கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

police tourtureகடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை சித்திரவதை செய்து அடித்துக் கொலை - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கின்றது

கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் காடாம்புலியூர் கிராமத்தைச் சார்ந்த வியாபாரி செல்வமுருகன் என்பவரை நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விசாரணை என்ற பெயரில் வியாபாரியை சித்திரவதை செய்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் தனது வியாபார விசயமாக 28.10.2020 அன்று காலை 11.00 மணியளவில் வடலூர் வரை செல்கிறேன் என்று தனது மனைவி பிரேமாவிடம் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். அன்று மாலை சுமார் 4.00 மணி வரை செல்வமுருகன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் செல்வமுருகனின் செல்போனுக்கு அவரது மனைவி பிரேமா போன் செய்துள்ளார்.

ஆனால் செல்வமுருகன் போனை எடுக்கவில்லை. அதன் பின் தனது நாத்தனார் பிரியதர்ஷினிக்கு தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லியுள்ளார். உடனே பிரியதர்ஷனி வடலூரில் இருக்கும் தனது கணவரின் தம்பி D. காந்தி என்பவருக்கு தகவல் சொல்லி உள்ளார். இதன் பின் செல்வமுருகனின் மனைவி தனது இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு கணவரைத் தேடி வடலூர் சென்றுள்ளனர்.

செல்வமுருகனின் மனைவியும் அவரது உறவினருமான D. காந்தியும் சேர்ந்து வடலூரில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடியும் செல்வமுருகன் கிடைக்கவில்லை. இதனால் புகார் கொடுக்க வடலூர் காவல் நிலையம் சென்றுள்ளார்கள். காவல் நிலையத்தில் புகாரை வாங்க மறுத்துள்ளனர். மேலும் வடக்குத்தில் உள்ள நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றபோது காவல் நிலையத்தார், மறுநாள் காலையில் வரச் சொல்லி உள்ளார்கள். அதன் பின் செல்வமுருகன் மனைவியையும் மற்றும் அவரது பிள்ளைகளையும் மேலும் உடன் சென்ற வடலூரைச் சேர்ந்த உறவினர் D. காந்தியும் சேர்த்து காவல் நிலையத்தில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்கள்.

காவல் நிலையத்தில் இருந்து திரும்பி வந்தபோது வழிமறித்த காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் DSP கிரைம் போலீஸ் குழுவை சார்ந்த சுதாகர் அறிவழகன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத காவலர்கள் ஆகியோர் செல்வமுருகன் மீது பல வழக்குகள் இருப்பதாகச் சொல்லி புகார் கொடுக்க சென்றவர்களை மிரட்டியுள்ளனர்.

அடுத்த நாள் 29.10.2020 அன்று காலையில் செல்வமுருகனின் போன் மூலமே அவரது மனைவி பிரேமாவிடம் தொடர்பு கொண்ட போலீசார், இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற லாட்ஜுக்கு வரும்படி கூறியுள்ளனர். உடனே பிரேமா குழந்தைகளுடன் அங்குச் சென்றுள்ளார். அப்போது செல்வமுருகனின் மனைவி பிரேமாவிடம் அங்கிருந்த போலீசார் செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு போடப் போகிறோம்.

அதனால் நீ, 10 பவுன் தங்கச் செயின் கொடுத்துவிட்டால் வழக்கு போடமாட்டோம் என்று மிரட்டியுள்ளார்கள். அப்போது செல்வமுருகனின் மனைவி பிரேமா என் கணவர் செல்வமுருகன் எவ்வித தவறும் செய்யாதவர் பிறகு எதற்கு நான் உங்களிடம் 10 பவுன் தங்கச் செயின் தர வேண்டும்? நான் எதுவும் தரமுடியாது எனக் கூறிவிட்டு குழந்தைகளுடன் அவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்.

அதன் பின் மீண்டும் 30.10.2020 அன்று காலை சுமார் 8.00 மணியளவில் நெய்வேலி நகர போலீசார் காவல் நிலையத்துக்கு வருமாறு செல்போன் மூலம் செல்வமுருகன் மனைவியை அழைத்துள்ளார்கள். குழந்தைகளுடன் காவல் நிலையம் சென்றபோது தனது கணவர் செல்வமுருகனை காவல் நிலையத்தில் இருந்து ஒரு காவலர் வெளியே அழைத்து வந்துள்ளார்.

அப்போது செல்வமுருகனின் கை மற்றும் கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் செல்வமுருகன் நடக்க முடியாமல் தட்டுத் தடுமாறி வந்துள்ளார். தன் மனைவியை பார்த்த செல்வமுருகன், என்னைக் காப்பாற்று! போலீசார் என்னை அடித்தே கொன்று விடுவார்கள் என அழுது கதறியுள்ளார்.

அப்போது செல்வமுருகனின் மனைவிக்கு முன்பாகவே, போலீசார் இங்கு வந்த திருட்டு வழக்குகள் அனைத்தையும் உன் மேல்தான் போடப் போகிறோம். ஆகவே ஒப்புக் கொண்டுவிடு, என்று மிரட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

தன் கணவனை அப்போது தனக்கு முன்பாகவே அடித்ததை பார்த்து அதிர்ச்சியில் இருந்த மனைவி பிரேமாவை போலீசார் மிரட்டி சில வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர். மேலும் இதை யாரிடமும் சொல்லாதே, சொன்னால் உன் கணவரைச் சுட்டுக் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

அதன் பிறகு சில நாட்களாக செல்வமுருகனைப் பற்றி எந்தத் தகவலும் மனைவிக்கு போலீசார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் விருத்தாசலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் இருப்பதாகக் கேள்விப்பட்டு, 12.11.2020 அன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் கிளைச் சிறைக்கு சென்று தன் கணவரைப் பார்த்த போது சிறைக் காவலர் ஒருவர் செல்வமுருகனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்துள்ளார்.

அப்போது செல்வமுருகனால் நடக்க முடியவில்லை. மேலும் பேசவும் முடியவில்லை. இதனால் கை ஜாடை செய்கை முலம்தான் தனக்கு நடந்ததை தெரிவித்து உள்ளார். அதன் பின் சிறைக் காவலர் சிறையில் அடைத்த பின்பு செல்வமுருகனுக்கு மயக்கம் ஏற்பட்டது என்றும் தொண்டையில் அடிபட்டதால் சாப்பிடமுடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.

அதன் பின் போலீசார் செல்வமுருகனை விருத்தாச்சலம் மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக கொண்டுச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனையில் நெய்வேலி போலீசாரும் இருந்துள்ளனர்.

செல்வமுருகனுக்கு போதிய சிகிச்சை பெறுவதற்கு முன்பாகவே செல்வமுருகன் மீண்டும் சிறைக்குக் கொண்டுச் செல்வதிலேயே குறியாய் இருந்து உள்ளார்கள். உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கக் செல்வமுருகன் கேட்டபோது, போலீசார் மறுத்துவிட்டு சிறைக்கே கொண்டு சென்று உள்ளனர்.

04.11.2020 அன்று இரவு சுமார் 11.45 மணியளவில் செல்வமுருகனை விருத்தாச்சலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் உடனே வந்து பார்க்கும்படியும் போலீசாரிடமிருந்து போன் மூலம் தகவல் கிடைத்த உடன் செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது, செல்வமுருகன் சிறையிலேயே இறந்துவிட்டதாகக் கூறி உள்ளார்கள். செல்வமுருகன் உடல் விரைத்த நிலையில் சடலமாகக் பார்த்துள்ளார்கள்.

கோரிக்கைகள்

தமிழகத்தில் சமீப காலமாக காவல் நிலைய சித்திரவரை மரணங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் என்பவர் காவல் சித்திரவதையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த படுகொலை சம்பவத்தை, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் படுகொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் அவரது தலைமையில் செயல்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.

காவல் சித்திரவதையால் படுகொலையான செல்வமுருகன் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சார்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்க வேண்டும்.

செல்வமுருகன் காவல் சித்திரவதை படுகொலை வழக்கில் உள்ளூர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதால் இவ்வழக்கினை உடனடியாக சிபிசிஐடி காவல் துறையினரிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். மேலும் IPS அந்தஸ்துடைய காவல் அலுவலர் நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

செல்வமுருகனை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நாளில் இருந்து சிறைக்கு அனுப்பப்பட்ட நாள் வரை நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் உள்ள CCTV பதிவு ஆவணங்களை கைப்பற்றி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

காவல் சித்திரவதையால் படுகொலையான செல்வமுருகனின் உடலை தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரைக் கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

உடற் கூறாய்வினை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மேலும் உடற்கூறாய்வின் ஆரம்ப கட்ட அறிக்கையையும் மற்றும் வீடியோ பதிவு ஆவணத்தையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனே வழங்க வேண்டும்.

செல்வமுருகன் காவல் சித்திரவதை வழக்கினை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களை மாதந்தோறும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட காரணத்தால்தான் நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் செல்வமுருகன் என்பவர் காவல் சித்திரவதையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே பொறுப்பற்று தன் கடமையை செய்யத் தவறிய, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நெய்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரை உடனே இடமாற்றம் செய்யப்படவேண்டும்.

       Sd/-                                                                                                               Sd/-
    தியாகு                                                                                                மீ.த.பாண்டியன்

 ஒருங்கிணைப்பாளர்                                                                            செயலாளர்