தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், பேதாம்பட்டி ஊராட்சி வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரம் கடத்தல் தடுப்பு என்றும் தேடுதல் வேட்டை என்ற பெயரிலும் 18 இளம் பழங்குடி பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ,சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 29-2023 தீர்ப்பை வழங்கியது, இதில் கீழமை நீதிமன்றமான மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்ததோடு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவினைத் தள்ளுபடி செய்துள்ளது, இந்தத் தீர்ப்பின் மூலம் அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளும் அவர்களால் கட்டமைக்கப்பட்ட பொய்களும் உடைந்து நொறுங்கி உள்ளன.
சித்தேரி மலை கிராமத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி கிராமம் 156 வீடுகளும் 655 மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்தது, பெரும்பாலும் உழவில் ஈடுபடுவதும் காடுகளில் விறகு வெட்டுவதும் இவர்களின் வேலை. இயற்கை சூழ்ந்த அழகிய சிற்றூர்..
சந்தன மரக் கடத்தல் தேடுதல் வேட்டை
1992 சூன் 20-ஏறத்தாழ 40 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன காவலர்கள் சித்தேரி மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்று ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மரக் கட்டைகளைக் கண்டுபிடித்தனர், அருகில் உழவு வேலை செய்து கொண்டிருந்த பெருமாள் என்பவரிடம் யார் இந்த மரக் கட்டைகளைப் பதுக்கி வைத்தது என வனத் துறை அதிகாரி சிங்காரவேல் கேட்டார், அதற்குப் பெருமாள் எனக்குத் தெரியாது என சொல்லவே வனத்துறைக் காவலர் ஒருவர் பெருமாள் மீது தாக்குதல் நடத்தினார். இதைக் கேள்விப்பட்டு வாச்சாத்தியில் இருந்து வந்த ஏறத்தாழ 40 பேர் பெருமாளை பாதுகாக்க காவலர்கள் அடித்ததைத் தடுத்தனர், வனக் காவலர்கள் தடுத்த அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர், இதில் வாச்சாத்தி மக்கள் திருப்பித் தாக்கியதில் செல்வராஜ் என்கின்ற வனக் காவலர் படுகாயம் அடைகிறார், படுகாயம் அடைந்த காவலரை அந்த இடத்தில் விட்டுவிட்டு அனைத்து வனத்துறையினரும் அரூருக்கு சென்று விடுகின்றனர் .
படுகாயம் அடைந்த வனக் காவலர் செல்வராசுக்கு தண்ணீர் கொடுத்தும் நீராகாரம் கொடுத்தும் மாட்டு வண்டியில் அவரை அழைத்துச் சென்று அரூர் மருத்துவமனையில் சேர்த்தனர்
18 பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை
மாலை சுமார் 3 மணி அளவில் வாச்சாத்திக்கு 270 க்கும் மேற்பட்ட வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் (அதில் உயரதிகாரிகள் உட்பட) ஊரைச் சுற்றி வளைத்தனர். அந்தச் சூழலை உணர்ந்த வனக் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டவர்களும் மலை ஏறக் கூடியவர்களும், மலையில் ஏறிப் பதுங்கிக் கொண்டனர். மலையேற முடியாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஊனமுற்றோர் குழந்தைகள் பெண்கள் மட்டுமே ஊரில் இருந்தனர்,
ஆறு மணி அளவில் ஊருக்குள் காத்திருந்த அதிகார வர்க்கக் கும்பல் வீடு வீடாகச் சென்று அனைவரையும் இழுத்து வந்து ஆலமரத்து அடியில் வைத்து, நிர்வாணப்படுத்தி அடித்துச் சித்திரவதை செய்தனர். பிறகு அதிலிருந்து 20 வயதிற்கு உட்பட்ட பெண்களை மட்டும் பிரித்து எடுத்து லாரியில் ஏற்றி ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்றனர். இதைக் கண்ட பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் பெண்களை ஏற்றி செல்கிறீர்களே உங்களோடு நாங்களும் வருகிறோம் என்றதற்கு நீங்கள் வரவேண்டாம். கட்டையை காட்டுவதற்கு தான் அழைத்து செல்கிறோம் என்று சொல்லிவிட்டு அழைத்துச் சென்றனர். அதிகார வெறி பிடித்த காம வெறி பிடித்த கும்பல் 13 வயது சிறுமி உட்பட 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தக் கொடுமையை மலை மேல் பதுங்கியிருந்த ஊர் மக்களும் அந்த பெண்களின் பெற்றோர்களும் கண்டு கதறித் துடித்தனர்,
சித்திரவதையும் பொய் வழக்குகளும்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 18 பெண்கள் உட்பட ஊரில் உள்ள அனைவரையும் அரூர் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, இரவு பகல் தூங்கவிடாமலும் தண்ணீர் உணவு கொடுக்காமலும் சிறுநீர் கழிக்க விடாமலும் தொடர் சித்திரவதை செய்து உள்ளனர், 133 பேர் மீது சந்தன மரம் கடத்தியதாக (எஸ்.டி.ஓ.ஆர்) என்ற சட்ட பிரிவில் மூன்று வழக்குகளும் அரசு ஊழியர்களைத் தாக்கியதாக ஒரு வழக்கும் மொத்தத்தில் நான்கு வழக்குகள் போடப்பட்டுச் சேலம் நடுவண் சிறையில் அடைத்தனர். இந்தச் சித்திரவதை மற்றும் பொய் வழக்குகளில் 90 பெண்கள் 15 ஆண்கள் 28 குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 18 பெண்களுக்கும் பிறப்பு உறுப்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளனர், சிறை மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது, இதில் ஒன்பது மாதக் கர்ப்பிணிக்குக் குழந்தை பிறந்து ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது,
பழங்குடிகளின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டது
சூன் 20, 21, 22 ஆகிய நாட்களில் வாச்சாத்தியில் முகாமிட்டிருந்த அதிகார வர்க்கக் கும்பல் அங்கிருந்த வீடுகள் அனைத்தையும் உடைத்து நொறுக்கின. வீட்டிலிருந்த அரிசி, பருப்பு, சாமை, கேழ்வரகு மற்றும் அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கி மண்ணெண்ணெய் ஊற்றி நாசமாக்கினர். அதுபோலவே அந்த மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணற்றில் கோழிக் கழிவை கொட்டியும் மண்ணெண்ணெய் ஊற்றியும் அசுத்தப்படுத்தினர்.
சிறைப்படுத்தப்பட்டவர்கள் போக மீதம் ஊரில் இருந்த 500க்கும் மேற்பட்டோர் பயந்து அஞ்சி நடுங்கி சித்தேரி மலையில் ஏறி உணவு இன்றியும், குடிக்கத் தண்ணீர் இல்லாமலும் காடுகளில் பதுங்கி இருந்தனர், பிறகு பக்கத்தில் இருக்கும் ஊர்களில் அடைக்கலம் (தஞ்சம்) புகுந்தனர்,
குற்றவாளிகளைப் பாதுகாத்த ஜெயலலிதா அரசு
சொந்த நாட்டு மக்கள் மீது ஈவு இரக்கமற்று இப்படி ஒரு கொடுஞ்செயலைச் செய்துவிட்டு, அன்றைய வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் தசரதன், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராமானுசம் அனைவரும் அரூரில் கூடி இப்படி ஒரு சம்பவமே நடக்காதவாறு அனைத்தையும் மூடி மறைத்துவிட்டனர்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தோழர் சண்முகம், தோழர் அண்ணாமலை, சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் நல்லசிவம் அவர்களும் தலையிட்ட பிறகு கட்சியின் வழிகாட்டுதலில் மக்கள் போராட்டமாகவும் சட்டப் போராட்டமாகவும் நகரத் தொடங்கியது .
சட்டமன்றத்தில் இந்தச் சிக்கல் குறித்து விவாதித்தபோது வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாச்சாத்தியில் பழங்குடிகள்தாம் வனக் காவலர்களைத் தாக்கினார்களே தவிர 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் வீடு தாக்கப்பட்டதாகவும் பொய் புகார் கொடுத்துள்ளனர் எனப் பேசினார்.
சிபிஎம் கட்சியின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மாநில அரசு சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆர்,டி,ஓ விசாரணை அறிக்கை ஒன்றும், தமிழ் தெரியாத பெண் ஐ,பி,எஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு விசாரணை அறிக்கையும், 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும் பழங்குடிகள் தங்களது வீட்டைத் தாங்களே உடைத்துக் கொண்டு பொய்யாகக் குற்றம் சாற்றுகிறார்கள் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது,
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும், படித்தவர்களாகவும் இருப்பதனால் இவர்கள் இதே போன்றக் குற்றத்தை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று வழக்கினைத் தள்ளுபடி செய்தது,
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அன்றைய செயலலிதா அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது என்றும், இதைத் தமிழக காவல்துறைதான் விசாரிக்க முடியும் என்றும் வாதாடியது, இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து இறுதியாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததின் பேரில் உசாவல்(விசாரணை) தொடங்கியது.
கருணாநிதி அரசும் குற்றவாளிகளைப் பாதுகாத்தது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு 1996 ஆம் ஆண்டு குற்றவாளிகள் 269 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசு குற்றவாளிகளின் உறவினர்கள் சாலை மறியல் செய்தார்கள் என்று காரணம் சொல்லித் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மதிக்காமல் அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட மறுநாளே விடுதலை செய்யப்பட்டனர்,
தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழங்க வேண்டிய நட்ட ஈட்டுத் தொகையை மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக அரசுகள் வழங்காமல் இழுத்தடித்து வந்தன.
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
269 பேரும் குற்றவாளிகள் என்றும் 54 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு நடக்கும் காலங்களிலே இறந்து விட்டதால் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனவும் 126 வனத்துறையினர் 84 காவல்துறையினர் 5 வருவாய்துறையினர் அங்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலைக்குப் பத்து இலட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றும் அதில் 5 இலட்சத்தைக் குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அல்லது சுயதொழில் ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் இறந்து போகும் பட்சத்தில் அவருடைய குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை நீதிபதி வேல்முருகன் வழங்கினார், இப்படிப்பட்ட தீர்ப்பு வழங்கியிருந்தாலும் இந்தப் பத்து லட்சம் இழப்பீட்டுத் தொகைக்காகவும் அரசு வேலைக்காகவும் மீண்டும் இந்த மக்கள் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டி இருக்குமோ தெரியவில்லை,
சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் இணைந்துதான் சந்தன மரத்தை வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கடத்திவந்தார்கள் என்பது ஊர் அறிந்த கதை. ஆனால் அப்பாவி பழங்குடிகளைச் சந்தன மரம் கடத்துகிறார்கள் என்று திசை திருப்புவது மட்டுமல்லாமல் சொந்த மக்கள் மீது இப்படி ஒரு கொடூரத்தைச் செய்துவிட்டுக் குற்றத்திலிருந்து தப்பிக்க அரசும் அதிகார வர்க்கமும் எடுத்த அனைத்து முயற்சிகளையும் மக்கள் போராட்டத்தின் மூலம் உடைத்து எரிந்துள்ளதுடன் இந்த வழக்கின் மூலம் ஆளும் வர்க்கக் கட்சிகள் அதிகார வர்க்கங்கள் அனைத்தும் பட்டியலின -பழங்குடிகள் -உழைக்கும் மக்களின் எதிரி என்பதை உணர முடிகிறது.
- த.சிவராமன், தமிழ்நாடு மக்கள் கட்சி