ஒரு பாலியல் மாஃபியா கூட்டத்தின் இலை, தழைகள் சிக்கியுள்ளன. இன்னும் கிளைகளைப் பற்றித்தெரியவில்லை. வேர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகள் என்ற பிரச்சனையில் மட்டுமல்ல; நாட்டில் நடக்கும் எந்தப் பாலியல் வன்கொடுமை களிலும் உண்மைக் குற்றவாளிகளுக்கு எந்தத் தண்டனையும் கிடைத்ததே இல்லை. அந்த உண்மைக் குற்றவாளிகளுக்கு, தாங்கள் தான் இந்தக் குற்றங்களுக்குக் காரணம் என்ற சிந்தனையே வரவில்லை.
இதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முயற்சிக்கலாம். ஆனால், இந்த உண்மைக் குற்றவாளிகள், தாங்கள் உருவாக்கிய சில அம்புகளையே “குற்றவாளிகள்” என்று பொது வெளியில் அடையாளப் படுத்துவதும், அந்த அம்புகளைக் கைது செய்யுங்கள் என்றும், அவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் போராடிக் கொண்டும் இருப்பதைத் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பாலியல் வன்கொடுமை என்றால் ஆடைகளைக் கிழித்து ஓட விட வேண்டும், அய்யோ...அம்மா...என அலற வேண்டும். கதற...கதற...என்று டைட்டில் போடும் வகையில் ஏதாவது ஒரு காட்சி கிடைக்க வேண்டும். ஒரு பெண்ணை, ஒருவன் அல்ல...பத்துப்பேராவது வன்புணர்வு செய்திருக்க வேண்டும். அந்த நேரத்திலேயே அவள் அகால மரணம் அடைய வேண்டும், வன்புணர்வை முடித்துவிட்டு உயிரோடு அவளைப் புதைத்துவிட வேண்டும்....
இப்படியெல்லாம் நடந்தால் தான் நாம் பொங்கி எழுவோம். அப்போது தான் நமக்குள் இருக்கும் மனிதநேயம் பீறிட்டு எழும். இவற்றுக் கெல்லாம் முன்னர் நடக்கக்கூடிய, ஆண்களின் ஆபாசப் பார்வைகள், சீண்டல்கள், உரசல்கள், முயற்சிகள், அவற்றுக்குக் காரணமான நமது ஆண் குழந்தை வளர்ப்பு, இந்துச் சமுதாயத்தின் ஆணாதிக்க வாய்ப்புகள், பொதுப்புத்திகள் போன்ற எதைப் பற்றியும் எப்போதும் நாம் சிந்திக்க மாட்டோம்.
இரத்தம் சொட்டச் சொட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்தால், சம்பந்தப்பட்டவர் களைத் தூக்கிலிடு, அறுத்து எறி, சி.பி.ஐ விசாரணை நடத்து என்று இரண்டு நாள் பேசிவிட்டு, பெண்களை அடக்க ஒடுக்கமாய் வளர்த்தெடுக்கப் போய்விடுவோம். நம் வீட்டு ஆண்களை ஊர் மேய...ஆம் மாடுகள் தீனிகளைப் பார்ப்பது போலத்தான் நமது ஆண்கள், பெண் இனத்தைப் பார்க்கின்றனர். அப்படித் தான் நாம் வளர்த்து மேய விடுகிறோம்.
இந்த வழக்கில் இதுவரை சிக்கியுள்ள குற்றவாளிகள் அனைவரும் ஒரே ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தானா? பா.ஜ.க. போன்ற மதவாதக் கட்சிகள் எவற்றுக்கும் இதில் எந்தத் தொடர்பும் இல்லையா? அரசியலில் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு இதில் தொடர்பு இல்லையா? பொள்ளாச்சியில் உள்ள காவல்துறை, அதில் பல பிரிவுகளாக உள்ள உளவுத் துறைகள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், நீதித்துறை, பெருவணிகர்கள் என எவருக்குமே இதுபற்றித் தெரியவில்லை என்பது உண்மையாக இருக்குமா? என்பவை போன்ற கேள்விகள் எழவேயில்லை.
அ.இ.அ.தி.மு.க வை ‘இம்ப்பொடெண்ட்’ (Impotent) என ஆணாதிக்கத் திமிரோடு திட்டித் தீர்த்த பார்ப்பன குருமூர்த்தி அவர்கள், பொள்ளாச்சி பிரச்சனையில் தலையிடுவது ஏன்? அ.இ.அ.தி.மு.க.வைக் காப்பாற்றத் குருமூர்த்திகள் துடிப்பது ஏன்? குருமூர்த்தியின் தலையீட்டைக் கூட திராவிடர் கழகம் தான் பேசியது. தமிழ் நாட்டின் புலனாய்வு இதழ்கள், இணையதள ஏடுகள் எதுவுமே இந்தக் காவித் தொடர்புகள் பற்றி எழுதாதது ஏன்?
“பொள்ளாச்சி: மாணவிகளின் புதிய செக்ஸ் வீடியோ” இது மார்ச் 12. 2019 அன்று ‘மாலை மலர்’ என்ற நாளேட்டில் வந்த தலைப்புச் செய்தி. இந்த மாலை மலர் என்ற ஒரு ஏடு தான் இப்படி எழுதியது. மற்ற ஊடகங்கள் இதில் நேர்மையானவை என்று கூறமுடியாது. இந்தப் பிரச்சனையில் இந்த ஊடகம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இதுவரை நடந்த பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்கள் குறித்த எல்லாச் செய்திகளையும் திருப்பிப் பார்த்தால் இதுபோல பல ஊடக நிறுவனங் களின் உண்மை முகம் தெரிய வரும். ஊடகங்களைக் குற்றவாளிகள் என்று கூற வரவில்லை. ஊடகங்களும் பொறுப்பில்லாமல் இருக்கின்றன என்று தான் கூறுகிறோம்.
மாலைமலரின் தலைப்புக்காக பலரும் மாலைமலர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட தமிழர்கள், அதே “பொள்ளாச்சி செக்ஸ் வீடியோ” என்ற பெயரில் இணையதளங்களில் மிகத் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். இப்படிப்பட்ட சமுதாயத்திலிருந்து அப்படிப் பட்ட தலைப்புகள் தானே வரும்? மாலை மலரைக் கண்டிப்பதற்கு முன்பு, இந்த தேடுதல் வேட்டை நடத்திய பொதுச் சமூகத்தை என்ன செய்யப் போகிறோம்?
இந்த வழக்குக்குத் தொடர்புடைய கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் பாண்டிய ராஜன் அவர்கள் சமூகப் பொறுப்போ, சட்டப் பொறுப்போ எதுவும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டு, புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் வெளிவராமல் தடுத்தார்.
அரசாங்கமோ, சிக்கியவர்கள் மீது அவசர அவசரமாகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தது. சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டது. இதை அரசாங்கமே தானாக முடிவெடுத்துச் செயல்பட்டதா? முகநூல் தொடங்கி அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் வரை எழுந்த கோரிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டதா? என்று புரியவில்லை. இப்படி, இந்த நாட்டின் சராசரி மக்கள் தொடங்கி, அரசு வரை குற்றவாளிகள் என யார் யாரையோ அடையாளம் காட்டிக் கொண்டு, தங்களது குற்றங்களை மறைத்துக் கொண்டனர்.
ஆண் குழந்தைகளை ஆம்பளத்தானமாக வளர்க்கும் வீடுகள், பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கும், மணப்பெண் தகுதிக்குமாக வளர்க்கும் வீடுகள், பெண்களை அலங்காரப் பொம்மைகளாகவும், சுகமளிக்கும் கருவியாகவும் கருதும் ஆண்கள், பெண்கள் சுயமாக எந்த முடிவையும் எடுக்க அனுமதிக்காத ஆண்கள், ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே பெண்கள் என்ற எண்ணத்தோடு வாழும் ஆண்கள், குடும்பம் தொடர்பான எந்த முடிவுகளையும் பெண்களிடம் விவாதிக்காத ஆண்கள்,
ஆண் - பெண் இருபால் குழந்தைகளையும் அருகருகே அமரக்கூட விடாமல் இடை வெளியை அதிகப்படுத்திய பள்ளிகள், ஆண் - பெண் மாணவர்கள் பேசிக் கொள்ளக்கூட அனுமதிக்காத கல்லூரிகள், அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை ஒழுக்கம் என்று கருதி, அது போன்ற கல்லூரிகளைத் தேடிச் செல்லும் பெற்றோர், பாலியல் கல்வியை வழங்காத அரசுகள்,
ஆணாதிக்கப் பண்பாடுகளை விதைக்கும் கடவுளர் கதைகள், இந்துமதப் பண்டிகைகள், தமிழர் பண்பாட்டு அடையாளமான ஆபாச உடைகளான வேட்டி, சேலை, தமிழர்களின் ஆணாதிக்கக் காட்டுமிராண்டிப் பண்பாடான ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல், ரேக்ளா, அந்தக் காட்டுமிராண்டி ஆணாதிக்க விளையாட்டுகளுக்காகப் போராடும் மக்கள், அப்படிப்பட்ட மக்கள்கூட்டத்திலிருந்து ஆள்பிடிக்கச் சென்ற இயக்கங்கள்,
விரும்பினாலும் வெறுத்தாலும் திருமணம் எனும் அமைப்பைக் கட்டாயம் ஏற்றே ஆகவேண்டும்; ஒரு ஆணைச் சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிலைக்குப் பெண்ணை மிரட்டி வைத்துள்ள சமுதாயம், குடும்பம் எனும் ஆணாதிக்கப் பயிற்சி நிறுவனம், இந்த எல்லாவற்றையும் கட்டிக் காக்கும் இந்து மத வேதங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் என ஒட்டு மொத்த சமுதாயமும் பொள்ளாச்சிக் குற்றங்களுக்கு முதன்மையான குற்றவாளிகள் தான்.
சமுதாயத்தின் ஆணாதிக்கப் பொதுப்புத்தியையும் - ஆணாதிக்க மனநிலையையும், பெண்களிடம் உள்ள அடிமைத்தனங்களுக்கு ஆதரவான மனநிலையையும் அழிப்பதற்கான தொலை நோக்குத் திட்டங்களே இத்தகைய வன்கொடுமைகளுக்குத் தீர்வாக இருக்கும். இதை ஒரு குறிப்பிட்ட சில தலைவர்களாலோ, தொண்டு நிறுவனங்களாலோ, புரட்சிகர இயக்கங்களாலோ, அரசாங்கத்தாலோ கூடத் தனித்துச் சாதிக்க முடியாது. அனைத்தும் ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் தேவை.
பாலினச் சமத்துவத்திற்காக, ஒவ்வொரு முற்போக்கு அமைப்பும் தனியாக, பயிற்சி பெற்ற “பாலின சமத்துவ அணிகளை” உருவாக்க வேண்டும். அவர்களை வீடு, வீடாக அனுப்ப வேண்டும். பள்ளி - கல்லூரி விடுதிகளுக்கு அனுப்ப வேண்டும். அப்படிப்பட்ட திறன்வாய்ந்த தோழர்களாலும், திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைந்த, தொலைநோக்குத் திட்டங்களாலும் மட்டுமே பாலின சமத்துவம் மலரும். பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.