இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் 1947 ஆம் ஆண்டு தேசிய தரக் கட்டுபாட்டு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இது 1950 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளில் ஐஎஸ்ஐ முத்திரைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டியிருந்தது.
இந்த அமைப்பு மத்திய, மாநில அரசு, தொழிற்துறை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்டது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு 20 கிளைகளோடு இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இதற்கு நாடு முழுவதும் 8 ஆய்வுக்கூடங்கள் உள்ளன.
ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களை ஆய்வு செய்து அதற்கு தரச்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த 8 ஆய்வகங்களால் முடியாத ஒன்று. அதற்காகவே நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களுக்கு NABL (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்துதான் ஊழலே தொடங்குகின்றது. ஒரு மூன்றாவது நிறுவனம் ஒரு தொழிற்சாலையின் பொருட்களை ஆய்வு செய்து எப்படி நியாயமான நேர்மையான முடிவுகளை இந்திய தரக்காட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு அளிக்கும்?
தனியார் ஆய்வகங்கள் NABL அனுமதி பெறுவதில் தொடங்கி தொழிற்நிறுவனத்தின் பொருட்களை ஆய்வு செய்து அதற்கு சான்றிதழ் வழங்குவது வரை இந்த ஊழல் ஒரு வலைப்பின்னலாக தொடர்கின்றது.
இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தொழிற்நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் வேலைகளை அவுட்சோர்சிங் செய்துவிட்டது. இந்த வேலைகளை தொழிற்நிறுவனங்களுக்கு சென்று செய்யும் அதன் ஊழியர்கள் தொழிற்நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு எந்த வகையான ஆய்வையும் செய்யாமல் தொழிற்நிறுவனம் தரம் குறைந்த பொருட்களை உற்பத்தி செய்து அதை மக்களை ஏமாற்றி விற்கும் அயோக்கியத்தனமான செயலுக்குத் துணை போகின்றார்கள்.
வாடிக்கையாளர்களின் நலன் முக்கியமா என்று மனசாட்சியோடு நாம் பார்த்தோம் என்றால் இந்த சமூகத்தில் நாமும் ஒரு வாடிக்கையாளர் என்ற அடிப்படையில் தொழிற்நிறுவனம் செய்யும் இந்த மோசடி வேலைகளை நம்மால் சகித்துக் கொள்ளவே முடியாது.
நாம் வேலை செய்யும் தொழிற்நிறுவனம் மிக மோசமான தரம் குறைந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி தன்னுடைய உற்பத்தியை எடுத்தாலும் அது நல்லா இருக்கின்றது என்று அதற்கு சான்றிதழ் வழங்குவார்கள்.
இதற்காகவே போலியான ஆவணங்களை வைத்திருப்பார்கள். அதில் ஒருபோதும் உண்மையான ஆய்வு முடிவுகளைப் பதிவு செய்ய மாட்டார்கள். ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் இந்த போலி ஆவணங்களை ஆய்வு செய்வது போல நடிப்பார்கள்.
இது போன்ற சூழ்நிலைகளில் அந்தப் பொருட்கள் சந்தைக்குப் போய் அதனால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டு ஏன் சில நேரம் உயிரிழப்பே கூட ஏற்படலாம்.
NABL ஆய்வகங்கள் பணம் வாங்கிக்கொண்டு தரகு வேலை பார்ப்பதைப் பற்றியோ அவர்கள் அதற்காக இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுப்பதைப் பற்றியோ சாமானிய மக்களுக்கு என்ன தெரிந்துவிடப் போகின்றது என்ற நம்பிக்கைதான் இவர்களை இப்படி எல்லாம் செய்ய வைக்கின்றது.
உதராணமாக பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வரும் சிமெண்ட் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் குவாலிட்டி டிபார்ட்மென்ட் ஹெட்டாக வேலை பார்த்து வந்த சமயம். அந்த நிறுவனம் இந்திய தரக்காட்டுப்பாட்டு நிறுவனத்தின் எந்த ஒரு விதிமுறைகளையும் மதிக்காத மார்வாடி நிறுவனம். இந்திய தரக்காட்டுப்பாட்டு நிறுவனம் 53 கிரேடு சிமெண்டைதான் பயன்படுத்த வேண்டும் என்று நிர்ணயத்து இருந்தால் அவர்கள் 43 கிரேடு சிமெண்டைதான் பயன்படுத்துவார்கள்.
மேலும் தரம் குறைந்த உயிருக்கு மிகவும் ஆபத்தான 6 கிரேடு மற்றும் 7 கிரேடு கல்நார்களைப் பயன்படுத்துவார்கள்.
அப்படியான சிமெண்ட் சீட்டுகள் மிகவும் தரம் குறைந்ததாகவும் ஆபத்தானதாகவும் இருந்தாலும் நீங்கள் எதுவும் செய்துவிட முடியாது. உங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என்றால் நீங்கள் மக்களின் உயிரைப் பற்றியோ அவர்களுக்கு அதனால் ஏற்படும் நோய்களைப் பற்றியோ கவலை படாத மனிதர்களாக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் வந்து சோதனை செய்து கண்டுபிடித்து விடுவார்கள் என்று நாம் நினைத்தால் இவர்களின் அத்தனை அயோக்கியத்தனமான செயல்களுக்குப் பின்னாலும் அவர்கள்தான் வழிகாட்டியாய் நிற்பார்கள்.
நான் வேலை செய்த நிறுவனத்திற்கு அவுட்சோர்சிங் மூலம் ஆடிட் செய்ய வந்த நபர், தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து 30 அடிகள் தள்ளி இருந்த சிமெண்ட் குடோனுக்கு சென்று ஆய்வு செய்திருந்தால் அவர்கள் பயன்படுத்துவது 53 கிரேடு சிமெண்டா இல்லை 43 கிரேடு சிமெண்டா என்று தெரிந்து கொண்டிருக்கலாம்.
அதேபோல தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து 15 அடி தூரத்தில் உள்ள சிமெண்ட் அட்டை கிடங்கிற்கு சென்று அங்கே தான் சொல்லும் சிமெண்ட் அட்டையை ஆய்வுக்கு அனுப்பச் சொல்லியிருந்தால் தரம் குறைந்த சிமெண்ட் சீட்டுகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அயோக்கியத்தனம் அம்பலமாகி இருக்கும். ஆனால் இவை எதற்குமே ஊழல்வாதிகள் தயாராக இல்லை.
வந்திருந்த நபர் 10000 ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு கொடுப்பதற்காகவே முன்கூட்டியே தரத்தோடு எடுத்து வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டில் கையில் ஸ்டேம்பிங் செய்து கொடுத்ததை ஏற்றுக் கொண்டு அதன் மேல் கையெழுத்து போட்டுவிட்டு ஆய்வுக்கு அனுப்புமாறு கூறிவிட்டுச் சென்றார்.
இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மட்டுமல்ல ISO (International Organization for Standardization) நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழிற்நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்றால் ISO நிறுவத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இந்த சான்றிதழ்கள் ஒரு நிறுவனம் வளங்களை எப்படி கையாள்கிறது, தன்னுடைய கழிவுகளை எப்படி மறு சுழற்சி செய்கின்றது, அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் எப்படி கவனம் செலுத்துகின்றது போன்றவற்றைக் குறிப்பதாகும். உலகச் சந்தைக்கு ஒரு தொழிற்நிறுவனம் தன்னுடைய பொருளை விற்பனைக்குக் கொண்டு செல்ல இவை மிக முக்கியமானவை.
நிறைய ISO சான்றிதழ் இருந்தாலும் மூன்று சான்றிதழ்கள் மிக முக்கியமானது. Quality Management System ISO 9001, Environmental Management System ISO 14001, Occupational Health and Safety Management System ISO 18001 .
பெரும்பாலான தொழிற்நிறுவனங்கள் இந்த மூன்று சான்றிதழ்களையும் வாங்கி வைத்திருப்பார்கள். சில தொழிற்நிறுவனங்கள் இவற்றை நேர்மையாக கடைபிடிக்கவும் செய்வார்கள். இது போன்ற தொழிற்நிறுவனங்களில் நிச்சயமாக தொழிற்சங்கங்கள் இருக்கும்.
ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிப்காட்டுகளில் தொழிற்சங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இங்கு இயங்கும் பல தொழிற்சாலைகள் இவற்றை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் சான்றிதழ் மட்டும் வாங்கி வைத்திருப்பார்கள்.
நான் ஏற்கெனவே சொன்ன தொழிற்சாலை தரம் குறைந்த பொருட்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்ல, கல்நார் சீட்டுகளை மண்ணில் புதைத்து சூற்றுச்சூழலை நாசம் செய்வது மட்டுமல்ல, அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சேப்டி ஷு, பாதுகாப்பு கண்ணாடிகள், ஹெல்மெட், முகக்கவசம், கிளவுஸ் என எதையுமே கொடுப்பதில்லை. இவற்றை எல்லாம் எந்த அதிகாரிகளும் கள ஆய்வு செய்வதுமில்லை.
சூற்றுச்சூழல் மாசை ஆய்வு செய்யும் வேலையையும் வெளியே தனியார் ஆய்வகங்களுக்குக் கொடுத்து தமக்கு தேவையான முடிவுகளை வாங்கிக் கொள்வார்கள்.
நாம் எப்படி பார்த்தாலும் இந்த வலைப் பின்னலில் ஒரு கண்ணி கூட நேர்மையானதாக இருக்காது.
விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு அடித்து பிடுங்கப்பட்ட நிலங்களை நீண்ட கால அடிப்படையில் மானிய விலைக்கு கொடுத்து, அவர்களுக்கு தடையற்ற மின்சாரத்தைக் கொடுத்து, வரிச்சலுகைகளையும் கொடுத்தால் அவர்கள் பதிலுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுப்பது நஞ்சாக்கப்பட்ட மண்ணையும் காற்றையும்தான்.
தொழிற்சங்கங்கள் பிரச்சினையில்லை, வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு அவர்களை ஒட்ட சுரண்டி கொழுக்கலாம், மண்ணையும் காற்றையும் கேட்பார் யாருமின்றி நாசம் செய்யலாம்; அரசுக்கும் அதிகாரிகளும் காசை விட்டெறிந்தால் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலான தொழிற்நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலம், சிப்காட்டுகளைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிப்காட்டுகள் போன்றவை முதலாளிகளுக்கு சொர்க்கங்களாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நரகங்களாகவும் மாறியிருக்கின்றன.
- செ.கார்கி