நூல் : மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்
ஆசியர் : ஏபி. வள்ளிநாயகம்
வெளியீடு : தலித் ஆதார மய்யம், அரசரடி, மதுரை 16, பேசி : 0452 - 2302199
பக்கம் : 384
விலை : ரூ.150

பல்லாயிரக்கணக்கான சாதிகளால், விடுவிக்க இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகத்தில் சமத்துவத்தையும், சாதி ஒழிப்பையும், நீதி நேர்மையையும் நிலைநாட்ட வெகுண்டெழுந்து போராடிய தன்மானமிக்கத் தலைவர்களின் வரிசையில், இந்திய அளவில் முதல் போராளியாக அடையாளப்படுத்தப்பட்டவர்தான் மகாத்மா புலே. அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர சிந்தனைகளுக்கு உயிரூட்டிய சமூக ஆசிரியர்களுள் ஒருவராக அறியப்படும் மகாத்மா புலே, இந்திய சமூக சீர்திருத்தத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால், புலே பிறப்பதற்கு முன்பே அவர் தன் வாழ்கையில் என்னவெல்லாம் செய்ய நினைத்தாரோ, எதையெல்லாம் சாதிக்கத் துணிந்தாரோ, அதையெல்லாம் தனியொரு மனிதனாகத் திரண்டெழுந்து நிகழ்த்திக் காட்டிய வீர வரலாற்றை வழக்கம் போல சாதியச் சமூகம் மறைத்திருக்கிறது.

Vedhamanikkam
அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்தான் மகராசன் வேதமாணிக்கம். சாக்கிய இனத்தின் மூலாம்பர வேர்களின் அதிர்வுகளில் கருத்தரித்து, பொருள் முதல்வாதத் தத்துவத்தில் ஆளுமை பெற்று, கிறித்துவத்தின் வழியே சாதி ஒழிப்பையும், சம உரிமையையும் வென்றெடுத்தவரே மகராசன் வேதமாணிக்கம். சாதிய சமூகத்தால் மறைக்கடிக்கப்பட்ட அந்த வரலாற்று நாயகனைத் தேடிப்பிடித்து, தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார், ஏபி. வள்ளிநாயகம்.

"மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்' என்ற நூல் வழியே மகராசன் வேதமாணிக்கத்தை மட்டுமின்றி, கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய சமூகச் சூழலையும், இக்காலங்களில் ஆட்சி செய்த மன்னர்களின் செயல்பாடுகளையும், உழைக்கும் மக்களுக்கு இழைத்த சொல்லொணா துயரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளார். குறிப்பாக அன்றைய சாணார்கள் இன்றைய நாடார் சமூக எழுச்சிக்காகப் போராடிய அய்யா வைகுண்டர் (1809 1851), ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகப் போராடிய பவுத்த வழித்தோன்றல் மகராசன் வேதமாணிக்கத்திற்கு 58 வயது இளையவர் ஆவார். அதுபோல, ஈழவர்களின் சமூக உரிமைக்காகப் போராடிய நாராயணகுரு (1826 1928), சாம்பவர்களின் எழுச்சிக்குத் தலைமையேற்று வழி நடத்திய மகராசன் வேதமாணிக்கத்திற்கு 99 வயது இளையவர். மேலும், புலையர்களின் சமூக எழுச்சிக்காகப் போராடிய தலைவர் அய்யன்காளி (1863 - 1941), மகராசன் வேதமாணிக்கத்திற்கு 106 வயது இளையவர் ஆவார் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கிறது இந்நூல்.

இந்திய சமூகத்தை ஆய்வு செய்தவர்கள், இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள், சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அடுக்கு கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த மேலோட்டமான தரவுகளின் மேல் காலூன்றி, தங்களுக்கே உரிய "பொதுப்புத்தி'யின் அடிப்படையிலேயே வரலாற்றைப் புனைந்திருக்கின்றனர். வரலாற்றைத் திரித்து எழுதியது மட்டுமின்றி, தங்களால் இயன்றவரை இருட்டடிப்பு வேலையையும் திறம்படச் செய்திருக்கிறார்கள். ஆனால், அதே வேளை, இந்திய சமூகத்தை ஆய்வு செய்த அய்ரோப்பிய மற்றும் மேற்கத்திய அறிஞர்கள் பலர், வரலாற்றை சரியாகப் பதிவு செய்ய முனைந்திருக்கிறார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நூல்களில்தான் ஒடுக்கப்பட்டோரின் உண்மையான சமூக நிலையை சான்றாதாரங்களாகக் காண முடிகிறது.

சமூகவியல் குறித்த சிந்தனையை அய்ரோப்பிய அறிஞர்களிடமிருந்துதான் இந்திய கல்வியாளர்கள் பெற்றுக் கொண்டனர் என்பதையும் இந்நூல் மறுக்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகுதான் அய்ரோப்பிய சிந்தனையாளர்களிடம் சமூகவியல் குறித்த அக்கறை மேலெழும்பியது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், அகஸ்ட் கோம்த் என்னும் பிரெஞ்சு சிந்தனையாளர் தான் "சமூகவியல்' என்ற சொல்லை உருவாக்கி சமூகக் குழுக்களை, சமூக அமைப்பை, மனித நடத்தைகளை அவற்றுக்கான காரணங்களை சமூக அறிவியல் நோக்கில் ஆராயத் தொடங்கினார். அவருக்குப் பிறகே எண்ணற்ற சமூகவியலாளர்கள், சமூகத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய முன் வந்தனர்.

"சமூகவியல் தந்தை' என வர்ணிக்கப்படும் அகஸ்ட் கோம்த் பிறப்பதற்கு முன்பே, சமூகத்தை ஆய்வு செய்து அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்த பெருமை, மகராசன் வேதமாணிக்கத்திற்கு உண்டு என்றால் மிகையில்லை. இவரைப் போன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து மிகப் பெரிய சமூக மாற்றப் புரட்சிகளை முன்னெடுத்த போராளிகள், ஏன் சமூகத்திற்கு அடையாளம் காட்டப்படுவதில்லை என்பதற்கான காரணங்களை ஆராய்கின்றபோது, பளிச்சென ஓர் உண்மை விளங்குகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் எத்தகைய அறிவாளியாக இருந்தாலும், அவனை அறிவாளியாக அங்கீகரிக்க மாட்டோம்; எந்தவொரு உண்மையும், சமூகப் புரட்சியும் தாழ்த்தப்பட்டவரின் வழியாக ஏற்பட்டுவிடக்கூடாது; அதற்கு நாங்களே உரிமையானவர்கள் என்ற சாதி இந்துக்களின் இறுமாப்பே இத்தகைய வரலாற்று மோசடிக்குக் காரணமாக அமைகின்றது.

சாதி இந்து ஆய்வாளர்களால் அறிவுஜீவிகளால் மறைக்கப்பட்ட போராட்ட வரலாறுகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களால் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்நூலும் இடம் பெறுகிறது. மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூல், முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைத் தாங்கிய தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. சாதி தீண்டாமை ஒடுக்குமுறை, பார்ப்பனிய பயங்கரவாதம், சாதி ஆதிக்க வன்மத்தின் வரிக்கொடுமை, ஆணாதிக்கம், புலைப்பேடி, பறைப்பேடி, வண்ணாப்பேடி சம்பிரதாயங்கள், ஆங்கிலேயரின் ஆதிக்கம் இவையனைத்தும் கொடி கட்டிப் பறந்த பிரிக்கப்படாத திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், தனியொரு மனிதனாய் வெகுண்டெழுந்து ஒரு யுகப் புரட்சியை முன்னெடுத்த மகராசன் வேதமாணிக்கத்தின் வாழ்வும் பணியும், அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து தெள்ளத் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தில் கவிதை, கட்டுக்கதை, பாடல் என சுய வளர்ச்சிக்காக எழுதியவர்கள் எல்லாம் மிகப் பெரிய சாதனையாளர்களாக, சரித்திர நாயகர்களாக, இந்திய தேசியத்தின் அடையாள புருஷர்களாக வரலாற்று ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர், சமூக மாற்றத்திற்காக எத்தகைய பணியினை மேற்கொண்டிருந்தாலும் அவரைப் புறக்கணித்து, வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவர்களைப் புறந்தள்ளுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த மாபெரும் தலைவன் அப்பழுக்கற்ற வாழ்க்கையையும், அவருடைய மகத்தான செயல்பாடுகளையும் தோண்டித் துருவி ஆராய்ந்து, அவற்றை மிகச் சரியான மொழி ஆளுமையுடன் நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஆசியர் ஏபி. வள்ளிநாயகம்.

"நான் ஓர் இந்துவாகப் பிறந்து விட்டேன்; ஆனால், நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்' என்று அறைகூவல் விடுத்து, பவுத்தம் தழுவிய புரட்சியாளர் அம்பேத்கரைப் போல, மகராசன் இந்துவாகப் பிறந்து விட்ட போதும், சிவபெருமானை தரிசிக்க குமரியிலிருந்து சிதம்பரம் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட மகராசன், நந்தன் எரித்துக் கொல்லப்பட்ட சூழ்ச்சியை உணர்ந்த பிறகு, தஞ்சையில் அப்போது போதகராயிருந்த ஜே.சி. கோலப் கொடுத்த "மெய் ஞானம்' நூல் வழியே மன மாற்றம் பெற்றார். புதிய வாழ்க்கையின் திறவுகோலாக, சாதிய ஒடுக்கு முறைகளைச் சுட்டெரிக்கும் நெருப்பாக, சீர்திருத்தக் கிறித்துவத்தைக் கேடயமாகப் பெற்ற மகராசன், மிகப் பெரிய சமூகப் புரட்சியை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனியொரு மனிதராய் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இத்தகைய வரலாற்றுப் பதிவுகள், இன்றைய தலித் இளைஞர்களுக்கும், இயக்கச் செயல் வீரர்களுக்கும் ஒருவித துணிச்சலையும், தலைநிமிர்வையும் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

மகராசனின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லாமல், தமிழகத்தில் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் வெவ்வேறு பகுதிகளில், பல்வேறு மன்னர்களால் நடத்தப்பட்ட கொடுங்கோல் ஆட்சி முறைகளையும் நம் கண் முன்னே பசுமையான நினைவாதாரங்களோடு விரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். மகராசனின் போராட்ட வாழ்க்கையையும், அவருக்கு முன்னும் பின்னும் இருந்த சமூகச் சூழலையும் இணைத்து எழுதியது, சிறந்ததொரு அணுகுறையாகும்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சீர்திருத்த கிறித்துவத்தின் தாயும் தந்தையுமான மகராசன், "கிறித்துவம்' என்ற மதத்தினை சமூகப் புரட்சிக்கான குறியீடாக குறிப்பாக, இந்துத்துவத்தின் எதிர்க்குறியீடாகக் கையாண்டு, தன்னிலிருந்து தன் குடும்பத்திலிருந்து மதமாற்றப் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார். அது இன்றைய மதமாற்றத் தன்மையிலிருந்து வேறுபட்டது என்பதை, இந்நூலின் மூன்றாவது பகுதி ஆதாரங்களுடன் விளக்குகிறது. உண்மை இவ்வாறிருக்க, மகராசன் வேதமாணிக்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட மத போதகர் ரிங்கல் தொபேதான், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் சீர்திருத்த கிறித்துவத்தைப் பரப்பியவர் என்று, அங்குள்ள சாதிக் கிறித்துவர்கள் ஆண்டுக்கொரு முறை விழா கொண்டாடி வருகிறார்கள்.

மகராசன் வேதமாணிக்கத்தின் தலையை வெட்டிய பிறகு, அந்த இடத்தில் ரிங்கல் தொபேயின் தலையைப் பொருத்தி உண்மையான வரலாற்றை மறைத்து வருகிறார்கள் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கும் விதம் அழுத்தமானது: ""மகராசன் வேதமாணிக்கத்தின் முயற்சியால் உருவான சொத்துகளை ஆளலாம்; ஆனால், வரலாற்றை ஆள முடியாது. ஏனென்றால், மகராசன் வேதமாணிக்கம் தானே தனியாகத் திரண்டெழுந்த மனித வரலாறு. புலே பிறந்த ஆண்டான 1827 இல் மறைந்த மகராசன் வேதமாணிக்கம், புலேவுக்கு இந்திய புரட்சியாளர் வழி காட்ட பொறுப்பேற்றுக் கொண்ட சாக்கிய இன சாம்பவர் புரட்சிக் குலத்தின் வரலாறு. புத்தருக்குப் பிறகு புத்தன் புரட்சியை கிறித்துவத்தால் அளந்த பவுத்தப் புரட்சியின் தொடர்ச்சியான வரலாறு'' இதுவே இந்நூலின் மய்யக் கருவாகும்.

அய்ரோப்பிய "மிஷினரிகள்' இந்திய மண்ணில் கிறித்துவத் திருச்சபைகளை வழி நடத்தியபோதுதான் தலித் மக்கள் தங்களுடைய கல்வி, பொருளாதாரத் துறைகளில் காலூன்ற முடிந்தது என்பதையும் இந்நூல் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. இது ஏதோ கிறித்துவர்களுக்கான நூல் என எண்ணி விட வேண்டாம்; சமூக மாற்ற சிந்தனையாளர்கள் அனைவரின் கைகளிலும் தவழ வேண்டிய கேடயம்.

-கே.எஸ்.முத்து
Pin It