இரண்டாம் உலக போரின் போது, 1942 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு அனுப்பிய கிரிப்ஸ் தூதுக்குழுவை விமர்சிக்கும் வண்ணம் 'திவாலான வங்கியினால் பின் தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலை' என்றார் மகாத்மா காந்தி. காந்தியின் விமர்சனம், ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட திருத்த மசோதாவாகிய, அரியவகை ஏழைகளுக்கான 10% EWS இட ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும்.

'இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் தான் இருக்க வேண்டும்' என்ற RSS அமைப்பின் குறிக்கோளை இந்த சட்டத் திருத்தம் வெளிப்படையாக ஆதரிக்கிறது. இந்த அளவுகோல், பொருளாதாரம் பற்றிய அறியாமை மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோளான சமூக நீதியை எதிரானது. உலகக் கண்ணோட்டத்தில் வறுமை என்பது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழக் கூடியது. துரதிருஷ்டவசமாகவோ, எதேச்சையாகவோ, பிறப்பாலோ நிகழக் கூடியது. அதில் தனி மனிதர்களின் பங்கு ஒன்றுமில்லை.

மேலே குறிப்பிட்ட வறுமையை பற்றிய உலகப் பார்வை ஒரு குப்பைக் குவியல். அடிப்படையில், வறுமை பல காரணங்களால் உருவாகக் கூடியது. இந்தியாவை பொறுத்த வரை அது ஜாதியாக இருக்கிறது. இந்தியாவில் வறுமை என்பது ஜாதிய அடிப்படையில் உரிமைகளை மறுக்கும் கட்டமைப்பின் விளைவு. உச்ச நீதிமன்ற நீதியரசர் ஓ சின்னப்ப ரெட்டி ஒருமுறை கூறியதை போல, இட ஒதுக்கீடு என்பது உதவியோ கருணையோ அல்ல. மாறாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை கொடுக்கும் காப்பீட்டுத் திட்டமாகும். இட ஒதுக்கீடு பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் மாற்றப்படும் போதே அது உதவி என்றாகிறது. இட ஒதுக்கீட்டிற்கும் சாதி எனும் சமூக காரணிக்கும் இருக்கும் தொடர்பை உடைப்பதன் மூலம், மோடி அரசு இட ஒதுக்கீடு என்பது அரசு போடும் பிச்சை என்றும் அது அரசியலமைப்பு சாசனம் வலியுறுத்துவதை போல சமத்துவத்திற்கானது அல்ல என்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

supreme court 255ஜனவரி 8 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பில் பொதிந்துள்ள, எப்போதும் மாறக்கூடாத அடிப்படை சமத்துவக் கோட்பாட்டின் மீதான நேரடி தாக்குதலாகும். தற்காலிகமான காரணிகளான குடும்ப வருமானம், ஏழ்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, சம வாய்ப்பை புறக்கணிக்கிறது இந்த 10% EWS இட ஒதுக்கீடு. ஓர் இரவில் மாறக் கூடிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, ஒரே சமூக நிலையில் இருப்பவர்களை, அந்தஸ்தில் சமமற்றவர்களாக காட்டுகிறது இந்த இட ஒதுக்கீடு.

இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பை புரட்டி போடும் EWS இட ஒதுக்கீடு

இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் கல்வி நிறுவனச் சேர்க்கையிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதை முறியடிப்பதற்காகவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்று, இந்திரா சஹானி வழக்கில், இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இரண்டு, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை முறியடிக்க நினைத்த முதல் முயற்சி இதுவல்ல. 1995 ஆம் ஆண்டு இயற்றப் பட்ட 77 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்ற வாதத்தை முறியடித்தது. 2000 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 81 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், இடஒதுக்கீட்டு பிரிவில் உள்ள நிரப்பப்படாத காலி இடங்களை அடுத்த வருடத்திற்கு கொண்டு போக வேண்டுமானால், அது 50 விழுக்காட்டைத் தாண்ட கூடாது என்ற தீர்ப்பை மாற்றி அமைத்தது. இந்த இரண்டும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானதல்ல. இருப்பினும், இந்த சட்டத் திருத்தங்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

எம் நாகராஜ் வழக்கில், 77 ஆவது சட்டத் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட 16(4A) பிரிவு அரசியமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்த வாதத்தை தள்ளுபடி செய்தது. ஆனால் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை அமுல் படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதித்தது.

10% EWS இட ஒதுக்கீடு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிறது என்ற அடிப்படையில் அதை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியுமா? எம் நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பின் அனுபவம் வேறானதாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, ஒரு சட்டத் திருத்தம் மூலம் பாராளுமன்றம் மாற்றி அமைக்கலாம். இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்புகளாகிய பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு தடை, 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு என்பன போன்றவை நீதித்துறையின் தலையீடு தானே தவிர, அரசியலமைப்பில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உச்சவரம்பு பற்றிய சில குறிப்புகள் அரசியலமைப்பின் ஒருசில இடங்களில் இருந்தாலும், கல்விக்கான இட ஒதுக்கீட்டில் 50 விழுக்காடு உச்சவரம்பு பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை.

50% உச்சவரம்பை மீற முடியுமா?

50% உச்ச வரம்பை தமிழ்நாடு அரசு ஏற்கனவே மீறி இருக்கிறது. அதன் செல்லுபடித்தன்மை குறித்து உச்சநீதிமன்றம் இதுவரை எவ்வித முடிவெடுக்கவில்லை. தமிழ் நாடு அரசு இயற்றிய 69% இட ஒதுக்கீடுச் சட்டத் திருத்தம் முழுக்க முழுக்க சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கானதாக இருந்தாலும் 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பைத் தாண்டும் எந்த சட்டம் குறித்தும் நீதிமன்றமே முடிவெடுக்கும்.

50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு கோட்பாட்டை பரிசீலனை செய்வதும் நல்லது தான். 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு சமூக நீதிக்கு தடையாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளுக்கு தடையாகவே இருக்கிறது. ஆனால் இந்த 50% உச்ச வரமபை மீறும் புதிய சட்டத் திருத்தம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது தான் பிரச்சனையே. அது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதாக இருக்கிறது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு

அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாம் திருத்தத்தின் போதே பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுமானால், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய ஏழைகள், உயர்சாதி வகுப்பைச் சார்ந்த ஏழைகளுடன் போட்டி போட நேரிடும். இது சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கிய ஏழைகளுக்கு தீங்கானதாகவே இருக்கும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு தவிர்க்கப்பட்டது. 10% EWS இட ஒதுக்கீடு வழங்குவதால் ஏற்கனவே இருக்கும் SC, ST, OBC இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சிலர் வாதிடலாம். அது, சரியன்று. ஏனெனில் பொருளார ரீதியான இட ஒதுக்கிடு என்பது சமத்துவத்தை மறுக்கும், நியாயமற்ற முறையில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை தாக்கும் முயற்சியாக பார்க்கப்பட வேண்டும்.

கல்வியிலும் வேலையிலும் இட ஒதுக்கீடு தருவதை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு பிரிவினரை விட மற்றொரு பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போன்றதாகும். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பாகுபாடு போல தோற்றமளிக்கும். ஆனால் வரலாற்று ரீதியாக, தலித்துகள், பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, ஏற்றத் தாழ்வுகளை குறிவைத்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் நிலைமையை ஆய்ந்து அதன் அடிப்படையில் தீர்வு காணும் முயற்சியாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் மூலமே சமத்துவம் நிலைநாட்டப்படுகிறது. மாறாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கற்பனாவாதம் இல்லை.

அடிக்கடி மாறும் தன்மை கொண்ட பொருளாதாரத்தை இட ஒதுக்கீட்டின் அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முடிவின் மூலம், யாருக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும், யாருக்கு தரக் கூடாது என்பதை அரசு அவ்வப்போது முடிவு செய்வதைப் போன்றதாகும். இந்த அதிகாரத்தை அரசுகள் எப்படி பயன்படுத்தினாலும் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்தை சிதைக்கும் வகையில் இருக்கும் என்பது உறுதி.

காலாவதியான காசோலை

இந்த இட ஒதுக்கீடு யாருக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டதோ, அவர்களுக்கு பயனளிக்க வேண்டுமெனில் தொலை தூரம் பயணிக்க வேண்டும். இதை செயல்படுத்த போவது ஒன்றிய, மாநில அரசுகள் தான். இந்த மசோதா சட்டம் ஆன பின்னர் , எதை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை அரசுகளே நிர்ணயிக்கும். களத்தில் அதன் பயனை காண்பதற்கு முன் பல சந்தேகங்களும், தெளிவின்மையும் வெளிப்படும்.

பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் சிதறிக்கொண்டிருக்கின்றன. மக்கள் இந்த அரசு மீது ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இவை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், இதுவும் ஒரு தேர்தல் வித்தை என குறைத்து மதிப்பிடுவது இயல்பு. ஆனால் இந்த தேர்தல் வித்தை, பாஜகவின் வெற்றி தோல்வியை தாண்டி பல விளைவுகளை ஏற்படுத்தும்.

நன்றி scroll.in (2019, ஜனவரி 8 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா

Pin It