மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் காவிமயமாக மாறி வருகின்றது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதிலும் நீதித்துறையில் இந்துத்துவ சக்திகளின் ஆக்கிரமிப்பு நாட்டில் இதுவரை இருந்துவந்த குறைந்தபட்ச ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மொத்தமாக தின்று செரித்திருக்கின்றது. நீதிமன்றங்களே இந்திய ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் புனித அரண், அது சரியாக தன் நீதி பரிபாலன முறையை நடத்தும்வரை இந்த அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை என்ற நம்பிக்கையில் நீதித்துறையின் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையை ஏற்படுத்தி, நீதித்துறையே அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் தீர்க்கும் மாமருந்து என நம்ப வைத்துக்கொண்டிருந்தன ஆளும்வர்க்கங்கள். மக்களும் அப்படித்தான் இதுவரை நம்பி வந்தார்கள். தங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்றால் நிச்சயம் தங்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கும் என்று அவர்கள் நீதிமன்றங்களை கோயில்களாகவும், நீதிபதிகளை கடவுள்களாகவும் பார்த்து வந்தார்கள்.

supreme court judges

அளவு ரீதியான மாற்றங்கள் பண்புரீதியான மாற்றங்களுக்கு இட்டுச்செல்லும் என்பதுதான் அறிவியல். நீண்ட காலமாக உள்ளே அழுகி கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துகொண்டிருந்த ஒரு பொருள் திடீரென மிகக் கொடிய துர்நாற்றத்தை பரப்பத் தொடங்கிவிடும். அது போல இத்தனை நாட்களாக உள்ளே அழுகி சிதைந்து கொண்டிருந்த நீதித்துறை என்னும் மோசடி அமைப்பை எவ்வளவுதான் பாடுபட்டு அதன் பயனர்களான பார்ப்பனிய, முதலாளித்துவாதிகளும் அவர்களின் அடிமைகளும் பூசி மொழுகினாலும் இதற்கு மேல் நாற்றத்தை அடக்குவதற்கு வழி இல்லாமல் அதன் மாபெரும் துர்நாற்றம் பகிரங்கமாக வெளிப்பட்டு ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கத்தையே முகம் சுளிக்க வைத்திருக்கின்றது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்றும், நீதிமன்ற அமைப்பை பாதுகாக்காவிட்டால் நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிடும் என்றும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகள் மீதும் இருந்து வந்த மாயையை அவர்கள் உடைத்திருக்கின்றார்கள். நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்சநீதிமன்றமே இன்று மக்கள் முன் அம்மணமாக நிற்கின்றது.

மிக முக்கியமான வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கின்றது, அவை மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது, அவர் தனக்கு விருப்பமான அமர்வுக்கே வழக்குகளை ஒதுக்குகின்றார், நீதிபதி லோயா அவர்களின் மரணம் தொடர்பான வழக்கை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்காமல் 10வது நீதிமன்ற அமர்வுக்கு ஒதுக்கியுள்ளார், மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான ஊழல் வழக்கை 7வது நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது, அதுபோல ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்த வழக்குகளை சிறிய அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி விசாரித்து வருகின்றார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.

இதை ஏதோ நீதிபதிகளுக்கு இடையே வழக்கை பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட சண்டை என்று நாம் குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது. எந்த வழக்கை எந்த நீதிபதி அமர்வு விசாரித்தால் தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று தெரிந்து அதற்கு ஏற்றார்போல வழக்குகளை பிரித்துக் கொடுக்கும் மோசடித்தனம் இதற்குள் ஒளிந்திருக்கின்றது. நீதிபதிகள் எல்லாம் சாதி, மதம், மொழி, இனம், பணம் போன்றவற்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் கிடையாது; அவர்கள் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்று சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்திருக்கின்றது. ஆனால் எல்லா நீதிபதிகளும் அவ்வாறு இருப்பதில்லை. பிஆர்பியை கிரானைட் ஊழல் வழக்கில் இருந்து விடுவித்த மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதிக்கு சாதி முக்கியம் என்றால், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த தத்துவுக்கும், அவரை விடுவித்த குமாரசாமிக்கும் பணம் முக்கியமாக இருந்தது. அதுவே குஜராத் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்த சதாசிவத்துக்கு பதவி முக்கியமாக இருந்தது. இப்படி ஒட்டுமொத்த நீதித்துறையும், நீதியை சாதிக்காகவும், பணத்திற்காகவும் பதவிக்காகவும் விற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். இப்படி புழுத்து நாறும் நீதித்துறையைத்தான் காவி பயங்கரவாதிகளும், கார்ப்ரேட்டுகளும் மிக எளிதாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

இப்படி பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டும் மனுநீதிமன்றமாக நீதிமன்றங்களை மாற்றி வைத்திருக்கும் காவிபயங்கரவாதிகள் அதற்குத் தோதாக காவல்துறை, ராணுவம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ என அனைத்தையும் அதன் ஊதுகுழல்களாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். கீழ்மட்டத்திலேயே வழக்கை ஊத்தி மூடி தப்பித்துக்கொள்ள இவைகள் பயன்பட்டால், ஒருவேளை வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதியாகக் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், நேராக நீதித்துறையின் மூலமே அதை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள். இப்படி தப்பித்துக் கொள்ளத்தான் கொலிஜியம் முறை மூலம் தங்களுக்கு வேண்டிய நீதிபதிகளை குறிப்பாக பார்ப்பன நீதிபதிகளை அவர்கள் நியமித்துக் கொள்கின்றார்கள். அப்படி இல்லை என்றால் பார்ப்பனன் காலைக் கழுவி குடிப்பதை தனது பிறவிப் பேறாகக் கருதும் சூத்திர நீதிபதிகளை நியமித்துக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றங்களில் இருந்து, உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், சி.பி.ஐ நீதிமன்றங்கள், என்.ஐ.ஏ நீதிமன்றங்கள் என அனைத்திலும் அமர்ந்திருக்கின்றார்கள். இவர்கள் மூலம் தான் அசீமானந்தா, பிரக்யாசிங்தாகூர், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், டி.ஜி.வன்சாரா, மோடி, அமித்ஷா என அனைவருமே தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற முடிந்தது.

நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் அமைப்பு என்ற நிலையில் இருந்து இறங்கி, அது நீதியை விலை பேசி விற்கும் ஒரு வணிக நிறுவனமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஆளும்வர்க்கம் இந்த அமைப்பு முறையிலேயே அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்று தொடர்ச்சியாக மக்களை நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றன. இப்படியான ஒரு சம்பவம் நடந்த பின் கூட அதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நீதிமன்றங்களின், நீதிபதிகளின் யோக்கியதையைப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி, மக்களை இணைத்து பெரும் போராட்டம் நடத்தி இருக்க வேண்டிய கட்சிகள், இதை ஏதோ நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு போன்று சித்தரித்துத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றன. நீதிபதிகள் தங்களுக்குள் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வரவேண்டும் என்று வெட்கம் கெட்ட முறையில் கோரிக்கை வைக்கின்றன. குற்றச்சாட்டை முன்வைத்த நீதிபதிகளும் இத்துடன் தங்களது கடமை முடிந்துவிட்டதாக நினைத்து அத்தோடு இந்தப் பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள். இப்போது தீவிரமாக சமரச முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்த சுவடே தெரியாமல் மீண்டும் தங்களது வணிக நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தொடங்கிவிடும் என்பதில் அய்யமில்லை.

நிச்சயம் ஓட்டுப்பொறுக்கிகளால் இதைக் கண்டிக்கக்கூட முடியாது என்பதுதான் உண்மை. நீதி வணிகமாக இருக்கும் வரைதான் இவர்களால் இந்த போலி ஜனநாயகத்தை உண்மை ஜனநாயகம் என்று மக்கள் முன் நம்பவைத்து அவர்களை ஆண்டாண்டு காலத்திற்கு அடிமையாகவே வைத்திருக்க முடியும். அதற்காகவாவது ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தத்துக்களும், குமாரசாமிகளும், தீபக் மிஸ்ராக்களும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை இது கோடிக்கணக்கான மக்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை கிடையாது வெறும் நான்கு நீதிபதிகளுக்கு இடையேயான பாகப்பிரிவினை பிரச்சினை என்ற அளவில் இதை சுருக்கி மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.

அரசு கட்டமைப்பு முழுவதும் மீட்க முடியாத அளவிற்கு அதிகார ஊழல் முறைகேடுகளில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது. ஆனால் இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச்சொல்லி ஒரு பெரும் சமூக மாற்றத்திற்கு அறைகூவல் விடுக்க வேண்டிய கட்சிகள் அனைத்தும் அதன் ஒட்டு வால்களாய் மாறி, அதைக் காப்பாற்றும் பெரும் துரோகத்தை மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பை மாற்றவேண்டும் என நினைக்கும் அனைவரும் ஒர் அணியில் இணைந்து மக்களிடம் தீவிரமான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தாத வரை இது போன்ற கேலிக்கூத்துக்களை சும்மா வெறுமனே நின்று வேடிக்கை பார்த்து மனம் துடிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

- செ.கார்கி

Pin It