நவம்பர் 7, 2022 திங்களன்று 3:2 என்ற பெரும்பான்மையுடன், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 10 EWS இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 103 வது திருத்தத்தை உறுதி செய்தது. ஏற்கனவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள சாதிகளைச் சேராத, பொருளாதார ரீதியாக நலிவடைந்த (EWS) பிரிவினருக்கு கல்வியிலும், பொது வேலை வாய்ப்புகளிலும் 10% வரை இட ஒதுக்கீடு தருவதற்கு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இச்சட்டத்திருத்தம் அதிகாரம் அளிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த 10% EWS இட ஒதுக்கீடு உயர் சாதியினருக்கு தனியாக வழங்கப்படுகிறது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, ஜே.பி. பரிதிவாலா ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பளித்தாலும் EWS இட ஒதுக்கீட்டை செல்லும் என்ற ஒற்றை நிலைப்பாட்டை எடுத்தனர். நீதிபதி ரவீந்திர பட் தனது மாறுபட்ட கருத்தில் திருத்தத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினார். இந்திய தலைமை நீதிபதி யு.யு. லலித் ரவீந்திர பட் தீர்ப்புடன் உடன்பட்டார். தனியாக தீர்ப்பளிக்கவில்லை. ஆகையால் 3:2 என்ற பெரும்பான்மையுடன் அரசியலமைப்புச் சட்டத்தின் 103 வது திருத்தம் உறுதி செய்யப்பட்டது.
EWS ஒதுக்கீடு சட்டத்திற்கு பின்வரும் அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. முதலாவதாக, பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையிலான வேறு வகையான திட்டங்களை நிராகரிக்க முடியாது என்ற போதிலும், இட ஒதுக்கீட்டை வடிவமைக்க ஒருபோதும் பொருளாதார அளவுகோல்களை பயன்படுத்த முடியாது. இட ஒதுக்கீடு, வரலாற்று அநீதியை சரிசெய்வதற்கான கருவி மட்டுமல்ல. வரலாற்று ரீதியாக அதிகாரத்தை, வேலைவாய்ப்புகளை அனுபவிக்காத குழுக்களுக்கு முறையான பிரதிநிதித்துவத்தையும் அதிகாரமளிக்கவும் பயன்படும் கருவி என்றும் வாதிடப்பட்டது.இரண்டாவதாக, EWS இட ஒதுக்கீட்டில் இருந்து வரலாற்று ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட SC, ST, OBC வகுப்பினரை விலக்குவதின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் பொதுப்பிரிவு (General Category) இடங்களில் 20 விழுக்காட்டை குறைப்பது, சமத்துவத்திற்கான மனசாட்சியற்ற உரிமை மீறலைக் குறிக்கிறது. SC, ST, OBC வகுப்பினருக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீடுகளை சலுகை (வேலையில்லாதவர்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியம் போல) என வகைப்படுத்துவது, வரலாற்று பாகுபாட்டை சரிசெய்யும் கருவியாக உள்ள இட ஒதுக்கீடு என்ற கோட்பாட்டிற்கு முரணானது என்று வாதிடப்பட்டது.
மூன்றாவதாக, இட ஒதுக்கீடு 50% உச்ச வரம்பை மீறக் கூடாது என இந்திரா சஹானி (1992) வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கொடுத்த தீர்ப்பை மீறும் வகையில், 10% EWS இட ஒதுக்கீடு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியும் வாதிடப்பட்டது.
மற்ற எதிர்வாதங்களில் நுணுக்கமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பான்மை தீர்ப்பிலிருந்து மாறுபட்ட தீர்ப்பளித்த நீதியரசர்கள் இரண்டாவதாக வைக்கப்படட வாதத்தை கையாண்டவிதம் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான கருத்தை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் .
மாறுபட்ட தீர்ப்பின் காரணங்கள்
சமத்துவக் கோட்பாடு அதன் கம்பீரமான உருவாக்கத்தில் அனைவருக்குமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இட ஒதுக்கீடுகளை செயல்படுத்தும் விதிகளும் பிரிவுகளும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் வளர்ப்பதற்கும் உதவுகின்றன. அதே வேளையில் அனைவருக்குமான பிரதிநிதித்துவம், பன்முகத்தன்மை, அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றையும் உறுதிப்படுத்துகின்றன. மாறாக, விலக்குதல் (exclusion) ஒரு அரசியலமைப்பு கோட்பாடாக இருக்கமுடியாது. மேலும் நமது அரசியலமைப்பு நெறிமுறைகளில் அதற்கு எந்த இடமும் இல்லை. எனவே, சமூக ரீதியாக பின்தங்கிய மக்களை ஒதுக்கி வைப்பது, சகோதரத்துவம், பாகுபாடு காட்டாமை, விலக்கப்படாமை ஆகிய அரசியலமைப்பு நெறிமுறைகளை சீரழிக்கிறது என்பதை இப்போது ஒப்புக் கொண்டாகவேண்டும்.
எவ்வாறாயினும், பெரும்பான்மையான தீர்ப்பு, ஒரு தவறான அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பிரிவில் உள்ள ஒதுக்கீட்டுப் இடங்களுக்கு போட்டியிடுவதில்லை என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் பொதுப் பிரிவு இடங்களில் இருந்து 10% வெட்டி, தனியே ஒதுக்கி, அதை அணுகத் தகுதியற்றவர்களாக தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை மாற்றினாலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்களுக்குக் கிடைக்கும் இடங்கள் குறையாது என்ற தவறான அனுமானத்தில்தான் 10% EWS இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.
SC, ST, OBC வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு வசதியில்லாத உயர் சாதியினருக்கு அநீதி இழைத்துவிட்டது என்ற பிற்போக்குத்தனமான கருத்தை ஆமோதித்து, பெரும்பான்மையான தீர்ப்பு உயர்சாதிக்கு மட்டுமான EWS இட ஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது. இந்த பெரும்பான்மைத் தீர்ப்பு இதுவரை அறியப்பட்டு வந்த அரசியலமைப்பின் சமத்துவம் பற்றிய புரிதலை தலைகீழாக்கும் செயலாகும்.
- பிரசன்னா எஸ். (டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். 103வது அரசியலமைப்புச் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்த மனுதாரர்களில் சிலருக்கு வழக்கறிஞராக வாதாடினார்.)
நன்றி: theindiacable.com (2022, நவம்பர் 9 இல் வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: சேகர் கோவிந்தசாமி