காங்கிரசின் பெயராலும், சுயராஜ்யமென்னும் பதத்தின் பெயராலும் மக்களை ஏய்த்து பல அக்கிரமங்கள் செய்யப்படுகிறது. சுயராஜ்யமின்னதென்று மகாத்மா காந்தியும் இன்னும் சொல்லாமல் அதனை அடைவதற்குத் தகுதியாகுங்கள் என்றுதான் சொல்லுகின்றார். மதுரையில் நிறைவேற்றப்பட்ட நிர்மாணத் திட்டங்களை நம் பிராமணரல்லாத மக்கள் கைக்கொண்டு மனப்பூர்வமாகப் பாடுபடுவார்களாயின், சுயராஜ்யம் தானாகவே தேடிக்கொண்டு வந்துவிடும். நாம் சுயராஜ்யமடையக் கருதுவதற்கு முன் சுயமரியாதையை நிலைநிறுத்த வேண்டுவது முதற்கடமை. சுயமரியாதையில்லாத சுயராஜ்யம் வந்தும் பயனில்லை. இச்சுயமரியாதையை அடைவதற்கு பாமர மக்களுக்குள் போதிய பிரசாரம் செய்ய வேண்டும். இதற்கு “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” பத்திரிகைகளின் உழைப்பு அத்தியாவசியம். அப்பத்திரிகைகளின் வளர்ச்சி பிராமணரல்லாத சமூகத்தின் கதிமோட்சத்திற்கான வளர்ச்சி என்பதை மறக்கக் கூடாது.

periyar and maniammai dk cadresபிராமணரல்லாத சங்கமென்னும் பெயர் துவேஷம் காரணமெனச் சொல்லப்பட்ட போதிலும் சரி, அதற்குக் காரணமானவர்கள் அவர்கள்தான். அதில் துவேஷமெங்கிருக்கின்றதென விளங்கவில்லை. நமது சுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா? கொசுக்கள் கடிக்காமல் கொசுவலை போட்டுக்கொள்வது கொசுவின் மீது துவேஷமாகுமா? திருடன் வருவதற்குத் தடையாக நம் வீட்டுக் கதவை அடைத்து வைத்தால் திருடன் மனம் வருந்தி பட்டினி கிடக்கவும் நேருமே என்று யாராவது கதவைத் திறந்து வைப்பார்களா? நாம் கதவை மூடி வைத்தால் நாம் ஜாக்கிரதையாயிருப்பதையறிந்து அத்திருடனும் திருத்திக் கொள்ள முயல்வான். அதுபோன்றே நாம் இனி நமது சுயமரியாதையைக் காத்துக் கொள்வதற்கான முயற்சிகள் செய்து பிராமணீய ஆதிக்கத்தை ஒழிக்க முயல வேண்டும்.

பிராமண பிராமணரல்லாதார் வித்தியாசமும் இம்மாதிரி போராட்டமும் பண்டைக் கால முதற்கொண்டே நடந்து வந்திருக்கின்றது. இராமாயணம், பாரதம் யுத்தங்களிலும் இப்பேர் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேதங்களில் பிராமணர்கள் பிராமணரல்லாத மக்களைத் தங்களுக்கு அடிமையாக்கி வைக்கும்படியும், அவர்களை ஒழித்துவிடும்படிக்கும் இந்திரன் முதலான தெய்வங்களைப் பிரார்த்திப்பது தவிர வேறில்லை. இதனால்தான் வேதத்தை பிராமணரல்லாதார் படிக்கக் கூடாதென்று சூதும் வாதும் செய்தனர். புத்தர் காலத்திலும் பிராமணர்களின் அநீதியை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான முயற்சி செய்யப்பட்டு, புத்த மதம் பிரசாரம் செய்யப்பட்டது. பிராமணர்கள், பண்டைக்கால முதற்கொண்டே பல சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர். ராமர் ஆட்சியில் பிராமணரல்லாத வாலிபன் ஒருவர் வேதம் படித்து தபசு செய்து வந்ததால் பிராமணச் சிறுவன் ஒருவர் இறந்து விட்டதாகச் சொல்லி அப்பிராமணரல்லாத சிறுவனைக் கொன்ற பின்பு பிராமணச் சிறுவன் பிழைத்துக் கொண்டதாக இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இத்தகைய மானக் கேடான விஷயங்களைக் கேட்கத்தான் நம் மக்கள் பெரும் பொருள் செலவு செய்கின்றனர்.

நாம் நமது சுயமரியாதையை காத்துக் கொண்டு நம் மக்களின் அபிவிருத்திக்காக பாடுபடுவோமானால் அது அவர்களுக்கு துவேஷமாகத் தான் இருக்கும். சுயமரியாதையைக் காத்துக் கொள்ளும் விஷயங்களில் பழைய மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கும் பெரியவர்கள் சற்று தயங்கிய போதிலும் கூட நமது வாலிபர்கள் தான் ஒரே உறுதியுடன் நிற்க வேண்டும். பெரியவர்களும் அவர்களுக்கு தேவையான உதவி புரிய வேண்டும். சர்க்கார் வரியைவிட பிராமணர்களின் வரி அளவில்லாமலும் கேள்வி முறை இல்லாமலும் பல தலைமுறையாய்ப் போய்க் கொண்டிருக்கின்றது. கோவில்களின் இழிவான நிலைமைகளைச் சீர்திருத்தி அவற்றின் வருமானங்களைக் குறித்தும் செலவுகளைக் குறித்தும் கணக்கு வைக்கச் செய்வதன் பொருட்டு நமது தலைவர் பனகால் அரசர் தேவஸ்தானச் சட்டம் இயற்றியபோது பிராமணர்கள் மதத்திற்கே மோசம் வந்து விட்டதாயும், மத விஷயங்களிலும் சர்க்காரின் ஆதிக்கத்தைப் புகுத்துவதாயும் கூச்சலிட்டனர்.

கடவுளுக்கு இடும் நாமம் வடகலையென்றும் தென்கலையென்றும் மதம் பிடித்து சச்சரவிட்டுக்கொண்டு அதனைத் தீர்ப்புச் செய்வதற்கு சர்க்காரின் உதவியை நாடி வெள்ளைக்காரர்களின் தீர்மானப்படி செய்வது மாத்திரம் சர்க்கார் தலையிட்டதாகவில்லையா? மற்றும் ஜீயர் கொடி பிடிப்பது முதலானவற்றிலும் சர்க்கார் தலையிட்டு தீர்ப்புச் சொல்ல கேட்கவில்லையா? கணக்கு வைத்தால் தாங்கள் மோசம் செய்வதற்கு இடமில்லையே என்ற ஏக்கத்தால் கூச்சலிடுவதை உலகத்தார் நன்குணர்ந்து கொண்டனர். மேலும் இச்சட்டத்தால் இந்து மதத்திற்கு மோசம் வந்துவிட்டதெனக் கூச்சலிடும் இந்த ஜில்லா பிரதிநிதியான ஆச்சாரியாரும் எந்தத் தொகுதியின் பெயரால் நின்றார். மகமதியரல்லாத தொகுதியின் பெயராலல்லவா? சர்க்காரால் இந்து மதத்திற்கு என்று பிரதிநிதித்துவமளிக்கப்பட்டிருக்கின்றதா? மகமதிய கிறிஸ்துவ மதங்களுக்குப் பிரதிநிதித்துவமிருப்பது போல இந்து மதத்திற்கில்லாததைக் குறித்து இப்புலிகள் இதுவரையில் வாயையாவது திறந்திருக்கின்றனரா எனக்கூறி, முடிவில் மதுரை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனுசரித்து சுயமரியாதையை நிலைநாட்டி நிர்மாணத் திட்டத்தின் கீழ் செவ்வனே வேலை நடத்தவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

(குறிப்பு: செங்கல்பட்டில் 12.02.1927 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்க திறப்பு விழாவில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 20.02.1927)

Pin It