farmer protest71ஆம் ஆண்டுக் குடியரசு நாளைக் குடிமக்களின் உதிரத்தைப் பன்னீராய்த் தெளித்துக் கொண்டாடியிருக்கிறது இந்தியா!

தில்லி உழவர் போராட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தை வேறெப்படிச் சொல்ல முடியும்? கேட்டால், “போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள். அவர்கள் நடத்திய வன்முறையால்தான் காவல்துறை தாக்குதல் நடத்த வேண்டி வந்தது” என்கிறார்கள். 

காலங்காலமாக நாம் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன அதே பழைய பொய்! சென்னை சல்லிக்கட்டுப் போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என எல்லா மக்கள் போராட்டங்களின் பொழுதும் சொல்லப்பட்ட அதே... அதே... அதே... சாக்கு!

காந்திய வழிப் போராட்டங்களை ஒடுக்க இந்த காந்தி தேசம் வழக்கமாகக் கையாளும் சூழ்ச்சிதானே இது? கட்டுக் கோப்பாக நடக்கும் அறவழிப் போராட்டத்தில் வன்முறையாளர்களை ஊடுருவச் செய்து, சரியான நேரத்தில் அவர்களைக் கலவரம் செய்ய வைத்து, அவர்களை அடக்கும் சாக்கில் உண்மையான போராளிகளை அடித்து நொறுக்கிப் போராட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவது நம் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை.

அறவழிப் போராட்டங்களை ஒடுக்க இப்படி ஒரு வழி அன்றே வெள்ளைக்காரனுக்குத் தோன்றியிருந்தால் இன்று இந்தியன் எவனும் கோட்டையில் கொடியேற்றிக் கொண்டிருக்கவும் முடியாது; இவர்களிடம் நாம் அடிவாங்கிக் கொண்டிருக்கவும் தேவையிருக்காது! அமைதிப் போராட்டத்தை உருவாக்கிய இந்தியாதான் அதை அடக்குவது எப்படி என்பதையும் கண்டறிந்தது என்பது நம் தலைக்குனிவான பெருமை!

குடியரசு நாளை நெருக்கத்தில் வைத்துக் கொண்டு இவர்கள் போராட்டம் தொடங்கியபொழுதே தமிழர்களுக்குத் தெரியும், கடைசியில் இந்தப் போராட்டம் இப்படித்தான் முடித்து வைக்கப்படும் என்று. ஆனால் அதையும் மீறி நம்பிக்கையளிப்பதாக இருந்த ஒரே விதயம், இந்தப் போராட்டத்தின் அளவு!

உலக வரலாறே மிரளும் அளவில் ஒரேயடியாக ஒன்றரை கோடிப் பேர் திரண்டு நடத்திய பூமிப் பந்தின் பேரண்டப் பெரும் போராட்டம் நேற்று வரை நடைபெற்று வந்த தில்லி உழவர் போராட்டம்! இவ்வளவு பெரிய போராட்டத்தைச் சில ஆயிரம் காவல்துறையினரையோ துணைப்படையையோ வைத்துக் கொண்டு எப்படிக் கலைத்து விட முடியும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அரசு இயந்திரம் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்பது மீண்டும் அழுத்தம் திருத்தமாக இங்கே நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் இந்திய அரசு நமக்கு நடத்த விரும்பும் பாடம் ஒன்றே ஒன்றுதான் - மக்கள் போராட்டங்களின் மூலம் இனி இங்கு ஒரு புல்லைக் கூடப் பிடுங்க முடியாது என்பதுதான் அது!

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! இஃது ஒன்றும் பதினாறாம் லூயி காலமோ, சார் மன்னர் காலமோ, காந்தியடிகளின் காலமோ கூட இல்லை, மக்கள் புரட்சி செய்து ஆட்சியை மாற்றுவதற்கு. எப்பொழுது நாம் படைத்துறை அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் (militarial science & technology) அளவுக்கு மீறி வளர விட்டோமோ அப்பொழுதே மக்கள் திரளின் ஆற்றல் ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

ஆம்! மன்னராட்சிக் காலங்களில் மக்களிடமிருந்த ஆற்றல் கூட இன்றைய மக்களாட்சிக் காலத்தில் இல்லை. எவ்வளவு கசந்தாலும் இதுதான் உண்மை! நினைத்துப் பாருங்கள், நம்மிடம் என்ன இருக்கிறது?

நாம் அறவழியில் போராடினால் அவர்கள் தடிக்கம்புகளால் அடிக்கிறார்கள். நாம் கல்லும் கட்டையும் கொண்டு வந்தால் அவர்கள் துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளுகிறார்கள். நாம் துப்பாக்கி கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ளக் கண்ணீர்ப் புகைக் குண்டு முதல் அணுக்குண்டு வரை எல்லாமே அவர்களிடம் இருக்கின்றன. மக்களாகிய நம்மிடம் எதுவுமே கிடையாது.

இதனால்தான் ஈழம் போன்ற நாடுகளில் நடைபெற்ற வீரப் போராட்டங்கள் முதல் இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும் அமைதிப் போராட்டங்கள் வரை அனைத்தும் இறுதியில் தோல்வியையே தழுவுகின்றன.

எனவே அறவழியோ மறவழியோ எந்த வகையிலும் மக்கள் போராட்டங்களால் இனி இங்கு எதையுமே சாதித்து விட முடியாது என்பதை நாம் உணர்ந்தே தீர வேண்டும்! குறிப்பாக அரசியல் தலைவர்கள், போராளிகள் இதை உணர்ந்தாக வேண்டும்! அப்பொழுதுதான் மக்கள் போராட்டங்களுக்கு மாற்றாக இன்னொரு தீர்வுமுறையை நாம் வடிவமைக்க முடியும்.

உலகின் எல்லா நாடுகளிலும் மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆய்தவழியையே நாடியபொழுது காந்தியடிகள் மட்டும்தான் முதன்முதலாக அமைதி வழிப் போராட்டம் எனும் புதிய வடிவத்தை முன்வைத்தார். அதற்குக் காரணம், இந்திய மக்கள் எவ்வளவு பெரிய படையாகத் திரண்டு வந்தாலும் அனைவரையும் கொன்று குவிக்கும் அளவுக்குப் பெரும் ஆய்த வலிமை அன்றே இங்கிலாந்திடம் இருந்ததால்தான்.

ஆனால் அன்றைய ஆய்தங்களெல்லாம் வெறும் விளையாட்டுப் பொம்மைகள் எனச் சொல்லக்கூடிய அளவுக்குப் பன்மடங்குப் பேரழிவு ஆய்தங்கள் இன்று உலக நாடுகளிடம் - குறிப்பாக இந்தியாவிடம் - உள்ளன. அதே நேரம், எப்பேர்ப்பட்ட ஆய்தங்களையும் தோற்கடிக்கும் பேராய்தமாக காந்தியடிகள் முன்வைத்த அறவழிப் போராட்டத்தைக் காலி செய்யும் கலையிலும் இன்றைய இந்தியா திறன் வாய்ந்து விளங்குகிறது.

எனவே அன்று காந்தியடிகள் எப்படி ஆய்த வழிப் போராட்டத்துக்கு மாற்றாக அறவழிப் போராட்டம் என்று ஒரு புதிய தீர்வுமுறையை முன்வைத்தாரோ அதே போல் ஆய்த வழி - அறவழி ஆகிய இரு வகைப் போராட்டங்களும் எடுபடாத இன்றைய அரசியல் சூழலில் இவை இரண்டும் அல்லாத இன்னொரு புதிய தீர்வுமுறையை வடிவமைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!

இதைத்தான் வரலாற்றின் மாபெரும் அறப் போராட்டமான தில்லி உழவர் போராட்டத்தின் தோல்வி நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறது!

உணர்வோமா நாம்?

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It