கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அரசுப் பணி பதவி உயர்வில் SC, ST இட ஒதுக்கீடு (Reservation in Promotion) செல்லும் என நாடாளுமன்றம் முடிவெடுத்ததை செல்லும் என நாகராஜ் (2006) வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அத்தகைய இட ஒதுக்கீடுகளை ஒன்றிய, மாநில அரசுகள் வழங்குவதை சாத்தியமற்றதாக்கும் நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது. அதனைத் தொடர்ந்து, 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம், உச்சநீதிமன்றம் முதன்முறையாக பட்டியலின (SC), பழங்குடியின (ST) பிரிவினருக்கும் கிரிமீலேயர் (Creamy Layer) கருத்தாக்கம் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் ஜர்னெய்ல் சிங் வழக்கில் (Jarnail Singh v Lacchmi Narain Gupta 2018) தீர்ப்பளித்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமல்ல, பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் பொருளாதார அளவுகோல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் பொது எண்ணவோட்டமாக இருக்கிறது என்பதை இத்தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. குறிப்பாக பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்ட பிரிவுகளை 15(4), 16(4) கேள்விக்குள்ளாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார அளவுகோல் மேற்சொன்ன அரசிலமைப்புச் சட்டப் பிரிவுகளில் இல்லை.

அதன் தொடர்ச்சியாக. பிஜேபி அரசு இயற்றியுள்ள 10% EWS இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை 'சமூக நீதியின் வெற்றி' என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதை இங்கே பொருத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர், SC, ST பிரிவினருக்கான பணி உயர்வில் கிரிமி லேயர் என்பனவற்றைத் தொடர்ந்து, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு விழுந்த மூன்றாவது அடியாக அமைகிறது.Modi and Amit Shah நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சட்டத் திருத்தம் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேறி இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடும் குறைவான பிரதிநிதித்துவம் குறித்த எந்த சரியான தரவுகளும் இன்றி, EWS பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்படும் வகையில் இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் அமைந்துள்ள இச்சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுகிறது என்பதால் உச்ச நீதிமன்றம் இச்சட்டத் திருத்தை செல்லாது என அறிவிக்கும் என அரசியலமைப்புச் சட்ட வல்லுனர்கள் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறாக இருப்பினும், 10% EWS இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமாக மாறிவிடும் 

இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவம் என்னவெனில், ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலை எப்படி இருந்தாலும், அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, இந்திய சமுகத்தை பல தரப்பினருக்கும் பொதுவான ஒன்றாக மாற்றுவதே ஆகும். அதிகாரத்தை, வேலைவாய்ப்புகளை, கல்வியை அனைத்து தரப்புக்கும் பரவலாக்குவதே இட ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கமாகும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை (SC, ST, OBC) எதிர்ப்பவர்கள், 'இடஒதுக்கீட்டால் பயன் அடைந்தவர்களே மீண்டும் மீண்டும் பயனடைகிறார்கள். ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை' என்று வாதிடுகிறார்கள். இது முட்டாள்தனமான வாதமாகும். ஏனென்றால் தனித்தனி குடும்பங்கள் இணைந்து வர்க்கத்தை உருவாக்குவதில்லை. தனிக் குடும்பங்களை வர்க்கத்தோடு சமப்படுத்தும் அடிப்படையற்ற வாதத்தை மோடி அரசின் இந்த முடிவு உறுதிப்படுத்துகிறது.

ஒரு சாதியில் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிலையை கணக்கில் எடுக்காமல், அந்தச் சாதியின் ஒட்டுமொத்த மக்களின் சமூகப் பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் 16(4) அடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை இதற்கு முன் உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது, அந்த சாதியில் அல்லது பிரிவில் உள்ள சிலர் பொருளாதாரத்திலோ, கல்வியிலோ முன்னேறி இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அப்பிரிவினர் பின் தங்கி இருப்பதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16(4) எதிர்ப்பதில்லை. அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோடிகள் ஒருவருடைய பொருளாதார நிலை மாறினாலும், அவருக்கு ஏற்படும் ஜாதியப் பாகுபாடுகள் மாறாது என்று நம்பினார்கள். இன்றும் மணப்பெண், மணமகன் தேவை என வெளியிடப்படும் விளம்பரங்களில் SC, ST தவிர்த்து என்றும். சூத்திரர்களுக்கு கோவிலுக்குள் அனுமதியில்லை என்றும் அறிவிப்புகளைப் பார்க்கிறோம். அவை இன்றும் ஜாதியப் பாகுபாடுகள் எவ்வளவு தூரம் ஆழமாக நம் சமூகத்தில் ஊடுருவி இருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.

அண்மையில் இந்தியா டுடே (India Today) நடத்திய ரகசிய புலனாய்வில்,பல்வேறு கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் ஒரு தலித் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் கடவுள் சிலையைத் தொட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். தலித் மணமக்கள் கலந்துகொள்ளும் திருமண ஊர்வலத்தை எதிர்த்து நடக்கும் வன்முறைகள் உள்ளிட்ட பல வன்முறைகள் தலித் மக்கள் மீது நடத்தப்படுவதை இன்றும் பரவலாக காணமுடிகிறது. இருப்பினும் சமூக ஒடுக்குமுறைக்கு பின்தங்கிய பொருளாதார நிலை தான் காரணம் என்று தற்பொழுது பரவிவரும் கருத்துப் பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை.

தற்பொழுது இயற்றப்பட்டுள்ள 10% EWS இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் இடஒதுக்கீட்டை வறுமை ஒழிப்புத் திட்டமாக மாற்றும் முயற்சியாக உள்ளது. இந்த முயற்சி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்துவதற்கு கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டு தத்துவத்திற்கு எதிரானது.

உச்சநீதிமன்றத்தின் நிராகரிப்பு பதட்டத்தை ஏற்படுத்தலாம்

மோடி ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார் என்று அவருக்கு வாக்களிக்கும் உயர்சாதியினர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 103 ஆவது சட்டத்திருத்ததை உயர்சாதியினர் கொண்டாடுகின்றனர். ஆனால் உச்சநீதிமன்றம் 49.5% உச்ச வரம்பை காரணம் காட்டியோ அல்லது பொருளாதார இட ஒதுக்கீட்டை நிறுவதற்கான சரியான தரவுகள் இல்லை என்பதை காரணம் காட்டியோ இதற்கு முன் வந்த தீர்ப்புகளை குறிப்பிட்டு நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஒரு வேளை அப்படி நிராகரித்தால், உச்சநீதிமன்றத்தின் மேல் உயர்சாதியினருக்கு எழும் கோபத்தை பிஜேபி தனக்கு சாதகமாய் மிகச் சரியாக அறுவடை செய்யும். இதற்கு முன் உச்சநீதிமன்றம் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு சொல்லாமல் காலம் தாழ்த்திய போதும், பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதித்த போதும் அதை பாஜக தனக்கு சாதகமாக அரசியலாக்கியது போலவே EWS வழக்கு தீர்ப்பையும் தனக்கு சாதகமான வகையில் அரசியலாக்கும்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் காலம் தாழ்த்திய உச்ச நீதிமன்றத்திற்கு கடும் எதிர்ப்பை சங்கப்பரிவாரங்கள் தெரிவித்தன. ராம பக்தர்களை உச்சநீதிமன்றத்திற்கு எதிராக திரும்புவதில் பிஜேபி எந்தக் கோணத்திலும் பின்தங்கவில்லை. உச்ச நீதிமன்றம் இச்சட்டத்திருத்தத்தை நிராகரித்தால், ஆர்எஸ்எஸ் பிஜேபியினர் உயர்சாதியினரை நீதிமன்றத்திற்கு எதிராக திரட்டுவார்கள். பாரிப பகுஜன் மஹாசங்கத்தைச் (Bharipa Bahujan Mahasangh ) சேர்ந்த பிரகாஷ் அம்பேத்கர் 'மோடி கொடுத்திருக்கும் கற்பனாவாத நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் சிதைக்குமேயானால் உயர்சாதியினர் ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிராக திரும்புவார்கள். ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவது தான் ஆர்எஸ்எஸ்ஸின் நீண்ட கால கனவு' என மிகச் சரியாக எச்சரித்துள்ளார். 10% EWS இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தாலும் நிராகரித்தாலும் நடக்கப்போவது அதுதான்.

EWS இட ஒதுக்கீடு SC, ST இட ஒதுக்கீட்டை ஒழிக்கும்

மோடியும் பிஜேபியும் பல சந்தர்ப்பங்களில் SC, ST, OBC இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். 103 வது சட்டத்திருத்தத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் பட்சத்தில், சமூக நீதி எனும் தேன்கூட்டில் கைவைப்பதற்கு சமம். கூடிய விரைவில், உயர்சாதிகளுக்கான EWS இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழும் அல்லது SC, ST, OBC இட ஒதுக்கீட்டில் பொருளாதார உச்ச வரம்பை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

EWS இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார உச்ச வரம்பு இருப்பதால், உயர்சாதியினர் எப்படி பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கும், அதேவேளையில் பொருளாதார உச்ச வரம்பு இல்லாத SC, ST, OBC பிரிவினருடன் போட்டி போட முடியும் என்ற கேள்வி எழும். இதுபோன்ற வரையறையற்ற வழக்குகள் தொடரப்பட்டு ஆரம்ப நிலை பணிகளிலும் கல்வித் துறைகளிலுமே கூட பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் வரலாம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை. உயர் சாதியினர் அதிகம் இருக்கும் நீதிமன்றம், கொஞ்சம் கொஞ்சமாக SC, ST, OBC இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் கருத்தை புகுத்த விரும்புவதை பார்க்கிறோம். அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 103 ஆவது சட்டத்திருத்தம் இதற்கு அஸ்திவாரமாய் அமையும். அதன்பிறகு, ஜாதி அல்லாமல் வெறும் பொருளாதார அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதனால் ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு என்னும் சமூக நீதிக்கு முடிவுரை எழுதப்படும்.

செப்டம்பர் 2015, RSS தலைவர் மோகன் பகவத் ஒரு குழுவை கூட்டி, அதில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு கொள்கையை மறுபரிசீலனை செய்யும் தங்களது நோக்கத்தை முன்வைத்தார். பிரதமர் மோடி, EWS சட்டத்திருத்தத்தின் மூலம், அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். தங்கள் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டோர் பொருளாதார அடிப்படையிலான 10% EWS இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். அதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் மேல் விழுந்த அடிக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறார்கள் என்பதே பொருள். 70 வருட இட ஒதுக்கீட்டிற்கு பிறகும் கூட இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. உயர்சாதியினரே அதிகமான பொதுத்துறையில் ஆதிக்கம் செலுத்திகிறார்கள்.

SC, ST பிரிவினருக்கான வேலை வாய்ப்புகளை பெருக்கவோ, நிரப்பப்படாத SC, ST, OBC பிரிவினருக்கான பணியிடங்களை நியாயமான முறையில் நிரப்பவோ எந்த வித புதிய சட்டத் திருத்ததையும் கொண்டு வராத மோடி அரசு, ஏற்கனவே அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் கோலோச்சும் உயர் சாதியினருக்கு சாதகமான EWS இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதற்கு திமுக, ஆர்ஜேடி தவிர்த்த எந்த எதிர்க்கட்சியும் போதுமான எதிர்ப்பை பதிவு செய்யாதது பெருஞ்சோகம். உச்சநீதிமன்றம் இந்த சட்டதிருத்தத்தை நிராகரித்தாலும், ஏற்றாலும், எது எப்படி இருந்தாலும், பிஜேபியும் ஆர்எஸ்ஸும் தங்கள் நீண்ட கால, குறுகிய கால நோக்கங்களை அடைந்து விட்டன. 

ரவிகிரண் ஷிண்டே

நன்றி The Wire இணையதளம் (2019, ஜனவரி 11 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி