நமது நாட்டைப் பொறுத்தவரை இப்போதுள்ள தேர்தல் முறை எத்தகைய குறிப்பிடத்தக்க சமுதாய மேம்பாட்டையும் ஏற்படுத்த வல்லதாக இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் இங்கு தேர்தல்கள் மக்கள் அவர்களது அடிப்படை பிரச்சனைகள் சார்ந்து நடத்தும் இயக்கங்களின் பின் பலத்துடன் நடப்பதில்லை என்பதுதான். அதாவது கம்யூனிஸ்டுகள் நடத்தும் வெகுஜன வர்க்கப் போராட்ட பின்னணியும் நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களுக்கு பின்பலமாக இல்லை. லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவுவது போன்ற தெருவில் அரங்கேறும் ஜனநாயகப் பின்னணியும் இல்லை.
முக்கிய எதிரியை அடையாளம் காணத் தவறிய போக்கு
இங்கு கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளின் அடிப்படை அரசியல் வழி அப்பட்டமாக தவறாக உள்ளதால் இங்கு வர்க்கப் போராட்டங்கள் எதையும் முனைப்புடன் அக்கட்சிகளால் நடத்த முடியவில்லை. விடுதலைக்கு பின்பு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தேசிய முதலாளி வர்க்கத்தின் சுரண்டலே தற்போது நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வு உள்பட அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்பதை இங்கு கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல்படும் கட்சிகள் இப்போதும் கூடப் பார்க்கத் தவறுகின்றன.
மழுங்கடிக்கப்பட்ட வர்க்கப் போராட்டம்
விடுதலைக்குப்பின் இங்கு ஏற்படுத்தப்பட்ட தேசிய முதலாளிகளின் அரசு, முதலாளித்துவத்தின் துரித வளர்ச்சிக்கு கொண்டு வந்த திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்து ஏகபோகங்களுக்கு உருக்கொடுத்து, அவ்வாறு ஏகபோகங்களாக மாறிய இந்திய முதலாளித்துவ நிறுவனங்கள் தற்போது பிற நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதோடு தங்கள் மூலதனத்தையும் ஏற்றுமதி செய்கின்றன. அந்த அடிப்படையில் அத்தகைய முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் அரசு என்ற ரீதியில் இந்திய அரசு ஒரு ஏகாதிபத்திய கூறுகளுடன் கூடிய அரசாக மாறியுள்ளது. அதனால்தான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் கூட ஒரு கூட்டினை இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றன.
இப்படி வளர்ச்சியடைந்த முதலாளிகளைக் கொண்டதாக நமது நாடு உள்ள வேளையிலும் கூட இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் கட்சிகள் இந்தியா ஒரு அரைக் காலனி - அரை நிலபிரப்புத்துவ நாடு என வரையறை செய்துள்ளன. இதனால் இன்று பெருமளவு வளர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல முதலாளித்துவ நிறுவனங்களைக் கூட விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்துள்ள இந்திய முதலாளிகளை உலக ஏகாதிபத்திய முதலாளிகளின் சுரண்டலுக்கு அப்பாவிப் பலிகிடாய்களாகும் அனுதாபப்படத்தக்க முதலாளி வர்க்கமாகவே நமது மக்களின் பார்வைக்கு இக்கட்சிகள் கொண்டுவருகின்றன. இந்த அடிப்படைத் தவறு வர்க்கப் போராட்டத்தையே முற்றாக மழுங்கடிக்கிறது.
கம்யூனிஸ்டு கட்சிகள் என்று தங்களை கூறிக்கொள்ளாத பிற கட்சிகளைப் பொறுத்தவரையில் அவையும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் சார்ந்து அவர்களை அணிதிரட்டி போராட்டங்கள் கட்டுவதைவிட ஜாதியவாத மதவாத அடிப்படைகளில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் விதத்தில் மக்களுக்குள் மோதல்களை உருவாக்கி அதன் மூலமாக தேர்தல் அரசியலில் வெற்றிபெறவே விரும்புகின்றன.
ஜே.பி-யின் முழுப் புரட்சி இயக்கம்
தெருவில் அரங்கேறும் ஜனநாயகம் என்ற அடிப்படையில் இந்தியாவில் நடந்த மிகப்பெரும் மக்கள் இயக்கம் முழுப்புரட்சி என்ற பெயரில் நாட்டில் பெருகிவந்த ஊழலை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் 1974-75களில் நடைபெற்ற மகத்தான மக்கள் இயக்கமே ஆகும். அந்த இயக்கத்திலும் கூட கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்கவில்லை. சி.பி.ஐ கட்சி அப்போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளால் தூண்டிவிடப்பட்ட இயக்கம் என்று சித்தரித்து அதற்கு எதிராக நின்றது. அப்பட்டமான திருத்தல்வாத சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சி.பி.ஐ. கட்சி இரண்டற கலந்திருந்ததும் சோவியத் நாட்டுடன் இந்திய அரசு கொண்டிருந்த சுமூக உறவும் இந்திய சூழ்நிலையை அறவே மறந்து இக்கட்சியை இவ்வாறு சிந்திக்க வைத்தது. சி.பி.ஐ(எம்)-ஐப் பொறுத்தவரையில் அப்போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காமல் போராட்டத்தின் விளைவாக இந்திராகாந்தியால் கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்குப் பின் 1977ல் வந்த தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியுடன் தேர்தல் உறவு வைத்துக் கொண்டு அப்போராட்டத்தின் பலனை அறுவடை செய்யவே முனைந்தது.
மறைக்கப்படும் மக்களின் பிரச்னைகள்-தூண்டி விடப்படும் பிளவுவாதம்
இந்த பின்னணியில் வர்க்க அல்லது வெகுஜன போராட்ட பின்பலமின்றி நடைபெறும் நமது தேர்தல்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. அதாவது மக்களின் உண்மையான பிரச்னைகளை எவ்வளவு தூரம் மூடிமறைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மூடி மறைத்து அவற்றோடு தொடர்பில்லாத பல்வேறு பிளவுவாதப் போக்குகளை முன்நிறுத்துவதே இன்று அனைத்துக் கட்சிகளின் தேர்தல் நடைமுறை ஆகிவிட்டது. கடுமையான விலைஉயர்வு உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக உலக அளவில் இந்திய இளைஞர்களுக்கு இருந்த வேலைவாய்ப்புகள் சுருங்கியுள்ளது போன்ற மிக முக்கிய பிரச்னைகள் கூட அவற்றால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
கட்சிகள் அனைத்துமே எந்த வகை மாற்று திட்டமுமின்றி தேர்தலை சந்திக்கின்றன. ஒரு கட்சி எதிர்க்கட்சியாக உள்ள மாநிலத்தில் எதை எதிர்க்கிறதோ அதை அது ஆளும் கட்சியாக உள்ள மாநிலத்தில் செய்கிறது. சி.பி.ஐ. (எம்) போன்ற கட்சிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே ஆளும் கட்சிக்கு எதிரான மாற்றுக் கொள்கைகள் என்று எந்த கட்சியிடமும் எந்த கொள்கையும் இல்லை. அதனால் கொள்கை அடிப்படையிலான கூட்டணி என்று எதுவும் உருவாகவில்லை. இதனால் தேர்தலுக்கு முன்பே தெளிவான கொள்கைகளை வகுத்து அவற்றின் அடிப்படையில் போட்டியிடும் கூட்டணி என்று எதுவும் அகில இந்திய அளவில் உருவாகவில்லை.
மருந்துக்குக் கூட கடைப்பிடிக்கப்படாத ஜனநாயகம்
அதாவது தேர்தலுக்கு முன்பே கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் அப்போது அதில் இணைந்திருக்கக்கூடிய கட்சிகள் பெற்ற வாக்குகளும் இடங்களும் அந்தஅந்த தனித்தனிக் கட்சிகளுக்கு மட்டுமல்ல இவையனைத்தும் கூட்டாக இணைந்து போட்டியிட்டதற்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே அவற்றின் ஒருமித்த தன்மைக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்பது ஆட்சி அமைக்க அழைப்பதற்கு கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்பது ஜனநாயக அமைப்பில் ஒரு செல்லுபடியான வாதம் ஆகும்.
அத்தகைய குறைந்தபட்ச ஜனநாயகப் போக்கும் இப்போது தோன்றியுள்ள நிலைகளின் மூலம் நிலைகுலைந்துள்ளது. இரண்டாவதாக அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதனைக் கலந்து ஆலோசிக்காமலேயே அதற்கு இத்தனை இடங்கள் தான் என்று மிகக் குறைந்த இடங்களை தன்னிச்சையாக லல்லுயாதவின் ஆர்.ஜே.டி கட்சியும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சியும் அறிவித்துள்ளன. அவற்றின் இத்தகைய போக்கில் ஒரு வகையான அடாவடித்தனமும் உள்நோக்கமும் உள்ளன.
ஜாதிய அணிதிரட்டல் ஊக்குவிக்கும் அடாவடித்தனம்
சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி கட்சிகள் தன்னிச்சையாக இவ்வாறு அறிவித்திருப்பதற்கு காரணம் இக்கட்சிகள் அவை செயல்படும் மாநிலங்களில் பல மக்கள் ஆதரவுப் பணிகளை செய்து அசைக்க முடியாத வலுவுடன் விளங்குகின்றன என்பதல்ல. இக்கட்சிகள் ஒவ்வொன்றின் பங்கிற்கும் பல ஊழல்களும் முறைகேடுகளும் நிறையவே உள்ளன. இருந்தும் இவை இவ்வாறு அடாவடித்தனமாக இருப்பதற்கு இக்கட்சிகள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள ஜாதிய அணிதிரட்டலே காரணமாகும்.
உ.பி.யைப் பொறுத்தவரை சமாஜ்வாதிக் கட்சியின் பின்பலம் யாதவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். இன்று பிற்படுத்தப்பட்டோர் என்று அரசு வரையறைப்படுத்தியுள்ளதாலேயே அவ்வகுப்புகளைச் சேர்ந்த அனைவருமே அனைத்து விசயங்களிலும் பிற்படுத்தப்பட்டோராக இருப்பதில்லை. ஒட்டுமொத்தத்தில் நாடு முழுவதுமே மிகப் பெரும்பாலோர் அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களே. உண்மையில் சமாஜ்வாதிக் கட்சியின் பின்னணியில் உள்ள 'பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின்' பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள், அரசு உயர் வகுப்பினர் என்று வரையறைப்படுத்தியுள்ள ஜாதிகளில் பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ளவர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமாகவே இருப்பர். ஏனெனில் அரசால் வரையறுக்கப்படும் இந்த பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர்தான் தற்போது அரசியலிலும் அரசு வளர்ச்சிக்கென ஒதுக்கும் தொகைகளை கபளீகரம் செய்யும் ஒப்பந்தக்காரர்களாகவும் உள்ளவர்கள்.
இவ்வாறு புதிதாக பிற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில் உருவாகி வளர்ந்துவரும் புதுப்பணக்காரர்களை எதிர்கொள்ளத்தான் மாயாவதியின் தாழ்த்தப்பட்டோர்-பிராமணர் கூட்டு உ.பி-ல் ஏற்பட்டு வெற்றிகரமாக அதன் அரசியலை நடத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் யதார்த்தத்தில் சமாஜ்வாதிக் கட்சியின் பின்பலமாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையிலேயே பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளவர்களுக்கும் அதைப்போலவே மாயாவதியின் பின்பலமாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களுக்கும் தங்களது ஜாதிகளின் பெயரைச் சொல்லி செயல்படும் இவ்விரு கட்சிகளாலும் உண்மையில் ஒரு பயனும் இல்லை. இருந்தாலும் இந்த ஜாதிகளில் உள்ள அனைத்து மக்களையும் இக்கட்சிகளால் முழுமையாக ஏமாற்ற முடிகிறது.
பிற்படுத்தப்பட்டோர் எல்லாம் பின்தங்கியவர் அல்ல
பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய பகுதியினர் ஒப்பந்தக்கார்களாகவும் அரசியல் இடைத்தரகர்களாகவும் இருந்து சம்பாதித்து வசதியாக விளங்குகிறார்கள் என்றால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசு மற்றும் பொதுத்துறை அலுவல்களில் அமர்ந்து அதில் ஒரு பகுதியினர் வசதியுடன் விளங்குகின்றனர். அவர்களிடம் ஒப்பந்தக்காரர்களாகவும் அரசியல் இடைத்தரகர்களாகவும் ஆகி சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை வளர்ந்துள்ளது. அதற்கான அரசியல் கருவியாகவே பி.எஸ்.பி. கட்சியை அவர்கள் பார்க்கின்றனர். நடைமுறையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் கட்சிகள் என்று அறியப்படும் சமாஜ்வாதிக்கட்சி மற்றும் பி.எஸ்.பி ஆகியவற்றால் உண்மையில் பலன் பெறுவது இந்த சிறுபான்மை வசதிபடைத்தோரே.
இதே நிலைதான் பீகாரிலும் சற்று வேறுபட்ட வடிவத்தில் நிலவுகிறது. அங்கு லல்லு யாதவின் ஆர்.ஜே.டி. கட்சி காங்கிரஸ் கட்சியை ஒரு கிள்ளுகீரையாக நடத்துவதற்குக் காரணம் அது தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என அறியப்படும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியுடன் உறவு வைத்துள்ளதுதான். இவ்விரு ஜாதிக்கட்சிகளும் சேர்ந்து ஒரு பலமான கூட்டை ஏற்படுத்தியுள்ளதால் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் தான் என்று தன்னிச்சையாக இவ்விரு தலைவர்களும் அறிவித்துள்ளனர். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை பெரும் மரியாதையுடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன்சிங்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள், தொகுதிப் பங்கீடு என்ற கேள்வி வந்தவுடன் மட்டும் மாறுபட்ட நபர்களாக மாறிவிடுகிறார்கள். உ.பி.யில் மாயாவதி ஏற்படுத்தியுள்ளது போன்ற ஒரு தாழ்த்தப்பட்டோர் உயர்வகுப்பினர் கூட்டு மற்ற பல வடஇந்திய மாநிலங்களிலும் வந்துகொண்டுள்ளது. ஆனால் அது பெரிய அளவில் பீகாரில் இன்னும் வரவில்லை. அப்படி ஒருவேளை வந்தாலும் வந்துவிடும் என்ற அச்சமே தாழ்த்தப்பட்டவர்களில் வசதிபடைத்தவர்களாக உள்ளவர்களை தன்பக்கம் நிறுத்துவதற்கு பாஸ்வானை லல்லு யாதவுடனான இந்த கூட்டை ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம்.
அரசியல் என்பது அனைத்து மக்களுக்குமான அனைத்து மக்களின் பங்கேற்புடன் நடத்தப்படுவது என்று தோற்றுவிக்கப்பட்ட சித்திரம் படிபடியாக மாறி அது ஒரு இலாபகரமான தொழில் என்ற நிலையை தற்போது அப்பட்டமாக எட்டியுள்ளது. அதனால்தான் ஒரு அரசியல்வாதியை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுத்தால் அவர்மூலம் நமக்கு என்ன இலாபம் என்று அவர் போட்டியிடும் தொகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், உடமை வர்க்கத்தினர் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் பார்க்கின்றனர். அப்படி அவர்களால் பார்க்கப்படும் ஒருவரோ அல்லது ஏதாவது ஒரு முழக்கத்தை எழுப்பி குட்டையைக் குழப்பி செய்திகளில் அடிபட்டு பிரபலமாக ஆகி மக்களை ஏமாற்றும் அனைத்து திறமைகளையும் கொண்டிருக்கும் ஒருவரோ மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவிட்டால். அவரை இந்த உடமைவர்க்க சக்திகள் பயன்படுத்துகின்றன. அவருக்காக ஏராளமான பணம் செலவிட முன்வருகின்றன. அப்பணத்தால் செய்யப்படும் விளம்பரம், வாக்கிற்கு பணம் கொடுப்பது உள்பட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அவர் வெற்றியடையச் செய்யப்படுகிறார்.
மங்கி மறைந்து வரும் பொதுநலப் போக்கு
இந்த வளர்ச்சிப் போக்கின் மூலம் விடுதலை பெற்ற காலத்தில் தோன்றிய ஓரளவு பொதுநலப் போக்கு உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் போக்கு படிப்படியாக மங்கி மறைந்து இன்று அழிந்தே போய்விட்டது. மேலோட்டமாகவேனும் ஒருவர் போட்டியிடும் கட்சி மற்றும் போட்டியிடுபவரின் பொதுநலப் பண்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு பெரும்பாலான பொதுமக்கள் அவரை தேர்ந்தெடுப்பர் என்ற சூழ்நிலை முழுவதுமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலை நிலவிய வேளையில் மக்கள் கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகள் அதன் தலைவர்களின் தரம் அவர்கள் கடைபிடித்த பொதுவாழ்க்கை மதிப்புகள் ஆகியவற்றை ஓரளவேனும் கருத்திற்கொண்டு வாக்களித்தனர். அக்காலகட்டத்தில் அகில இந்திய கட்சிகள் மட்டுமே பிரபலமாக விளங்கின.
நாளடைவில் சீரழிந்த முதலாளித்துவ அரசியலில் அத்தகைய அகில இந்திய கட்சிகளின் பல தலைவர்களும் படிபடியாக சீரழிந்து போய்விட்டனர். அதற்கு மிக முக்கிய காரணம் அரசு மற்றும் பொதுத்துறை வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்குதல், ஒப்பந்தம் எடுத்தல் போன்றவற்றில் அரசியல் வாதிகளின் சிபாரிசு பெரும்பங்கினை ஆற்றியதாகும். உடமை வர்க்கங்களுக்கு தொழில் தொடங்க, ஒப்பந்தம் எடுக்க சிபாரிசு செய்பவர்களாக மாறி படிப்படியாக அதுவே அரசியல் வாதிகளின் நிரந்தர தொழிலாக ஆகிவிட்டது. அதற்கு முன்பெல்லாம் அரசியலில் ஈடுபட்டவர்கள் தங்களது சொத்து சுகங்களை இழந்தவர்களாகவே இருந்தனர். அதன் பின்பு இது போன்ற வழிமுறைகளில் சம்பாதிப்பதற்கு இருந்த வாய்ப்பு அவர்களிடையே ஒரு சபலத்தை உருவாக்கியது.
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் காலகட்டம் முடிவடைந்து அது அதன் முற்போக்கு தன்மையினை அறவே இழந்துவிட்ட நிலையில் இங்கு வளரத் தலைப்பட்ட முதலாளித்துவம் அதன் ஆரம்ப காலத்திலேயே ஊழல் தன்மை பொருந்தியதாக இருந்தது. நிர்வாக நடுநிலைத்தன்மை என்பது பெரிதும் நிலைநாட்டப் படாமலேயே போய்விட்டது. அதன் காரணமாக இதுபோன்ற சிபாரிசுகளும் முறைகேடான வழிகளில் தொழில் தொடங்க அனுமதி பெறுவதையும் அரசு ஒப்பந்தங்கள் எடுப்பதையும் உறுத்தல் ஏதுமின்றி செய்ய முடிந்தது.
புது கட்சிகளின் உதயம்
இது போன்ற வாய்ப்புகள் அரசியலில் தோன்றியதும் சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிக்கலாம் என்ற எண்ணம் பல அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது. பணபலத்தால் தங்ளது அடிவருடிகளை கட்சித் தொண்டர்களாக ஆக்கி பல தொண்டர்களுக்கு செலவு செய்து பராமரித்து அவர்களின் பொதுநல பாரம்பரியத்தை தங்களது அரசியல் வியாபாரத்திற்கு ஏதுவான சரக்காக்கி தலைமைப் பதவிகளை கைப்பற்றும் போக்கு தொடங்கியது.
இது போன்ற வாய்ப்பு வசதிகள் அரசியலில் ஏராளம் இருக்கின்றன என்று அறிந்து கொண்ட பின்னர் பல்வேறு புது கட்சிகளும் உருவாகின. அகில இந்தியக் கட்சிகள் என்று அறியப்பட்ட கட்சிகளுக்குள்ளும் செல்வாக்கு மண்டலங்களை ஏற்படுத்துவதற்காக ஜாதி, மத, மொழி பிரிவினைகளை உருவாக்கி பயன்படுத்திய போக்கு பல தலைவர்களாலும் ஆரம்பகாலம் தொட்டே இலைமறை காயாக இருந்து வந்தது. பின்னர் அந்தப் போக்குகள் இன்னும் வலுவடைந்து பல தலைவர்கள் அத்தகைய அகில இந்திய முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து பிரிந்து பிராந்திய நலன், விவசாயிகளின் நலன் போன்ற பெயர்களில் தனிக் கட்சிகள் தொடங்குவதில் முடிந்தது. அவர்களின் பின்னணி ஜாதியப் போக்குகளாக இருந்தாலும் அவற்றை வெளிப்படையாக சொல்லக் கூசும் அளவிற்கு பொது மக்களின் உணர்வு மட்டம் அப்போது குறையாதிருந்தது. எனவே ஜாதிய அரசியல் செய்பவர்கள் கூட சமூகநீதி போன்ற கோசங்களையே பயன்படுத்தினர்.
ஆனால் படிப்படியாக நிலைமை இன்று தலை கீழாக மாறிவிட்டது. இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஒருவர் எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும் அவர் இது போன்ற உடமை வர்க்க சக்திகளின் பண ரீதியான ஆதரவு கிடைக்கப் பெறாதவராக இருந்தால் அவர் வெற்றிபெறவே முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. இதனால்தான் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் பொதுநலப் பண்பு, பொது அறிவு, உலக அறிவு ஆகியவை அறவே இல்லாததாக ஆகிவிட்டன. அது மட்டுமின்றி குருட்டுத்தனமான தலைமையின் மீதான விசுவாசம், அதனை வெளிப்படுத்த தருணம் பார்த்து காத்திருந்து வெளிப்படுத்தி தலைமைக்கு நெருக்கமாகும் போக்கு, வாத திறமைகளால் சபையை அலங்கரிப்பதற்கு பதிலாக கூச்சல் குழப்பம் செய்து பிரபலமாகும் போக்கு போன்ற தன்மை கொண்டவர்களால் சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும் நிரப்பப்படுகின்றன. இதனால் அருவெறுப்படைந்து பொது மக்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் அரசியலை வெறுத்தொதுக்குவதும் கலிசடை அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை உரிய விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் முழு வீச்சுடன் ஜாம்ஜாம் என நடத்துவதற்கு வழிவகுக்கிறது.
பிராந்தியவாதம் தோன்றக் காரணம்
முதலாளித்துவம் அது தவிர்க்க முடியாமல் சந்திக்கும் சந்தை நெருக்கடியின் காரணமாக முழுவீச்சில் வளராமல் நறுங்கச் செய்யப்பட்ட விகிதத்தில் வளர்ச்சியடைவதால் பல்வேறு பிராந்திய முதலாளிகள் அவர்களின் வளர்ச்சியையும், நலன்களையும் வளர்ச்சியடைந்த அகில இந்திய முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக பிராந்தியவாதப் போக்குகளை ஊக்குவிக்கின்றனர். அது பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
காங்கிரஸ் போன்ற அகில இந்திய கட்சிகளின் மக்கள் விரோதப் போக்குகள் முதலாளித்துவ ஆதரவுக் கொள்கை போன்றவற்றை மக்களை அணிதிரட்டி பொருத்தமான விதத்தில் அம்பலப்படுத்தி அகில இந்தியத் தன்மை வாய்ந்த மொழி, மத, இன வேறுபாடு கடந்த உழைக்கும் வர்க்க இயக்கங்களை அகில இந்திய அளவில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருந்தால் அதன் விளைவாக இனம், மொழி, ஜாதி, மதம், பிராந்திய வேறுபாடு கடந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட்டிருக்கும். ஆனால் அதனைச் செய்வதற்கு மாறாக நாம் ஏற்கனவே பார்த்த அடிப்படை அரசியல் வழியை தீர்மானிப்பதில் மிகப் பெரும் தவறினை செய்துவிட்ட இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகள் இந்த பிராந்திய கட்சிகளின் வளர்ச்சியிலிருந்து படிப்பினைகள் எடுத்து தாங்களும் ஜாதிய சேற்றில் புரள்வது என்ற சீரழிந்த நிலையை எடுத்துள்ளன. அவ்வாறின்றி உண்மையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒன்று இருந்து அதனால் காங்கிரஸ் ஆட்சி அம்பலப்படுத்தப்பட்டு அக்கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்திருந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆக்கபூர்வ மாற்றாக இருந்திருக்கும். அது நடைபெறாததே இது போன்ற பிராந்திய, ஜாதிக் கட்சிகள் வளர்ச்சி பெறுவதில் முடிந்தது. அது எந்தவொரு ஆக்கபூர்வ மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் தற்போது நாம் பார்க்கும் பெருத்த சீரழிவையே சமூக ரீதியாக ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸக் கருத்துக்களை மூடி மறைக்கும் தந்திரம்
லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்கள் எத்தனை ஏழை மக்கள் ஆதரவு முகத்தோற்றம் காட்டினாலும் ஒன்றில் மட்டும் அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர். நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்கள் ஒதுக்குவதில் குறிப்பாக லல்லு அவரது மாநிலத்தில் ஓரளவு வலுவுடன் முன்பிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் அல்லது கம்யூனிஸ்ட் என்ற பெயர்களில் செயல்பட்ட வேறு கட்சிகளையும் எவ்வளவு தூரம் ஓரம்கட்ட முடியுமோ அவ்வளவுதூரம் ஓரம்கட்டி அவற்றை இல்லாமல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். அடிப்படை கம்யூனிச கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் சி.பி.ஐ. கட்சிக்கும் இடையே எத்தனையோ காத தூர இடைவெளி இருந்தாலும் கம்யூனிசம் என்ற செல்லுபடி ஆகக் கூடிய தர்க்கபூர்வமான மாற்றுக் கொள்கை மக்கள் மனதில் இருந்தே துடைத்தெறியப்பட வேண்டும் என்பதில் உலகம் முழுவதிலும் உள்ள தந்திரமான முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதையே இவ்விசயத்தில் அவர் நிரூபித்தார். தனது மாகாணத்தில் மக்களை ஜாதி ரீதியாக பிரித்து வைப்பதிலும் அகில இந்திய அளவில் மாநிலங்களை அவற்றின் தனிநலன் என்ற மாயையை முன்வைத்து பிரித்து வைப்பதிலும் அவர் கைதேர்ந்தவராக இருந்தார். அதன்மூலம் உழைக்கும் மக்களிடம் பிராந்திய-ஜாதிய பிரிவுகளை தவிர வர்க்கப்பிரிவு போன்ற வேறு பிரிவுகளும் இருக்கின்றன என்பதையே தெரிந்துகொள்ளக் கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார்.
இந்நிலையில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது அணி, தற்போது முலாயம் மற்றும் லல்லு யாதவின் நான்காவது அணி என்று கூட்டாக தேர்தலை அனைத்து கட்சிகளும் சந்திக்கின்றன. இதை ஏன் செய்கின்றன என்றால் தாங்கள் தனியாக வலுவுடன் இல்லை; மாறாக கூட்டாக வலுவுடன் இருக்கிறோம் என்று காட்டி மக்களின் வாக்குகளைப் பெற்று தனித்தனியாக அதிக உறுப்பினர்களை பெறுவதற்காகவே செய்கின்றன. அவ்வாறு அதிக எம்.பி-களைப் பெற்று தேர்தலுக்குப் பின் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சிகளோடு பேரம் பேசி புதுக் கூட்டணிகளை உருவாக்கி அமைச்சர் பதவிகளை இவர்கள் அடையப்போகிறார்கள். இதைஎல்லாம் வேடிக்கைப் பார்ப்பதற்கான வாய்ப்பினை தவிர சாதாரண மக்களுக்கு கிடைக்கப் போவது வேறெதுவும் இல்லை.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தேர்தலை ஒட்டி ஜாதியத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் வடஇந்தியா
- விவரங்கள்
- மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு
- பிரிவு: மாற்றுக்கருத்து - மே 2009