சில வருடங்கள் முன் டெல்லி மாணவி வல்லுறவுக்கு உட்பட்டு மரணமடைந்த செய்தி தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, மாபெரும் கண்டனப் பேரணிகளால் மத்திய அரசு நீதிபதி வர்மா கமிஷனை அமைத்தது அதன் பரிந்துரைகளின்படி சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன.
ஆனால், மீண்டும் இதே போன்றதோர் சம்பவம் டெல்லியில் இப்போது அரங்கேறியுள்ளது. டெல்லி சங்கம் விகார் பகுதியை சேர்ந்த ரபியா ஷைஃபி (வயது 21) பெண் காவலர் ஆன இவர் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடலின் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தி, கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதே டெல்லியில் சென்ற மாதம் ஒன்பது வயது தலித் பெண் குழந்தை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் குழந்தையின் உடல் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம், உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரின் உடல் கடுமையாக தாக்கப்பட்டும் நாக்கு அறுக்கப்பட்டும் கை, கால்களின் எலும்பு உடைக்கப்பட்டும், முதுகெலும்பு சேதமடைந்தும் இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலே புதுதில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் மரணமடைந்தது இந்த தேசத்திற்கான அவமானம் என்பதை விவரமறிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.
ஏதோ, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது இந்தியாவில் மட்டும் ஏற்படுகின்ற பிராந்திய ரீதியிலான பிரச்சனையா உலகில் வேறு எங்கும் நடைபெறவில்லையா என்பதை போன்ற விண் விவாதங்களில் சிலர் ஈடுபடலாம்; இது சர்வதேச ரீதியிலான பிரச்சனை என்பதை மறுக்கவில்லை பழமையான மற்றும் அடிப்படையில் பெண்களின் மனித உரிமைகளை குறைத்து மதிப்பிடும் சமூகங்களில் ஆழமாக உள்வாங்கப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் சமூக விதிமுறைகளுக்கூடாக பெண்கள் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு பற்றி சிந்திப்பதிலிருந்து இப்பிரச்சனை தோன்றுகிறது. இவற்றை அடையாளம் கண்டு தீர்க்கப்படவும், இதற்கான மாற்றம் விரைவாக ஏற்படவும் பல்வேறு நாடுகள் அதற்கான திட்டமிடலை முன்னிறுத்தி வெற்றியும் கண்டுள்ளனர்.
ஆனால் இவ்விவகாரத்தில், சரியான திட்டமிடலின்றி இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்தியாவில் பரவலாக நடக்கிறது. சமீபத்தில் தேசிய குற்ற பதிவுகள் நிறுவனம்(NCRP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2019-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 90க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன; அதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் பொற்காலம் இது என்று சொல்லிக்கொள்ளும் இன்றைய காலச்சூழலில் சமூக இணையதளங்கள் மக்களின் நேரடி வாழ்வோடு பின்னிப்ணைந்திருக்கின்றன என்பதற்கு இது போன்ற குற்றங்களே எடுத்துக்காட்டாக அமைந்து விடுகின்றன. ஆம், உலகெங்கிலும் இண்டெர்நெட் செல்வாக்கு பொறுந்திய இக்காலக்கட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் சமூக பொறுப்போடு செயல்படுவதில் தவறுகின்றனர்.
இன்றைய காலச்சூழல் அவர்களின் சமூகப் பொறுப்பை மழுங்கடிப்பதற்கான அனைத்து செயல்களையும் தன் கைவசம் வைத்துள்ளது, இண்டெர்நெட் என்னும் பெயரில் அனைத்து கலாச்சார சீர்கேடுகளும் அரங்கேறி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகின்றோம், இண்டெர்நெட் வைத்திருந்தால் போதும் உலகமே தன் கைவசம் என்பதை போல் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, எந்த அளவுக்கு இதனால் பலன் இருப்பதாக சொல்கிறார்களோ அதே அளவு சரி பாதி இதில் ஆபத்தும் அடங்கியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய தொழில்நுட்பத்துக்கும் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. கட்டுப்பாடற்ற இணைய வெளியும் அதில் திட்டமிட்டு கொட்டிக் கிடக்கிற பாலியல் காணொளிகளும் மனித மனங்களில் வக்கிரத்தைத் தூண்டி விடுகின்றன. திரைக்கும் நமக்கும் உள்ள இடைவெளிக்கும்கூட இதில் முக்கியப் பங்கு இருப்பதாக உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.
அமெரிக்க மருத்துவ கழகத்தை சேர்ந்த சைன்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை இவ்வாறு ஆய்வு செய்கின்றது - இன்றைய சீனிமாக்களிலும், இண்டெர்நெட்டிலும் காட்டப்படும் வன்முறையும் ஆபாசங்களும் பலரின் மூர்க்கத்தனத்துக்குக் காரணம் என்கின்றது அந்த ஆய்வு. திரைப்படங்கள், காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் பெண்களின் உடல்கள் போகப்பொருளாக காட்சிப்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடற்ற தொழில் நுட்பத்தால் எதிர்பாராத விழுமியங்களும் எல்லைமீறிக் காணக் கிடைப்பதால் அவற்றைக் கையாளத் தெரியாமல் தினம் தினம் நாள் முழுக்க இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும் நிலையில் அப்பாவி பெண்களை குழந்தைகளைத் தன் வக்கிரத்துக்கு இரையாக்குகின்றார்கள் வக்கிர புத்தி கொண்ட அயோக்கியர்கள்.
பெண்களுக்கு எதிரான வன்முறை மேலும் மேலும் தலை தூக்குவதற்குத் வலுவான சட்டங்கள் இல்லாததும் தாமதமான நீதியும் மிக முக்கிய காரணம் என்று ஒரு புறம் நாம் சொல்லிக் கொண்டாலும் மறுபுறம் கட்டுப்பாடற்ற இணையதள தொழில்நுட்பங்கள் ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றதை நாம் மறுக்க முடியாது. மக்கள் நலன் மிகமுக்கியம் என்று கருதும் ஒர் அரசாங்கத்தால் இவ்விவகாரங்களை அலட்சியப்படுத்த முடியாது. அரசே அக்கறையோடு தலையிட்டு முறையான இணையம் அல்லது அதற்கான கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து சட்டப்படி முறைப்படுத்த வேண்டும். இது மக்கள் நலம் காக்க விழையும் ஓர் அரசின் இன்றியமையாத கடமையாகும்.
- S.G.அப்சர் சையத்