பேராசிரியர் அர.சம்பகலக்‌ஷ்மி (இனி அர.ச) (1932-2024) அண்மையில் மறைந்தார்.  சென்னைப் பல்கலைக்கழகத்தின்  வரலாற்றுத் துறையில் S.Krishnaswami Aiyangar, P.T.Srinivasa Iyengar, V.R.Ramachandra Dikshitar, K.A.Nilakanta Sastri, T.V.Mahalingam என்ற ஆய்வுப் பரம்பரையின் பின்னணியில் வந்த வரலாற்றறிஞர்.  அங்கு பயின்ற காடம்பாடிமீனாக்‌ஷி அவர்கள் இளம்வயதிலேயே அகாலமரணமடைந்தார்.  என்றாலும், அந்த இடத்தினை இட்டுநிரப்பும் உழைப்பினை அர.ச மேற்கொண்டார் எனலாம்.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு & தொல்லியல் துறையில் ஆய்வுப்பட்டங்களைப்பெற்ற அவர் அத்துறையிலேயே விரிவுரையாளராகப் பணியமர்த்தம் பெற்றார்.  தொடர்ந்து, புதுதில்லியில் புதிதாகத் துவக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் தென்னிந்திய வரலாற்றினை கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டார். வடக்கத்திய அறிஞர்களுக்கு தமிழரின் வரலாற்றுச் சான்றுகளான தொல்லியல் தடயங்கள், கல்வெட்டுகள், கல்சிற்பங்கள், கோயில் கட்டிடங்கள், உலோகப் படிமங்கள், ஓவியங்கள், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றின் தவிர்க்கவியலாத முக்கிய தன்மையினை ஆய்வியல்பூர்வமாக நிரூபித்துக் காட்டினார். அதற்கு தமிழறிஞர்களின் சில ஆய்வு நூல்கள் வழிகாட்டின.

R Champakalakshmiஓரியண்ட் லாங்மேன் வெளியிட்ட Vaishnava Iconography in Tamil Country, 1981 என்ற அவரது நூல் ஒரு நல்ல Master Piece. ஒரு முன்மாதிரியான வழிகாட்டிநூல்.  தம் ஆய்விற்காக பாரிய அளவில் களப்பணியினை மேற்கொண்டார்.  கருத்தரங்குகளில் தம் கருத்துகளை சான்றாதரங்கள் வழியே அழுத்தமாக நிரூபிப்பார்.  கேள்விகளுக்கான பதில்களில் கூடுதலான செய்திகள் கிட்டும்.  அவரின் Trade Ideology and Urbanization,1996 என்ற நூலும் அண்மையில் வெளியிடப்பட்ட நூலும் (Religion, Tradition and Ideology: Pre-Colonial South India,2011) தேர்ந்த ஆய்வு நூல்கள்.  இஸங்களுக்கு ஆட்படாத ஆய்வாளர்.  Burton Stein, அவர்களின் Peasant State and Society in Medieval South India, (1980) என்ற நூல் வெளிவந்தவுடன் அவர் (Burton Stein) கருத்தினை விமர்சித்தவர்களில் இவரும் ஒருவர். 

State பற்றி Studies in History இதழ் ஒரு சிறப்பு இதழினை வெளியிட்டது.  அதிலுள்ள கட்டுரைத் தொகுப்பிறகு முன்னுரை கட்டுரையினை எழுதினார்.  பர்டன் ஸ்டெயினின் கோட்பாடு (Illiterate tribal) படிப்பறிவு அற்ற சமூகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் சோழர் அரசுக்குப் பொருந்தாது என்றும் கூறினார்.  Burton stein முன்வைத்த கோட்பாட்டினை விமர்சித்த அனைவரும் குறைகளைப் பேசினர்; மாற்றுக்கருத்தினை சரிவர முன்வைக்கவில்லை.  தென்னிந்திய வரலாற்றின் அரசுருவாக்கத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களுக்கு பக்தி என்ற கருத்தியல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை பக்தி இலக்கியங்கள், சிற்பங்கள், படிமங்கள், கோயில் கட்டிடங்கள், கல்வெட்டுகள் வழியே  அர.ச நிறுவினார்.  குடமூக்கு-பழையாறை என்ற இருநகரங்களும் எவ்வாறு இடைக்காலத் தமிழ் நாட்டின் அரசியல்-பொருளியல் வளர்ச்சிக்குக் களமாக அமைந்தன என்பதையும் விளக்கினார்.  தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஓவியங்கள் பற்றிய அவரது ஆய்வுக் கட்டுரை மிக முக்கியமானது.  நல்ல ஆங்கிலத்தில் எழுதுவதற்கான முன்மாதிரியான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார்.  தெளிவான ஆங்கிலத்தில் கருத்துகளைப் பேசினார், வாதாடினார்.

தமிழ்நாட்டு வரலாற்றில் அரசுகளில் எழுச்சி பற்றி அர.ச அவர்களின் கருத்துருவாக்கம் முக்கியமானது.  சங்ககாலம் என்று வருணிக்கப்படும் இரும்புக் காலத்தில் கி.மு.500 முதல் கி.பி.300 வரை குலத் தலைவர்களும், குடித் தலைவர்களுமே ஆட்சியாளர்கள்.  இவர்கள் மக்களுடன் இணைந்து வாழ்ந்த egalitarian chiefs. தம்மோடு சேர்ந்து வாழ்ந்த பாணர்களுக்கு (bards) கொடையளித்து பழகியவர்கள்.  இவர்களால் பரந்து விரிந்த ஒருமுனைப்பட்ட அரசினை (unitary form of state) உருவாக்க முடியவில்லை.  இவர்களின் திணைப்பரப்புகள் (eco-zones) இயல்பில் வேறுபட்டிருந்தாலும் மொழியும் பண்பாட்டுக்கூறுகளும் அவர்களை இணைத்தன.  அங்கு, தந்திரமான, சூதுவாதான (strategical and deep meaning) அரசியல் இல்லை.  திடீரென எழுந்த வம்பவேந்தர்கள் வலுவான அரசினை அறிமுகப்படுத்தினர். 

கொடையளித்தலும், காதலும், வீரமும், புகழும், இரத்தலும்-இரங்கலும் கருத்தியலாக இருந்தபோது திணைக்குடித் தலைவர்களால் அரசினை எழுப்ப முடியவில்லை.   இதனையறிந்தே வேந்தர்கள் வேள்விகளை அறிமுகப்படுத்தி அதன்வழியே வேள்வியந்தணர்களுக்கு நிலக் கொடையளிக்கும் வழக்கத்தினை உண்டாக்கினர்.  இந்த வேள்வி, நிலக்கொடை, பிரமதேய உருவாக்கம் போன்ற வழக்கத்தினை ஆளுந்தகுதியினைப் பெறுவதற்குப் பின்னாட்களில் பல்லவர், பாண்டியர், சோழர் என்று அரச குலத்தினர் தொடர்ந்து பின்பற்றினர், அரசினை உருவாக்கினர்.  அதற்கான நிறுவனங்களாக கோயில்களை/கலை எழுப்பினர். அங்கு, குருமார்களை நியமித்தனர்.  அவர்களுக்கும் நிலக்கொடையளித்தனர்.  இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் வேளாண்தொழில், நுட்பமான நீர்ப்பாசனம் நன்கு வளர்ந்தன என்றார். ஆனால், உண்மையில் இதற்கு முன்பே நீர்ப்பாசனத் தொழில் நுட்பம் இங்கு நுணுக்கமாக வளர்ந்திருந்தது.  இதனைப் பெரும்பாலும் கட்டமைத்தவர்கள் உள்ளூர் மக்கள், மேலாண்மை செய்தவர்கள் வட்டாரத் தலைவர்கள்.  இது ஒரு அறுபடாத தொடர்ச்சி. தமிழ்நாட்டின் வறண்ட நிலப்பகுதிகளான புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பாசனக் குளங்களின் அருகேயும் சில இடங்களில் குளங்களுக்குள்ளேயும்கூட தொல்லியல் தளங்கள் இருப்பதனை அறியலாம் (சித்தன்னவாசல், தாயினிப்பட்டி போன்ற ஊர்கள் தக்க சான்றுகள்). நீர்ப்பாசனத் தொழில் நுட்பம், உப்பளத்துத் தொழில்நுட்பம், மீன்பிடித் தொழில்நுட்பம் (உள்நிலப் பகுதியிலும், கடற்கரையோரங்களிலும்) போன்றவை உழைக்கும் மக்களின் அறிவினால் விளைந்தவை. 

சங்ககாலத்தின் சேர, சோழ, பாண்டியர்களுக்கும் இடைக்காலத்து சேர, சோழ, பாண்டியர்களுக்கும் இடையே ஒரு missed link உள்ளது.   அதனை இட்டுநிரப்புவதற்கு அவர்கள் தங்களைகடவுளின் வழித்தோன்றல்களாகவும், இறைத்தன்மை கொண்டவர்களாகவும் செப்புப்பட்டயங்களில் பதிவிட்டனர்.  அடுத்து தம்மை இறைவனாகக் காட்டிக்கொண்டனர்.  அரசர்கள், பல்லவர் தொடக்கம் தம் தம் பெயரிலேயே கோயில்களைக் கட்டினர்.  இதனைச் சோழர்கள் மேலும் விரிவுபடுத்தினர்.  கோயில்/கோஇல் என்பது இறைவன் உறையும்இடம், அரசன் உறையும்இடம் என்பது அனைவரும் அறிந்ததே.  இறை என்பது முதன்மையான ஒருவரியின் பெயர்.  இவ்வரி கடவுளின்பெயரிலும் அரசரின்பெயரிலும் வசூலிக்கப்பட்டது.  திருவாசலால்போந்த இறைகடமை என்றவரி கோயிலுக்கும் போகும்; அரசர்மாளிகைக்கும் போகும்.  இப்படி, கடவுளரை முன்னிறுத்தி அரசர்கள் மக்களிடையே ஆளுந்தகுதி பெற்றனர். இது சங்ககாலத்தில் ஈடேறவில்லை. 

இன்னொருவகையில் பிரபஞ்வழித் தோன்றல்கள் (cosmic descendants) என்ற பெயரில் பாண்டியர் தம்மை சந்திரகுலத்தவர் என்றும் சோழர்கள் தம்மை சூரிய குலத்தவர் என்றும் சான்றுகளில் பொறித்தனர்.  அவர்களின் வீரம் குறித்து குறிப்பிடும்போது தம்மை இதிகாசத்து இராமனுடன் ஒப்பிட்டுக் கொண்டனர்.  இருந்தும் தம்மை கடவுளின் அவதாரத்திற்கு இணையாகக் காட்டினர்.  கடவுள் அவதாரங்களான வராகம், வாமனன், திரிவிக்கிரமன் போன்றவை பூமியினைக் காத்தல், நிலத்தினை அளவிடுதல், மூவுலகினையும் காத்தல் என்ற அரசகடமையின் கூறுகளாக காட்டப்பட்டன.  அவ்வுருவங்கள் கோயில்களில் வடிக்கப்பட்டன. அரசர்களின் ஆளுந்தகுதி/அறிந்தேற்பு பண்பாட்டு மீட்டுருவாக்கதின் வாயிலாகவும் நிறைவேறிற்று.  திணைப்பரப்பு சார்ந்த வட்டாரப் பண்பாட்டுக் கூறுகள் இலக்கியத்திலும், சிற்பக்கலை, படிமக்கலை, கட்டடக்கலை, இசை போன்றவற்றாலும் தரப்படுத்தப்பட்டன.  அரசர்களே கலையினை கற்றனர்.  ஒரு பல்லவ மன்னன் ஆடற்கலையில் சிறந்தவன், மற்றொருவர் நாடகக் கலையில் வல்லவர்.  ஒரு சோழ மன்னனின் மற்றொரு பெயர் பண்டிதச் சோழன் என்பதாகும். 

சங்ககாலத்து ஊர்களில் அரசர்கள் உலாவந்தனர்.  இடைக்காலத்தில் அவ்விடத்தினை கடவுளர்கள் பெற்றனர்.  பக்தி இலக்கியங்கள் அரசுருவாக்கத்தில் பெருநூலாகப் பயன்பட்டன.  திருவாசகத்தில் மக்களிசை ஏற்றப்பட்டன.  பிற பக்தி இலக்கியங்களுக்கும் இது பொருந்தும்.  கடவுள்காதல் (Bridal mysticism என்ற கோட்பாடு தமிழ்நாட்டின் இளைஞர், இளைஞிகளுக்கு உளவியல்ரீதியான ஒரு பெருமூச்சினை release செய்தது. கடவுளர்கள் தாயாக, தந்தையாக, காதலனாக, தோழனாக என்ற பலநிலைகளில் உறவாகும்போது  ஒரு பொதுவழிபாட்டு நிலை அரங்கேறியது.  மனத்தளவில் தொண்டர்களுக்கும் கடவுளர்களுக்குமான இடைவேலி (barricade) உடைந்தது.  ஆனால், மன்னர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி (distance) விரிந்தது. மேற்சொல்லப்பட்ட கருத்துகள் இங்கு பட்டியலில் தரப்பட்டுள்ள பேராசிரியர் அர.சம்பகலக்‌ஷ்மி அவர்களின் ஆய்வுகளைக் கற்றதன் விளைவாகும்.  இச்செய்திகளை வரலாற்று மாணவர்கள் சார்பில் அவருக்குப் படைப்பது சால்பு.

Research works by Professor R.Champakalakshmi

1969,’An Unnoticed Jain Cavern near Madurantakam’ Journal of the Madras University, Vol.XLI,Nos 1 and 2, January-July,pp.111-113.

1973,’New Light on the Cola Frescoes of Tanjore’ Journal of Indian History, Golden Jubilee Njumber,1973,pp.349-60.

1975-76,’Archaeology and Tamil Literary Tradition, ’in Puratattva, No.8

1978, “Religious Conflict in Tamil Nadu: A Re-appraisal of Epigraphic Evidence’; Journal of the Epigraphic Society of India,Vol.5,1978.

1981, Vaisnava Iconography in Tamil Country, New Delhi.

1986, ‘Urbanisation in South India: The Role of Ideology and Polity’ Presidential Address, Ancient India Section, Indian History Congress, Sri Nagar.

1986,’Urbanization in Early Medieval Tamil Nadu’ in S.Bhattacharya and Romila Thapar (eds), Situating Indian History: Essays for Sarvapalli Gopal, New Delhi, OUP.

1990,’The Sovereignty of the Divine: The Vaishnava Pantheon and the Temporal Power in South India; in .V.Srinivasa Murthy, B.Surendara Rao, Kesavan Veluthat and S.A.Bari (eds), Essays in Indian History and Culture, Felicitation Volume in Honour of Professor B.Sheik Ali, New Delhi, Mittal Publication,pp.49-66.

1996, Trade, Ideology and Urbanization: South India 300 BC-AD 1300, New Delhi, OUP.

1996,’From Devotion and Dissent  to Dominance: The Bhakthi of the Tamil Alvars and Nayanmars; in Tradition and ideology: Essays in Honour of Romila Thapar, New Delhi, OUP.

2000,’Iconographic Programme and Political Imagery in Early Medieval Tamilagam: The Rajameheswara and the Rajarajaeswara in History of Science and Culture in Indian Civilization, D.P.Chattopadhyaya (general ed), Vol.VI,Part 3, Indian Art Forms Concerns and Development in Historical Perspective, B.N.Goswami (ed), Dew Delhi, Munshiram Manoharlal,pp.217-40.

2000,’Reappraisal if a Brahmanical Institution: The Brahmadeya and its Ramifications in Early Medieval South India; in  Kenneth Ra.Hall (ed) Structure  and Society in Early South India, Essays in Honour of Noboru Karasahima, New Delhi,OUP.pp.59-84.

2008,’From Natural Caverns to Rock-cut and Structural Temples: The Changing Context of the Jain Religious Tradition in Tamil Nadu’ in Airavati, Felicitation Volume in Honour of Iravatham Mahadevan, Chennai:Varalaru, pp.13-36.

- கி.இரா.சங்கரன்

Pin It