2024 அக்டோபர் மாதம் பருவ மழையையொட்டி கனமழை பெய்த காரணத்தினால், பெரு நகரங்களில் மழை நீர் தேங்கி அவற்றால் கழிவுகள் அதிகம் உற்பத்தியாகின. அவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகளில் பெருவாரியான தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அது பெரும் கவனத்திற்கு உள்ளானது. இதனால் உடனுக்குடன் கழிவுநீர் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டு, இந்த அரசு துரிதமாக செயல்பட்டது என்று ஊடகங்களில் சொன்னவற்றை நாம் பார்த்திருப்போம். ஆளுகின்ற அரசுக்கு மழைநீர் கழிவுகளை அகற்றி பெருமை சேர்த்த வகையில், முக்கிய இடத்தில் தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களை சிறப்பிக்கும் விதமாக தடாபுடல் விருந்தும், அதில் முதல்வரே முன்நின்று பரிமாறிய காட்சிகளும் சமூகவலைத்தளங்கள் உள்பட செய்திகளிலும் முக்கிய இடத்தைப் பெற்றன.
விருந்தின் பின்னணி
சென்னையில் பெய்த கனமழையில் ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிய விருந்தை பரிமாறி, உடன் அமர்ந்து உணவருந்தி வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு மிக முக்கியக் காரணம், சென்னையில் அக்டோபர் மாதம் 5 நாட்களில் பெய்த கனமழையால் 30டன் குப்பைகளை இரவு பகல் பாராது உழைத்து சுத்தம் செய்துள்ளார்கள் தூய்மைப் பணியாளர்கள். இதன்படி பார்த்தால் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சராசரியாக 6 பேர் செய்யும் வேலையை, 1 நபர் செய்திருக்கிறார். அப்படியானால் தூய்மைப் பணியை மேற்கொண்ட ஒவ்வொரு பணியாளரும் எத்தனை கடினமான வேலையை, அதுவும் ஓய்வு, உறக்கமின்றி செய்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இத்தனை கடினமான வேலையை உடனுக்குடன் செய்து முடித்திருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். இதில் அரசுக்கு நற்பெயர் அவர்களால்தான் கிடைத்தது என்பதால், தூய்மைப் பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக பிரியாணி விருந்து வழங்கியும், அவர்களுக்குப் பரிமாறியது, முதல்வர் அவர்கள் உடனிருந்து சாப்பிட்டது என அத்தனையும் நடந்திருக்கிறது. இதுவும் ஒருவித அரசியல்தான்.
அரசு ஒரு பக்கம் தூய்மைப் பணியாளர்களை சிறப்பிக்கிறது என்றால் சில தனியார் அமைப்புகளும், குடியிருப்பை சார்ந்தவர்களும் அவர்களை சிறப்பிக்கும் பணியை செய்து வருகிறார்கள்.
சென்னை ஏ.ஜி.எஸ். காலனி நிர்வாகிகள், அப்பகுதியை சார்ந்த தூய்மைப் பணியளார்கள் அனைவருக்கும், அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் காலனியைச் சார்ந்தவர்கள் நான்காவது வருடமாக இதுபோன்று தூய்மைப் பணியாளர்களுக்கு உணவளித்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர். அவர்களும் உடனிருந்து தூய்மைப் பணியாளர்களை சாப்பிட வைத்துள்ளனர்.
உணர்ச்சிப் பெருக்கான நன்றியைப் பகிர்தல்
மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளின் போதும் தூய்மைப் பணியாளர்களை பேட்டி கண்ட போது, அவர்களுக்கு உணவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உணர்ச்சிப் பெருக்கில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் தான் தூய்மைப் பணியாளர் என்பதை பெருமிதமாக உணருவதாக குறிப்பிட்டிருந்தனர். அப்படியானால், இதுபோன்ற நிகழ்வுகள், அவர்களை நாம் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுகிறோம்… என்ற மிதப்பில் தொடர்ந்து அப்பணியைத் தொடரச் செய்வதற்கான உத்தியாகவும் தந்திரமாகவும் நாம் புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு விதத்தில் எடுத்துக் கொள்வதானால், இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுக்கும் நபர்கள் தங்களை பெருமிதமாக நினைப்பவர்கள் மத்தியில், யாருமே கண்டு கொள்ளாத தூய்மைப் பணியாளர்களை இப்படியாவது அழைத்து பாராட்டுகிறார்களே? என்றும் உணரக்கூடும். அவசரக் காலச் சூழலில் விரைந்து பணியாற்றி சமூகத்திற்குப் பயன் விளைவிக்கும் செயலைப் பாராட்டியதை நாம் விமர்சனம் செய்வது சரியா? இதை எப்படி தவறாக எடுத்துக் கொள்ளலாம் என்று வாதிடுவோர்களும் உண்டு. இதை நாம் தூய்மைப் பணியாளர்களின் விடுதலைக்கான அல்லது உரிமைக்கான குரலை மழுங்கடிக்கச் செய்யும் வழியாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளோமா?
தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் விருந்து அளித்ததை தொடர்ந்து, அவர்களிடம் தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்த பேட்டியில், ஒருவர் இவ்வாறு பேசுகிறார். ”எங்களை குப்பை கொட்டுபவர்களாக நினைக்காமல், உங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து, எங்களோடு நீங்கள் டீ குடித்தது, உணவருந்துவது என நீங்கள் காட்டும் பாசம் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று கண்ணீர் மல்க நன்றி சொல்கிறார் ஒரு பெண் தூய்மைப் பணியாளர். இது தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் முதல்வர் வழங்கும் விழாவின் போது நடந்திருக்கிறது.
ஏ.ஜி.எஸ். காலனியை சார்ந்தவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஹோட்டல் ஒன்றில் உணவளித்ததை, அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பாலிமர் தொலைக்காட்சி சார்பில் பேட்டி காணும் போது, அஸ்வினி என்ற தூய்மைப் பணியாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார். ”நாங்க எல்லாம் அர்பஸ் மீட் (Urbaser Meet) என்ற அமைப்பு மூலமாக துப்புரவுப் பணி செய்கிறோம். எங்களையும், மேற்பார்வையிடும் அலுவலர்களையும் அழைத்து வந்து நல்ல சாப்பாடு போட்டிருக்கிறார்கள். ஐ லவ் மை ஜாப்…!” என்கிறார்.
அதோடு பேட்டி காண்பவர், ”உங்களை மக்கள் அழைத்துப் பாராட்டுகிறார்களே? அதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டதும், ”அது எங்களுக்கு ரெம்ப சந்தோஷம்தான். இத்தனை பேர் நாங்கள் செய்யும் வேலையைப் பாராட்டும் போதும், அதைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்க முடியும?” என்கிறார் அஸ்வினி.
அஸ்வினி என்ற பெண் தூய்மைப் பணியாளரின் பகிர்விலிருந்து ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்பதால் அவர்களை கண்டாலே விலகிப் போகும் பலருக்கு மத்தியில், அவர்களை அழைத்து பாராட்டுவதும், அவர்களுடன் இருந்து, மற்றவர்களும் உணவருந்துவதும், பெரும் அங்கீகாரமாக உணரத் தலைப்படுகிறார்கள். அதனால்தான் பாராட்டுக்களைக் கண்டு பெரும் நெகிழ்ச்சியாக உணர்கிறார்கள். அதையொரு அங்கீகாரமாகவே அவர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்களின் பகிர்வு.
பொதுச் சமூகம் பார்க்கத் தவறியவை
பொதுச் சமூகத்தினர் பலரும் வருடத்தில் ஏதேனும் ஒருநாள் மட்டும் தூய்மைப் பணியாளர்களை பாராட்டிவிட்டு, நம் கடமை முடிந்து விட்டது என்று ஒதுங்கிக் கொள்வது எத்தனை அபத்தம்? அப்படியானால் வேறு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கத் தோன்றுகிறதா? அது என்னவென்று பார்ப்போம்.
தூய்மைப் பணியாளர்கள் எத்தகைய சூழலில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் என்ன? இதர சலுகைகள் ஏதேனும் இருக்கிறதா? மிக முக்கியமாக அவர்களின் பணிப் பாதுகாப்பு, பணியின் போது உயிரிழக்கும் நபரின் குடும்ப நிலை? மற்ற பணியாளர்களைப் போன்று விடுமுறை உள்ளிட்ட பணி சார்ந்த வரண்முறைகள், பணியாற்றும் நேரம், பணியின் போது பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்டவைகள் குறித்த அக்கறை யாருக்கேனும் உண்டா? அல்லது அதுதொடர்பான புரிதல் பொது சமூகத்திற்கு இருக்கிறதா?
தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றுகிறார்கள். அந்த ஒப்பந்தங்களை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களைப் போல தனியார் அமைப்புகளே எடுத்து நடத்துகின்றன. அவற்றில் தூய்மைப் பணியாளர்களுக்கு சரியான ஊதியம், அதுவும் சுரண்டல் ஏதுமில்லாமல் கொடுக்கப்படுகின்றனவா? உள்ளிட்ட விவரங்கள் ஏதும் அறிந்து கொள்ளாமல், வெறுமனே ஏதேனும் ஒருநாள் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பாராட்டி அவர்களுக்கு உணவளித்துவிட்டால், அவர்கள் எதிர்கொள்ளும் அல்லது அடையும் இன்னல்களிலிருந்து விடுதலை அடைந்து விடுவார்கள் என்று நினைக்கும் மனப்போக்கை என்னவென்று சொல்வது?
யார் ஒருவரும் பிறர் கைமாறு கருதாமல் செய்யும் சிறு உதவிக்குக் கூட நன்றி தெரிவிக்கும் பண்பு தமிழர்களின் மரபு. அதைத்தான் தனக்கு உணவளித்ததும் அப்பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், பணிச்சூழல், விடுமுறை, விடுப்பு, விதிமுறைகள், அவர்களுக்கு அளிக்கும் மரியாதை உள்ளிட்டவற்றை கேட்டுப் பாருங்கள். எப்படிக் கொதித்துப் போய் பதில் சொல்வார்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
பெருமிதம் தேவையில்லை
தூய்மைப் பணியாளர்கள் குறித்து சிலர் பொத்தாம் பொதுவாக சில அப்பிராயங்களை வைத்திருக்கிறார்கள். அது என்ன என்பதை நாம் பார்ப்போம். தூய்மைப் பணியாளர்களுக்கு இன்னும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவர்களின் காலை கழுவியும், காலில் விழுந்தும் பாதக் காணிக்கை செய்தேன். காசு மாலை அணிவித்து மரியாதை செய்தேன். எங்கள் வீட்டுச் செம்பில் தண்ணீர் குடிக்கக் கொடுத்தேன். எங்கள் வீட்டுக்குள் நுழைய விட்டேன். அவர்களின் கைச் செலவிற்குப் பணம் கொடுத்தேன்… என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதும்… தூய்மைப் பணியாளர்களை நாம் எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறோம் என்பதை வெட்ட வெளிச்சமாவே காட்டுகிறது.
அப்படியானால் நாம் என்னதான் செய்ய வேண்டும்? என்றொரு கேள்வி எழத்தான் செய்யும். குறைந்தபட்சம் அதைக் கூட நம்மால் யோசிக்க முடியவில்லை என்று சொல்வதைவிட, நமது மண்டைக்குள் அவ்வளவுதான் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கவனம் பெறாத போராட்டங்கள்
எத்தனை இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகிறார்கள். அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள்? அவர்களின் வேலைத்தளத்தில் உரிய பாதுகாப்பும், உத்திரவாதமும், வேலைக்கேற்ற ஊதியமும், உரிய உபகரணங்களும், மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்றும்தான் போராடுகிறார்கள்.
தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 06 முதல் நண்பகல் 11 மணி வரை. மதியம் 02 முதல் மாலை 05 மணி வரை வேலை செய்வது.
எத்தனை வேலை செய்தாலும் அதற்காக வழங்கப்படும் சம்பளம் நாளொன்றுக்கு 400 ரூபாய் மட்டுமே.
பண்டிகை நாட்களில் கூட விடுமுறை கிடையாது. அன்றைக்கும் வேலை செய்துவிட்டுதான் அவர்கள் வீட்டிற்குப் போக முடியும். இன்னும் சொல்லப் போனால் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கியத் தினங்களில் அதிகளவில் தெருவில் குப்பைகள் சேரும். அவற்றையும் சுத்தம் செய்யும் போது கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும்.
வீடு வீடாகப் போய் குப்பை சேகரிக்கும் பணிக்கு மாதம் ரூபாய் 5000 சம்பளம். அவரவர் வீடுகளில் மக்கும் குப்பை, மட்கா குப்பையை யாரும் தனியாகப் பிரித்துக் கொடுப்பது கிடையாது. ஒருவேளை யாராவது ஒன்றிரண்டு பேர்கள் வேண்டுமானால் பிரித்துக் கொடுக்கலாம்.
25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்கள் கூட இன்றைக்கும் ரூபாய் 5000 சம்பளத்திற்கு வேலை செய்யும் அவலம். பணி நிரந்திரம் என்பதே கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஒப்பந்த முறையை புதுப்பித்துக் கொண்டே இருப்பது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் வழியாக பணியமர்த்தியவர்களுக்கு சம்பளம் குறைந்த அளவே உயர்த்தினாலும், அதையும் உரிய நேரத்தில் பணியாளர்களுக்குக் கொடுப்பது கிடையாது.
ஞாயிறு உள்பட எல்லா பண்டிகை நாட்களிலும் வேலை செய்த அன்று மட்டுமே சம்பளம். மற்ற நாட்கள் விடுப்பாக கருதப்படும். இப்படியெல்லாம் ஒப்பந்த முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட தூய்மைப் பணியாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறார்கள் ஒப்பந்தகாரர்கள்.
இ.எஸ்.ஐ, மற்றும் பி.எப் உள்ளிட்ட பிடித்தம் செய்தாலும் அவற்றிற்கான ரசீதுகள் முறையாக உரிய நேரத்தில் கொடுக்கப்படுவதில்லை.
அவுட்சோர்சிங் முறையில் தூய்மைப் பணிகளை செய்ய அரசாணை வெளியீட்டு, தூய்மைப் பணியாளர்களை அடிமைகள் போன்று நடத்தவது அல்லது நடத்த முற்படுவது.
பணியின் போது மரணமடைந்தாலும் மற்ற பணியாளர்களைப் போன்று எந்தவொரு பணப்பலன்களும் கிடைப்பது இல்லை.
குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டும், அவை இன்னும் கிடைக்காத நிலைதான் இருக்கின்றன. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்குப் பலமுறை மனுக் கொடுத்தும் கண்டு கொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.
நிவாரணம் அல்லது உரிய பணப் பலன்கள் பெற வேண்டுமென்றால் ஆவணங்கள் கேட்டு அலைக்கழிப்பு செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தும் இடங்களில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் ஏதும் செய்யாமல் அவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றும் போக்கை அரசு கையில் எடுத்துள்ளது.
ஒருநாள் தூய்மைப் பணியாளர்களுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், விடுப்பு எடுக்க அனுமதிப்பதில்லை. வேலைக்கு வரச் சொல்லி வற்புறுத்துதல்.
இதுபோன்ற எண்ணற்ற பிரச்சனைகளை தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கிறார்கள். அவற்றை களைய வேண்டுமென கோரிக்கைகளாக முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தெருவில் ஓராமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நம்மில் பெரும்பாண்மையானவர்கள் சாதாரணமாக கடந்து விடுகிறோம்.
அதைவிட ஒருநாள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை என்றால், தங்களின் பகுதி சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. வீட்டுக் குப்பைகள் எடுக்கப்படாமல் இருக்கிறது… என்று அவர்களின் மீது புகார் அளிக்க எத்தனை முனைப்புக் காட்டுகிறோம். அதுமட்டுமா? அவர்களை சாதாரணமாக வசைப்பாடுவதும் நடக்கத்தானே செய்கிறது.
அதில் துளியளவாவது நம்முடைய சமூகத்தை தூய்மையாக வைத்துக் கொண்டிருக்கும், அவர்களின் உரிய கோரிக்கைகள் வெல்ல வேண்டும் என்று ஒருமணி நேரமாவது அவர்களின் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறோமா? அல்லது ஆதரவுதான் தெரிவித்திருக்கிறோமா? இந்தக் கேள்விக்கு கொஞ்சமாவது நாம் மனசாட்சியோடு பதில் தேடித்தான் ஆக வேண்டும்.
நேரெதிர் மனநிலைகள்
தூய்மைப் பணியாளர்களை சகப் பணியாளர்களாக, பிற துறைகளை சார்ந்த எந்தவொரு அரசு ஊழியரும் ஏற்றுக் கொள்வதில்லை என்பது ஒரு பக்கம். சமூகத்தில் இந்த வேலையைச் செய்யும் தூய்மைப் பணியாளர்களை பொது சமூகத்தினரும் பெரும்பாண்மையாக அங்கீகரிப்பது இல்லை. சக மனிதர்களாகவும் பார்க்கப்படுவதும் இல்லை. அப்படியிருக்க தூய்மைப் பணியாளர்கள் பலரும், அந்த வேலையை விரும்பிச் செய்ய வராவிட்டாலும், அவர்களின் குடும்பச் சூழல், வேலையில்லா திண்டாட்டம், முன்னோர்களின் வழியாக அறிமுகம் என இந்த வேலையைச் செய்யப் பழகிக் கொண்டாலும், நாளடைவில் அந்தத் தொழிலிலேயே அவர்கள் உழன்று தங்களின் வாழ்நாளினை முடித்துக் கொள்ள நினைத்துக் கொண்டிருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
ஐ லவ் மை ஜாப் என்று அஸ்வினி போன்றோர் சொல்லும் போது, நாம் இந்தத் தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழில் தேடி எங்கு அழைவது என்ற மனப்போக்குதான். அப்படிப்பட்டவர்களின் நியமான கோரிக்கைகள் வெல்லவும், அவர்களின் பணிக்குக் கிடைக்க வேண்டிய நியமான ஊதியம் உள்ளிட்டவை கிடைக்க பொது சமூகத்தினர் எத்தனை பேர்கள் திரண்டெழுந்து குரல் கொடுத்திருக்கிறோம்?
இப்படி எந்த விதமான பங்களிப்பும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குக் குரல் கொடுக்காதவர்களின் தெருக்களையும், பகுதியையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்தச் சமூகத்தை தூய்மையாகப் பராமரிப்பதிலும், பேணிப் பாதுகாப்பதிலும் மிகுந்த அக்கறை செலுத்தும் இந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அப்பாவிகளாக இருக்கப் போகிறார்களோ?
நம் புரிதலுக்கு…
சமீபத்தில் கூட, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்காக டெண்டர் கோரும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருவாரியான தூய்மைப் பணியாளர்கள் போராடினார்கள். தனியார் மயமானால் நம் பகுதியை அரசுத் தரப்பில் தூய்மையாகப் பராமரிப்பு செய்வது போல், அந்தத் தனியார் நிறுவனங்கள் செய்துவிடுவார்களா? இதைப் பற்றியெல்லாம் அக்கறையற்றவர்களாக பொதுச் சமூகத்தினர் இருக்கும் போது, அவர்களின் தெருக்களையும் ஊரையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் பொதுச் சமூகம், “ஏதாச்சும் சாக்குப் போக்குக் கண்டுபிடிச்சுட்டு வந்துருறாங்க…“ என்று வெறுப்பை உமிழ்ந்தவாறு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கடந்து போகிறது. அவர்களின் தெரு, பகுதி நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இல்லாத அக்கறை, இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏன்?
எல்லாம் ஒரே காரணம்தான்… தூய்மைப் பணியாளர்களுக்கு அது வேலை. செய்யும் தொழிலை விட்டுவிட்டு தீடீரென்று எங்குப் போவது என்ற தடுமாற்றம். அதுமட்டுமல்ல… பொதுச் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையும் அல்லவா? அதனால் அரசுப் பணியாக்கி, அதில் பணிசெய்யும் நம்மை எப்படியாவது பணி நிரந்திரம் செய்து விடுவார்கள் என்ற நட்பாசையும்தான்! அந்த எதிர்பார்ப்புதான் இத்தனையும் சகித்துக் கொண்டு, அவ்வேலையை செய்ய வைக்கிறது.
இனிவரும் நாட்களில் பொருத்தது போதும், இந்த இழிதொழிலை விட்டுவிட்டு வெளியேறுவோம் என்று ஒட்டுமொத்தமாக தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதோடு மட்டுமில்லாமல், அந்த வேலையை விட்டுவிட்டும் வெளியேறப் போகும் காலம் விரைவில் வரத்தான் போகிறது. அப்போது அவரவரின் வீட்டுக் குப்பைகளையும், அவரவர் தெருவில் வீசியெரிந்த குப்பைகளையும், இன்றைக்கு நீ… நாளைக்கு நான்… என முறை வைத்து சுத்தம் செய்யும் காலம் விரைவில் வரலாம்…
அப்போது கண்டிப்பாக இச்சமூகம் பொறுப்புடன் நடந்து கொள்ளப் பழகும்!
- மு.தமிழ்ச்செல்வன்