masinagudi elephantஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் உயிரோடு எரித்துக் கொன்றது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி 33 இஸ்லாமியர்கள் உட்பட 59 பேர் இந்து பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர்.

அதற்கு அடுத்த நாள் – பிப்ரவரி 28, 2002 குல்பர்க் சொசைட்டி குடியிருப்பில் இருந்த 18 வீடுகளை முற்றிலுமாகக் கொளுத்தி, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாஃப்ரியை துண்டு துண்டாக வெட்டி அவருடன் சேர்த்து 35 பேரை உயிரோடு இந்து பயங்கரவாதிகள் எரித்து கொன்றனர்.

எரித்துக் கொல்வது என்பது வரலாறு தோறும் நடந்தே வந்திருந்தாலும் அது ஒரு நிறுவன மயமாய் மாறிப்போன காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். எரித்துக் கொல்வதற்கு பின்னால் வெறும் மதவெறி மட்டும் இருப்பதில்லை. காரணம் வெறும் மதவெறி ஒருபோதும் ஆளும் வர்க்கத்திற்குப் பயன்படுவதில்லை. ‘மதவெறியுடன் இணைந்த அடிமை மனோபாவம்’ அதுதான் ஆளும்வர்க்கத்தின் செயல்திட்டம்.

அந்த செயல் திட்டம்தான் கடப்பாரைகளை மசூதிக்கு எதிராகவும், சூலாயுதத்தை கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழிக்கவும், பெட்ரோலை இஸ்லாமிய, கிருஸ்தவ மக்களை உயிருடன் கொளுத்தவும் செய்கின்றது. அதே செயல்திட்டம்தான் தன்னையும், மண்ணையும் கொள்ளையடிக்கும் கார்ப்ரேட்டுகளின் காலை நக்கி ஒரு அடிமை நாயைப் போல வாழவும் செய்கின்றது.

எனவே உயிருடன் கொளுத்தப்படுவதற்குப் பின்னால் இருப்பது ஒன்றே ஒன்றுதான் அது ஆளும்வர்க்கத்தின் இருத்தலுக்கு சவால்விடும் சக்திகளை அழிப்பது. அதை அழிப்பதற்கு மதம், சாதி, இனம் எல்லாம் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படும் அவ்வளவுதான்.

மனிதர்கள் மட்டும்தான் ஆளும்வர்க்க கார்ப்ரேட் கொள்ளையர்களுக்காக கொளுத்தப்பட்டது போய் இன்று கார்ப்ரேட் கொள்ளைக்கு எதிராக உள்ள அத்தனையையும் கொளுத்துமளவுக்கு அது பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது. மசினக்குடியில் ஒரு யானை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது கூட அதன் நீட்சிதான்.

முதுமலை சரணலாயத்தை ஒட்டியுள்ள மசினக்குடி, பறவைகள், பட்டாம் பூச்சிகள், யானைகள், சிறுத்தைகள் என்று பல்லுயிர் வாழும் பெரும் வனப்பகுதியாகும். ஆனால் இன்று மசினக்குடி ரிசாட்டுகளாலும், பெரிய பெரிய உணவகங்களாலும் சூழப்பட்டு யானைகளின் வலசை பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கார்ப்ரேட்டுகளின் சூரையாடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கொழுத்துப் போன பணக்கார பன்றிகள் கொட்டமடிக்கும் இடமாக அது மாற்றப்பட்டுள்ளது.

இப்படி வன உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் யானைகளின் வலசை பாதையை மறித்தும் கட்டப்பட்ட கட்டிடங்களை அப்புறப்படுத்தவும் வேண்டி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2011 ஆண்டு ஜூலை மாதம் 12 அன்று ரிசாட்டுகளை மூடி சீல்வைக்க உத்திரவிட்டது.

ஆனால் ஆளும் கட்சியின் செல்வாக்கோடும், அதிகாரவர்க்கத்தின் கூட்டணியோடும் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்காமல் தொடர்ந்து ரிசாட்டுகள் செயல்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்துத்தள்ள உத்திரவு பிறப்பித்தது.

ஆனால் தங்களது ரிசாட்டுகள் வலசைப் பாதைகளை மறித்து கட்டப்படவில்லை எனவும் எனவே இடிக்கும் உத்திரவை நீக்கக் கோரியும் 34 ரிசாட் உரிமையாளர்கள் உச்சநீதி மன்றத்திடம் முறையிட்டனர். இது தொடர்பாக நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் ரிசாட்டுகள் யானையின் வலசைப் பாதையை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்ததை தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அக்டோபர் மாதமே உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் இதுவரை எந்த உறுப்படியான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதன் பின்னுள்ள காரணம் வனவிலங்குகள் அழிந்தாலும் வேட்டையாடப்பட்டாலும் அதைப்பற்றி தங்களுக்கு கவலையில்லை என்பதோடு அதை நடத்தும் கார்ப்ரேட் ரவுடிகளின் பணமும் துணையும் வேண்டும் என்பதுதான்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக நீலகிரியில் உள்ள மாவநல்லா பகுதியைச் சேர்ந்த ரேமண்ட் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் ரேமண்டும் தலைமறைவாக உள்ள அவரது சகோதரர் ரையனும் சேர்ந்து அனுமதில்லாமல் தங்களது பங்களாவை சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடமாக மாற்றிச் சம்பாதித்து வந்துள்ளனர்.

எங்கே யானைகள் வரும் பகுதி என்று தெரிந்தால் தங்களது தொழில்பாதிக்கப்படுமோ என நினைத்தே யானையை மிக கொடூரமாக தாக்கி அதன் மீது டயரை கொளுத்தி போட்டு அதை துடிதுடிக்க கொன்றிருக்கின்றார்கள்.

நிச்சயம் யானையை நெருப்புவைத்து கொல்வதால் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடாது என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் அவ்வாறு துணிந்து செய்துள்ளார்கள். இந்த துணிச்சலுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்க அயோக்கியர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒரு பக்கம் பெரும் கார்ப்ரேட்டுகளின் கொள்ளைக்காக காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவரும் வன விலங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வன உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருந்த பழங்குடியின மக்கள் சூழலியல் சுற்றுலா போன்ற கார்ப்ரேட் கொள்ளைக்காக விரட்டி அடிக்கப்பட்டு காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்ரேட்டுகளின் பணம் கொழிக்கும் சொர்கங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜக்கி போன்ற கார்ப்ரேட் சாமியார்கள் ஆளும்வர்க்கத்தின் கருப்பு பணத்தை மாற்றும் ஏஜெண்டுகளாகவும், ஆன்மீகம் என்ற பெயரில் மதவெறியை தூண்டிவிடும் சல்லித்தனத்தையும் சிறப்பாகச் செய்வதால் அவர்களால் யானைகளின் வலசைப் பாதைகளை அழித்து காடுகளை சூறையாட முடிகின்றது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து மிகச் சர்வசாதாரணமாக வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் இறைச்சிகள் தமிழக முழுக்க விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் வனத்துறையின் துணையுடனும் அரசியல்வாதிகளில் துணையுடனும்தான் நடந்துவருகின்றன.

மனிதன் தன்னையே உலகின் மையமாக கருதி மற்ற எல்லா உயிரினங்களும் தனக்காகவே வாழ்வதாக எண்ணுகின்றான். ஆனால் இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது. காடுகளும், மலைகளும், வன விலங்குகளும் அழிக்கப்பட்டு உணவுச்சங்கிலியின் கன்னிகளை ஒவ்வொன்றாக மனிதன் உடைக்க, தனக்கான சவக்குழியை அவன் தானே தோண்டிக் கொள்வான்.

மதங்களுக்காக மனிதர்கள் கொளுத்தப்படும்போது அதை அமைதியாக கடந்து போன சமூகம் இன்று ஒரு யானை கொளுத்தப்பட்ட வீடியோ காட்சியை பார்க்கும்போது துயரில் துடிக்கின்றது. ஆற்றாமையில் அரற்றுகின்றது.

கொளுத்தப்படுவது மனிதனாக இருந்தாலும் யானையாக இருந்தாலும் துயரத்தின் வலி ஒன்றுதான். சுரண்டலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போர்குணத்தை தடுக்கும் ஆயுதமாக ஆளும் வர்க்கத்திற்கு மதம் பயன்படுவதுதால் மனிதன் எரிக்கப்படுகின்றான். காடுகளையும் மலைகளையும் கொள்ளையிட வனவிலங்குகள் தடையாக இருப்பதால் அவையும் எரிக்கப்படுகின்றன.

- செ.கார்கி

Pin It