அய்க்கிய நாடுகள் அவை வளர்ச்சித் திட்டத்தின் 2003 ஆம் ஆண்டிற்கான உலக மனித மேம்பாட்டு ஆண்டறிக்கையின் முகப்பு பின்வருமாறு பேசுகிறது : "விதவிதமான அரசியல் சட்டங்களும், தேர்தல் ஏற்பாடுகள் அல்லது சிறப்பான தேர்தல் நடைமுறைகள் ஆகியவற்றால் மட்டுமே, ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க முடியாது. ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. இன,மொழி, சமய, பண்பாட்டுக் கூறுகளால் பிளவுண்டு வாழும் குடிமைச் சமூகங்களை மறு ஒருங்கிணைப்புச் செய்வதற்கு, மிக நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் செயல்முறை அது. உலகில் பல்வேறு நாடுகளில் ஜனநாயகம் நடப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலான நாடுகளில், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிமுறையாக ஜனநாயகம் கையாளப்படுவது, மிகவும் வேதனைக்குரியது. அரசியல் அதிகாரத்திற்காகப் போராடும் மக்கள் குடிநீர், உணவு, கல்வி, நிலம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை சமூக உரிமைகளுக்காகத்தான் போராடுகிறார்கள். அந்த நாடுகளில் எல்லாம், ஜனநாயகம் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.''
உண்மைதான். இந்திய ஜனநாயகத்திற்கு மேற்கண்ட வரிகள் முற்றிலும் பொருந்தி நிற்கின்றன. இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதி, மத, பொருளாதாரப் பிளவுகளிலிருந்து மக்களை மீட்டு ஒருங்கிணைக்க, இந்திய அரசிடம் எவ்விதச் செயல் திட்டமும் இல்லை. அப்படியொரு பார்வையே ஆட்சியாளர்களிடம் இல்லை. எனவே, சரி செய்ய இயலாத பெரும் சமூகப் பதற்றத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. சமூக அறிஞர் டாக்டர் கே.ஆர். நாராயணன் சொன்னதைப் போல, நாட்டில் ஒரு எதிர்ப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஆயினும், அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் இந்திய மக்கள், தேர்தல் நடைமுறைகளை பெரும் ஆர்வத்தோடு கவனிப்பதும், அதில் பங்கேற்கத் துடிப்பதும் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன. அரசியல் அதிகாரத்திற்கான வேட்கையே அவ்வாறு வெளிப்பட்டு வருகிறது. எனவே, தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டிய பரிதாப நிலையிலிருக்கிறார்கள் மக்கள். இழந்த உரிமைகளுக்காக, அடிப்படைத் தேவைகளுக்காக, வசதி வாய்ப்புகளைக் காப்பாற்றுவதற்காக, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இன்ன பிற காரணங்களுக்காக, கிட்டத்தட்ட எல்லா இந்திய மக்களுக்கும் அரசியல் அதிகாரம் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையே மக்களை மேலும் மேலும் பிளவுபடுத்துவதாகவும் இருக்கிறது.
எனவே, மிக முற்றிய ஆழமான பிளவுகளில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வர்க்கங்கள், அதிகாரத்தை நோக்கியப் போட்டியில் இறங்குகின்றன. ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் ஒரு 'உள்நாட்டுப் போர்' நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, புதிய புதிய அரசியல் கட்சிகள் முளைத்த வண்ணமிருக்கின்றன. ஏராளமான தலைவர்கள் உருவாகிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்குக் காரணம், நோக்கம் எதுவெனில், நாடாளுமன்றம் முதல் சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி வரையிலும் விசிறியடிக்கப்பட்டிருக்கும் பல்லடுக்குப் படிநிலை அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான்.
இந்தப் படிநிலை அதிகாரக் கட்டமைப்புகள்தான், இந்திய ஜனநாயகத்தின் 'அரசியல் பன்முகம்' என்று புகழப்பட்டு வருகிறது. தனிச் சொத்துரிமையை வலியுறுத்தும் ஏகபோக முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில்தான், இந்த 'அரசியல் பன்முகம்' மிக முக்கியத்துவம் பெற்றதாகி விடுகிறது. "பெயரளவில் அதிகாரம்' கொண்டவைகளாக இருப்பினும், அதிகாரங்களுக்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பகை கொண்ட வகுப்புகளுக்குத் தீனியிட, இந்த "அரசியல் பன்முகம்' உதவுகிறது. ஆனால் உண்மையில், உச்சபட்ச அதிகாரத்திற்கானப் போர் எந்நாளும் நடந்து கொண்டேயிருக்கும்.
பன்னெடுங்காலமாக பகைமுரண் கொண்ட மக்களிடையே நிலவும் அரசியல் அதிகார வேட்கையைக் குறைப்பதன் மூலமே, பதற்றமில்லாத ஜனநாயகச் சூழலை இந்தியாவில் உருவாக்க முடியும். அதற்கு, மக்கள் அதிகாரமுடையவர்களாக மாற்றப்பட வேண்டும். தேர்தல் காலங்களில், ஜனநாயகத்தில் மக்களுக்குதான் முழு அதிகாரம் உள்ளதைப் போன்று அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. வாக்குரிமை வைத்திருப்பதையே "முழு அதிகாரம்' என்று சித்தரித்து மக்களை ஏய்த்துப் பிழைத்து வருகின்றன. அதிகாரமற்றவர்களாக தாங்கள் வைக்கப்பட்டிருப்பதை, இந்திய மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அதுவே இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரும் சோகம்.
ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் அதிகாரமற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளதைப்போல, பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில், மக்களும் அதிகாரமற்றவர்களாக உள்ளனர். தாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரநதிகளிடம் கூட, அவர்களுக்கு எவ்வித அதிகாரம் இல்லை. எனவேதான், தேர்தலுக்குப் பிறகு, தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியிடமே அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் கெஞ்சுகிறார்கள். இதை மிகப் பெரும் ஜனநாயகக் கொடுமை என்று கூற முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்தவர்களிடமே கொள்ளையடிக்கிறார்கள்; கொழுத்துப் பெருகுகிறார்கள். பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டும் மீண்டும் ஏதேனும் ஒரு ஊழல்வாதியையே மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள்.
மக்களை அதிகாரமற்றவர்களாக வைத்திருக்கும் 'பிரதிநிதித்துவ ஜனநாயகம்' தான் சமூகத்தில் மக்களிடையே இயல்பாக காலப்போக்கில் உருவாகும் ஒருங்கிணைப்பைக்கூட தடுத்து நிறுத்துகிறது. எத்தகைய மக்கள் விரோதச் சட்டங்களையும் உருவாக்கிக் கொள்ள ஆட்சியாளர்களுக்கு உதவுகிறது; மக்கள் மீது மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவிவிடுவதற்குத் துணைசெய்கிறது. குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் ஆட்சி அதிகாரத்தைப் பெற உதவுகிறது. கட்டுப்படுத்த முடியாதபடி நாடெங்கிலும் ஊழலை ஊற்றெடுக்க வைத்திருக்கிறது. சட்டத்தினின்றும், நீதியினின்றும் எவ்விதத் தண்டனையும் இல்லாதபடி தப்பித்துச் செல்ல, பிரதிநிதிகளுக்கு உதவுகிறது. எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தவர்களாக மக்களை முடமாக்கி வைத்திருக்கிறது.
இத்தகைய அவலத்திலிருந்து இந்திய ஜனநாயகம் மீள வேண்டுமெனில், மக்கள் அதிகாரமுடையவர்களாக மாற்றப்பட வேண்டும். அதிகாரமுடைய மக்களால் மட்டுமே தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அடிப்படைத் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட பெரும்பாலான ஏழை எளிய மக்களை அதிகாரமயப்படுத்துவதன் மூலமே - அவர்களின் உரிமைகளை உறுதி செய்ய முடியும்.
"அதிகாரமயப்படுத்துவது என்பது, அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் பெரும்பாலான மக்களுக்குச் சமமான வாய்ப்புகள் சென்றடைவதை உறுதி செய்வதும், அதற்கு உத்திரவாதமளிப்பதும் ஆகும்'' என்கிறார் அறிஞர் கே.ஆர். நாராயணன். உண்மையில் 'சமமான வாய்ப்புகள்' அளிப்பது என்பது, அனைத்துத் தளங்களிலும் மக்களை "பங்கேற்க வைப்பது' ஆகும். அரசியல் அதிகாரத்திலும் பொருளாதாரக் கட்டுமானங்களிலும், தேசிய கருத்துருவாக்கங்களிலும் ஏழை எளிய மக்களைப் பங்கேற்க வைப்பது என்பதே அவர்களை அதிகார மயப்படுத்துவது ஆகும்.
சமூகத் தளத்தில் பல்வேறு நம்பிக்கைகள், மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளால் பிளவுண்டு நிற்கும் மக்களை, அரசியல் தளத்தில் சமமானவர்களாக உருவாக்கியிருக்கும் இந்திய ஜனநாயகம், சமமான 'அரசியல் வாய்ப்புகளை' உறுதி செய்யவில்லை. வாய்ப்புகளை உருவாக்கித் தராத அரசியல் சமத்துவம் போலியானது.
ஒரு தலைப்பட்சமான வளர்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவும், தேங்கி நிற்கும் நிர்வாகத்தைச் செயலூக்கம் பெறச் செய்யவும் அதிகாரமயப்படுத்தப்பட்ட மக்களால் மட்டுமே முடியும். அரசைக் கண்காணிக்கவும் அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கவும், ஊழலைத் தடுத்து நிறுத்தவும், வாரிசு மயமாகிவரும் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவும், அதிகாரமுடையவர்களாக மக்கள் மாற வேண்டும். அப்போதுதான், உண்மையான மக்களாட்சி மலரும்.
ஆனால், அறுபதாண்டு கால சுதந்திர இந்தியாவில் மக்களை அதிகாரமயப்படுத்துவதற்கான விவாதமே எழுப்பப்படவில்லை. சமூகத்தையும் நாட்டையும் ஜனநாயகப்படுத்துவதற்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிற போதிலும், ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும், சாதியவாதிகளும் அதற்குப் பெரும் தடைகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களோ, பொதுநில அமைப்புகளோகூட, மக்களாட்சியில், மக்கள் அதிகாரமற்றவர்களாக முடக்கப்பட்டிருப்பது குறித்து எந்த விவாதத்தையும் எழுப்பவில்லை.
இந்திய வரலாற்றில் இந்திரா காந்தி கொண்டு வந்த 'அவசர நிலை' அறிவிப்பின்போதுதான் ஜனநாயகம் பற்றிய விரிவான விவாதங்கள் எழுந்தன. அப்போதும்கூட, மக்களுக்காக அவை நடத்தப்படவில்லை.
- இருள் விரியும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மறுக்கப்பட்ட அதிகாரம்
- விவரங்கள்
- யாக்கன்
- பிரிவு: தலித் முரசு - ஏப்ரல் 2006
-யாக்கன்