தற்போது நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் இடதுசாரிகள் முன்னெடுக்கும் விகிதாச்சார முறையில் உறுப்பினர் தேர்வு என்பதை பற்றி நாம் பேசி ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  இந்த கருத்துக்களை ஒவ்வொரு கட்சியாக பேசத் துவங்கி இருப்பது நமக்கான ஆதரவாகவே பார்க்கிறோம்.

bjp win in assembly electionஇந்தியாவில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 2014இல் வெற்றி பெற்றவர்கள் வெறும் நால்வர் மட்டுமே என்பது மிக ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சிக்கு உரியதாகவும் இருக்கிறது.  குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோதி (51.61%), திரிபுரா மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தா (53.80%) திரிபுரா கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜிதேந்திர சௌத்ரி (54.70%), நாகலாந்து தொகுதியில் போட்டியிட்ட நெய்ஃபு ரியோ (60.30%) ஆகியவர்களே அந்த நால்வர்.  மீதி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று நினைத்த நபர்கள் தான். 

பிரிட்டீஷ் காலனி ஆதிக்க நாடுகள் நீங்கலாக ஏனைய நாடுகள் பலவும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைத் தான் கடைபிடிக்கின்றன.  இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்ற தேர்தல் முறையைப் பின்பற்றிய 89 நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறிச் சென்று விட்டன. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டு வர வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

1974 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழுவும் அதை பரிந்துரை செய்துள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்பியாக இருந்த ஜி.எம்.பனத்வாலா விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை வலியுறுத்தி தனிநபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.

இந்திய சட்ட ஆணையம் இங்கே விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென 1999 ஆம் ஆண்டு பரிந்துரை செய்து விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 31% வாக்குகளை பாஜக பெற்றது. அது இந்திய மக்கள் தொகையில் 14% தான். வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அது 20% தான் வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 69% பாஜகவுக்கு எதிராக இருந்தாலும் அக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.

பெரும்பாலான சமயங்களில், பதிவான வாக்குகளில் அந்த வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட, அவர் பெறாத வாக்குகளே அதிகமாக இருக்கும்.  அத்தகைய சூழ்நிலையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாத ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ‘அதிக வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுகிறார்’ என்ற தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகள் எவருக்கு விழுந்துள்ளனவோ  அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாக ஆகின்றன. அவரைத் தவிர மற்றவர்களுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாக ஆகின்றன. இதனால் எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்ற அம்பேத்கரின் கூற்று பொய்யாக்கப்படுகிறது. அவர் நினைத்த அரசியல் சமத்துவம் என்பது அதனால்தான் எட்டப்படாமலேயே தொலைதூரக் கனவாக உள்ளது.

தேர்தலில் பதிவு செய்யப்படும் எல்லா வாக்குகளுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமெனில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் உகந்தது என்ற வாதம் 1930 ஆம் ஆண்டிலேயே ஜவஹர்லால் நேருவால் முன்வைக்கப்பட்டது. “பல்வேறு சமூகங்களின் அச்சத்தை நீக்கி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய வேண்டுமெனில் அதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே பொருத்தமானது” என அவர் கூறினார்.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் கூட 02-02-2015 அன்று விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்து இந்த அரசு தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  ஏதோ எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதைப் பேசுவதும் ஆளும் கட்சி ஆன பின்னர் மறந்து விடும் போக்குகளை பல்வேறு கட்சிகளிடம் பார்க்க முடிகிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன? தற்போதுள்ள தேர்தல் முறையில், 51 சதவீத ஓட்டு பெற்றவர்கள் வெற்றி, 49 சதவீத ஓட்டு பெற்றவர்கள் தோல்வி. இதுதான் இப்போதையை தேர்தல் மூலம் நாம் அனுபவித்து வரும் போலி ஜனநாயகம். ஆனால், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்பது, கட்சிகள் மட்டும் தத்தமது சின்னங்களில் தேர்தலில் நிற்கும். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு கட்சியினர் வாங்கும் ஓட்டுகள் அடிப்படையில், அவர்களுக்கான, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் நிர்ணயிக்கும். அதன் அடிப்படையில், அந்தந்த கட்சியின் தலைமைகள், அதற்கு உரிய நபர்களைத் தேர்வு செய்து, நியமனம் செய்யும்.  இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் ஏதோ ஓரிடத்தில் பிரதிபலிக்கிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாக உள்ள மாநிலங்கள் அவையில் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்பவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநில சட்டமன்றங்களில் தங்களுக்கு இருக்கும் இடங்களின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர்களை கட்சிகள் தேர்வு செய்யலாம். 

இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளைப் பற்றி மாநில வாரியாக ஆராய்ந்தால் நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விடயங்கள் கிட்டும்.

கட்சி

 கோவா

வாக்கு விகிதம்

விகிதாசாரப் பிரதிநிதி

இப்போதய நிலை

AITC

6.77%

3

-

AAP

5.21%

2

2

BJP

33.31%

13

20

GFP

1.84%

1

1

INC

23.46%

9

11

MAG

7.60%

3

2

NCP

1.14%

0

-

NOTA

1.12%

0

-

SHS

0.18%

0

-

OTHERS

19.37%

8

4

 

100.00%

40

40

விகிதாசார அடிப்படையில் பகிரும்போது ஒவ்வொரு வாக்குக்கும் உரிய மதிப்பு பிரதிபலிப்பதோடு அனைவருக்குமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கோவா தேர்தல் முடிவுகள் இருக்கிறது. மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் முழு ஆதரவு கொடுக்கவில்லை என்பது உறுதி ஆகிறது.  தேர்தலுக்கு முந்தைய கூட்டடணி என்பதை விட தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.

அடுத்து மணிப்பூரில் தனிப்பெரும்பான்மை பெற்றது போன்ற தோற்றம் பாஜகவிற்கு கிடைத்தாலும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் 37.82% வாக்குகளில் 23 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே அனுப்ப முடியும்.

கட்சி

 மணிப்பூர்

 வாக்கு விகிதம்

 விகிதாசார பிரதிநிதி

இப்போதய நிலை

BJP

37.82%

23

32

CPI

0.60%

0

-

INC

16.85%

10

5

JD

10.78%

6

6

LJPRV

0.03%

0

-

NCP

0.67%

0

-

NPEP

17.27%

10

-

NPF

8.09%

5

5

SHS

0.34%

0

-

OTHERS

7.55%

5

3

 

100.00%

60

60

இங்கும் பெரும்பான்மை அற்ற நிலையில் இருப்பதோடு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலம் தான் ஆட்சி அமைத்திருக்க முடியும். 

பஞ்சாப் மாநிலத்தில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் அங்கும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை.

கட்சி

 பஞ்சாப்

 வாக்கு விகிதம்

 விகிதாசார பிரதிநிதி

இப்போதய நிலை

AAP

42.01%

49

92

BJP

6.60%

8

2

BSP

1.77%

2

1

CPI

0.05%

0

-

CPI (M)

0.06%

0

-

CPI(ML)

0.03%

0

-

INC

22.98%

27

18

NOTA

0.78%

1

-

SAD

18.38%

22

3

OTHERS

7.34%

9

1

 

100.00%

117

117

சிரோன்மணி அகாலி தளம் போன்ற மாநில கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் கூட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அடிப்படையில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சபைக்கு செல்ல வாய்ப்பு இருக்கும்

403 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 0.25 விழுக்காடு வாக்கு பெற்றவர் கூட சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கான வாய்ப்புகள் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் இருக்கும். அந்த அடிப்படையில். அறுதிப் பெரும்பான்மை என்பது எந்தக் கட்சிக்கும் கிடைக்காது.

கட்சி

 உத்தரப் பிரதேசம்

 வாக்கு விகிதம்

 விகிதாசாரப் பிரதிநிதி

இப்போதய நிலை

AIIM

0.48%

2

-

AAP

0.37%

1

-

BJP

41.42%

167

255

BSP

12.81%

52

1

CPI

0.07%

0

-

CPI (M)

0.01%

0

-

CPI(ML)

0.01%

0

-

INC

2.35%

9

2

JD

0.11%

0

-

NCP

0.05%

0

-

NOTA

0.69%

3

-

RLD

2.90%

12

8

SHS

0.02%

0

-

SP

32.06%

129

110

OTHERS

6.65%

27

-

 

100.00%

403

403

தேர்தலுக்குப் பின்னரான கூட்டணி அடிப்படையில் தான் இங்கும் ஆட்சி அமைத்திருக்க முடியும். பாஜக 41.42% வாக்குகளும் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரசும் சேர்ந்து 47.22% வாக்குகளைப் பெற்றும் அங்கே அறுதி பெரும்பான்மை என்பது பாஜகவிற்கு கிட்டி இருக்காது.

உத்தரகாண்டு மாநிலத்தில் நடந்த தேர்தல் முடிவுகளை வைத்து இப்போதைய நிலையிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவ நிலையையும் ஒப்பிட்டால் அங்கேயும் அறுதிப் பெரும்பான்மை யாருக்கும் இல்லை என்பது புலனாகிறது.

கட்சி

 உத்தரகாண்ட்

 வாக்கு விகிதம்

 விகிதாசார பிரதிநிதி

இப்போதய நிலை

AIIM

0.03%

0

-

AAP

3.31%

2

-

BJP

44.33%

31

47

BSP

4.82%

3

2

CPI

0.04%

0

-

CPI (M)

0.04%

0

-

CPI(ML)

0.02%

0

-

INC

37.91%

27

19

NOTA

0.87%

1

-

RLD

0.01%

0

-

SP

0.03%

0

-

OTHERS

8.59%

6

2

 

100.00%

70

70

நடந்த தேர்தல் முடிவுகளை வைத்து இப்போதைய நிலையிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ நிலையையும் ஒப்பிட்டால் எல்லா மாநிலங்களிலும் யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்று மக்கள் வாக்குகளை செலுத்தினார்களோ அவர்கள் தான் ஆட்சி அமைக்கும் நிலை இருக்கிறது.

நம் நாட்டிற்கு தேர்தல் சீர்திருத்தம் என்பது உடனடி தேவையாக இருப்பதோடு தனிப் பெரும்பான்மை என்ற ஆணவத்தில் இருந்து முழு ஜனநாயகம் இருக்கும் விதத்தில் மாற்ற வேண்டும்.

ஆர்.எம்.பாபு

Pin It