இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 68 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்திய அரசியலின் தன்மைகளை அடையாளப்படுத்துவதில் அரசியல் கட்சிகள்தான் முதலிடம் வகிக்கின்றன. இன்று பணக்காரர்களும் தொழிலதிபர்களும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையில் அரசியல் உள்ளது. முதலாளிகள், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரிடம் ஒரு கமுக்கமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்களின்  குரல் எடுபடவே இல்லை.

நேரு காலத்தில் இந்திய சனநாயகத்தைப் பற்றியும் சமூகப் பொருளாதார அமைப்புகள் பற்றியும் பல அறிஞர் கள் நூல்கள் வாயிலாகவும் கட்டுரைகள் வழியாகவும் கருத்துகளைத் தெரிவித்தனர். நூல்களைத் தொடர்ந்து படிக்கும் ஆர்வமுடைய நேரு, பல அறிஞர்களுடன் உரை யாடி இந்தியாவின் சனநாயகத் தன்மைகளையும் நெறி களையும் உயர்த்துவதற்குப் பல முயற்சிகளை மேற் கொண்டார். நோபல் பரிசுப் பெற்ற ஸ்விடன் நாட்டைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் குன்னர் மிர்தல் “ஆசிய நாடகம்” (Asian Drama) என்ற தனது நூலில் “இந்தியாவை உயர்குடி மக்கள்தான் ஆளுகின்றனர். ஏழைகள் தங்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதையே அறியாமல் உள்ளனர். அதனால் அவர்களுடைய  குரல்கள் ஆட்சியியலில் எடுபடவே இல்லை” என்றார். இந்த நிலைமைதான் இன்றும் தொடர்கிறது. அண்மை யில் வெளியான புள்ளிவிவரப்படி ஒரு விழுக்காடு பெரும் செல்வந்தர்கள் இந்தியாவின் 76 விழுக்காட்டு சொத்து களையும் பணத்தையும் முடக்கிவைத்துள்ளனர். 50 விழுக்காடு ஏழை மக்கள் ஒரு வேளை உணவிற்கே திண்டாடுகின்றனர். இத்தகைய சூழலில் சனநாயகமும் சனநாயகத்திற்குப் பாதுகாப்பாக உள்ள நீதித் துறை யிலிருந்து நிர்வாகத் துறை வரை கட்சி அரசியலுக்கு அஞ்சி நீதியை  ஏழைகளுக்கு வழங்க மறுக்கின்றன.

நேரு காலத்தில் காங்கிரசுக் கட்சியில்  உட்கட்சி சனநாயகம் ஓரளவிற்காவது இயங்கியது. பலர் கூறுவது போல இந்தியாவில் சனநாயகம் சிதைந்து கொண்டே வருகிறது. சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது நடைபெறும் ஊழல்கள், தேர்தல் களத்தில் வேட்பாளர் களாகப் போட்டியிடுபவர்களின் குற்றப் பின்னணி ஆகியவை சனநாயகத்தைக் காப்பதற்குப் பெரும் அறைகூவல்களாக உள்ளன. இந்திய அரசியலில் குற்றப் பின்னணியைப் பற்றி ஆய்வு செய்த வோரா (VOHRA) குழுவின் அறிக்கையை இன்று வரை ஒன்றிய அரசு மக்கள் மன்றத்தில் வைக்கவே இல்லை. காரணம் அக் குழுவின் அறிக்கையில் குற்றப் பின்னணியோடு அரசியல் களத்தில் இறங்குபவர்களின் எண்ணிக்கைப் பற்றி விரிவாகச் சுட்டப்பட்டுள்ளது. இத்தகைய குற்றப் பின்னணி உடையவர்கள் எவ்வாறு அரசு நிர்வாகங் களில் தலையிட்டு ஊழல்களைப்  பெருமளவிற்குச் செய் கிறார்கள் என்பதையும் இக்குழுச் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய சனநாயகத்தின் பல்வேறு கூறுகளை ஆய்வு செய்தால் முதன்மையான அமைப்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் உள்ளது. இவ்வாணையம் தற்போது தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் வழுவி நீதி மன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.  2014க்குப் பிறகு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்  ஆளும் கட்சிக்குச் சார்பாகவே அமைந் துள்ளன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையருக்கான தகுதிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற வில்லை என்பது வருத்தத்திற் குரியது. தற்போது எழும் பெரும் சிக்கல்களுக்கு இதுவே காரணமாக உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324(1)ஆம் பிரிவில் வாக்காளர் பட்டியலை உருவாக்குதல், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துதல் இந்தியக் குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் தேர்தல்களை நடத்துதல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார் என்ற பிரிவும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பணிகள் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் பணிகளுக்கு ஒப்பானவை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நீக்க வேண்டும் என்றால் நாடாளு மன்றத்தின் வழியாகத்தான் நீக்க முடியும் என்ற பிரிவு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்கு உயர் பாதுகாப்பை வழங்குகிறது. 1950லிருந்து தொடங்கி இன்றுவரை 22 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளனர். 1991ஆம் ஆண்டு தேர்தலின் போது டி.என்.சேஷன் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் அதிரடியான நடவடிக் கைகளை எடுத்து, தேர்தலில் ஈடுபட்ட கட்சிகளின் தேர்தல் செலவுகளை வெகுவாகக் குறைத்தார். மேலும் அரசியல் கட்சிகள் அச்சம் கொள்கிற  அளவிற்குத் தேர்தல் செலவை ஆய்வும் செய்தார். அதற்குப் பிறகு  எடுத்துக்காட்டான  முறையில் 2001 முதல் 2004 வரை இருந்த லிங்டோ சிறப்பான முறையில் பணி புரிந்தார். பெரும்பாலான தேர்தல் ஆணையர்கள் இந்திய ஆட்சிப் பணியில் இருந்து நியமனம் செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின் பரிந்துரை வழியாகக் குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையரை  நியமிக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் போது மூத்த நீதிபதிகள் அடங்கிய (கொலிஜியம்) குழு நீதிபதிகளின் தகுதிகளை ஆய்வு செய்கிறது. ஆனால் நீதிபதிகள் நியமனம் போன்று எவ்வித நடைமுறைகளும் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் போது கடைப்பிடிக்கப்படு வதில்லை.

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலாளராகப் பணியாற்றி, அவருடைய கட்டளைகளைத் தலை மேல் ஏற்று நடைமுறைப்படுத்திய ஒரே தகுதியின் அடிப்படையில் ஜூலை 6 2017இல் அச்சல் குமார் ஜோதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்குத் பிறகுதான் தேர்தல் ஆணை யத்தின் மீது இருந்த நம்பிக்கை தவிடுபொடியானது. நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ச.க வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மற்ற மாநிலங்களின் தேர்தல் அறிவிப்போடு குஜராத் சட்ட மன்றத் தேர்தலை அறிவிக்காமல் சில மாதங்கள் தள்ளி வைத்தது, ஓய்வு பெற்ற பல தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக 2010லிருந்து 2012 வரை தேர்தல் ஆணையராக இருந்து நேர்மையாகப் பணியாற்றிய குரேஷி ஊடக விவாதத்தில் பங்கேற்ற போது இது போன்று ஒரு சட்ட மன்றத் தேர்தல் அறிவிப்பைத் தள்ளிப் போட்டது முறை யற்ற செயல் என்றார். ஜோதி தள்ளி போட்டதன் காரண மாக அந்தக் குறுகிய காலத்தில் ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தின் பேரில் 120 பொருட்களின் மீது சரக்கு-சேவை வரி விகிதம் அதிரடியாகக் குறைக்கப்பட்டது. வரி விகிதம் குறைக்கப்பட்ட பொருட்களில்  பெரும்பாலானவை குஜராத் மாநிலத்தில் உற்பத்திச் செய்யப்படுபவை என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இப்படிப்பட்ட அப்பட்டமான அரசியல் ஏமாற்றுத்தனத்தை பாஜக செய்வதற்கு  வழி வகுத்தவர் ஜோதி என்றால் மிகையாகாது.

மேலும் இரட்டைப் பதவிகளை வகித்தனர் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை ஜோதி ஓய்வு பெறும் நாளன்று அறிவித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த அறிவிப்பை 24 மணி நேரத்திற்குள் இந்தியக் குடியரசுத் தலைவரும் ஏற்றார் என்பதும் இந்திய சனநாயகத்தின் மீது விழுந்த பேரிடியாகும்.

20 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தில்லி நீதிமன்றத்தின் அமர்வு மார்ச் 23 2018 அன்று அறிவித்துள்ளது. குறிப்பாக தேர்தல் ஆணையம் இயற்கை நீதியின்  கோட்பாடுகளுக்கு (Principles of Natural Justice)  எதிராகச் சட்டத்தைத் தவறான முறையில் பயன்படுத்திப் பழுதாக்கியுள்ளனர் என்று தீர்ப்பில் கடுமையான முறையில் அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டுள் ளனர்.

மேலும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் பிரிவு தேர்தல் சின்னமாக குக்கர் சின்னம் பெறுவதை இறுதி நாள் வரை இழுத்தடித்தது தினகரனை அச்சுறுத்த - இரட்டை இலை யைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையருக்குப் பணம் அளிக்க முயற்சி செய்தார் என்ற ஒரு வழக்கையும் போட்டு நடுநிலை தவறியது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  ஒருதலைப் போக்கினை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத் தில் தினகரன் தொடர்ந்த வழக்கில்- மார்ச் 2018இல் தினகரன் புதிய கட்சித் தொடங்குவதற்கும் குக்கர் சின்னத்தைத் தேர்தல் சின்னமாகப் பயன்படுத்துவதற்கும் ஒரு தீர்ப்பை அளித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பத்து நாட்களுக்குள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் தனது நடுநிலைமைத் தகுதியை இழந்துவிட்டதோ என்ற ஐயத்தை எல்லோர் உள்ளத்திலும் ஏற்படுத்தியது.

தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன விவகாரத் தில் தலையிடும் போக்கு காங்கிரசு ஆட்சியில் தான் தொடங்கியது.  1989இல் இராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகாரத் தைக் குறைப்பதற்காக, தலைமைத் தேர்தல் ஆணை யருடன் மேலும் இரண்டு ஆணையர்களை  நியமித்தார். 1990இல் பிரதமராக இருந்த வி.பி.சிங் மீண்டும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ஒருவரே இருக்கும் நிலையை உருவாக்கினார். இந்த உத்திரவுக்குப் பின் டி.என்.சேஷன் அவர்கள் பல தேர்தல் சீர்த்திருத்தங் களைக் கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தற்போது தலைமைத் தேர்தல் ஆணைய ராக ஒருவரும் இரண்டும் ஆணையர்களும் உள்ளனர். இருப்பினும் தேர்தல் ஆணையத்தால் இந்த குற்றப் பின்னணி அரசியலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் தேர்தல் ஆணையத்தின் கைகள் ஆணையர் நியமனத்தின் வழியாகக் கட்டப் படுகின்றன. இந்திய அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களைப் பற்றிப் பல குறிப்புகள் வெளி வந்துள்ளன. 1996ஆம் ஆண்டில் மட்டும் 4 ஒன்றிய அமைச்சர்கள் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது. கொலை கற்பழிப்பு, கொள்ளை, ஆள்கடத்தல், அமைதிக்குக் கேடு விளைவித்தல் ஆட்களைத் தாக்குதல் போன்ற குற்றச் செயல்களை இவர்கள் செய்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணைய ராக இருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 2004-05இல் இந்தியாவில் இருந்த 4000 சட்டமன்ற உறுப்பினர்களில் 700 உறுப்பினர்கள் ரௌடிகள் என்றும் கடும் குற்றப் பின்னணி உடையவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஊழலையும் குற்றச் செயல்களையும் தடுப்பதற்குப் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். சட்டத்தை உடைப்பவர் எக்காலத்திலும் சட்டத்தை இயற்றுபவராக இருக்கக் கூடாது (No law breaker ever be law maker) என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல் சீர்த்திருத்த அமைப்பு 16ஆவது நாடாளு மன்றத் தேர்தலின் போது (2014) வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சமர்ப்பித்த வேட்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் 16ஆவது நாடாளுமன்றம்தான் அதிக அளவில் குற்றப் பின்னணி உடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை  உடையது என்ற புள்ளி விவரத்தை அளித்தது. மொத்த நாடாளு மன்ற உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

2017 புள்ளிவிவரப்படி நாடாளுமன்றம் சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் பெண்கள் சார்ந்த பாலியல் குற்றசாட்டுகளுக்கு உள்ளான அதிக நபர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி உடைய நாடாளுமன்ற உறுப்பினர் களில் அதிக எண்ணிக்கையில் மகாராட்டிரா, உத்திரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்ப்பட்ட புதிய உறுப்பினர்களில் 82 விழுக்காட்டினர் பணக்காரர்கள். தெலுங்கு தேசம், தெலங்கான ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு ஆகிய மூன்று கட்சிகளில் தான் அதிக அளவில் சொத்து உடையவர்கள் உள்ளனர் என்பதும் இவ்வாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணி உடையவர்கள் சாதாரண-சாமானிய மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன் வைப்பார்களா? இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக-பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் நிதிச்சட்டம் (Finance Bill)  நாடாளுமன்றத்தில் மார்ச் 13 2018 அன்று எவ்வித விவாதமுமின்றி நிறை வேற்றப்பட்டுள்ளது என்பது நாடாளுமன்ற சனநாயகம் வெட்கித் தலைகுனியும் அளவில் தளர்ந்து வருகிறது என்பதற்குச் சிறந்த அடையாளம்.

இந்திய சனநாயகத்தின் முதன்மையான அமைப்பான  நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்தும் இந்தியத் தேர்தல் ஆணையமும் சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதை மேற்கூறிய தரவுகள் சுட்டுகின்றன. இந்நிலை மாற சில அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்குத் பிரதமர் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட குழுதான் எதிர்காலத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். மேலும் தேர்தலுக்கான செலவினை முழு அளவில் தேர்தல் ஆணையமே செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நேர்மையாகச் செயல்பட்ட பல முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் தேர்தல் ஆணையத்தின் வழியாக ஒன்றிய அரசிற்குப் பரிந்துரை வழங்கியுள்ளனர். அடிப் படை மாற்றங்கள் மேற்கூறிய  அமைப்புகளில் ஏற்கப்படா விட்டால் இந்தியாவில் சனநாயகம் என்பது கேலிக்கூத்து என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

Pin It