thol thirumaஇந்து பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக தொல்.திருமாவளவன் மீது பொய்யான குற்றச் சாட்டுகளைச் சுமத்தி, அதனடிப்படையில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு, கீழே கையொப்பம் இட்டுள்ள நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். இந்தச் சூழலில் மனுஸ்மிருதி குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்களை வரவேற்கிறோம்; அவற்றை நாங்கள் உறுதி செய்கிறோம்.

பெண்கள் உரிமைகளுக்காக தனிநபர்களாகவும் அமைப்புகளாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாங்கள், மனுஸ்மிருதி குறித்த அவரது விமர்சனத்தை ஆதரித்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிடுகிறோம்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூக இயக்கங்களின் கடுமையான விமர்சனத்திற்கு மனுஸ்மிருதி உள்ளானது. சாதி எதிர்ப்பு - சனநாயக உரிமைக்கான இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்ட ஜோதிராவ் பூலே, அயோத்திததாச பண்டிதர், எம்.சி. ராசா, ஈ.வே.ரா. பெரியார், அண்ணல் அம்பேத்கர், தர்மானந்தா கோசாம்பி போன்ற பல சிந்தனையாளர்கள் இதில் அடங்குவர்.

இதே போல பெண்கள் இயக்கங்கள் இந்த நாட்டில் உருவானதிலிருந்து பெண்களும் மனுஸ்மிருதியை எதிர்க்கும் பிரச்சாரத்தில் முன்னணியில் நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்களையும் இந்த நாட்டின் பெருவாரியான உழைக்கும் மக்களான சூத்திரர்களையும் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்திய மனுநூலைக் கடுமையாக இவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

மனுஸ்மிருதி, குறிப்பாக அதன் ஒன்பதாவது அத்தியாயம் சமரசமின்றி வலுவாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பெண்கள் மீது துளியளவும் மரியாதை இல்லாதவராக அந்நூலின் ஆசிரியர் இருந்துள்ளார் என்று அதைப் படிக்கும் போது தெளிவாகிறது. “பெண்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்லர்; பலரோடு பாலுறவு கொள்ளக்கூடியவர்கள்; எந்த மனிதரோடும் செல்லக்கூடியவர்கள்; பெண்களின் இயல்பு மிகவும் இழிவானது; எனவே அவர்கள் சாஸ்திரங்களைத் தொடக்கூடாது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய தந்தையர், கணவன்மார், மகன்களால் எப்போதுமே கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவர்கள்” என்றெல்லாம் இந்த அத்தியாயம் பெண்களை மிகவும் இழிவாகக் குறிப்பிடுகிறது.

மனுநூலை இந்து சமயத் திருநூலாகப் பார்க்கின்றவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களை புகழ்கின்ற ஒரு சில மேற்கோள்களை மட்டும் குறிப்பிட்டு, அது இன்றியமையாதது எனப் புகழ்வது வழமையாக உள்ளது. ஆனால் இரு பிறப்பாளர்களான பிராமணப் பெண்களை மட்டுமே மனுஸ்மிருதி புகழ்வதை, இந்த நூலை படிக்கும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

எனவே உயர்சாதி பெண்கள் மட்டுமே நல்ல மனைவியராகவோ, தாய்மாராகவோ இருக்க முடியும் என்ற மோசமான சாதிய கட்டமைப்பைத் தக்கவைப்பதற்கான நிலையிலிருந்து இதனை உணர்ந்து கொள்ளலாம்.

பெண்களையும், சூத்திரர்கள் என்று சொல்லப்படுவோரையும் மனுஸ்மிருதி மிக இழிவாகப் பார்ப்பதை அப்போதிலிருந்தே பல இந்து பெண்களும், இந்துக்களாக பிறந்து பின்னர் நாத்திகர்களாக - கடவுள் மறுப்பாளர்களாக மாறியவர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இந்திய அரசமைப்பு நிர்ணய சபையில் டாக்டா் அம்பேத்கர் பேசும் போதும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இந்திய அரசமைப்பின் மதிப்பீடுகளுக்கு எதிராக மனுஸ்மிருதி எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நூலை விமர்சிப்பது பெண்களை இழிவுபடுத்துவதாக சில இந்துக்கள் விவாதம் செய்வது வியப்பாக இருக்கிறது. தாங்கள் மிகவும் நேசிப்பதாகக் கருதும் சமயத்தின் வளர்ச்சிக்கு இது போன்ற நூல்கள் நிச்சயமாக பயன்படாது.

எனவே மனுஸ்மிருதியை விமர்சிக்கும் முயற்சிகளை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். மனுஸ்மிருதியை எரிக்கும் போராட்டம் போன்றவை சாதி எதிர்ப்பு போராட்டங்களின் நியாயமான ஒரு பகுதியாக அமையும் என்று கருதுறோம்.

· முனைவர். வே.வசந்திதேவி, முன்னாள் தலைவர், தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம்

· திருமிகு. வ.கீதா, பெண்ணிய வரலாற்றாய்வாளர், எழுத்தாளர்

· அனைத்திந்திய சனநாயக மாதர் சங்கம் - தமிழ்நாடு

· அனைத்திந்திய மாதர் சம்மேளனம் - தமிழ்நாடு

· பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு

· பெண் தொழிலாளர்கள் சங்கம்

· மனிதி

· சுய ஆட்சி இயக்கம் - தமிழ்நாடு

· பேரா. கல்பனா கண்ணபிரான், இயக்குனர், சமூக மேம்பாட்டு கவுன்சில், ஐதராபாத்

· முனைவர். A.D.ரேவதி, உதவிப் பேராசிரியர், தத்துவ இயல் துறை, பச்சையப்பா கல்லூரி, சென்னை

· திருமிகு. கிறிஸ்டினா சாமி, தேசிய துணைத் தலைவர், சுய ஆட்சி இந்தியா

· வழக்கறிஞர். லூசியாள், உழைக்கும் பெண்கள் இயக்கம்

· பேரா. N.உமா மகேஸ்வரி, உதவிப் பேராசிரியர், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை

· திருமிகு. ஆரோக்கிய மேரி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம்

· திருமிகு. கவிதா முரளிதரன், பத்திரிகையாளர்

· வழக்கறிஞர். செல்வ கோமதி, சோக்கோ அறக்கட்டளை

· திருமிகு. சிந்தியா திபேன், பெண்ணிய செயல்பாட்டாளர், மதுரை

· பேரா. அனிதா திபேன், பெண்ணிய செயல்பாட்டாளர், மதுரை

· திருமிகு. அனுஷா ஹரிகரன், ஆய்வாளர், சென்னை

· திருமிகு. அர்ச்சனா சேகர், பெண்ணிய செயல்பாட்டாளர், சென்னை

· திருமிகு. காமேஸ்வரி, பெண்கள் இணைப்புக் குழு

· திருமிகு. சௌமியா உமா, கல்வியாளர்,

· திருமிகு. ஜோசபின் ஜோசப், சமூக ஆய்வாளர், சென்னை

Pin It