கீற்றில் தேட...

அபாயகரமான கல்நார் பயன்பாட்டை தமிழக அரசு தொடர்ந்து அனுமதித்து வருகின்றது. கல்நார் பயன்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை.

ஈரோடு மாவட்டம் சிப்காட் வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் சாயாத்திரி என்ற சிமெண்ட் அட்டை கம்பெனி சுவஸ்திக் என்ற பெயரில் சிமெண்ட் அட்டைகளைத் தயாரித்து தமிழ்நாட்டில் விற்று வருகின்றது.

இந்த நிறுவனம் எந்த வகையான பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்காமல் ஆயிரக்கணக்கான டன் கல்நார் சீட்டுகளை தொழிற்சாலைக்கு உள்ளே குழி தோண்டி புதைத்து வருகின்றது. அதுவும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே இந்த அயோக்கியத்தனமான வேலையை செய்துள்ளது.sahyadri factory 1

sahyadri factory 2

(ஆயிரக்கணக்கான டன் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை உடைத்து மலைபோல குவித்து வைத்து அதன் மீது மண் போட்டு மறைக்கப்பட்டுள்ளது.)sahyadri factory 3

(மண்ணில் புதைப்பதற்குத் தயார் நிலையில் நொறுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள்)

கல்நார் சிமெண்ட் அட்டைகளை மீண்டும் மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு கிலோவுக்கு ஏறக்குறைய 2 ரூபாய் வரை செலவாகும். இதனால் பல்வேறு குறைபாடுகளால் நிராகரிக்கப்பட்ட டன்-கணக்கான கல்நார் சிமெண்ட் அட்டைகளை மண்ணுக்குள் புதைத்து, தெரிந்தே தொழிலாளர்களை அழிக்கப் பார்க்கின்றார்கள்.

மார்வடிகள் தமிழ்நாட்டில் தொழிற்தொடங்கி மண்ணையும் காற்றையும் நாசம் செய்துகொண்டு இருக்கின்றார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்பது தொழிற்சாலைகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை மண்ணையும், காற்றையும் நாசம் செய்ய அனுமதிக்கும் வாரியமாக மட்டுமே செயல்பட்டு வருகின்றது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தெரியாமல் எப்படி ஆயிரக்கணக்கான டன் ஆஸ்பெடாஸ் சீட்டுகளை மண்ணில் புதைக்க முடியும்?

உலகில் 70 நாடுகளில் கல்நார் (asbestos) பயன்பாடு தடை செய்யப்பட்டிருந்தாலும், 2011 ஆம் ஆண்டில் கல்நார் சுரங்கத்தை இந்தியா அரசு தடை செய்திருந்தாலும் உலகில் கல்நார் உபயோகிப்பதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மனித உயிர்கள் மீதான இந்திய அரசின் அலட்சியத்தையே இது காட்டுகின்றது.

குறிப்பாக கிரிசோடைல் எனப்படும் வெள்ளை கல்நார் பயன்பாட்டுக்கு எந்தத் தடையும் இல்லை. அனைத்து வகையான கல்நார்களும் நுரையீரல் புற்றுநோய், மீசோதெலியோமா, குரல்வளை மற்றும் கருப்பையின் புற்றுநோய் மற்றும் அஸ்பெஸ்டோசிஸ் (நுரையீரலின் ஃபைப்ரோஸிஸ்) போன்றவற்றை ஏற்படுத்தும் என WHO அறிவித்துள்ளது.

உலகளவில், சுமார் 125 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பணியிடத்தில் நேரடியாக ஆஸ்பெஸ்டாஸால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆஸ்பெஸ்டாஸால் இறக்கின்றனர்.

உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கல்நார் - சிமென்ட் சீட்டுகளும் சுரங்கம் மற்றும் செயலாக்கம் முதல் நிறுவல், இடிப்பு மற்றும் அகற்றல் வரை அதன் முழு வாழ்க்கைச் சுழற்சியிலும் குறிப்பிடத்தக்க நோய் அபாயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தின் சர்வதேச இதழின் மே 2018 இதழில் வெளியிடப்பட்ட உலகளாவிய கல்நார் பேரழிவு பற்றிய ஆய்வறிக்கையில், ஒவ்வொரு 20 டன் கல்நார் உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு உலகில் எங்காவது ஒரு நபரின் மரணம் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

இந்த செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் குறிப்பிடத்தக்க ஆபத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், ஆஸ்பெஸ்டாஸ் - சிமென்ட் சீட்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் வசிக்கும் நபர்கள் காற்றில் வெளியாகும் அபாயகரமான கல்நார் இழைகளை உள்ளிழுப்பதால் பாதிக்கப்படுகின்றனர்.

அகமதாபாத்தில் வசிக்கும் 41 வயதான ராஜேஷ் வியாஸ், ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உள்ளிழுப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோயான மீசோதெலியோமாவால் இறந்தபோது, ​​அவரது மரணம் ஆஸ்பெஸ்டாஸ் வெளிப்பாட்டினால் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ராஜேஷ் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலையில் வேலை செய்யாததே இதற்குக் காரணம். இருப்பினும், அவரது தந்தை அகமதாபாத்தில் உள்ள கல்நார் சிமெண்ட் கூரைத் சீட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பொறியாளராகப் பணிபுரிந்தார்.

அந்தக் குடும்பம் தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் பல வருடங்களைக் கழித்தது மற்றும் அவர்களது வீடு கல்நார் கழிவுகள் கொட்டும் இடத்திற்கு முன்னால் இருந்தது. ராஜேஷ் வியாஸ் அங்கு கல்நார் காற்றில் பரவியதால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மீசோதெலியோமா மிகவும் தீவிரமான புற்றுநோய்களில் ஒன்றாகும், உயிர்வாழ்வு விகிதம் எட்டு சதவீதம் மட்டுமே. நோயறிதலுக்குப் பிறகு, நோயின் தீவிரத்தைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

புது தில்லியைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பான சுற்றுச்சூழல் அறக்கட்டளை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தொழில்சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,500 பேர் தொழில்ரீதியாக மீசோதெலியோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கண்டறிந்தது.

கல்நார் கொண்ட வாகன பிரேக்குகள், கல்நார் பூசப்பட்ட சிமென்ட் குழாய்களை வெட்டுதல் மற்றும் கல்நார் சார்ந்த தீயணைப்புப் பொருட்களைத் தெளிக்கும் போது தொழிலாளர்கள் கல்நாரினால் ஏற்படுத்தப்படும் கொடிய நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர். மேலும் பழைய கப்பல்களை உடைக்கும் போது தொழிலாளர்கள் கையாளும் மிகவும் ஆபத்தான பொருட்களில் கல்நாரும் ஒன்றாகும். குஜராத்தில் உள்ள அலாங் கப்பல் கட்டும் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புற்றுநோயினால் இறப்பது நமக்கு ஏற்கெனவே தெரியும்.

இந்தியாவில் ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கல்நாரைப் பயன்படுத்துகின்றன. அதில் 300,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் இது போன்ற தொழிற்சாலைகளில் முறைசாரா மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர்.

இது போன்ற தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள விளிம்புநிலை மக்கள் அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்தான் வாழ்ந்து அல்லது வேலை செய்கின்றனர். அதுமட்டுமல்ல இந்தியாவில் 200 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தலித்துகளில் 79 சதவீதம் பேர் கல்நார் கூரைகளின் கீழ்தான் இன்னும் வாழ்கின்றனர்.

தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம் மதிப்பிட்டுள்ளபடி, கல்நார் உட்கொள்வதால், அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வசிப்பவர்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது

 2008 ஆம் ஆண்டு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் "கல்நார் சார்ந்த தொழில்களில் மனித ஆரோக்கிய அபாய மதிப்பீடு ஆய்வுகள்" என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில், "அனைத்து வகையான கல்நார்களும் மனித இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன" என்பதை இதில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியது.

 மேலும் இந்திய உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் அஸ்பெஸ்டாஸின் வெளிப்பாட்டினால் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து பலமுறை தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளன. மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக வெள்ளை கிரிசோடைல் கல்நார் பயன்படுத்துவதற்கு உலகளாவிய தடைக்கு அழைப்பு விடுக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தீர்மானத்திற்கு ஏற்ப இந்தியாவின் சட்டங்களை புதுப்பிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சில நாடுகள் தங்கள் நாட்டில் கல்நார் பயன்பாட்டுக்குத் தடை விதித்தாலும் பிற நாடுகளுக்கு அவற்றை ஏற்மதி செய்யும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றன. குறிப்பாக பிரேசில்.

அஸ்பெஸ்டாஸ் பயன்பாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று பிரேசிலிய உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு இருந்தபோதிலும் இந்தியாவிற்கு அவற்றைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்கின்றது. பிரேசிலியர்களுக்கும் சுமார் 70 நாடுகளுக்கும் விஷமான ஒன்று இந்தியர்களுக்கு மட்டும் எப்படி நச்சுத் தன்மையற்றதாக இருக்க முடியும்?.

அமெரிக்காவில் ஏறக்குறைய 100,000 பேர் கப்பல் கட்டுவது தொடர்பான வேலைகளில் ஈடுபடும் போது ஆஸ்பெஸ்டாஸ் பாதிப்புகளால் இறந்துள்ளனர். 1930 இல் இருந்தே கல்நார் அபாயங்களைப் பற்றி அதிகாரிகள் அறிந்திருந்தும் அவற்றை பொதுமக்களிடமிருந்து மறைத்து விட்டனர் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் நிரூபித்தன.

ஆஸ்திரேலியாவில், 1946 மற்றும் 1980க்கு இடையில் கட்டுமானம் மற்றும் பிற தொழில்களில் கல்நார் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1970 களில் இருந்து, கல்நார் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதால், அதன் பயன்பாடு படிப்படியாக நிறுத்தப்பட்டது. 1983-இல் கல்நார் சுரங்கங்கள் மூடப்பட்டது. அதன் பயன்பாடு 1989 இல் படிப்படியாகக் குறைக்கப்பட்டு டிசம்பர் 2003 இல் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது.

இருந்தும் கூட கல்நாரைப் பயன்படுத்தும் தொழிற்நிறுவனங்களுக்கு ஆதரவான ஆய்வாளர்கள் 1980 மற்றும் 1990களில், கல்நாரை சிமெண்டோடு சேர்ந்து பயன்படுத்தும் போது அவற்றை நடுநிலைப்படுத்த முடியும் என்று பரிந்துரைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நடத்தப்பட்ட ஆய்வுகள் இது பொய்யானது என்றும், பல தசாப்தங்கள் பழமையான கல்நார் சிமென்ட் உடைக்கப்படும்போது, ​​இயற்கையில் காணப்படும் அஸ்பெஸ்டாஸ் இழைகளை எந்தவித மாற்றமும் இன்றி வெளியிடுகிறது என்றும் உறுதிப்படுத்தியது.

 இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்கள் கல்நார் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்துள்ளன. மேலும் பள்ளிகளின் மேற்கூரையாக அவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன.

கல்வி நிறுவனங்களின் மேற்கூரை கட்டுமானத்தில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்கள் பயன்படுத்தப்படுவதால், காலப்போக்கில் அவை உதிர்ந்து விடும் என்றும், அதனால் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும் என்றும், அதை மதிப்பீடு செய்யுமாறும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

எனவே இவ்வளவு அபாயங்கள் நிறைந்த கல்நாரைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் சிமெண்ட் சீட்டுகளை உற்பத்தி செய்ய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் அரசுக்குத் தெரியாமல் இப்படி ஆயிரக்கணக்கான டன் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை சட்ட விரோதமாக மண்ணில் புதைத்த சாயாத்ரி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு உடனே விரைந்து செயல்பட்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதோடு, இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

- செ.கார்கி