அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்

aiyyampalayam veerappanஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாணவர்களோடு நின்றுவிடவில்லை. அனைத்துத் தரப்பினரும் மொழிப் போரில் பங்கேற்றனர். ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

மதுரையில் பேராசிரியர் சி.இலக்குவனார் கைதானார். நெல்லையில் பேராசிரியர் கு. அரணாசலக் கவுண்டர் கைதானார். ஆசிரியர் வீரப்பன் தமிழுக்காகத் தன்னையே தீயிட்டுச் சாம்பலானார்.

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வீரப்பன். குளித்தலை ப.உடையாம் பட்டியிலில் 1938இல் பிறந்த இவர்1955 இல் ஆசிரியர் ஆனார்.

தலைமையாசிரியரான இவர், மாணவர்கள் பங்கேற்கும் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றார். அரசின் அடக்கு முறையும் தமிழுணர்வாளர்களின் உயிரிழப்பும் ஆசிரியர் வீரப்பனைப் பதறவைத்தன.

‘இந்தியைத் திணிக்கும் முறைகேடான அரசின் கீழ், ஆசிரியராகப் பணியாற்றுவது முறையற்றது'

இப்படித் தீர்மானித்துக் கடிதம் எழுதிய வீரப்பன் 10.2.1965 ஆம் நாள் அரசக்குப் பதிவஞ்சலில் அதனை அனுப்பி வைத்தார். மறுநாள் (11.2.1965) வேட்டிகளை ஒன்றன்மேல் ஒன்றாக உடலில் சுற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். தன்னைக் காப்பாற்ற முனைந்தோரிடம் ஆசிரியர் வீரப்பன் கதறிக் கூறினார்.

"என்னைக் காப்பாற்ற வேண்டாம்
தமிழைக் காப்பாற்றுங்கள்".

வருவீரா அண்ணா!

"தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும் பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுக்கு காலத்திற்குள் நடைமுறைக்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது"

(தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பேசியபோது நிறைவேற்றிய தீர்மானம்).

இந்தியைத் திணிக்கும் எதுவும் வேண்டாம்!

"என்.சி.சியில் இந்தி ஆணைச் சொற்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் இந்தி மறைமுகமாகவும் திணிக்கப்படுவதால் - இந்திச் சொற்களை நீக்க வேண்டுமென்றும் அப்படி நீக்காவிட்டால் என்.சி.சி அணிகளைக் கலைத்துவிட வேண்டுமென்றும் சொல்கிறோம்".

(தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பேசியபோது நிறைவேற்றிய தீர்மானம்).

- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(தொடரும்...)

Pin It