மனித மலத்தைக் கூட ஒரு பேராயுதமாய் மாற்றும் வல்லமை புனித இந்துக்களுக்கு இருக்கின்றது. புனித இந்துக்களின் மலத் துவாரங்கள் அந்தப் பேராயுதத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாய் இருக்கின்றன. குருட்சேத்திரப் போரில் இந்தப் பேராபத்து மிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டதா என்று தெரியவில்லை. ஒருவேளை பயன்படுத்தப் பட்டிருந்தால் பதினெட்டு நாட்கள் நடந்த போர் பத்து நிமிடங்களில் முடிந்திருக்கலாம். கெளரவர்களும் பாண்டவர்களும் தங்கள் முகங்களில் வழியும் புனித மலத்தின் நறுமணத்தில் கிறங்கி எளிதில் ஒரு சமாதான உடன்பாட்டைக் கூட எட்டி இருக்கலாம். அப்படி எட்டி இருந்தால் சனாதனத்தை தூக்கி நிறுத்தும் கண்ணனின் கீதா உபதேசம் நமக்கு கிடைக்காமல் போய் இருக்கும். அப்படி கிடைக்காமல் போய் இருந்தால் காந்தி அரிஜனங்களைப் படைக்காமல் இருந்திருப்பார். லட்சிய பங்கிகள் இந்தியாவின் மலத்தை இன்று வரையிலும் சுமக்காமல் இருந்திருப்பார்கள்.

மலங்கள் உண்மையில் தெய்வீக நைவேத்தியங்களா என்பதும், கடவுளின் ஆணைப்படிதான் அவை இன்று மனிதர்களுக்குத் தரப் படுகின்றதா என்பதும் ஆய்வுக்கு உரியவை. காரணம் தெய்வீக ரகசியம் என்பது எப்போதும் குறியீடுகளாகவே சொல்லப்படும். நம்பிக்கை இல்லை என்றால் திருநீலகண்டனிடம் கேட்டுப் பாருங்கள். இல்லை நாங்கள் வைணவம், அதனால் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்றால் வராக அவதாரத்திடம் விசாரித்துப் பாருங்கள். இல்லை எங்களுக்கு புராணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, நாங்கள் சிந்திக்கும் அறிவு கொண்ட மனிதப் பிறவிகள் என்றால், திண்ணியத்தில் இராமசாமி, முருகேசனை மலம் தின்ன வைத்தும், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபாபூரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜோகி நாகாக், சானியா நாகாக், ராமா நாகாக், ஜோகி நாகாக், ஹரி நாகாக், துருஜா நாகாக் ஆகிய ஆறு பேரின் பற்களைப் பிடுங்கி அவர்களின் வாயில் மலத்தைத் திணித்தும், இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் (மே 04, 2020) பீகாரில் மூன்று தலித் பெண்கள் வாயில் மலத்தை ஊற்றிக் குடிக்க வைத்த புனித இந்துக்களிடம் கேட்டுப் பாருங்கள் மலத்தின் மகோன்னத சுவையை.

dalit women tortured in biharஅப்படிப்பட்ட புனித மனித மலத்தை ஏன் தேசிய உணவாக அங்கீகரிக்கக் கூடாது என்று ஆன்மீகப் பெரியவர்கள் யோசிக்கும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் மனித வாயில் மனித மலத்தைத் திணிக்கும் செயல்கள் எல்லாம் புனித இந்து நாட்டில் தவிர, உலகின் வேறெந்த நாட்டிலும் நடக்கவில்லை. இத்தகைய திருவிளையாடல்களை நடத்துபவர்கள் எல்லாம் புனித இந்துக்களாகவே இருக்கிறார்கள். இத்தனை நாட்கள் கோமியத்துக்கும், பஞ்ச கவ்யத்துக்கும் கருவறையில் இடம் கொடுத்தது போதும், இனி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித மனித மலத்துக்கும் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. எளிய தலித் மக்களுக்கு புனித இந்துக்களால் இத்தனை ஆண்டுகளாக இரக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வந்த தெய்வீக புனித அமிர்தத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வீர இந்துக்களுக்கும் கிடைக்கும்படி செய்வோம்.

இந்துக்களின் பழக்க வழக்கங்களுக்கு எதிராக, சக மனிதனின் வாயில் மலத்தைத் திணிப்பது தவறு என்று இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்கப் பட்டுள்ளது. இது இந்துக்களின் ஆன்மீக செயல்பாடுகளில் தலையிடுவதாகும் என்று இந்து மதக் காவலர்களோ, ஆண்ட சாதித் தலைவர்களோ இதுவரை குரல் கொடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

ஆண்ட பரம்பரைக்கு மட்டுமா மலம் வருகின்றது? அந்தப் புனித அமிர்தம் ஆசன வாய் உள்ள அனைவருக்குமே வருகின்றது. இத்தனை நாட்களாக தலித்துகளுக்கு மட்டுமே புனித அமிர்தத்தைப் புகட்டும் பணியைச் செய்த ஆண்ட பரம்பரைகள் அதன் மகத்துவத்தை உணர்ந்து, வரும் காலங்களில் அதைத் தின்பதில் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமாக உள்ளது. புண்ணியம் என்பது செய்வதற்கு மட்டுமல்ல வாங்குவதற்கும் உரியதுதான்.

என்ன... உலக மக்கள் கொஞ்சம் இளப்பமாகப் பார்ப்பார்கள். அது புதிதா என்ன? சக மனிதனைத் தீண்டாதவன் என்று சேரியில் அடைத்த போதும், நீங்கள் புழங்கும் தெருவில், குளத்தில் அவர்களை அனுமதிக்க மறுத்த போதும், கணவனின் சிதையில் மனைவியைத் தூக்கிப் போட்டு உயிருடன் எரித்த போதும் இந்த உலகம் உங்களைக் கேவலமாகத்தான் பார்த்தது. அதை எல்லாம் யோசித்தால் இந்து தர்மத்தை, ஆண்ட சாதிப் பெருமையைக் காக்க முடியுமா?

மலம் இருப்பதும், அதைக் கையால் அள்ளுவதும், உலகில் புனிதமான ஆன்மீகப் பணி என்று உங்கள் முன்னோர்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கின்றார்கள். மலம் அள்ளும் தலித்துக்களின் காலைக் கழுவி பிரம்ம ரகசியத்தை அறிந்தவர்களும், பிறவி மோட்சம் அடைந்தவர்களும் இந்த மண்ணில் இல்லாமல் இல்லை.

“ஏ மலமே! நீதான் எவ்வளவு புனிதமான தெய்வீகம் நிறைந்த படைப்பு. இந்த உலகில் எல்லாமே என்னாலே படைக்கப்பட்டது, உன்னையும் நானே படைத்தேன். உன்னைப் படைத்ததால் நான் பெருமை கொள்கின்றேன். மனிதன் எப்படி அவன் சாப்பிடும் அனைத்து பொருட்களையும் படையல் இட்டு என்னை அவனில் ஒருவனாக நினைக்கின்றானோ, அதே போல இனிமேல் என்னுடைய படைப்புகளிலேயே மேன்மை மிகுந்த மலத்தையும் படையல் இட்டு என்னை தெய்வீக பக்தியால் ஆட்கொள்ள வேண்டும்” என அசரீரியாய் வெளி எங்கும் ஒலிக்கின்றது கடவுளின் குரல்.

எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு எங்கும் நிறைந்த மலத்தால் படையல் இடுவோம். தலித்துகள் அடைந்த தெய்வீக அனுபவத்தை நாம் தெய்வத்துக்கும் கற்றுக் கொடுப்போம். ஆண்ட பரம்பரையின் சொத்தாக இருந்த தலித்துகளுக்கு மலம் கொடுக்கும் நிகழ்வை இனி அகிலம் முழுவதும் எடுத்துச் செல்வோம். யோகா மட்டுமல்ல, மனித வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றுவதும், தின்ன வைப்பதும் கூட உலகத்துக்கு இந்தியா அளித்த கொடையாக இனி இருக்கட்டும்.

ஏ ஆண்ட பரம்பரை இந்து சமூகமே! உன் பேரன்பில் திக்கு முக்காடும் எங்கள் தலித்துகளை மகிழ்விக்க நீ எப்போது புனித மலத்தை சுவைக்கப் போகின்றாய், அள்ளிப் பருகி ஆனந்தம் கொள்ளப் போகின்றாய்? எத்தனை நாள் புனித மலத்தை அடுத்தவர்களுக்குத் தந்து கொடை வள்ளலாக மட்டுமே இருப்பாய்? கொடுத்துக் கொடுத்து சிவந்த உன் கரங்கள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும். இத்தனை நாள் உனக்காக புனித மலத்தைத் தின்றவர்கள் நீ தின்பதைப் பார்க்க காத்துக் கிடக்கின்றார்கள். மாட்டு மூத்திரத்தை 'கோமியம்' என உச்சி முகர்ந்து குடிக்கத் தொடங்கி விட்ட உனக்கு, மனித மலம் ஒன்றும் கடினமாக இருக்காது. நெருங்கி வா, கூச்சப்படாதே, கடவுளின் ரகசியம் அறிய, பிரபஞ்சத்தின் ஆதியை அறிய, இறுதி மூச்சின் சப்தத்தை அறிய, சொல்லாத சொல்லின் பொருளை அறிய, அறியாததை அறிய வா... உனக்காக பல நூற்றாண்டுகளாக அள்ளப்பட்ட மலத்தின் ஒரு பிடி அப்படியே இருக்கின்றது. ஆண்ட பரம்பரையான உன்னை விட்டால் அதைத் தின்பதற்கு இந்த உலகில் வேறு யார் இருக்கின்றார்கள்?

- செ.கார்கி

Pin It