ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநில தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
இத்தேர்தலில் தான் ஏற்கெனவே ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை பாஜகவிடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.
குறிப்பாக சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 54 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 35 இடங்களையும், ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் பாஜக 115 இடங்களையும், காங்கிரஸ் 69 இடங்களையும் பெற்றிருக்கின்றது.
அதே போல 230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் 156 இடங்களை பிஜேபியும், காங்கிரஸ் 62 இடங்களையும், 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் 64 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றது. பிஆர்எஸ் கட்சி வெறும் 39 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பாஜக நேரடியாக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் 41 சதவீதத்துக்கும் அதிகமான மக்களை பாஜக ஆட்சி செய்கிறது. உத்தராகண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி செய்து வருகிறது. மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.
தற்போது கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தனித்து ஆட்சி செய்கிறது. இது நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 8.51 சதவீதம் மட்டுமே ஆகும். பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கூட்டணி ஆட்சியையும் சேர்த்தால் 19.84 சதவீதம் மக்களை மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்கிறது.
தான் ஏற்கெனவே ஆட்சி செய்த மாநிலத்தில் கூட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திராணியற்ற காங்கிரஸ்தான் பாசிசத்தை ஒழிக்கப் போவதாக மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் மூரட்டு மூடர்கள்.
இவர்கள் எந்த அடிப்படையில் பாசிசத்தை ஒழிப்பேன் என மார்தட்டுகின்றார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான நபர்களுக்கு பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலையில் பொறுக்கிகளையும், ரவுடிகளையும், கார்ப்ரேட் மாஃபியாக்களையும், சாதிவெறியர்களையும், மதவெறியர்களையும் வைத்துக்கொண்டு இவர்கள் எந்த பாசிசத்தை ஒழிக்கப் போகின்றார்கள்?.
ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சுமார் 18 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. மேலும் 29 சதவீதம் பேர் “கோடீஸ்வரர்கள்” ஆவார்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) அறிவித்திருக்கின்றது.
மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் தேர்தலில் போட்டியிட்ட 8,054 வேட்பாளர்களில் 8,051 பேரின் சுய உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்து இந்த உண்மையை வெளியிட்டு இருக்கின்றது.
தேர்தலில் போட்டியிட்ட 8,051 வேட்பாளர்களில் 1,452 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன, மேலும் அதில் 959 (12 சதவீதம்) பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் குறிப்பாக கொலை, கொலை முயற்சி,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன.
இப்படி சமூக பாசிஸ்ட்களை வைத்துக்கொண்டு பாசிச ஒழிப்பு நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் ஜனநாயக முகமூடி அணிந்த புல்லுருவிகள். பாசிசம் என்றால் அது பார்ப்பன பாசிசம் மட்டும் கிடையாது, முதலாளித்துவப் பாசிசத்தையும் உள்ளடக்கியதுதான். ஆனால் பாசிசத்தை விழ்த்துகின்றேன் என்று முதலாளித்துவ கட்சிகளை ஆதரிப்பவர்கள் மறந்தும் கூட தாங்கள் ஆதரிக்கும் கட்சியின் முதலாளித்துவ பாசிசத்தைப் பற்றி பேசுவதில்லை.
பார்ப்பன பாசிசம் என்பது ஏதோ நூறு பார்ப்பனர்களால் அரங்கேற்றப்படும் பாசிசம் கிடையாது. அது பெரும்பான்மை இந்து மக்களின் உளவியலாய் இருக்கும் போது அதை தேர்தல் பாதையின் மூலம் வீழ்த்திவிட முடியும் எனச் சொல்வதும், நம்ப வைப்பதும் திட்டமிட்ட மோசடித்தனமான செயலாம்.
முதலாளித்துவ கட்சிகள் சாதிவெறியர்களையும் மாஃபியாக்களையும் மக்கள் விரோதிகளையும் வேட்பாளராக நிறுத்தும் போது அவர்கள் தங்களின் வர்க்க நிலைக்கு சாதகமான புறச்சூழலை எப்படி மாற்ற முன்வருவார்கள்?
பிரான்சில் பாசிசம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு டிமிட்ரோவ் பின்வருமாறு பதிலளித்தார்: “பாசிசத்தின் வெற்றிக்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. 1830, 1848 புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூன் போன்ற ஆழமான புரட்சிகர பாரம்பரியம் அம்மண்ணில் இருப்பதால், இத்தாலி, ஜெர்மனியைப் போல வெகு எளிதில் பாசிசம் வேரூன்றிவிட முடியாது. ஆனாலும், இங்கு ஹிட்லர்கள் உருவாவதற்கான அடிப்படையை மறந்து விட இயலாது. வறுமை, வேலையின்மையை எதிர்த்தும், நெருக்கடியில் இருந்து மக்களை காக்கவும், புரட்சிகர இயக்கம் மக்களைத் திரட்டி போராட வேண்டும்.
இப்போராட்டம் தற்காப்புக்கானதாக இல்லாமல் தாக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும். பிற்போக்கு சக்திகளும், பாசிசமும், சமூகத்தில் அதிருப்திக்கு ஆளான மக்களை கவருவதை தடுத்து நிறுத்தினால்தான் வெற்றியை உறுதிப்படுத்த இயலும். பாசிஸ்டுகளின் தேசியவெறி, இனவெறி சித்தாந்தத்தையும், அவர்களை பின்னணியில் இருந்து இயக்கும் நிதி மூலதனத்தையும், மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதின் மூலமே வெற்றி இலக்கை அடைய முடியும். பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் சக்திகளிடம் இருந்து, தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, விடாப்பிடியான போராட்டத்தின் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்”.
பாசிசம் எவ்வாறு மக்களைக் கவருகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த டிமிட்ரோவ் “மக்களின் கோரிக்கை, தேவைகளைப் பற்றி வாய்ச்சவடால் அடிப்பது, தேசத்தின் கெளரவத்தை காப்பாற்ற தேசியவெறி உணர்வுகளைத் தூண்டுவது, முந்தைய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை பாசிசம் பயன்படுத்திக் கொள்கிறது” என்றார்.
இதில் முக்கியமானதாக “பிற்போக்கு சக்திகளும், பாசிசமும், சமூகத்தில் அதிருப்திக்கு ஆளான மக்களை கவருவதை தடுத்து நிறுத்தினால்தான் வெற்றியை உறுதிப்படுத்த இயலும்” என்கின்றார்.
ஆனால் ‘INDIA’ கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் அப்படியான செயல்திட்டம் ஏதாவது இருக்கின்றதா என பார்த்தால் இந்த கூட்டணி எவ்வளவு அபத்தத்தின் மீது கட்டப் பெற்றது என்பது விளங்கும். வெளிப்படையாக பார்ப்பன பாசிசத்தைப் பற்றியோ, முதலாளித்துவ பயங்கரவாதத்தைப் பற்றியோ பேசுவதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள கார்ப்பரேட் கட்சியினர் யாருக்காவது திராணியிருக்கின்றதா?.
அடுத்து “பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் சக்திகளிடம் இருந்து, தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, விடாப்பிடியான போராட்டத்தின் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்” என்கின்றார்.
ஆனால் மக்களை திரட்டி அவர்களை சித்தாந்த ரீதியாகப் பயிற்றுவித்து பாசிசத்திற்கு எதிராக விடாப்பிடியான போராட்டத்தை முன்னெடுக்க ஒருபோதும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகள் முயற்சிக்கப் போவதில்லை.
காரணம் அவர்களின் அடிப்படையே முதலாளித்துவ சுரண்டலில் வேர்கொண்டிருக்கும்போது அதை பாதுகாக்கும் சாதியையும் மதத்தையும் அவர்கள் ஒருபோதும் அழித்தொழிக்க முன்வரமாட்டார்கள்.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்றால் களத்தில் இறங்கி அதை எதிர்கொள்ள வேண்டும். பாசிசத்தின் அத்தனை ஆயுதங்களையும் முற்போக்கு கருத்தியலால் அடித்து வீழ்த்த வேண்டும். அதற்கு தீவிரமான பரப்புரை மட்டுமே பயன்படும்.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பார்ப்பன பாசிச சக்திகளால் மேலாதிக்கம் செலுத்த முடியாமல் இருப்பதற்கு இந்த மாநிலங்களில் பல நூறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பார்ப்பன பாசிச எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமே முக்கிய காரணமாகும்.
அதை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கு இந்தியா முழுவதும் உள்ள இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.
100 ஆண்டுகாலத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்தியா முழுவதும் ஆலமரமாக வளர்ந்து வேர்விட்டு ஆழமாக பரவி இருக்கின்றது. ஆனால் இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் அப்படியான ஒரு வலைப்பின்னலை உருவாக்கத் தவறி இருக்கின்றார்கள். அந்த வெற்றிடத்தைத்தான் இன்று பாசிஸ்ட்கள் மிக எளிமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
நாம் உடைக்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி வைத்திருக்கும் இந்த நச்சு வலைப்பின்னலைத்தான். அதற்கு கார்ப்பரேட் அரசியல் கட்சிகள் எப்போதுமே பயனற்றவை. காரணம் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எல்லா கார்ப்பரேட் அரசியல் கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அதற்குத் தடையும் கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கோ, அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கோ தங்கள் கட்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த யாரும் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என அறிவிக்க தைரியம் உள்ளதா?
நிச்சயம் கிடையாது. திமுக பாசிசத்தை ஒழிக்கும் என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே திமுக ஆர்.எஸ்.எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளிக்கின்றது. சங்கிக் கும்பல் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அடாவடித்தனத்தில் ஈடுபடும் போதெல்லாம் மிக மென்மையான அனுகுமுறையையே கடைபிடிக்கின்றது.
அதனால்தான் சொல்கின்றேன், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பாசிசம் ஒழிந்துவிடும் என்று பம்மாத்து செய்பவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக செயல்படுபவர்கள்தான்.
தாங்கள் ஆதரிக்கும் கட்சி விவசாயிகளுக்கு எதிராகவும் மீனவ மக்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் பாசிசத்தையே எதிர்க்கத் துப்பில்லாத இவர்கள் தங்களை நேர்மையானவர்கள் என்றும் தூய்மையான கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்றும் சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள்.
பார்ப்பன பாசிசமும், கார்ப்பரேட் பாசிசமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றைவிட்டு இன்னொன்றால் உயிர் வாழவே முடியாது. இதை மூடி மறைத்து மழுப்புபவன் உண்மையில் பாசிசத்தின் கைக்கூலியே ஆவான்.
- செ.கார்கி