justice party leadersபல ஆயிரம் வருடங்களாக ஜாதியின் அடிப்படையில் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தில் ஆட்சி நடத்திய அனைவரும்  வேதங்கள், உபநிஷத்துக்கள், மனுதர்மம், பகவத் கீதை, அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்களிலும், மகாபாரதம், இராமாயணம் முதலிய இதிகாச புராணங்களிலும் வற்புறுத்தப்பட்டும், பாதுகாக்கப்பட்டும், பரப்பப்பட்டும் வருகிற வர்ணாஸ்ரம தர்ம முறைப்படி 'சூத்திர ஜாதியினருக்கு அறிவை, கல்வியை கொடுக்கவே கூடாது. தவறி அவர்களாவே கற்றுக் கொண்டாலும் கூட அவர்களை அதன் பயனை அடைய அனுமதிக்கக் கூடாது' என்றே செயல்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏழைகளாக உள்ள உயர்ஜாதியினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 10% ஒதுக்கிடும் புதிய அரசியல் சட்ட திருத்த மசாதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியது. இது அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமான அம்சங்களுக்கே முற்றிலும் எதிரானது.

குஜராத் மாநிலத்தில் இதேபோன்று உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு தருவதில் அவசரச் சட்டம் 01/05/2016 அன்று கொண்டு வரப்பட்டதை எதிர்த்து, தயாராம் வர்மா Vs குஜராத் என்ற வழக்கின் 104 ஆவது பக்கத் தீர்ப்பில் அதனை செல்லும்படியற்றது என்று 04/08/2016 தீர்ப்பளித்தது. அது போன்றே இதுவும் நீதிமன்றம் சென்று சட்டப்படி செல்லாததாகவே ஆக்கி விடுவது உறுதி.

அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய இட ஒதுக்கீட்டை சமூக நீதிக் களத்திலிருந்து வெளியேற்றி விடலாம் என்று எண்ணம் கொண்டே பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டின் மீது தொடர்தாக்குதலை நடத்துகிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜாதியின் அடிப்படையில் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது. அதன் விளைவாக நாட்டின் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக கல்வி மட்டுமல்ல, அரசுகளில் அதிகாரப் பதவிகளும் மறுக்கப்பட்டன. ஜாதி காரணமாக மறுக்கப்பட்ட கல்வியையும், வேலைவாய்ப்பையும் அதே ஜாதியின் அடிப்படையில் உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப வழங்குவதே சரியாகும்.

இடஒதுக்கீடு சலுகை அல்ல, அடிப்படை உரிமை!

இதனை வலியுறுத்தவே 'நீதிக்கட்சி' என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கம் (S.I.L.F) துவக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாதாருக்கு சமூக நீதியை வழங்க டாக்டர் நடேசனார், சா். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற திராவிட உரிமைப் பாதுகாவலர்கள் திராவிட இன மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடம் கிடைக்கத் திட்டமிட்டனர், செயல்பட்டனர்.

திராவிட இயக்கத்தின் பாதையை அரசியல் கண்ணோட்டத்தில் நாம் திரும்பிப் பார்த்தால், பார்ப்பனரல்லாதார் பல சாதிகளாகப் பிரிந்து கிடந்த திராவிட இன மக்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய சமுதாயத்தை அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கிய நிகழ்வைக் காண முடியும்.

அந்த சாதிப் பிரிவுகள் அன்றைக்கு எப்படி இருந்தது என்பதை 1917 ஸ்பர்டாங்கு உரையில் டி.எம். நாயர் இவ்வாறு கூறுப்பிடுகிறார் "ஆரியர்கள் திராவிட வேளாண்பெருங்குடி மக்களை வன்னிய குலச் சத்திரியர்கள், நாயுடு, ரெட்டிமார்களை கெளரவ சத்திரியர் என்றும், திராவிடக் கோமுட்டிகளை ஆரிய வைசியர் என்றும், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களை தனவைசியர் என்றும், பொற்கொல்லர்களை விசுவர்ம பிராமணர் என்றும், வட நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத திராவிட இனத்தைச் சார்ந்தவர்களான குற்றேவல் புரிபவர்களை பூமிஹார் பிராமணர் என்றும், விவசாயிகளை குர்மிசத்திரியர் என்றும், வீரர்களை இராஜபுத்திர சத்திரியர் என்றும் பலவாறாகப் பெயர்களைச் சூட்டி, திராவிடர்களின் கோட்டைக்குள்ளேயே குத்து, வெட்டு, போட்டா போட்டி, பொறாமை, பொச்சரிப்பு போன்ற குழப்பங்களை ஏற்படுத்தினர் பார்ப்பனர்கள்."

இவ்வாறு சாதிகளாகப் பிரிந்து கிடந்த திராவிட இனமக்களை பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்தில் ஒன்று திரட்டினர். இது இரண்டு முக்கிய பணிகளுக்குப் பயன்பட்டது. ஒன்று பார்ப்பனர் அல்லாத மக்களின் உள்ளக் குமுறல், அவர்களின் தேவைகளின் அடிப்படையில் உருவான சுயமரியாதை உணர்வு, மற்றொன்று இன்று போல் அன்றும் நமக்கு எதிராகவும் நம்மிடையை மறைந்து இருந்த சங்கிகளை இனம் காண்பதற்கும், நம் இன மக்களின் அடிமைத்தனத்திற்கும் அதனைக் களைவதற்கான வழிகளைக் காண்பதற்கும் உதவியாய் இருந்தது.

இதன் அடிப்படையில் தத்துவ ஈர்ப்பு என்பது அன்றைய சமூக அரசியல் சித்தாந்தத் தேவையாக இருந்தது. அப்போது மதராஸ் மாகாண காங்கிரசு அரசால் அரசியல் சம்மந்தப்பட்ட விவகாரங்களை சமூகப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்த இயலவில்லை. அதன் காரணமாக காங்கிரஸ் தன் அரசியலை இழந்தது.

இதன் காரணமாகவே திராவிட இயக்கம் உருப்பெற்று அதன் அடிப்படை சித்தாந்தமாக கல்வி, வேலைவாய்ப்பில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

(தொடர்வோம்)

- ஆர்.இளம்வழுதி

Pin It