‘எவிடென்சு’ என்ற அமைப்பு நடத்திய கள ஆய்வில், மதுரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மீதே தீண்டாமை திணிக்கப்படுவதையும், செருப்பு போட்டு நடக்க முடியாத நிலையும், இரட்டை தம்ளர் முறையும் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

‘எவிடென்சு’ அமைப்பு தமிழக அளவில் தீண்டாமை நடக்கக்கூடிய கிராமங்களை ஆய்வு செய்து அவற்றை அரசுக்கும், மனித உரிமை ஆணையங்களுக்கும், சிவில் சமூக குழுக்களுக்கும் எடுத்துச் சென்று, உரிய மனித உரிமை தர நிர்ணயங்களோடு, சமூக நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு முதற்கட்டமாக, பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டது.

ஒரு தலித்தே பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் கிராமத்தில் தலித்துகளின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்தால், இதர பஞ்சாயத்து நிலவரங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்ற அடிப்படையில் மதுரை, சிவகங்கை ஆகிய இரு மாவட்டங்களில் ஆய்வு நடத்தி அது அறிக்கை அளித்துள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள 431 பஞ்சாயத்துகளில் 83 பஞ்சாயத்துக்களில் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவைகளில் 50 பஞ்சாயத்துகளில் ஆண்கள் தலைவராகவும், 33 பஞ்சாயத்துகளில் பெண்கள் தலைவராகவும் உள்ளனர். சிவகங்கையில் 445 பஞ்சாயத்துகளில் 83 தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 80 பஞ்சாயத்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில் 47 பஞ்சாயத்துகளில் ஆண்களும் 33 இல் பெண்களும் தலைவராக உள்ளனர். இந்த ஆய்வறிக்கையில் 20 பஞ்சாயத்துத் தலைவர்கள் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் தங்களது கிராமத்தில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளையும், பஞ்சாயத்துத் தலைவராக தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களையும் எடுத்துக் கூறியுள்ளனர். ஆய்வு மேற்கொண்டுள்ள இந்த கிராமங்களில் கீழ்க்கண்ட வகையான தீண்டாமைக் கொடுமைகளும், தடைகளும் உள்ளனவா என்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

1. டீக்கடைகளிலும், உணவு விடுதிகளிலும் தலித்துகளுக்கு எதிரான இரட்டை குவளை முறை பாகுபாடு இருக்கிறதா?
2. ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் செல்லவும், அரசு மற்றும் பொது இடங்களைப் பயன்படுத்துவதிலும் கிணறுகள், குட்டைகள், குளங்கள், சுடுகாடு, இடுகாடு ஆகியவற்றைப் பயன்படுத்துவதிலும் பாகுபாடுகளும் தடைகளும் உள்ளனவா?
3. கோவில்களுக்குள் செல்வதிலும், திருவிழாக்களில் பங்கேற்பதிலும் தடை உள்ளதா?
4. நல்ல உடைகள், நகைகள் அணிவதில் தடைகள் உள்ளனவா?
5. குழந்தைகள் கொத்தடிமைகளாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?
6. கட்டைப் பஞ்சாயத்து மூலம் தலித்துகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறதா?
7. பள்ளி வளாகத்துக்கு உள்ளும் புறமும் குழந்தைகளை நடத்தும் விதத்தில் பாகுபாடு உள்ளதா?
8. தேர்தலில் போட்டியிடவும் பங்கேற்கவும் தடை அல்லது அச்சுறுத்தல் உள்ளதா?
9. இறந்த மிருகங்களை அப்புறப்படுத்தல், சாதி இந்துக்கள் இறந்து போனால் இழவுச் செய்தி சொல்லல், குழி தோண்டுதல், பறை அடித்தல் போன்ற வேலைகளைச் செய்யும்படி தலித்துகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?
10. பேருந்துகளில் செல்லும்போது பாகுபாடு அல்லது தடைகள் உள்ளனவா?
11. தலித் பெண்களுக்கெதிராக வன்முறை உள்ளதா?
12. வயதான தலித் மக்களை அவமானப்படுத்தும் வகையில் சாதி பெயரை சொல்லி அழைப்பது நடைமுறையில் உள்ளதா?

இதுபோன்ற 30 வகையான பாகுபாடுகளும், தடைகளும் இருக்கின்றனவா என்று ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் பரிசீலனை செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 83 கிராமங்களில் அனைத்து கிராமங்களிலும் இந்த 30 வகையான பாகுபாடுகளில் பெருவாரியானவை இருப்பது தெரிய வந்துள்ளது. வாடிப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கட்டகுளம் கிராமம், அலங்காநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆதனூர் பஞ்சாயத்து ஆகிய இரண்டு ஊராட்சிகளில் மட்டும் இந்த தடைகள் குறைவாக உள்ளன. ஆனால், இந்த ஊர்களிலும் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துதல், இழிவான வேலைகளை செய்யக் கட்டாயப்படுத்துதல், ரேஷன் கடைகளைப் பயன்படுத்துவதில் இடர்பாடுகள் ஆகியவை இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 80 பஞ்சாயத்துகளில் நிலைமை மதுரையைவிட சற்றே பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருக்கிறது. இங்கு சுமார் 10-15 பஞ்சாயத்துக்களிலாவது ஜாதியக் கொடுமையும், பாகுபாடும் குறைவாக உள்ளது. இருந்தாலும் இந்த 30 வகையான தடைகளிலும் கொடுமைகளிலும் ஒன்று கூட இங்கு இல்லை என்று எந்த பஞ்சாயத்தாலும் சொல்ல முடியாது. மதுரை மாவட்டத்தில் 83 கிராம பஞ்சாயத்தில் 77இல் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. சிவகங்கையில் 80 பஞ்சாயத்துக்களில் 48- இல் இந்த முறை இருக்கிறது.

பள்ளிக்கூட வளாகத்தில் தலித் குழந்தைகள் பாகுபாட்டிற்குள்ளாகிறார்கள். இந்தக் குழந்தைகளை தனியாக உட்கார வைத்தல், அவர்களுக்கென்று தனி தண்ணீர் குடம், தனியான தண்டனை என்பதெல்லாம் நடைமுறையாக இருக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தலித்துகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. அலட்சியமாகப் பேசுவது திட்டுவது, பிரசவம் பார்க்க மறுப்பது என்பது மதுரை மாவட்டத்தில் பரவலாகவும், சிவகங்கையில் சற்று குறைவாகவும் உள்ளது. தலித் குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பதும் அதிக அளவில் உள்ளது.

இந்த கொடுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பஞ்சாயத்துத் தலைவர்களின் நிலை. பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் ஜாதி இந்து வகுப்பைச் சேர்ந்த துணைத் தலைவர்களே உட்கார்ந்து கொள்கின்றனர் என்று பல பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். காசோலையில் கையெழுத்துப் போடுவது, கூட்டம் நடத்துவது, குறிப்பு நோட்டில் பதிவு செய்வது என்பதை எல்லாம் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் அவர்களது நிலை மிகவும் மோசமாக உள்ளது. துணைப் பஞ்சாயத்துத் தலைவர்களும் பஞ்சாயத்து எழுத்தர்களும், பஞ்சாயத்துத் தலைவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து அடிமைகள் போல் நடத்துகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி யூனியனில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் “அனைவருக்கும் கல்வி” திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட நிதி உதவியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்ட தலித் ஊராட்சித் தலைவிக்கு முன்னாள் தலைவரால் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. இதைத் தவிர பால்ரீதியான துன்புறுத்தல்களையும், பஞ்சாயத்து தலைவிகள் சந்திக்க வேண்டியுள்ளது.

பலர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள்ளே செருப்பு அணிந்து போக முடியவில்லை. ஜாதி இந்துக்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வரும்போது எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. பஞ்சாயத்துத் தலைவருக்கு பலவகையான மிரட்டல்களும் வருகின்றன. இவற்றைக் குறித்து புகார் செய்தால் காவல் துறை அதன் மேல் விரைவில் நடவடிக்கை எடுப்பதுமில்லை. புகார் கொடுப்பதற்கே பலரும் பயப்படுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 83 கிராமங்களில் 16 கிராமங்களில் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளன. 3 இல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. 1 இல் சமரசமாகிவிட்டது. மீதி 9 இல் இன்னும் மேல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

எவிடன்ஸ் அமைப்பு வெளிக் கொணர்ந்துள்ள செய்திகளும் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களது பிரமாண வாக்குமூலங்களில் சுட்டிக் காட்டியுள்ள நிலையும், விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இருப்பதைக் கண்டு நாம் மிகவும் வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும். தலைகுனிய வேண்டும். இந்த நிலை தொடர்வது நாட்டிற்கும் நல்லதல்ல. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றும்போது “மக்களாகிய நாம்” தனி மனிதனின் கண்ணியத்தையும் நாட்டின் ஒற்றுமையையும், கட்டிக் காப்பாற்றி நிலை நிறுத்த, அந்த சட்டத்தை இயற்றியிருக்கிறோம் என்று கூறியுள்ளோம். லட்சக்கணக்கான தலித் மக்களின் கண்ணியம் காப்பாற்றப்படாவிட்டால் நாட்டின் ஒற்றுமைக்கே அது ஊறு விளைவிக்கும்.

நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதி வடிவம் பெற்று ஏற்கப்படும் பொழுது தனது முடிவுரையில் டாக்டர் அம்பேத்கர் 26.11.1949 அன்று இந்தப் பிரச்சனையை மிக அழகாகவும், தெளிவாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“1950 ஜனவரி 26 ஆம் நாளன்று நாம் முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையுள் நுழையப் போகிறோம். அரசியலிலே நம்மிடம் சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக பொருளாதார வாழ்வில் சமத்துவம் இருக்காது. அரசியலிலே ஒவ்வொரு நபருக்கும் ஓர் ஓட்டு, ஒவ்வோர் ஓட்டுக்கும் ஒரே மதப்பு என்ற கொள்கையை அங்கீகரிக்கப் போகிறோம். நம்முடைய சமுதாயப் பொருளாதார வாழ்வில், நம் நாட்டிலுள்ள சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக் காரணங்களால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே மதிப்பு என்ற கொள்கையைத் தொடர்ந்து மறுக்கப் போகிறோம்.

எவ்வளவு காலத்திற்கு இந்த முரண்பாடான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழப் போகிறோம்? நமது ஜனநாயகத்தை பேராபத்துக்கு உள்ளாக்கினால் தான் இவ்வாறு தொடர்ந்து நீண்ட காலத்திற்கு இதை மறுக்க முடியும். இந்த முரண்பாட்டை உடனடியாக நாம் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சமத்துவமற்ற நிலையினால் அல்லல்படும் மக்கள், இந்த அரசியல் நிர்ணய சபை அரும்பாடுபட்டு உருவாக்கிய, அரசியல் ஜனநாயக அமைப்பை தகர்த்து எறிந்து விடுவார்கள்.”