்லாம் மிதவெப்ப மண்டலத்துக்கு, அதிலும் குறிப்பாக ஐரோப்பாவுக்கு உரியவை; ஆனால் அதேசமயம் தெற்காசியாவுக்குரிய சிங்கம், புலி போன்ற விலங்குகளும், தென்னை, பனை போன்ற மரங்களும் இந்தியர்களுக்கும் ஈரானியர்களுக்கும் மட்டுமே தெரிந்தவை.

எனவே பூர்வீக ஆரியர்களின் அகராதியில் மாபெரும் இரை விலங்குகளான சிங்கமும் புலியும், ஆசியாவின் தலையாய போக்குவரத்து விலங்கான ஒட்டகமும் இடம் பெறாததிலிருந்து காஸ்பியனுக்குக் கிழக்கே உள்ள பிராந்தியத்திலிருந்து ஆரியர்கள் புடைபெயர்ந்து வந்தார்கள் என்ற கோட்பாட்டை ஏற்பது கடினமாக உள்ளது. கிரேக்கர்கள் சிங்கத்தை அதன் செமிட்டிக் பெயரில் அழைத்தனர்; இந்தியர்கள் எந்த ஆரிய வேர்ச்சொல்லைக் கொண்டும் குறிப்பிட முடியாத ஒரு பெயரைக் கொண்டு அழைத்தனர். எனவே சிங்கம் கிரேக்கர்கள் மற்றும் இந்தியர்களின் பொது தாயகத்தில் அறியப்படாததாக இருந்தது.

*     *     *

பென்ஃபேயின் கூற்றுக்குத் துரிதமாகப் பலன் கிடைத்தது; கெய்ஜர் உடனடியாக அவரது முகாமில் சேர்ந்தார்; ஆனால் பென்ஃபே செய்தது போன்று ஆரியர்களின் தொட்டில் கருங்கடலுக்கு வடக்கே உள்ள பிராந்தியம் என்று குறிப்பிடாமல் மேலும் வடமேற்கே மத்திய ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும்தான் அவர்களது தொட்டில் என்று கூறினார். கெய்ஜரின் வாதத்துக்கு ஆதரமில்லாமல் இல்லை. பூர்வீக ஆரிய அகராதியில் இடம்பெற்றுள்ள மரங்களின் பெயர்களையே அவர் தமது முடிவுகளுக்கு பிரதானமாக அடிப்படையாகக் கொண்டுள்ளார். ஃபிர் (ஊசியிலை மரம்), வில்லோ ஆஷ் (அசோக மரம்), ஆல்டர்மரம் (பூர்ச்ச மரம் போன்றது), ஹேஸல் மரம் இவற்றுடன் பீச், பிர்ச் மற்றும் ஓக் ஆகிய மரங்களின் பெயர்களும் குறிப்பாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கருதுகிறார். ஓக் மரத்தைக் குறிக்கும் கிரேக்க பெகோஸ் மரம் டியூட்டானிய பீச் மரத்தையும் லத்தீன் ஃபாக் மரத்தையும் ஒத்ததாதலால் கிரேக்கர்கள் பீச் மரப் பிராந்தியத்திலிருந்து ஓக் மரப்பிராந்தியத்துக்குக் குடிபெயர்ந்திருக்கலாம் என்று அவர் முடிவுக்கு வருகிறார்.”

ஆரிய இனத்தின் பூர்வீகத் தாயகம் காக்கேசியாவாக இருக்கலாம் என்று வேறுசிலர் கருதுகின்றனர். ஆரியர்களைப் போன்றே காக்கேசியர்களும் இளம் பொன்னிறத்து தலை ரோமமும், நீண்ட கூரிய மூக்கும், அழகிய முகமும் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இது சம்பந்தமாக பேராசிரியர் ரிப்ளே கொண்டிருக்கும் கருத்தை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும். இது பற்றி பேராசிரியர் ரிப்ளே கூறுவதாவது: (ரிப்ளே, ஐரோப்பிய இனங்கள், பக்.436-437)

நீலநிறக் கண்களும் இளம்பொன்னிறத் தலைரோமமும் கொண்ட மேற்கு ஐரோப்பிய ‘ஆரிய’(?) இனத்தை காக்கேசியர் என்று குறிப்பிடுவது முற்றிலும் நகைப்புக்கிடமானது என்பதை இரண்டு மறுக்கமுடியாத உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. முதலாவதாக, இளம் பொன்னிறத் தலைமயிர் கொண்ட எவரையும் காக்கேசியாவில் பல நூற்றுக்கணக்கான மைல்களுக்குள் எங்கும் காண முடியவில்லை. இரண்டாவதாக சுத்தமான ஆரிய மொழியையோ அல்லது அதன் உருத்திரியான மொழியையோ பேசும் எந்த ஒரு குலமரபுக்குழுவும் மாபெரும் காக்கேசிய மலைத்தொடரில் எந்த இடத்திலும் தென்படவில்லை.

*     *     *

ஒசெத்தியர்களின் மொழி ஓரளவு ஆரிய மொழியின் சாயலைக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. எனினும் அவர்கள் கூட தாங்கள் ஆரியர்கள் என்று திட்டவட்டமான முறையில் உரிமை கொண்டாட முடியாது. அவ்வாறு ஒசெத்தியர்களை ஆரியர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, அவர்கள் ஈரான் திசையிலிருந்து வந்து குடியேறியவர்களேயன்றி, காக்கேசியாவின் ஆதிகுடிகளல்ல என்று கருதுவதற்கு எல்லா முகாந்தரங்களும் உண்டு. அவர்களது தலையின் வடிவமும், தெற்கிலிருந்து மலைத் தொடரைக் கடந்து செல்லும் ஒரே நெடுஞ்சாலையை ஒட்டி – டேரியல் கணவாயை ஒட்டி – அவர்கள் வாழும் பிரதேசமும் இந்தக் கருத்துக்கு மேலும் வலுவூட்டுகின்றன. எப்படியிருந்தாலும், ஒசெத்தியர்கள் ஆரியர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள மக்களிடையே அவ்வளவாக முக்கியத்துவம் பெறவில்லை. இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் நேர்த்தியான உடல்வாகுக்கும், உளத்திண்மைக்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால் இவை இரண்டுமே ஒசெத்திரியர்களிடம் இல்லை. அது மட்டுமல்ல சிறிதும் எதிர்ப்புக் காட்டாமல், இழிவான முறையில் ரஷ்யர்களுக்குப் பணிந்து போகக்கூடியவர்கள் இவர்கள்.

*     *     *

இந்தக் காக்கேசிய மக்களில் எந்தப் பிரிவினரும் ‘ஓரளவேனும் தனித்தன்மை’ பெற்றிருக்கின்றனர் என்று கூறுவதும் உண்மை அல்ல. எதார்த்தத்தில் அவர்கள் ஒருபோதும் எத்தகைய தனித்தன்மையையும் பெற்றிருந்ததில்லை. அப்படியிருக்கும்போது இம்மக்களை ஆரியர்களுடன் தொடர்புப்படுத்திப் பேசுவது அபத்தமானது. பல்வேறு இனமக்களின், மொழிகளின், பழக்கவழக்கங்களின், உடற்கூறு அமைப்புகளின் ஒரு தொட்டில் என்று காகசஸைக் கூறுமுடியாது, கல்லறை என்று தான் கூறவேண்டும். முதலில் இதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். காகசஸ் மலைத் தொடரைத் தவிர இத்தனை வெவ்வேறு வகையான மக்களையும், மொழிகளையும், சமயங்களையும் கொண்ட ஒர் இடத்தை உலகில் அநேகமாக வேறு எங்கும் காண முடியாது எனலாம்.”

ஆரிய இனத்தின் பூர்வீகத் தாயகம் ஆர்க்டிக் பிராந்தியம் என்று திலகர் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது கோட்பாட்டை அவருடைய சொற்களிலேயே சுருக்கமாகக் கூறலாம். வடதுருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் நிலவும் வானூல் மற்றும் தட்ப வெப்ப நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர் தொடங்குகிறார்: (பால கங்காதர திலகர், வேதங்களில் ஆர்க்டிக் தாயகம், 58-60)

“இதில் இருவகையான சிறப்பம்சங்கள் அல்லது வேறுபாடுகள் உள்ளன; ஒன்று வடதுருவத்தில் இருந்தபடி ஒரு நோக்கர் காணும் சிறப்பு அம்சங்கள்; மற்றொன்று வடதுருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் அல்லது வடதுருவத்துக்கும் ஆர்க்டிக் வட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து ஒரு நோக்கர் காணும் சிறப்பு அம்சங்கள்.”

திரு.திலகர் இவ்விரு வகையான வேறுபாடுகளை துருவ சிறப்பு அம்சங்கள் என்றும், துருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்களின் சிறப்பு அம்சங்கள் என்றும் வகைப் பிரித்துப் பின்வருமாறு கூறுகிறார்.

I.துருவ சிறப்பு அம்சங்கள்

1) சூரியன் தெற்கில் உதிக்கிறது.

2) நட்சத்திரங்கள் தோன்றி மறைவதில்லை. மாறாக அவை அடிவானத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஒரு சுற்றை 24 மணி நேரத்தில் பூர்த்தி செய்கின்றன. நில உலக வடக்கு அரைக்கோளம் மட்டும் தலைக்கு மேலே இருக்கிறது. வருடம் முழுவதும் அது கண்ணுக்குத் தெரிகிறது. நில உலகத் தெற்கு அரைக் கோளம் எப்போதும் கட்புலனாகாமல் இருக்கிறது.

3) வருடம் என்பது ஆறுமாத காலம் நீடிக்கும் ஒரு பகலையும், மற்றொரு அறுமாத காலம் நீடிக்கும் ஓர் இரவையும் கொண்டிருக்கிறது.

4) ஒரே ஒரு காலைப்பொழுதும் ஒரு மாலைப்பொழுதும் தான் இருக்கின்றன அல்லது சூரியன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உதிக்கிறது, மறைகிறது. ஆனால் வைகறை மெல்லொளியும் அந்திக் கருக்கலும் சுமார் இரண்டு மாதங்கள் அல்லது ஒவ்வொன்றும் 24 மணி நேரம் கொண்ட 60 பருவங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. வைகறைப் பொழுதின் மெல்லோளியும் அந்திப் பொழுதின் வெவ்வோளியும் நம் இடங்களில் போன்று அடிவானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் (கிழக்கிலோ, மேற்கிலோ) நிலைத்து நிற்பதில்லை. மாறாக, அங்குள்ள நட்சத்திரங்கள் போன்று அடிவானத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன.

குலாளரின் திமிரி சக்கரம் போல் இது சுற்றி கொண்டே இருக்கிறது. ஒரு சுற்றுமுடிவுக்கு வருவதற்கு 24 மணி நேரம் பிடிக்கிறது. சூரியனின் விட்டம் அடி வானத்திற்கு மேலே வரும்வரை வைகறைப்பொழுதின் மெல்லோளி சுற்றுகள் நடைபெற்ற வண்ணமுள்ளன; பின்னர் சூரியன் ஆறுமாதங்கள் வரை அதே பாதையைப் பின்பற்றுகிறது அதாவது அஸ்தமிக்காமல் 24 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றிச் சுற்றி வருகிறது.

II.துருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்களின் சிறப்பு அம்சங்கள்

1) சூரியன் நோக்கரின் தலை உச்சிக்குத் தெற்கே எப்போதும் இருந்து வரும். எனினும் நோக்கர் நடுவெப்ப நிலை மண்டலத்தில் இருக்கும்போது கூட இது நிகழ்வதால் இதனை ஒரு சிறப்பு அம்சம் எனக் கருதுவதற்கில்லை.

2) ஏராளமான நட்சத்திரங்கள் அவற்றின் சுற்றுதல் காலம் முழுவதிலும் அடிவானத்துக்கு மேலே இருப்பதால் அவை எப்போதுமே கட்புலனுக்குத் தெரியக்கூடியவையாக இருக்கும். எஞ்சிய நட்சத்திரங்கள் நடுவெப்ப நிலை மண்டலத்தில் நடைபெறுவது போன்று தோன்றுவதும் மறைவதுமாகவும் உள்ளன. ஆனால் பெரிதும் சாய்ந்த வட்டங்களிலேயே அவை சுழல்கின்றன.

3) வருடம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கிறது: i. மகர சங்கிரமணத்தின் போது (இதனை உத்தராயண புண்ணியகாலம் என்பர்) ஏற்படும் ஒரு நீண்ட தொடர்ச்சியான இரவுப் பொழுது இடத்தின் அட்சரேகையைப் பொறுத்து 24 மணி நேரத்துக்கு அதிகமாகவும் ஆறு மாதங்களுக்குக் குறைவாகவும் இது இருக்கும்; ii.கடக சங்கிர மணத்தின் போது (இதனை தட்சிணாயன புண்ணிய காலம் என்று கூறுவர்) நிகழும் ஒரு நீண்ட தொடர்ச்சியான பகற்பொழுது; iii.ஆண்டின் எஞ்சிய காலத்தில் சாதாரண பகற்பொழுதுகளும் இராப்பொழுதுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரும். இந்தப் பொழுதுகள் 24 மணிநேரத்துக்கு அதிகமாக இருக்கமாட்டா. நீண்ட தொடர்ச்சியான இரவுக்குப் பிறகுவரும் பகற்பொழுது ஆரம்பத்தில் இரவை விட குறுகியதாகவே இருக்கும், எனினும் அது மேன்மேலும் அதிகரித்து நீண்ட தொடர்ச்சியான பகற்பொழுதாக மாறும். நீண்ட பகற்பொழுதின் இறுதியில் வரும் இரவு முதலில் பகற்பொழுதைவிடக் குறுகியதாகவே இருக்கும். பிறகு அது மேன்மேலும் அதிகரித்து, நீண்ட தொடர்ச்சியான இரவாக மாறி அந்த ஆண்டுடன் முடிவடையும்.

4) நீண்ட தொடர்ச்சியான இரவுப்பொழுதின் முடிவில் வரும் விடியல் பல நாட்கள் நீடிக்கிறது. எனினும் இடத்தின் அட்சரேகைக்கு இணங்க இந்த விடியலின் கால நீட்சியும், நேர்த்தியும் வடதுருவத்தில் இருப்பதைவிடக் குறைந்த அளவிலேயே உள்ளன. வடதுருவத்தில் ஒரு சில டிகிரிகளுக்குள் இருக்கும் இடங்களில் காலைப் பொழுது வெளிச்சம் சுழலும் காட்சியை விடியல் காலத்தின் பெரும்பகுதியின்போது இன்னமும் காணமுடியும்.

சாதாரண பகல்பொழுதுகளுக்கும் இரவுப் பொழுதுகளுக்கும் இடையிலான ஏனைய விடியல்கள் நடுவெப்ப நிலை மண்டலத்தின் விடியல் போன்றே ஒரு சில மணி நேரமே நீடிக்கின்றன. தொடர்ச்சியான பகற்பொழுதின் போது அடிவானத்துக்கு மேலே இருக்கும் சூரியன் வட துருவத்தில் போன்று அஸ்தமனமாகாமல் நோக்கரைச் சுற்றி வருவதைக் காணலாம். சாய்வான வட்டங்களில் இது நிகழ்கிறது.

நீண்ட இரவின்போது, சூரியன் முற்றிலும் அடிவானத்துக்குக் கீழே இருக்கும். ஆண்டின் எஞ்சிய பகுதியில் அது உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக இருக்கும். கதிர்வீதியில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்ப அடிவானத்துக்கு மேலே 24 மணியில் ஒரு பகுதி நேரம் அது இருந்துவரும். திரு. திலகர் நிலைமையை இவ்வாறு தொகுத்துத்துரைத்துப் பின் கண்ட முடிவுக்கு வருகிறார்:

“இவ்வாறு இங்கு துருவப்பிராந்தியங்களின் மற்றும் துருவத்தை ஒட்டியுள்ள பிராந்தியங்களின் இரண்டு வெவ்வேறு வகையான நிலைமைகளை அல்லது சிறப்பு அம்சங்களைக் காண்கிறோம். இத்தகைய சிறப்பு அம்சங்களை நில உலகின் வேறு எந்தப்பகுதியிலும் காணமுடியாது. பூமியின் துருவங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்றே இன்றும் இருந்து வருவதால், பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் துருவ பருவநிலை கடுமையான மாற்றங்களுக்கு உள்ளான போதிலும், மேலே விவரித்த வானூல் அம்சங்கள் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை.”

ஆர்க்டிக் நிலைமையை இவ்வாறு விவரித்துவிட்டு திரு.திலகர் பின்கண்டவாறு வாதிக்க முற்படுகிறார்:

“வேதங்களின் வருணனை அல்லது செவிவழி மரபுரை மேலே கூறிய அம்சங்களில் எதையேனும் வெளிப்படுத்துகிறது என்றால், அந்த வாய்வழிச் செய்தி துருவப்பிராந்தியத்திலிருந்து அல்லது துருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து வந்ததாக இருக்கக்கூடும் என்று நாம் நிச்சயமாக அனுமானிக்கலாம். அதே போன்று, வேதகால கவிஞர்கள் இந்தக் காட்சிகளை நேரில் கண்டிருக்காவிட்டாலும், தலைமுறை தலை முறையாக, வழிவழியாக வந்த செய்திகளின் மூலம் அவர்கள் தெரிந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கும் நாம் வரமுடியும்.

அதிர்ஷ்டவசமாக இத்தகைய பல தகவல்களும் குறிப்புகளும் வேதநூல்களில் ஆங்காங்கு காணப்படுகின்றன. நம் வசதிக்காக அவற்றை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் முதல் பகுதி நீண்ட இரவையோ அல்லது நீண்ட விடியலையோ நேரடியாக வருணிக்கும் அல்லது குறிப்பிடும் தகவல்களைக் கொண்டது. இரண்டாவது பகுதி முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளவற்றை உறுதிசெய்து, மறைமுகமாக ஆதரிக்கும் புராணக் கதைகளையும் பழங்கதைகளையும் கொண்டது.”

வேதங்களில் பல்வேறு வருணனைகளும் புராணக்கதைகளும் பழங்கதைகளும் கூறும் இயற்கை நிலைமைகள் வடதுருவத்துக்கு அருகிலுள்ள இயற்கை நிலைமைகளுடன் பெரிதும் ஒத்திருப்பதைக் காணும் திரு.திலகர் வேதகால கவிஞர்களும், வேதகால ஆரியர்களும் ஆர்க்டிக் பிராந்தியத்தைத் தங்கள் பூர்வீக தாயகமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

இது ஒரு புதுமையான கருத்து, வேறுபாடு என்பதில் ஐயமில்லை. எனினும் ஒரே ஒரு விஷயத்தை திரு.திலகர் கவனிக்கத் தவறிவிட்டதாகத் தோன்றுகிறது. குதிரை வேதகால ஆரியர்களை மிகவும் கவர்ந்த பிராணி. அது அவர்களது வாழ்க்கையுடனும், அவர்களுடைய சமயத்துடனும் பிரிக்க முடியாதபடி பெரிதும் பின்னிப் பிணைந்துள்ளது. அசுவமேத யக்ஞத்தில் (மாதவாச்சாரியரின் விளக்க உரையுடன் கூடிய யஜூர் வேதத்தைக் காண்க) ராணிகள் குதிரையுடன் சிற்றின்பத்தில் ஈடுபடுவதில் ஒருவருடன் ஒருவர் போட்டிபோட்டதாகக் கூறப்படுகிறது. வேதகால ஆரியர்களின் வாழ்க்கையில் குதிரை எத்தகைய இடத்தைப் பெற்றிருந்தது என்பதை இது துலாம்பரமாகக் காட்டுகிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது: ஆர்க்டிக் பிராந்தியத்தில் குதிரையைக் காணமுடியுமா? இதற்கு எதிர்மறையான பதில் வருமானால், ஆர்க்டிக் ஆரியர்களின் தாயகம் என்ற கோட்பாடு பெரிதும் ஆதார அடிப்படையற்றதாக, ஐயத்துக்கிடமானதாகி விடுகிறது.

III

ஆரியர்கள் இந்தியாவின்மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்கும், அதன் சுதேசி மக்களை வென்று அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள் என்பதற்கும் என்ன சான்று இருக்கிறது? ரிக்வேதத்தைப் பொறுத்தவரையில், ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவின்மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்கு அதில் அணுவளவு ஆதாரம் கூட இல்லை. இது பற்றி திரு.பி.டி.சீனிவாச அய்யங்கார் (மந்திரங்கள் காலத்தில் பண்டை இந்தியாவில் வாழ்க்கை, பக்கங்கள் 11-12) பின்வருமாறு கூறுகிறார்:

“ஆரியர்கள், தாசர்கள், தசியுக்கள் என்னும் சொற்கள் இடம்பெற்றுள்ள மந்திரங்களைக் கவனமாகப் பரிசீலித்துப் பார்த்தால் அவை இனத்தைக் குறிக்கவில்லை என்பதையும் சமயக் கோட்பாட்டு முறைகளையே குறிக்கின்றன என்பதையும் காணலாம். இந்தச் சொற்கள் பெரும்பாலும் ரிக்வேத சம்ஹிதையிலேயே வருகின்றன. மொத்தம் 153,972 சொற்கள் அடங்கிய மந்திரங்களில் ஆரியர் என்னும் சொல் சுமார் 33 தடவையே வருகின்றன. இவ்வாறு இந்த சொல் அரிதாகவே இடம் பெற்றிருப்பது ஆரியர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்ட குல மரபுக்குழுவினர் நாட்டின் மீது படையெடுத்து அதனை வென்று மக்களைப் பூண்டோடு அழித்தவர்கள் அல்ல என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் படையெடுத்துவரும் எந்தக் குலமரபுக் குழுவினரும் தங்கள் சாதனைகளைப் பற்றி அடிக்கடி தற்புகழ்ச்சி செய்து கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.”

வேத நூல்களின் சான்றை பொறுத்தவரையில், ஆரியர்களின் பூர்வீகத் தாயகம் இந்தியாவுக்கு வெளியே இருந்தது என்பதை மெய்ப்பிப்பதாக இல்லை. ரிக்வேதத்தில் (X.75.5) ஏழு நதிகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்நடைப் பாணி இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பேராசிரியர் டி.எஸ்.திரிவேதா கூறுவது போன்று நதிகள் ‘எனது கங்கை, எனது யமுனை, எனது சரஸ்வதி’ என்னும் ரீதியில் குறிப்பிடப்படுகின்றன. நீண்டகாலத் தொடர்பால் ஒரு நதியின் பால் உணர்வு பூர்வமாக பாசத்தை வளர்த்துக் கொண்டிருந்தாலன்றி எந்த ஓர் அந்நியனும் அந்த நதியை இவ்விதம் பிரியத்தோடு, பேரன்போடு குறிப்பிட மாட்டான்.

ஆரியர்கள் பெற்ற வெற்றியையும் மற்றவர்களை அவர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததையும் பற்றிய குறிப்புகள் ரிக்வேதத்தில் காணப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. இவற்றில் தாசர்களும் தசியுக்களும் ஆரியர்களின் பகைவர்களாக வருணிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொன்றொழிக்கும்படி வேதகால ரிஷிகள் தங்கள் தெய்வங்களை வேண்டிக்கொள்ளும் பல பாசுரங்களும் ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதை வைத்து ஆரியர்களின் வெற்றியையும் மற்றவர்களை அவர்கள் கீழ்ப்படுத்தியதையும் பற்றிய எத்தகைய ஒரு முடிவுக்கும் வருவதற்கு முன்னர் பின்கண்ட விஷயங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம்.

முதலாவதாக, ஒருபுறம் ஆரியர்களுக்கும் மற்றொருபுறம் தாசர்களும் அல்லது தசியுக்களுக்கும் இடையே நடைபெற்ற போர்களைப் பற்றி ரிக்வேதத்தில் மிகச் சொற்ப இடங்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரிக்வேதத்தில் இந்த சொல்வரும் 33 இடங்களில் 8 இடங்களில்தான் அது தாசர்களுக்கு எதிராகவும், 7இடங்களில்தான் தசியுக்களுக்கு எதிராகவும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரு தரப்பாருக்கும் இடையே அங்குமிங்குமாக கலகங்கள் நடைபெற்றதையே இது காட்டுகிறது. மற்றபடி இது ஆரியர்கள் பெற்ற வெற்றியையும் மற்றவர்களை அடக்கியதையும் பற்றிய சான்றாகாது.

இரண்டாவதாக, தாசர்களும் ஆரியர்களும் இடையே எத்தகைய மோதல்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் கௌரவ மிக்க சமாதான அடிப்படையில் ஒரு பரஸ்பர உடன்பாட்டிற்கு வந்ததாகவே தோன்றுகிறது. பொதுப் பகைவனை எதிர்த்து தாசர்களும் ஆரியர்களும் எவ்வாறு ஒன்றுபட்டு நின்றனர் என்பதைக் காட்டும் குறிப்புகள் ரிக்வேதத்தில் காணப்படுவதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. ரிக்வேதத்தில் வரும் பின்கண்ட பாசுரங்கள் கவனத்திற்குரியவையாகும்: (ஆரியர்களின் பூர்வீகத் தாயகம், டி.எஸ்.திரிவேதா, பண்டர்களின் கீழை நாட்டு ஆய்வுப் பதிவேடுகள், தொகுதி XX, பக்கம் 62

ரிக்வேதம் – VI.33.3;

                   VII.83.1;

                   VIII.51.9;

                   X.102.3.

மூன்றாவதாக, ஆரியர்களுக்கும் தாசர்களுக்கும் இடையேயான மோதலின் அளவும் தன்மையும் எத்தகையதாக இருப்பினும் இது இன அடிப்படையிலான மோதல் அல்ல. சமய வேறுபாடு காரணமாக எழுந்த மோதலே இது. இந்த மோதல் சமயச் சார்புடையதன்றி, இனச் சார்புடையதன்று என்பதற்கு ரிக்வேதத்திலேயே நிறைய சான்றுகள் உள்ளன. தசியுக்களைப்பற்றி அது பின்வருமாறு கூறுகிறது. (அய்யங்கார், மேற்படி நூல், பக்கம் 13)

“அவர்கள் அவ்ரதர்கள் (ஆரிய, சமயவினைமுறைகளைச் செய்யாதவர்கள் (ரி.வே.i.51.8.,9; i.132.4; iv.41.2; vi.14.3); அபவிரதர்கள் (ரி.வே.V.42.2), அந்யவிரதர்கள், வேறுபட்ட வினைமுறைகளைச் செய்பவர்கள் (ரி.வே.VIII.59. II; X22.8) அனக்னித்ரர்கள், அக்னியை வழிபடாதவர்கள் (ரி.வே.V, 189.3) அயஜ்யுக்கள், அயக்ஞர்கள் வேள்விகள் செய்யாதவர்கள் (ரி.வே.i.131.44; i.33.4; vii.5911) அபரம்பர்கள் இறை வணக்கம் செய்யாதவர்கள் (மேலும் பிராமணப் புரோகிதர்களை சடங்குகள் செய்வதற்கு அமர்த்திக் கொள்ளாதவர்கள்) (ரி.வே.iv.15.9; 105,8); அன்ரிச்சர்கள், ரிக்குகள் இல்லாதவர்கள் (ரி.வே.X.105.8); பிரமதுவிஷர்கள், பிரார்த்தனைகள் செய்யாதவர்கள் (அல்லது பிராமணர்களை வெறுப்பவர்கள்) (ரி.வே.v.42.9); அனிந்தரா, இந்திரன் இல்லாதவர்கள் அல்லது இந்திரனை இழிவாகக் கருதுபவர்கள் (ரி.வே.i.133,1; v.2,3; vii.18,6; x.27,6; x,48,7); அவர்கள் பிராமணர்களுக்குத் தானங்கள் செய்யாதவர்கள் (ரி.வே. v.7.10)”

ரிக்வேதத்தில் காணப்படும் பின்கண்ட பகுதியும் (X.22.8) நம் கவனத்திற்குரியது:

“வேள்விகள் நடத்தாத, எதிலும் நம்பிக்கை வைக்காத தசியுக்கள் மத்தியில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்குத் தங்களுடைய சொந்த சமய வினைமுறைகள் இருக்கின்றன; அவர்கள் மனிதர்கள் என்றே அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர்கள். ஓ! பகைவர்களை நாசம் செய்பவனே, அவர்களை நிர்மூலமாக்கு, தாசர்களுக்கு தீங்குசெய்.”

ரிக்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தக் கருத்துகளைக் காணும் போது, ஆரிய இனம் ஆரியரல்லாத இனங்களான தாசர்களையும் தசியுக்களையும் இராணுவரீதியில் வெற்றிகொண்டனர் என்ற கோட்பாடு வேரறுந்து அடிசாய்ந்து விடுகிறது.

IV

ஆரியர்களையும், அவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து, தாசர்களையும் தசியுக்களையும் அடக்கி ஒடுக்கினார்கள் என்று கூறப்படுவதையும் பற்றி நாம் கூறுக்கூடியது இவ்வளவே. இதுவரை ஆரியத் தரப்பிலிருந்து இந்தப் பிரச்சினையை பார்த்தோம். அடுத்து தாசர்கள், தசியுக்கள் தரப்பிலிருந்து இப்பிரச்சினையைப் பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும். தாசர்கள், தசியுக்கள் என்ற பெயர்கள் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன? அவை இன அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா?

தாசர்கள், தசியுக்கள் என்னும் பதங்கள் இன அடிப்படையில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று கருதுபவர்கள் பின் கண்ட சூழ்நிலைமைகளைத் தங்களுக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கின்றனர்: 1.மிருத்ரவாகர்கள், அநாசர்கள் என்னும் பதங்கள் ரிக் வேதத்தில் தசியுக்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 2.தாசர்கள் கிருஷ்ண வருணமுடையவர்களாக (கறுப்பு நிறம் கொண்டவர்களாக) ரிக் வேதத்தில் வருணிக்கப்பட்டிருக்கின்றனர்.

மிருத்ரவாகர்கள் எனும் பதம் ரிக்வேதத்தில் பின்கண்ட இடங்களில் வருகிறது:

மிருத்ரவாகர்கள் என்னும் பெயரடைச் சொல்லின் பொருள் என்ன? மிருத்ரவாகர்கள் என்றால் செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான மொழியைப் பேசுபவர்கள் என்று பொருள். அப்படியானால் அநாகரிகமான, நயமற்ற மொழி என்பது ஓர் வேறுபட்ட இனத்தைக் குறிப்பதற்கான சான்றாகுமா? இன வேறுபாட்டை நிர்ணயிப்பதற்கு இதனை அடிப்படையாகக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானதாகும்.

அநாசர் என்னும் சொல் ரிக்வேதத்தில் V.29.10 வருகிறது. இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன? இதற்கு இரண்டு விதமாகப் பொருள் விளக்கம் தரப்படுகிறது. ஒரு விளக்கம் மாக்ஸ் முல்லருடையது. மற்றொரு விளக்கம் சாயனாசாரியருடையது. பேராசிரியர் மாக்ஸ் முல்லரின் கருத்துப்படி இந்தச் சொல்லுக்கு ‘மூக்கறையன்’ அல்லது ‘சப்பைமூக்கன்’ என்று பொருள்; ஆரியர் தசியுக்களிலிருந்து வேறுபட்டதொரு இனத்தினர் என்ற கருத்துக்கு இது ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் சாயனாசாரியரோ இந்த சொல்லுக்கு ‘வாயில்லாதவர்கள்’ அதாவது நன்கு பேசத்தெரியாதவர்கள் என்று பொருள் கொள்கிறார். இந்தப் பொருள் வேறுபாட்டுக்கு அநாசர் என்னும் சொல்லை உச்சரிப்பதிலுள்ள வேறுபாடே காரணம்.

சாயனாசாரியர் இதனை அநாசர் என்று உச்சரிக்கிறார்; பேராசிரியர் மாக்ஸ் முல்லரோ அன்-ஆசர் என்று உச்சரிக்கிறார்; பேராசிரியர் மாக்ஸ் முல்லரின் உச்சரிப்பின்படி இச்சொல் மூக்கில்லாதவர் என்று பொருளாகிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்த ஒரு உச்சரிப்புகளில் எது சரியானது? சாயனாசாரியின் உச்சரிப்பும் இச்சொல்லுக்கு அவர் கொள்ளும் பொருளும் தவறானவை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக இது சரியானது என்று கூறுவதற்கு எல்லாக் காரணங்களும் உண்டு.

முதலாவதாக இது இச்சொல்லை எவ்வகையிலும் கொச்சைப்படுத்தவில்லை. இரண்டாவதாக, தசியுக்கள் மூக்கறையர்கள் என்று வேறு எங்கும் குறிப்பிடப்படவில்லை; அப்படியிருக்கும்போது இச்சொல்லுக்கு புதியதோர் அர்த்தத்தைக் கொடுக்கும் வகையில் அதனை ஏன் உச்சரிக்க வேண்டும்? மிருத்ரவாகர் என்ற சொல்லுக்குள்ள அதே அர்த்தத்தை இந்தச் சொல்லுக்கும் தருவதே நியாயம். எனவே, தசியுக்கள் முற்றிலும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு எந்த ஆதாரமும் அடிப்படையும் இல்லை என்பது தெள்ளத்தெளிவு.

தாசர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் ரிக்வேதத்தில் vi.47.21 கிருஷ்ண யோனி என்று வருணிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் இதிலிருந்து பெறப்படும் அனுமானத்தை ஏற்பதற்கு முன்னர் பல்வேறு விஷயங்களை கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவதாக, தாசர்களைக் குறிப்பதற்கு ரிக்வேதத்தில் இந்த ஒரு இடத்தில்தான் கிருஷ்ண யோனி என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, இச் சொற்றொடர் அதன் நேர் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா அல்லது உருவகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது திட்டவட்டமான முறையில் தெரியவில்லை. மூன்றாவது, இது உண்மையை எடுத்துரைக்கிறதா அல்லது வசைமொழியா என்பதும் நமக்குத் தெரியவில்லை. இந்த ஐயப்பாடுகள் எல்லாம் தெளிவுபடுத்தப்பட்டாலொழிய, தாசர்கள் கிருஷ்ண யோனிகள் என்று கூறப்படுவதால் அவர்கள் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற கருத்தை ஏற்பது சாத்தியமல்ல.

இது சம்பந்தமாக, ரிக்வேதத்தில் காணப்படும் பின்கண்ட பாசுரங்களைக் கவனத்திற்கொள்வது உசிதமாக இருக்கும்;

1) ரிக்வேதம், vi.22.10. – “ஓ, வச்ஜ்சிரி, நீ உன் வல்லமையால் தாசர்களிடமிருந்து ஆரியர்களை, அதாவது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை உருவாக்கிவிட்டாய். எங்கள் பகைவர்களை வெல்லுவதற்கு இதே ஆற்றலை எங்களுக்கு அளிப்பாயாக.”

2) ரிக்வேதம், X.49.3 (இந்திரன் கூறுகிறான்). “தசியுக்களிடமிருந்து அரியர்கள் எனும் உயர் இனமதிப்புப் பெயரைப் பறித்துவிட்டேன்.”

3) ரிக்வேதம், i.151-8—“ஓ, இந்திரா, யார் ஆரியன், யார் தசியு என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தனித்தனியே பிரித்துவை.”

இந்தப் பாசுரங்கள் எதைக்காட்டுகின்றன? ஒருபுறம் ஆரியர்களுக்கும் இன்னொருபுறம் தாசர்களுக்கும் தசியுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு நிற அடிப்படையிலோ அல்லது உறுப்பமைதி அடிப்படையிலோ அமைந்த இனவேறுபாடு அல்ல என்பதையே இவை புலப்படுத்துகின்றன. இதனால்தான் ஒரு தாசனோ அல்லது தசியுவோ ஓர் ஆரியனாக முடிகிறது. இதன் காரணமாகவே இவர்களை ஆரியர்களிடமிருந்து பிரிக்கும்பணி இந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

V

இவ்வாறு, ஆரிய இனம் குறித்த மேலைய எழுத்தாளர்களின் கோட்பாடு ஒவ்வொரு அம்சத்திலும் அடிசாய்ந்து விழுகிறது என்பது சொல்லாமலே விளங்கும். பொதுவாக மேலைய அறிஞர்கள் ஆழமான ஆராய்ச்சியிலும், கவனமான பகுத்தாய்விலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும் போது இது ஓரளவு வியப்பாகவே தோன்றும். அப்படியிருக்கையில் அவர்களது கோட்பாடு தோற்றது ஏன்? இந்தக் கோட்பாட்டை நுணுகி ஆராயும் எவரும் அதனை இரண்டு தொற்றுநோய்கள் பீடித்திருப்பதைக் காண்பர். முதலாவதாக, இந்தக் கோட்பாடு சில அனுமானங்களையும் அந்த அனுமானங்களின் அடிப்படையில் எழுந்த முடிவையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, இந்தக் கோட்பாடு விஞ்ஞான ஆய்வுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. உண்மைகளைக் கண்டறிய அது அனுமதிக்கவில்லை. மாறாக, இந்தக் கோட்பாடு முற்புனைவாக உருவாக்கப்பட்டு, அதனை மெய்ப்பிப்பதற்கு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆரிய இனம் சம்பந்தப்பட்ட கோட்பாடு ஒரு வெறும் அனுமானமே அன்றி வேறல்ல. 1835 ஆம் ஆண்டில் வெளியான ஒப்பிலக்கணம் என்ற தமது பிரசித்திபெற்ற நூலில் டாக்டர் பாப் முன்வைத்த ஒரு மொழியியல் முன்மொழிவுரையின் அடிப்படையில் அமைந்ததே இந்தக் கோட்பாடு. ஏராளமான ஐரோப்பிய மொழிகளும் சில ஆசிய மொழிகளும் ஒரு பொதுவான முன்னோர்கள் மொழியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று டாக்டர் பாப் தமது நூலில் கூறியிருந்தார். பாப் குறிப்பிட்ட ஐரோப்பிய மொழிகளும் ஆசிய மொழிகளும் இந்தோ – ஜெர்மன் மொழிகள் என அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் அனைத்தும் கூட்டாக ஆரிய மொழிகள் எனக் குறிப்பிடப்பட்டன. வேதமொழி ஆரியர்களைக் குறிப்பிடுவதும், அது இந்தோ – ஜெர்மன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக இருப்பதுமே இதற்கு பிரதான காரணம். இந்த அனுமானமே ஆரிய இனக் கோட்பாட்டுக்கு முக்கிய அடித்தளமாக இருந்த வருகிறது.

இந்த அனுமானத்திலிருந்து இரண்டு முடிவுகள் பெறப்படுகின்றன: 1.இன ஒற்றுமை, 2.அந்த இனமே ஆரிய இனம் என்பது. இந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுவான மூதாதையர் மொழியிலிருந்து தோன்றியது என்றால் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனம் இருந்திருக்க வேண்டும். அந்தத் தாய் மொழி ஆரிய மொழி என்கிற போது, அதனைப் பேசிய இனம் ஆரிய இனமாக இருக்கவேண்டும் என்று வாதிக்கப்படுகிறது. ஒரு தனியான ஆரிய இனம் இருந்தது என்பது இவ்வாறு ஓர் அனுமானமே தவிர வேறல்ல. இந்த அனுமானத்திலிருந்து வேறொரு அனுமானம் பெறப்படுகிறது. அதாவது தனி ஆரிய இனம் என்று ஒன்று இருந்திருந்தால் அதற்கு ஒரு பூர்வீகத் தாயகமும் இருந்திருக்க வேண்டும் என்பதே அந்த அனுமானம். நெருங்கிய கூட்டுறவுக்கு வகைசெய்யும் ஒரு பொதுத்தாயகத்தை மக்கள் பெற்றிருந்தாலொழிய ஒரு பொதுமொழி இருப்பது சாத்தியமல்ல என்று வாதிக்கப்படுகிறது. இவ்வாறு பொதுபூர்வீகத்தாயகம் என்பது அனுமானத்திலிருந்து பெறப்படும் மற்றொரு அனுமானமாக அமைந்துள்ளது.

படையெடுப்புக் கோட்பாடு ஒரு கற்பனையே. மேற்கத்தியக் கோட்பாட்டுக்கு அடிப்படையாக உள்ள அனுமானத்துக்கு இந்தப் படையெடுப்புக் கற்பனை தேவைப்படுகிறது. இந்தோ – ஜெர்மன் மக்களே ஆதி ஆரிய இனத்தின் இன்றைய பிரதிநிதிகளில் கலப்பற்ற நேர்வழிமரபினர் என்பதே அந்த அனுமானம். இந்த இனத்தின் முதல் தாயகம் ஐரோப்பாவில் ஏதோ ஓரிடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இத்தகைய அனுமானங்கள் ஒரு கேள்வியை எழுப்புகின்றன. ஆரிய மொழி எப்படி இந்தியவுக்கு வந்தது? ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஊகத்தைக் கொண்டுதான் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியும். எனவேதான் படையெடுப்புக் கோட்பாடு கற்பனையாக இட்டுக்கட்டப்பட வேண்டிய அவசியமேற்பட்டது-

மூன்றாவது ஊகம் ஆரியர்கள் மிகவும் மேம்பட்ட இனத்தினர் என்பது, இந்தக் கோட்பாட்டுக்கு மூலாதாரம் ஆரியர்கள் ஐரோப்பிய இனத்தினர் என்ற நம்பிக்கை ஆகும். ஐரோப்பிய இனத்தினர் என்ற முறையில் ஆரியர்கள் ஆசிய இனங்களைவிட மிகவும் மேலானவர்கள் என்று அனுமானிக்கப்படுகிறது. இவ்வாறு ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்று அனுமானித்த பிறகு தருக்கரீதியான அடுத்த நடவடிக்கை அவர்களது மேம்பாட்டை நிலைநாட்டுவதே ஆகும். ஆரியர்கள் படையெடுத்து வந்து மற்ற இனங்களை அடக்கி ஒடுக்கினார்கள் என்ற கூறினால்தான் அவர்களது மேம்பாட்டு நிலையை நிரூபிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்ட மேலைய எழுத்தாளர்கள் ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தார்கள் என்றும், தாசர்களையும் தசியுக்களையும் வெற்றி கொண்டார்கள் என்றும் கதை கட்டிவிட ஆரம்பித்தார்கள்.

நான்காவது அனுமானம் ஐரோப்பிய இனத்தவர் வெள்ளை நிறத்தினர் (தாசர்களும் தசியுக்களும் யார் என்பது குறித்த விவாதத்தை இயல் 6ல் காண்க.) என்பதும், கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக அவர்கள் நிறவெளியைக் கடைப்பிடித்தார்கள் என்பதுமாகும். ஆரியர்கள் ஐரோப்பிய இனத்தினர் என்பதால் அவர்களிடம் நிறவெறி இருந்திருக்கவேண்டும் என்று அனுமானிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு வந்த ஆரியர்களிடம் நிறபாரபட்சம் இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு சான்று தேட இந்தக் கோட்பாடு முற்படுகிறது. சதுர் வருண ஏற்பாட்டில் இந்தச் சான்றை அது காண்கிறது. இந்தோ – ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு உருவாக்கிய ஏற்பாடு இது என்றும், இது நிறத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் மேலைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (தாசர்களும் தசியுக்களும் யார் என்பது குறித்த விவாதத்தை இயல் 6ல் காண்க.)

இந்த அனுமானங்களில் எது ஒன்றும் உண்மைத் தகவல்களால் மெய்ப்பிக்கப்படவில்லை. ஆரிய இனம் என்ற கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். ஆரிய இனம் என்பது உடலியல் அர்த்தத்தில் ஒரு விஷயம் என்பதையும் மொழியியல் அர்த்தத்தில் முற்றிலும் வேறுபட்டதொரு விஷயம் என்பதையும் இந்தக் கோட்பாடு கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை; அதே போன்று, உடலியல் பொருளில் ஆரிய இனம் என்று ஒன்று இருக்குமாயின் அதன் பூர்வீக உறையுள் ஓரிடத்திலும் மொழியியல் பொருளில் முற்றிலும் வேறொரு இடத்திலும் இருப்பது சாத்தியமே என்பதையும் இக்கோட்பாடு கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. ஆரிய இனம் என்னும் கோட்பாடு பொதுவான மொழி என்னும் கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது; அதன் அடிப்படை அமைப்பு ஒற்றுமையே இந்தப் பொதுத் தன்மைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியர்கள் வெளியிலிருந்து வந்து இந்தியாவின் மீது படையெடுத்தார்கள் என்ற கூற்று நிரூபிக்கப்படவில்லை; தாசர்களும் தசியுக்களும் இந்தியாவின் பூர்வீகக்குடிகள் (ஆதியில் ஐரோப்பிய இனங்கள் வெள்ளையர்களாக இருந்தார்களா அல்லது கறுப்பர்களாக இருந்தார்களா என்பது குறித்து பேராசிரியர் ரிப்ளே கூறியுள்ள கருத்துக்களைப் பார்க்க.) என்ற கருத்தும் பொய்யானதாகும்.

சதுர்வருண ஏற்பாடு ஆரியர்களிடம் உள்ளார்ந்து பொதிந்தள்ள நிறபாகுபாட்டு உணர்வின் வெளிப்பாடேயாகும் என்று கூறுவதும் மிகைப்படுத்தலாகும். தோலின் நிறமே வகுப்பு வேறுபாட்டுக்கு மூல காரணம் என்று கூறுவதானால் சதுர்வருண அமைப்பில் அடங்கியுள்ள நான்கு வகுப்பினருக்கும் நான்கு வெவ்வேறு நிறங்கள் இருந்திருக்க வேண்டும். அந்த நான்கு வருணங்கள் எவை என்பதையும், சதுர்வருண அமைப்பில் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ள நான்கு நிறங்கள் கொண்ட இனங்கள் யாவை என்பதையும் எவருமே கூறவில்லை. இப்போதுள்ளபடிப் பார்த்தால், ஆரியர்கள், தாசர்கள் என்னும் இரண்டு நேரெதிரான மக்களுடன் மட்டுமே இந்தக் கோட்பாடு தொடங்குகிறது. இவர்களில் ஒருவர் வெள்ளை நிறத்தவர் என்றும், மற்றவர் கறுப்பு நிறத்தவர் என்றும் அனுமானிக்கப்படுகிறது.

ஆரிய இனக்கோட்பாட்டின் மூலவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டும் அளவு மீறின ஆர்வத்தில் தங்களை எத்தகைய மிகவும் நகைப்புக்கிடமான, விவேகமற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணுவதற்கு, உணர்வதற்கு பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள், தாங்கள் நிரூபிக்க விரும்புவதை எப்படியும் நிரூபித்தாக வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்; இந்த முயற்சியில் தங்களுக்கு நல்லதென்று தோன்றும் சான்றுகளை வேதங்களிலிருந்து சிரமப்பட்டுப் பொறுக்கியெடுக்க அவர்கள் சிறிதும் தயங்கவில்லை.

‘அனுமானம் என்பது விஞ்ஞானத்துக்கு உப்பு போன்று ஜீவாதாரமானது’ என்று பேராசிரியர் மைக்கேல் ஃபாஸ்டர் ஒரு சமயம் குறிப்பிட்டார். அனுமானமில்லாமல் பயனுள்ள முறையில் எதையும் துருவி ஆராய்வது சாத்தியமில்லை. ஆனால் அதேசமயம் ஒரு குறிப்பிட்ட அனுமானத்தை எப்படியும் நிலைநாட்ட வேண்டுமென்ற ஆர்வம் கட்டுக்கடங்காத முறையில் மேலோங்கி இருக்குமானால், அப்போது அந்த அனுமானமே விஞ்ஞானத்துக்கு நச்சாக மாறிவிடுகிறது. ஓர் அனுமானம் எவ்வாறு விஞ்ஞானத்துக்கு விஷமாக மாறமுடியும் என்பதற்கு மேலைய ஆராய்ச்சியாளர்களின் ஆரிய இனக்கோட்பாடு ஒரு கண்கண்ட உதாரணமாக அமைந்துள்ளது.

ஆரிய இனக்கோட்பாடு மிகவும் அபத்தமானது; அது நீண்ட காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அந்தக் கோட்பாடு உயிர்விடாமல், மக்களிடம் பெரும்பிடிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய ஒரு நிகழ்வுப் போக்குக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் பிராமண கற்றறிவாளர்களிடையே இந்தக் கோட்பாடு பெற்றிருக்கும் ஆதரவாகும். இதனை மிகவும் விந்தையான ஒரு நிகழ்வுப்போக்கு எனலாம். ஆசிய இனங்களின்மேல் ஐரோப்பிய இனங்களுக்குள்ள மேன்மையை, மேம்பாட்டை ஒப்புக்கொள்ளும் இந்த ஆரிய இனக் கோட்பாட்டின்பால் இந்துக்கள் என்ற முறையில் அவர்கள் நியாயமாக தங்கள் வெறுப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால் பிராமண அறிஞர்களோ இந்தக் கோட்பாட்டை வெறுத்தொதுக்குவதற்குப் பதிலாக, அதனை தலைமீது தூக்கி வைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கின்றனர். இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. பிராமணர்கள் இரு – தேசக் கோட்பாட்டை ஆதரிக்கின்றனர்; தங்களை ஆரிய இனத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் பாவிக்கின்றனர். ஏனைய இந்துக்களை ஆரியரல்லாதவர்களின் வழித்தோன்றலாகக் கருதுகின்றனர்.

ஐரோப்பிய இனங்களுடன் தங்களுக்குள்ள குருதித் தொடர்புடைய உறவை நிலைநாட்டிக் கொள்வதற்கும், அந்த இனங்களுக்குள்ள அகந்தையையும், அவர்களது மேம்பட்ட நிலையையும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தக் கோட்பாடு பிராமணர்களுக்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக ஆரியர்களை படையெடுப்பாளர்களாகவும் ஆரியர்களல்லாத சுதேசி இனக்களின்மீது வெற்றிவாகை சூடியவர்களாகவும் படம்பிடித்துக் காட்டும் கோட்பாட்டின் இந்தப் பகுதி பிராமணர்களைப் பெரிதும் கவர்கிறது. ஏனென்றால் பிராமணரல்லாதோர் மீது தங்களுக்குள்ள ஆதிக்கத்தை நிலைநாட்டவும், நியாயப்படுத்தவும் இது துணைபுரிகிறது.

ஆரிய இனக்கோட்பாடு மரிக்காததற்கு இரண்டாவது காரணம் வருணம் என்னும் சொல் நிறத்தையே குறிக்கிறது என்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக வலியுறுத்திவருவதும், இந்தக் கருத்தை பெரும்பாலான பிராமண அறிஞர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதுமேயாகும். உண்மையில் இதுதான் ஆரியஇனச் சித்தாந்தத்தின் பிரதான ஆதார அடிப்படையாக அமைந்துள்ளது எனலாம். வருணம் என்னும் சொல்லுக்கு இந்தப் பொருள் கொள்ளப்படும்வரை ஆரிய சித்தாந்தம் தொடர்ந்து நீடித்து வரவே செய்யும். ஆதலால் ஆரிய சித்தாந்தத்தின் இந்தப்பகுதி மிக முக்கியமானது; மூன்று வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து இதனைப் பரிசீலிக்க வேண்டும். 1.ஐரோப்பிய இன மக்கள் சிவந்த மேனியுடையவர்களா அல்லது கறுத்த மேனியுடையவர்களா? 2.இந்தோ – ஆரியர்கள் சிவப்பானவர்களா? 3.வருணம் என்னும் சொல்லின் ஆரம்பகாலப் பொருள் என்ன?

ஆதிகால ஐரோப்பியர்களின் நிறத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் கறுப்பு நிறமுடையவர்களாக இருந்தனர் என்று பேராசிரியர் ரிப்ளே திட்டவட்டமாகக் கூறுகிறார். பேராசிரியர் ரிப்ளே மேலும் கூறுவதாவது: (பேராசிரியர் ரிப்ளே “ஐரோப்பிய இனங்கள்”, பக்.466)

“நாம் இதுவரை நடத்திய பல ஆய்வுகள் பூர்வீக ஐரோப்பியர்கள் நீண்ட தலையை உடையவர்களாக மட்டுமன்றி கறுப்பு நிறத்தினராகவும் இருந்தனர் என்ற இந்த அனுமானத்தை மேலும் வலுப்படுத்தவையாக உள்ளன. தெற்குப் பிரான்சில் வாழும் குரோமாக்னான் மக்கள் வரலாற்றுக்கு முந்தைய தொல் பழமை வாய்ந்தவர்கள் என்பதை நாம் மெய்ப்பித்துள்ளோம்; இந்த விவசாய மக்களிடையே பலர் கறுநிறக்கேசத்துடனும் கண்களுடனும் இருப்பதைக் காண்கிறோம். பிரிட்டிஷ் தீவுகளிலுள்ள மக்கள் பிரிவினரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வேல்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து பகுதிகளது கறுப்பு நிற மக்கள் பிரிட்டனிலேயே மிகவும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்வர்கள் என்பதை ஒவ்வொன்றுமே மெய்ப்பிப்பதாக இருப்பதைப் பார்க்கிறோம்.

தவிரவும், வடக்கு இத்தாலியைச் சேர்ந்த கர்ஃபக்னானா என்னும் இடத்தில் வாழும் தொன்மைமிக்க லிகுரியன் மக்களின் வழித்தோன்றல்களைப் பார்த்தால், அவர்களும் கறுப்பு நிறமாக இருப்பதைக் காண்கிறோம். எனவே, பொதுக்கோட்பாடுகள் அல்லது ஸ்தல விவரங்களின் பகைப்புலனில் மதிப்பாய்வு செய்தால் ஐரோப்பாவின் இந்தப் பூர்வீக இனத்தினர் மிகவும் கறுப்பாக இருந்தனர் என்றே தோன்றுகிறது. அங்கு நிற உறவைப் பொறுத்தவரையில் மத்தியத் தரைக்கடல் பிராந்திய சாயலைக் காண்கிறோமே தவிர, ஸ்காண்டினேவிய சாயலைக் காணவில்லை.”

ஆரியர்கள் எத்தகைய நிறபாகுபாட்டைக் கைக்கொண்டார்கள் என்பதற்கு ஏதேனும் அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வேதங்களை ஆராயும்போது ரிக் வேதத்திலுள்ள பின்கண்ட பகுதிகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன:

ரிக்வேதத்தில் i.117.8 சியவியனுக்கும் ருஷாதிக்கும் அசுவினி தேவர்கள் திருமணம் செய்துவைத்த குறிப்பு காணப்படுகிறது. இவர்களில் சியவியன் கறுப்பு; ருஷாதி சிவப்பு.

ரிக்வேதத்தில் i.117.5 பொன்னிற மேனியான வந்தனாவைக் காப்பாற்றியமைக்காக அசுவினி தேவர்களுக்குத் துதிபாடப்பட்டதாக ஒரு குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

ரிக்வேதத்தில் ii.3.9. ஓர் ஆரியன் சில குறிப்பிட்ட நற்குணங்களுடனும் சாம்பல் நிறத்துடனும் (பிசாங்கா) தனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று தேவர்களிடம் வேண்டுதல் செய்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வேதகால ஆரியர்கள் எத்தகைய நிறவேற்றுமையையும் பாராட்டவில்லை என்பதை இந்த நிகழ்ச்சிகள் புலப்படுத்துகின்றன. அவர்கள் எப்படி நிறவேற்றுமைக் கைக்கொள்ளமுடியும்? வேதகால ஆரியர்கள் ஒரே நிறத்தினர் அல்ல. அவர்களது மேனிவண்ணம் பெரிதும் வேறுபட்டதாக இருந்தது. சிலர் தாமிர நிறமுடையவர்களாகவும், சிலர் வெண்ணிறமுடையவர்களாகவும், சிலர் கறுப்பு நிறமுடையவர்களாகவும் இருந்தனர். தசரதருடைய புதல்வரான ராமர் சியாமனாக அதாவது கறுப்பு நிறமுடையவராக வருணிக்கப்படுகிறார். மற்றொரு ஆரிய வம்சத்தைச் சேர்ந்த யதுக்களின் வழித் தோன்றலான கிருஷ்ணரும் இவ்வாறே கறுப்பு மேனியனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ரிக்வேதத்தில் பல மந்திரங்களை இயற்றியவர் ரிஷி திர்கதமசர்; அவரது மேனிவண்ணத்தின் அடிப்படையில் அவருக்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தால் அவர் கறுப்பாகவே இருந்திருக்கவேண்டும். கன்வர் மிகவும் புகழ்பெற்ற ஆரியரிஷி. ஆனால் ரிக்வேதத்தில் X-31.11.- அவரைப் பற்றித் தரப்பட்டிருக்கும் வருணனையிலிருந்து அவர் கறுப்பு நிறமுடையவர் என்பது தெளிவாகிறது.

அடுத்து, மூன்றாவது கடைசி விஷயத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது வருணம் (பார்க்க: மகாராஷ்டி தியான கோஷம், தொகுதி – 3, பக்கங்கள் 39-42) என்னும் சொல்லின் பொருளைப் பார்ப்போம். இந்த சொல் ரிக்வேதத்தில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். வருணம் என்னும் பதம் ரிக்வேதத்தில் 22 இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது. (பார்க்க: பின் இணைப்பு, VI, பக்கம் 353) இவற்றில் 17 இடங்களில் உஷா, அக்கினி, சோமன் போன்ற தெய்வங்களைக் குறிப்பிடுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது பிறங்கொளியையும், முகத்தோற்றங்களையும், அல்லது வண்ணத்தையும் அர்த்தப்படுத்துகிறது. இவை தெய்வங்கள் சம்பந்தமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும் போது வருணம் என்னும் சொல் மனிதர்கள் விஷயத்தில் ரிக்வேதத்தில் என்ன அர்த்தத்தைத் தரும் என்று நிர்ணயிப்பதற்கு இவற்றைப் பயன்படுத்துவது உசிதமற்றதாகும். மனித ஜீவன்கள் சம்பந்தமாக இந்த சொல் ரிக்வேதத்தில் நான்கு இடங்களில், அதிகபட்சம் ஐந்து இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவை வருமாறு:

  • i.104.2;
  • i.179.6;
  • ii.12.4;
  • iii.34.5;
  • ix.71.2;

வருணம் என்னும் சொல் ரிக்வேதத்தில் நிறம், மேனி வண்ணம் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குறிப்புகள் மெய்ப்பிக்கின்றனவா?

ரிக்வேதம் iii.34.5 இவ்வகையில் ஐயத்துக்கிடமான பொருள் கொண்டதாக இருக்கிறது. ‘சுக்கில வருணம் அதிகரிப்பதற்கு வகை செய்தது’ என்ற வாசகம் இரட்டை அர்த்தம் கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்திரன் உஷாவை தனது ஒளியை வீசச்செய்து வெண்மை நிறத்தை அதிகரிக்கச் செய்தான் என்று பொருள் கொள்ளலாம் அல்லது பாசுரம் இயற்றியவர் வெண்ணிறமேனி கொண்டவராதலால் அவருடைய மக்களது மேனியின் வெண்ணிறம் அதிகரித்தது என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டாவது அர்த்தம் பெரிதும் வலிந்து பெறப்பட்டதாகவே இருக்கும்; ஏனென்றால் இங்கு வெள்ளை நிறம் அதிகரிப்பது காரியம், உஷாவின் வெளிச்சம் காரணம்.

ரிக்வேதத்தில் ix.71.2 வரும் ‘அசுர வருணத்தைக் கைவிட்டான்’ என்ற வாசகத்தை சூக்தத்திலுள்ள ஏனைய செய்யுட் பத்திகளுடன் சேர்ந்து வாசிக்கும்போது, அதன் பொருள் தெளிவாக இல்லை. இந்த சூக்தம் சோம பவமணனுடையது. இதனை மனத்திற் கொண்டால், ‘அசுர வருணத்தைக் கைவிட்டான்’ என்ற வாசகத்தை சோமனைப் பற்றிய வருணனையாகக் கொள்ளவேண்டும். இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வருணம் என்னும்சொல் ரூபத்தைக் குறிப்பதாக இருக்கவேண்டும். இந்தச் செய்யுளின் பிற்பகுதி பின்வருமாறு கூறுகிறது: ‘அவன் தனது கறுப்பு நிறத்தைக் களைந்து விட்டு, ஒளிவீசும் நிறத்தை மேற்கொள்கிறான்.’ இதிலிருந்து வருணம் என்னும் சொல் இங்கு கறுப்பு நிறத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

ரிக்வேதத்தில் i.179.6 என்னும் செய்யுட்பகுதி ஓரளவு உதவிகரமாக உள்ளது. குழந்தைகளையும் சக்தியையும் பெறும் பொருட்டு அகஸ்திய முனிவர் லோபா முத்திரையுடன் கூடி வாழ்ந்தார் என்றும் இதன் விளைவாக இரண்டு வருணத்தினர் பிறந்தார்கள் என்றும் இந்த செய்யுட்பகுதி கூறுகிறது. ஆரியர்களையும் தாசர்களையும் குறிப்பிடுவதே நோக்கமாக இருந்தபோதிலும் இதில் கூறப்படும் இரு வருணத்தார் யார் என்பதை இந்தச் செய்யுட் பகுதி திட்டவட்டமாக வெளிப்படுத்தவில்லை. இது எப்படியிருந்தபோதிலும் இந்த செய்யுட் பகுதியில் குறிப்பிடப்படும் வருணம் என்பது வகுப்பை குறிக்கிறதே அன்றி நிறத்தைக் குறிப்பிடவில்லை என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

ரிக்வேதம் i.104.2 மற்றும் ரிக்வேதம் ii.12.4 ஆகிய இரண்டு செய்யுட் பகுதிகளில்தான் தாசர்களைக் குறிப்பிடுவதற்கு வருணம் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருகிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது: தாசர்களுக்குப் பயன்படுத்தப்படும்போது, வருணம் என்னும் சொல்லின் பொருள் என்ன? இது தாசர்களின் நிறத்தையும் மேனி வண்ணத்தையும் குறிக்கிறதா அல்லது தாசர்கள் ஒரு தனி வகுப்பினர் என்பதைக் குறிக்கிறதா? இந்த இரண்டு அர்த்தங்களில் எது சரியானது என்று ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவதற்கு வழியில்லை.

இது சம்பந்தமாக ரிக்வேதத்தில் காணப்படும் சான்று அறுதியிட்டுக் கூறமுடியாததாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த சொல் இந்தோ-ஈரானிய இலக்கிய படைப்புகளில் வருகிறதா, அப்படி வந்தால் எந்த அர்த்தத்தில் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிருஷ்டவசமாக, வருணம் என்னும் சொல் ஜெண்ட் – அவெஸ்தா என்னும் பார்சியர் வேதத்தில் வருகிறது. இது வரணா அல்லது வரேணா என்று உச்சரிக்கப்படுகிறது. இச்சொல் குறிப்பாக ‘தெய்வபக்தி, சமய சித்தாந்தம், திருமுறைக்கோட்பாடு, நம்பிக்கை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வர் என்ற வேர்ச் சொல்லிலிருந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வைத்தல், விசுவாசம் கொள்ளுதல் என்று இதற்குப் பொருள். வரணா அல்லது வரேணா என்னும் சொல் காதாக்களில் நம்பிக்கை, சித்தாந்தம், கோட்பாடு என்ற அர்த்தத்தில் ஆறு தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இது காதா அஹூனவைத்தி – யாஸ்னா ஹா 30 செய்யுட்பத்தி 2ல் வருகிறது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு:

“நான் பிரகடனம் செய்யும் மிக உன்னதமான உண்மையை செவிமடுத்துக் கேட்டு, ஆன்மிக அறிவொளி சுடரும் உங்கள் தெளிந்த மனத்தைக் கொண்டு உள்ளாய்வு செய்யுங்கள். ஒவ்வொருவனும் தனது (அவரெனங்) சமய உணர்வை தானே தீர்மானிக்க வேண்டும். அந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு முன்னர் நாம் போதிக்கும் உண்மையை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து கொள்ள வேண்டும்.”

இது காதாவின் மிகவும் புகழ்பெற்ற செய்யுட்களில் ஒன்று. தனது சமய உணர்வைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருவரும் பகுத்தறிவு ஆற்றலையும், தெரிவு சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று ஜராதுஷ்ட்ரர் அறிவுரை பகர்கிறார். இங்கு அவரெனவ் விச்சிதஹ்யா என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவரெனவ் என்றால் ‘சமயம்’ என்று பொருள்; விச்சி – தஹ்யா என்றால் ‘வேறுபடுத்தி உணர்தல்‘, ‘தேர்ந்தெடுத்தல்; ‘நிர்ணயித்தல்‘ என்று அர்த்தம்.

இது காதா அஹூனவைத்தி, யாஸ்னா ஹா 31செய்யுட் பத்தி 11ல் வருகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வரேனெங் என்னும் சொல் வரேணா என்பதன் இரண்டாம் வேற்றுமை பன்மை; ‘கோட்பாடு’, ‘சமயம்’ என்று இதற்குப் பொருள். இந்த செய்யுட்பத்தியில் மனிதன் படைக்கப்பட்ட கோட்பாடு பற்றி ஜராதுஷ்ட்ரர் விரித்துரைக்கிறார். மனிதன் படைக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்த பின்னர் கடைசி பாதி வரியில் “மனிதன் தன் விருப்பம் போல் சமயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை அளிக்கப்படுகிறது” என்று ஜராதுஷ்ட்ரர் கூறுகிறார்.

காதா உஷ்தவைத்தி, யாஸ்னா ஹா 45 செய்யுட் பத்தி 1ல் இது வரேணா என்னும் சொல் வடிவத்தில் இடம் பெறுகிறது. ‘பாபகரமான சமயக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் கொடியவர்களாகி கீழ்த்தரமான மொழியில் பேசுகின்றனர் (இந்தோ – ஈரானிய இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள்ள என் நண்பர் தஸ்தூர் போடே ‘வமா’ என்னும் சொல்லின் பொருளை எனக்கு விளக்கிக் கூறியமைக்காக அவருக்கு நான் பெரிதும் நன்றிக் கடமைப்பட்டுள்ளளேன்.) என்று இந்த செய்யுட் பத்தியின் கடைசி வரியில் ஜராதுஷ்ட்ரர் கூறுகிறார்.

காதா உஷ்தாவைத்தி, யாஸ்னா ஹா 45 செய்யுட் பத்தி 2ல் மேலே கூறிய அதே வடிவத்தில் வரேணா என்னும் சொல் நம்பிக்கை, சமயம், கோட்பாடு என்ற பொருளில் வருகிறது. இந்த செய்யுட் பத்தியில் ஜராதுஷ்ட்ரர் நன்மை, தின்மை பற்றிய தமது சித்தாந்தத்தை விளக்கிக் கூறும்போது, மனித மனத்தின் இரட்டை அம்சங்களை எடுத்துரைக்கிறார். இந்த செய்யுட் பகுதியில் இரண்டு மனங்கள் – அதாவது நல்ல மனமும் கெட்ட மனமும் – தமக்குள் பின்வருமாறு பேசிக் கொள்கின்றன: “சிந்தையிலும், வார்த்தையிலும், விவேகத்திலும், சமய நம்பிக்கையிலும், சொல்லிலும், செயலிலும், மனச் சான்றிலும், ஆன்மாவிலும் நம்மிடையே ஒற்றுமை ஏதும் இல்லை.”

காதா ஸ்பென்டா மைனியு, யாஸ்னா ஹா 49 செய்யுட் பத்தி 3ல் இது நான்காம் வேற்றுமையில் வரேனங் என்று வருகிறது, ‘சமயம்’ என்று இதற்குப் பொருள். இதே செய்யுட் பகுதியில் சமயம், சமயக் கோட்பாடு, சமய சட்ட திட்டங்கள் என்ற அர்த்தத்தில் தகேஷய் என்னும் சொல் இடம் பெறுகிறது. வரேனய், தகேஷா ஆகிய இரண்டு சொற்களும் ஒரே செய்யுட் பத்தியில் வருவது நமது வாதத்துக்கு மேலும் வலுவூட்டுகிறது; ஏனென்றால் தகேஷா என்னும் சொல் போன்றே அஹூரதகேஷா என்னும் கூட்டுச் சொல்லும் அஹூரிய மதத்தைக் குறிக்கிறது.

தகேஷா என்னும் சொல் பஹலவி மொழியில் கிஷ் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதுவும் மதத்தையே குறிக்கும். அவெஸ்தா மொழியில் எழுதப்பட்ட ஜராதுஷ்ட்ரியர்களின் சுகாதார சட்ட நூலான வெண்டிடாடில் அன்யோவரேணா என்னும் சொல்லைக் காண்கிறோம். இங்கு அன்யோ என்பது மற்ற அல்லது வேறுபட்ட என்றும், வரேணா என்பது மதம் என்றும் பொருள்படும். எனவே, வேறுபட்ட மதத்தை, நம்பிக்கையை, கோட்பாட்டைக் கொண்டிருப்பவன் அன்யோ – வரேணா எனப்படுகிறான். இவ்வாறே, வெண்டிடாடில் அன்யோ – தகேஷா என்று வரும் சொல்லும் வேறுபட்ட மதத்தினன் என்ற பொருளையே குறிக்கும்.

காதாவில் இந்த வேர்ச் சொல்லிலிருந்து பல வினைச்சொல் வடிவங்களைப் பெறுகிறோம். எடுத்துக்காட்டாக அஹூனவைத்தி காதா யாஸ்னா ஹா, 31, செய்யுட் பத்தி 3ஐ பார்ப்போம். இதில் ஜராதுஷ்ட்ரர் யா ஜவன்டோ விஸ்பெங் வவ்ரயா என அறிவிக்கிறார்; இந்த வரியில் வவ்ரயா என்னும் வினைச் சொல் கடவுளின் பால் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வைக்கும்படி எல்லா உயிர் ராசிகளையும் நான் தூண்டுவேன் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யாஸ்னா ஹா, 28: செய்யுட் பத்தி 5ல் வவ்ரோய் மைதி என்னும் வினைச் சொல்லை எதிர்ப்படுகிறோம்.

‘சமய உணர்ச்சியை ஊட்டுவோம்’ என்று இதற்குப் பொருள். இந்தச் சொல்லின் மற்றொரு குறிப்பிடத்தக்க வடிவத்தை யாஸ்னா ஹா, 28; செய்யுட் பத்தி 5ல் காண்கிறோம். துஸ் – வரேனய்ஸ் என்பதே அந்தச் சொல் வடிவம். இதில் துஸ் என்னும் முதல் பகுதி பொய்யான, துன்மார்க்கமான என்றும், வரேனய் மத விசுவாசி என்றும் பொருள்படுகிறது: அதாவது இந்தச் சொல் “பொய்யான, துன்மார்க்கமான மதத்தைச் சேர்ந்தவன் அல்லது பொய்யான, துன்மார்க்கனான மதவிசுவாசி என்பதைக் குறிக்கிறது.”

ஜராதுஷ்ட்ரியர்களின் சமய ஏற்புக் கோட்பாட்டை விளக்கும் யாஸ்னா ஹா 12ல் வரும் ஃபரவரனே என்னும் சொல்லுக்கு ‘நான் என் சமயத்தை ஏற்கிறேன்; மஸ்தயாஸ்னோ ஜராதுஷ்த்ரிஷ் ‘அதாவது ஜராதுஷ்ட்ரிய சமய நெறியை’ வழிபடுகிறேன் என்று பொருள். இந்த வாசகம் கிட்டத்தட்ட எல்லா ஜராதுஷ்ட்ர பிரார்த்தனைகளிலும் இடம் பெற்றிருக்கிறது. ஜராதுஷ்ட்ர சமய ஏற்பாட்டுக் கோட்பாட்டின் மற்றொரு வடிவமும் இருக்கிறது. இது யாஸ்னா 12ல் யா-வரேணா என்று காணப்படுகிறது. இங்கு யா என்பது தழுவியல் மறுபெயர்; இதற்கு எது என்று பொருள்; வரேணா என்பதற்கு நம்பிக்கை, மதம் என்று பொருள். எனவே இச்சொல் ‘எந்த மதம்’ என்பதைக் குறிக்கிறது.

யா வரேணா என்னும் இந்தச் சொல் வடிவம் யாஸ்னா 12ல் ஒன்பது முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சமயக்கோட்பாடு அல்லது சமயம் என்ற தெளிவான பொருளிலேயே அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கும் வரேணா என்னும் சொல், சமயத்தைக் குறிக்கும் தகேஷா என்னும் சொல்லுடன் சேர்த்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

யாஸ்னா 16ல் ஜராதுஷ்ட்ரஹே சரேஹேம்சா தகேஷெம்சா யாஸமய்தே என்னும் சுவையான குறிப்பு காணப்படுகிறது. இங்கு ஜராதுஷ்ட்ரின் வரேணாவும் தகேஷாவும் வழிபடப்படுகிறது. இந்த ஒத்திசைவான, பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஜராதுஷ்ட்ரரின் கோட்பாட்டையும் சமயத்தையுமே குறிக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. ‘ஜராதுஷ்ட்ரரின் கோட்பாட்டையும் சமயத்தையும் நாங்கள் வழிபடுகிறோம்’ என்பதே மேலே கூறிய வாசகத்தின் மொழிபெயர்ப்பாகும்.

ஆதிகாலத்தில் வருணம் என்னும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் ஒரு வகுப்பினரைக் குறித்ததேயன்றி, அந்த சொல்லுக்கும் வருணத்துக்கும் மேனி வண்ணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே ஜெண்ட் அவெஸ்தா என்னும் பார்சியர் வேதத்திலிருந்து பெறப்படும் இந்த சான்று உறுதி செய்கிறது.

மேலைய கோட்பாட்டின் பரிசீலனையிலிருந்து கிட்டும் முடிவுகளை பின்கண்டவாறு இரத்தினச் சுருக்கமாகக் கூறலாம்:

1) ஆரிய இனம் என்ற எத்தகைய ஓர் இனத்தையும் வேதங்கள் அறியமாட்டா.

2) ஆரிய இனம் இந்தியாவின் மீது படையெடுத்தது என்பதற்கும், இந்தியாவின் சுதேசி மக்கள் எனக் கருதப்படும் தாசர்களையும் தசியுக்களையும் அவர்கள் வென்று கீழ்ப்படுத்தினர் என்பதற்கும் வேதங்களில் எந்தச் சான்றும் இல்லை.

3) ஆரியர்கள், தாசர்கள், தசியுக்களுக்கு இடையேயான வேறுபாடு இன வேறுபாடு என்பதைக் காட்டக் கூடிய சான்று ஏதும் இல்லை.

4) ஆரியர்கள் மேனி வண்ணத்தில் தாசர்களிடமிருந்தும் தசியுக்களிடமிருந்தும் வேறுபட்டவர்கள் என்ற வாதத்தை வேதங்கள் ஏற்கவில்லை.

  (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 4)

Pin It