“பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும், நால் வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டை யை இடித்தெறிய 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய புத்தர் முயன்றார்; முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர்; தோற்ற னர். இராமானுஜர் புரோகிதக் கொடுமை களைக் களைந்தெறிய ஒல்லும் வழியில் முயன்றார்; தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப் படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக்கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம். இதுவே தக்க வாய்ப்பு.”

இவ்வண்ணம் பிராமண ஆதிக்க எதிர்ப்பினை மக்களி டையே தெளிவுபெறும் விதத்தில் எடுத்து இயம்பிய சான்றோர் யார்?

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (ஜஸ்டிஸ் கட்சி) சென்னை மாகாண முதல் மாநாடு, 1917ஆம் ஆண்டு நடை பெற்றது. அவ்வியக்கத்தின் தலைவர் சர்.பிட்டி. தியாகராயர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும், மேலே கண்டது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சர். பிட்டி. தியாகராயர், சென்னை கொருக்குப் பேட்டையில் வாழ்ந்த அய்யப்பச் செட்டியார்-வள்ளியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாக 1852ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் பிறந்தார்.

1876ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று இளங்கலைப் (B.A.) பட்டம் பெற்றார். அவர் பன் மொழி வித்தகர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இலத்தீன், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகள் கற்றுத் தேர்ந் திருந்தார்.

வணிகத் தொழிலில் செல்வாக்கு மிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த தியாகராயர், வணிகம் மூலம் ஈட்டிய பொருளைத் தேவைப்படும் ஏழை எளியோர்க்கு, ஊருணி போலவும், பழுமரம் போலவும் வாரி வழங்கி வந்தார்.

1866ஆம் ஆண்டு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியால் இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியாறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் நைந்தேன் என்று வள்ளலார் மனம் உருகி நின்றார். தர்ம சாலையை அமைத்தார். சாதி சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்கிப் பசித் துன்பம் நீக்கினார், வள்ளலார்.

அதேபோன்று பிட்டி தியாகராயர் அனைவர்க்கும் உணவு வழங்கினார், 1876ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத் தின்போது.

வர்த்தகத்திலும், சிறுதொழில் வளர்ச்சி யிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண் டார். அவர் தன் முன்னோரின் பரம்பரைத் தொழிலான கைத்தறி நெசவில் முழுக் கவனம் செலுத்தி, பெரிய நெசவாலை யைத் தொடங்கிப் பலருக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கினார். கைத்தறி யில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

உத்தமர் காந்தியார் சென்னை வந்துற்றபோது, இவரது நெசவாலையைக் கண்ணுற்றார். ஆங்கே நெசவாலை யில் தியாகராயர் நிகழ்த்தியுள்ள புதுமைகளைக் கண்டு வியந்து மகிழ்ந்து நின்றார். அதனால் தான் மகாத்மா காந்தி தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு நெசவுப் பயிற்சி அளிக்க விரும்பி மதன்லாலையும், மணிலாலையும் சென்னைக்கு அனுப்பி தியாகராயரிடம் பயிற்சி பெறவைத்தார். மகாத்மா காந்தியார், தியாக ராயரைத் தனது இயக்கத்திற்கு ஆதரவு தருமாறும் வேண்டினார்.

தேசிய நிதி-தொழில் சங்கத்தின் சார்பில் 1908இல் சென்னையில் நடந்த அனைத்திந்திய நெசவுப் போட்டியில், அவரது நெசவுத் தொழிற்சாலை நற்சான்றிதழ்களையும், பதக்கங்களையும் பெற்றது.

தென்னிந்திய வர்த்தக் கழகம் தோற்றம் பெறவும், நிலை பெற்று இயங்கிடவும் தியாகராயர் பெருமுயற்சி மேற்கொண்டார். இக்கழகத்தின் முதல் கூட்டம் 9.10.1909 அன்று தியாகராயர் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. 1909ஆம் ஆண்டி லிருந்து 1921ஆம் ஆண்டுவரை இக்கழகத்தின் தலைவராக இருந்து தென்னிந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்கும், தொழில் கள் பெருக்கத்துக்கும் அளப்பரிய பணிகள் புரிந்துள்ளார்.

கல்வித் தொண்டு

“அன்ன சத்தரம் ஆயிரம் வைத்தல்; ஆலயம்பதினாயிரம் நாட்டல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி; ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்” என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க, ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தன் சொந்த நிதியில் கல்விச் சாலைகளை நிறுவிக் கல்விப் பணி புரிந்துவந்தார்.

தியாகராயர் காலத்தில் வண்ணாரப்பேட்டையில் தொடக்கப் பள்ளி வசதிகூட  அரிதாகக் காணப்பட்டது. தியாகராயர் தமது சொந்த வருமானத்தில், வண்ணாரப்பேட்டைவாழ் சிறுவர்கள் பயின்றிட “வடசென்னை செகண்டரிப் பள்ளி”யினை 3.12.1897 இல் தொடங்கினார். அனைத்து மாணவர்களும் இப்பள்ளியில் கட்டணமின்றிக் கல்வி கற்றனர். இந்தப் பள்ளி 1904இல் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. தியாகராயர் காலத் திற்குப் பின்னர் இப்பள்ளியின் அறக்கட்டளைத் தiலைவராகப் பிட்டி. செங்கல்வராய செட்டியார் பொறுப்பேற்றார். தியாகராயர் நினைவைப் போற்றும் வகையில் இப்பள்ளியைக் கல்லூரி யாக உயர்த்த முயற்சி மேற்கொண்டார். இவருடன் சி. பார்த்தசாரதி நாயக்கர், பி.சி. முனிசாமி செட்டி, டாக்டர். தருமாம்பாள் முதலியோர் துணைநின்று ஒத்துழைப்பு நல்கி னார்கள். இவர்களது இடைவிடா முயற்சியால் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர், இசையரசு, எம்.எம். தண்டபாணி தேசிகர் போன்றவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டினார்கள். சில செல்வந்தரும் நிதி நல்கினார்கள். 1956 முதல் இப்பள்ளி வளர்ந்து தியாகராயர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றுப் புகழ்பெற்றது.

சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப் பினராகவும் தலைவராகவும் 1887 முதல் 1924 வரை தியாகராயர் தொண்டாற்றி வந்தார்.

இவரது இடைவிடாத முயற்சியால்தான் அரசு விக்டோரியா தொழிற் பயிற்சிக் கூடம் 26.3.1889இல் நிறுவப்பட்டது.

இவரது முயற்சியால் 1905இல் ஏற்படுத்தப்பட்டதே செங்கல் வராய நாயக்கர் தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளி ஆகும்.

கல்விக்கு முன்னுரிமை தந்து பள்ளிகள், கல்லூரிகள் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டு உழைத்தவர், தியாகராயர்.

மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி இடம் காலியாக இருந்தது. திரு.வி.க.வை அந்தத் தமிழாசிரியர் பணியில் அமர்த்த எண்ணினார். சக்கரவர்த்தி நயினார், டாக்டர் சி. நடேசனார் ஆகியோரை அனுப்பி திரு.வி.க.வின் கருத்தை அறிய முயற்சித்தார். திரு.வி.க. அப்பணியை ஏற்க விரும்ப வில்லை என்பதை அறிந்து பெரிதும் வருந்தினார்.

கா.சுப்பிரமணியப் பிள்ளை விரிவுரையாளராக சென்னை சட்டக்கல்லூரியில் பணியாற்றி வந்தார். பேராசிரியராகப் பதவி உயர்வு தந்து அவரைப் பெருமைப்படுத்தினார்.

‘அக்காலத்தில் மருத்துவக் கல்லூரியில் படிக்கவரும் மாணவர்கள் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்’ என்ற விதி இருந்தது. அதனால் தமிழ் மாணவர்கள் மிகவும் இடர்ப்பட்டனர். நீதிக்கட்சி ஆட்சியில் சர். பிட்டி. தியாகராயர் முனைந்து அவ் விதியை இரத்து செய்ய வைத்தார். இதனால் பிராமணரல்லாத மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பினைப் பெற்றனர். இந்த வரலாற்று உண்மையை உணராமலேயே, சிலர், “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று மேடை ஏறி முழங்கு கின்றனர் இன்று. அவர்கள் செய்ந்நன்றி கொன்றவர் ஆவர்.

பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பது தியாகரா யரது அரசியல் நெறி என்ற போதிலும், தனிப்பட்ட எந்த ஒரு பிராமணர் மீதும் வெறுப்பி னைக் காட்டியவரல்லர்; அவர் களிடத்தில் மனிதாபிமானத் தோடு நடந்துகொண்டவர் சர். பிட்டி. தியாகராயர்.

அவரது இல்லத்தில் ஏழை பிராமணச் சிறுவர்கள் சமஸ் கிருதமும் வேதங்களும் பயில அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

யஞ்யராமன் என்ற பிராமண இளைஞர், தாழ்த் தப்பட்டவர்களுக்காகத் தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய்த் தங்கினார் என்பதற்காக அவரைச் சாதியிலிருந்து விலக்கி வைத்தனர், பிராமண சாதி வெறியர். அம்மட்டோ! அவர் பார்த்து வந்த வேலை யிலிருந்தும் அவரை நீக்கிவிட்டார்கள். அப்போது தியாகராயர் தலையிட்டு அவரைப் பச்சையப்பன் கல்லூரி யில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்வித் தார். இது அவரின் மனிதாபிமானச் செயலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

வெள்ளுடை வேந்தர்

தியாகராயர் எப்பொழுதும் நெற்றியில் திருநீறோடும், மலர்ந்த முகத்தோடும் காட்சி தருபவர். அரிமா நோக்கும், பீடு நடையும், அஞ்சாநெஞ்சும் கொண்டு திகழ்ந்தார்.

அறிவும் உணர்வும் பெற்ற நாள்முதல் முடிவினை முத்தமிடும் நாள் வரை என்றும் எப்பொழுதும் தூய வெண்ணிற ஆடையே அணிந்து உள்ளத் தூய்மையை வெளிப்படுத்திய ஏந்தல், அவர். எக்காரணம் கொண்டும், எவர் வற்புறுத்தலுக்கும் செவி சாய்த்துத் தான் அணியும் வழக்கமான வெள்ளுடையை மாற்றிக்கொண்டதில்லை.

ஒரு சமயம் சென்னை ஆளுநர் நடத்திய அரசு விருந்துக்குத் தியாகராயர், தாம் இயல்பாக அணியும் வெள்ளுடையிலேயே சென்றார்.

விருந்து மாளிகை முன் காவலில் இருந்த இராணுவப் பாதுகாவலர், விருந்துக்கு வருவோர் விருந்துக்கெனக் குறிப்பிட்ட மேனாட்டு உடை அணிந்து வரவேண்டும் என்பது நியதி என்று தியாகராயரிடம் வணக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார். அந்நியதியைக் கடைபிடித்தே விருந்துக்கு வருதல் வேண்டும் என்பது ஆளுநரின் ஆணை என்றும் கூறினார். தனக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்துவதாகவும், மன்னிக்கு மாறும் வேண்டினார்.

இதைக்கேட்ட தியாகராயர், காவலரிடம், ‘வருந்தற்க, நியதியையும், ஆளுநரின் ஆணையையும் மதிக்கிறேன்’ என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார்.

தியாகராயர், திரும்பி வருவதன் காரணத்தை அறிந்த ஐரோப்பியப் பிரமுகர்கள், ‘அவசியமில்லை; எங்களுடன் வாருங்கள்; யாரும் ஏதும் கூறமாட்டார்கள்’ என்று கூறி அழைத் தார்கள்.

தியாகராயர், சிரித்து, ‘வர இயலாது; நியதி, சட்டம், கட்டளை என்பனவற்றை மதித்து நடப்பதே மனிதனுக்கு அழகு’ என அவர் சுட்டிக் காட்டினார்.

தியாகராயரது வெள்ளுடை ஆர்வத்தையும், நாட்டுப் பற்றையும், அவரது தன்மான உணர்வையும் கண்ட ஐரோப் பியர்கள் வியந்து போற்றினார்கள்.

நடந்த நிகழ்வுகளை விருந்தினர் ஆளுநரிடம் தெரிவித்தனர். அதனைக்கேட்ட ஆளுநர் மிகவும் வருந்தினார். இந்தியப் பிரமுகர்கள், அவர்கள் விரும்பும் இந்திய உடை அணிந்தே அரசு விழாக்களில் கலந்துகொள்ளலாம் என்று புதிதாக ஆணை பிறப்பித்தார். இப்புதிய ஆணையைத் தியாகராயருக்குத் தெரியப் படுத்தி விருந்தில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். தியாகராயரும் ஆளுநரைப் பாராட்டி விருந்தில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்.

அரசியல் ஈடுபாடு

கல்வி வளர்ச்சியிலும், தொழில் வளர்ச்சியிலும், அறச் செயல் புரிதலிலும் முழு ஈடுபாடு கொண்டு புகழுடன் விளங்கி னார். பின்னர் அரசியலில் தொண்டாற்றவும் முனைந்தார். அரசியல், மூலதனம் இல்லாமலே நடத்தப்பெறும் வணிகமாக இன்று மாறிவிட்டது; பலர் அரசியல் செய்து பெரும் செல்வந் தர்களாக மாறியுள்ளனர்.

ஆனால் அந்நாளில் தியாகராயர் போன்றோர் அரசியலால் தங்கள் செல்வத்தை இழந்தவர் ஆவர்; சொத்து சேர்க்க வில்லை. அறவுணர்வோடு தொண்டாற்றுவதையே உயிர்க் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டார்.

இவரது அரசியல் தொண்டு 1882-லிருந்து விளங்கத் தொடங்கியது. 1885ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தேசியக் காங்கிரசு தோற்றுவிக்கப்பட்டது. 1916ஆம் ஆண்டு வரை அவர் தீவிர காங்கிரஸ்காரராகவே செயல்பட்டார். 1914இல், இந்தியத் தேசியக் காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னை யில் நடைபெற்றது. தியாகராயர் அம்மாநாட்டை முன்னின்று சிறப்பாக நடத்தினார். சென்னை வந்திருந்த மகாத்மா காந்திஜிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார்.

நகர அவையில் அவர் ஆற்றிய தொண்டு

இளங்கலைப் பட்டம் பெற்ற 1876ஆம் ஆண்டிலிருந்து ஓரிரு ஆண்டுகளிலேயே தியாகராயர் பொதுத் தொண்டில் நாட்டங்கொண்டு பொது வாழ்வில் கால்பதித்தார்.

1882ஆம் ஆண்டு மே திங்கள் 6ஆம் நாளன்று நடை பெற்ற நகர அவைத் தேர்தலில், தண்டையார் பேட்டைவாழ் மக்களின் விருப்பிற் கிணங்கிப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று 1925 வரை நடைபெற்ற நகரவைத் தேர்தல் அனைத்திலும் தண்டையார் பேட்டை வேட்பாளராக நின்று வாகை சூடினார்.

சுமார் நாற்பத்திரண்டாண்டுக் காலம் தொடர்ந்து நகரவை உறுப்பினராக இருந்துவரும் பெருஞ் சிறப்பைத் தியாகராயர் பெற்றிருந்தார். நாற்பத்திரண்டாண்டுகளுக்கு மேல் சென்னை நகர மக்களுக்கு அரிய தொண்டாற்றி அவர்களுடைய பாராட் டையும் நன்மதிப்பையும் பெற்ற ஒப்பற்ற நகரத் தந்தை ஆவார். இவர் காலத்தில் சென்னை நகரம் சிறப்பான வளர்ச்சி யைப் பெற்றிருந்தது.

1910-1912ஆம் ஆண்டுகளில் மாநகராட்சிப் பிரதிநிதி என்ற முறையில் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுத் தொண்டாற்றினார்.

முதலில் தென்சென்னைக்கு மட்டுமே டிராம் வண்டிப் போக்குவரத்து வசதி இருந்தது. தியாகராயர், டிராம் வண்டிப் போக்குவரத்து வசதியை சென்னையின் பல்வேறு பகுதிகளுக் கும் விரிவுபடுத்தினார்.

சென்னை நகரின் சில தெருக்களில் மட்டுமே அந்நாளில் மண்ணெண்ணெய் விளக்குகள் சுடர்விட்டு எரிந்தன. 1912ஆம் ஆண்டில் தியாகராயர் சென்னை நகருக்கு பதின்மூன்று இலட்சம் ரூபாய் செலவில் மின்விளக்குகள் அமைக்கத் திட்டத் தைத் தீட்டிச் செயல்படுத்தினார்.

தியாகராயர் தன் பதவிக் காலத்தில் சென்னை நகரச் சிறார்கள் கல்வி வசதி பெறத் தொடக்கப் பள்ளிகள் எல்லாப் பகுதிகளிலும் தோற்றுவித்தார். ஏழைச் சிறார்கள் தொடர்ந்து கல்வியினைப் பெற நகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு தருவதற்கும் ஏற்பாடு செய்தார். இதனால் பாதியில் பள்ளியை விட்டு நிற்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. மாண வரிடையே கல்வி பயிலும் ஆர்வம் தூண்டப்பட்டது.

நகரவை மருத்துவத் துறையில் மகப்பேறு இல்லங்கள் அமைத்து நடத்திவர வழிவகுத்தார். ஆங்கே பணிபுரியும் பெண் பேறுகால உதவுநர்களுக்குச் (Mid-Wife) சிறப்புப் பயிற்சி அளிக்கச் செய்தார். ஆங்கில முறைப்படி பயிற்சி பெற்ற செவிலி யர்களையும் மருத்துவர்களையும் நியமித்தார். இதன்மூலம் மக்கள் நலத்தில் அவர் கொண்டிருந்த அக்கறை வெளிப்பட்டது.

அவர் நகரவைத் தலைவராக இருந்த போது எல்லாப் பகுதிகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் தரப்பட்டன.

அக்காலத்தில் (1913) அறப்பணியாகக் கோவில் குளங் களுக்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டும் என்ற நியதியை நகரவை மேற்கொண்டிருந்தது.

சென்னை மாநகராட்சியின் உறுப்பினராய் இருந்த டாக்டர் டி.எம். நாயர், “கோவில்களுக்கு நிறைய வருமானம் கிடைப்பதால் அவை தண்ணீர் வரி கட்டுவ தில் சிரமம் ஏதும் இருக்காது” என்று பேசினார். தியாக ராயர் கோவில்களுக்குத் தண்ணீர் வரி வசூலிக்கக் கூடாது என்றார். இதனால் தியாகராயருக்கும் நாயக்கருக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளம் பாசிப்படர்ந்து பாழடைந்து கிடந்தது கொசுப் பெருக்கத்தால் நோய் பரவ வாய்ப்பாய் அமைந்திருந்தது.

சென்னை மாநகராட்சியின் உறுப்பினராய் இருந்த டாக்டர் டி.எம். நாயர், “நகர மக்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு பார்த்தசாரதி கோயில் குளத்தை மண்கொட்டி மூடி அங்கே பூங்கா நிறுவிட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

“தெப்பக்குளத்தை சுத்தம் செய்து செப்பனிடுவதை விட்டுவிட்டு மூடுவதா” என்று சர். பிட்டி. தியாகராயர் வெகுண்டெழுந்து நாயரின் தீர்மானத்தைத் தோற் கடித்தார். இதனால் இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, நட்பில் தொய்வு ஏற்பட்டது. சிறிது காலம் பேசிக் கொள்ளாமலிருந்தனர்.

அவர் காலத்தில், கூவம் நதியைச் சீர்செய்ய வேண்டும் என்று முயற்சித்தார். அரசு இதில் மிகுந்த அக்கறை கொண்டு திட்டம் தீட்டிச் செயற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் வில்லிங்டன் பிரபுவிடம் தன் இறுதி நாள் வரை வற்புறுத்தி வந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டது.

அரசியல் ஈடுபாடும் தொண்டும்

இந்தியத் தேசியக் காங்கிரசில் தியாகராயர், தன் நண்பர் டாக்டர் டி.எம். நாயருடன் இணைந்து 1916ஆம் ஆண்டு வரை தீவிரமாகச் செயலாற்றி வந்தார். அப்போது இருவருமே காங்கிரசு இயக்கத்தில் வடவர் ஆதிக்கமும் பிராமணர் ஆதிக்கமும் மிகுந்திருந்ததை உணரத் தலைப்பட்டனர்.

அரசுப் பணிகளிலும், காங்கிரசு செயற்குழுவிலும், பிராமணரல்லாதாருக்கும் உரிய பங்கு தந்து பயனடையச் செய்வது காங்கிரசின் நேர்மையான கடமையாகும் என்று தியாகராயர் வற்புறுத்தி வந்தார்.

இந்தியாவை ஆட்சி புரிந்தவர்கள் ஆங்கிலேயர் என்ற போதிலும், நடைமுறையில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர் என்பதைக் காலப்போக்கில் உணரத் தொடங்கி னார். தேசியக் காங்கிரசுக் கட்சி பிராமணர்களின் நலனுக் காகவே இயங்கி வந்தது என்பதையும் உணர்ந்தார். அரசுப் பணிகளிலும் கல்வி வாய்ப்பிலும் பெரும் பங்கு பிராமணர்க்கே உரியதாக இருந்து வந்துள்ளதை அறிந்து, உளம் கொதித் தெழுந்தார்.

தியாகராயர் அரசியல் உலகை பிராமணர் ஆதிக்கத்தி லிருந்து விடுவிக்கும் வழிவகைகளைச் சந்தித்திருந்தார். அதற்குரிய காலத்தையும் எதிர்பார்த்திருந்தார்.

நகரவை நிகழ்வுகளால் கருத்து வேறுபாடு கொண்டு சிறிதுகாலம் நாயரும், தியாகராயரும் பேசிக் கொள்ளா திருந்தனர். இவர்கள் மீண்டும் இணைவதற்கு ஏற்ப இருவர் வாழ்விலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவை :

தியாகராயர், பெரும் செல்வந்தர், சிறந்த வணிகர், பொது மக்களால் போற்றப்பட்ட சென்னை நகரவை உறுப்பினர் என்ற பெருமைகள் பெற்றிருந்தவர், என்ற போதிலும், சென்னை மயிலாப்பூர் கோவில் விழாவில் உரிய மதிப்பினை பிராமண விழாக் குழுவினர், தியாகராயருக்கு, சூத்திரர் என்பதால் தராது அவமதித்துவிட்டனர்.

அதனால் வெகுண்டு வெளியேறிய தியாகராயர், நேராக டாக்டர் டி.எம். நாயர் இல்லம் ஏகி நட்பினைப் புதுப்பித்துக் கொண்டார்.

டாக்டர் டி.எம். நாயரும், பிராமணர் சூதினை, வஞ்சகத்தை, துரோகத்தை சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் உணர்ந்து சீற்றம் கொண்டிருந்தார்.

1916ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்திற்கு (இம்பீரியல் சட்டமன்றம்) சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்களி லிருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். டாக்டர் நாயர் இப்பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பி அனைத்து நண்பர்களின் ஆதரவையும் வேண்டி நின்றார். ஆதரவு தருவதாக உறுதி அளித்த பிராமண நண்பர்கள் இறுதியில் திட்டமிட்டு நாயருக்குத் தோல்வியையே பரிசாகத் தந்தனர்.

மேலும்-1916ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திராவிடத் தலைவர்கள் டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர் ராமராய நியங்கார், கே.வி. ரெட்டி நாயுடு, சர்.பி.தியாகராயர் ஆகியோர் காங்கிரசுக் கட்சியினரால் வஞ்சிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டனர்.

சர். பிட்டி. தியாகராயரும், டாக்டர் நாயரும், ‘இனி காங்கிரசுக் கட்சியால் பிராமணரல்லாத மக்கள் எந்தப் பயனும் அடைய முடியாது’ என்பதை நன்கு உணர்ந்தனர். காங்கிரசுக் கட்சி பார்ப்பனர் பிடியில் வசமாய்ச் சிக்கி உள்ளது எனக் கண்டு, உளம் நொந்து வெறுப்புற்று அக்கட்சியிலிருந்து வெளியேறி னார்கள். அப்போது அவர்களைக் கடுமையாக விமர் சித்து அறிக்கை வெளியிட்ட பெரியார், பின் நாளில் அதே காரணத்திற்காக காங்கிரசைவிட்டு வெளியேறித் தீவிரமாகக் காங்கிரசை எதிர்த்திட்டார்.

காங்கிரசைவிட்டு விலகிய பின்னர், பார்ப்பனரல்லாதார் நலன்களைக் காப்பதற்கு வழிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கோடு, 1916 நவம்பர் 20ஆம் நாளன்று சென்னை விக்டோரியா பொது அரங்கில், சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி. நடேசனார், மேலும் ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கூடி, “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” (நீதிக்கட்சி) (S.I.L.F.) என்ற அரசியல் அமைப்பினைத் தொடங்கினர். இவ்வியக்கத்தின் தலைவ ராகத் தியாகராயரையே தேர்வு செய்தனர்.

தியாகராயர் இயக்கத்தின் சார்பாக வெளியிட்ட ‘பிராமணரல் லாதார் கொள்கை விளக்க அறிக்கை’, பிராமணரல்லாத மக்களிடைய பெருமளவிற்கு விழிப்புணர்ச்சியைத் தோற்று வித்தது. அவர்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கும் திட்டங் களுக்கும் பேராதரவு தந்தனர். நீதிக்கட்சி இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகி யோருக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வேண்டும் என்றும், அரசுப் பணிகளிலும், கல்விச் சாலைகளிலும் இடஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என்று கோரியது.

சர். பிட்டி. தியாகராயரின் தன்னலமற்ற சேவையின் பயனால், நீதிக்கட்சி மக்களின் பேராதரவையும் நம்பிக் கையும் பெற்று, 1920 நவம்பர் 20இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் சிறப்பான வெற்றி யைப் பெற்றது.

அன்றைய ஆளுநர் வெல்லிங்டன் பிரபு, நீதிக்கட்சியின் தலைவர் சர். பிட்டி. தியாகராயரை ஆட்சி அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தியாகராயர் முதல்வர் பதவியை ஏற்காமல், கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தார். கொள்கை உறுதி கொண்ட உள்ளம் படைத்தவர் நெஞ்சில், பதவி ஆசை கோலோச்சுவதில்லை அன்றோ!

அவர் முதலமைச்சர் பதவியை நாடவில்லை. என்பதை விளக்கி ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டது : “இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லை எனும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டி எழுப்பிய பாவத்திற்காக என்னையும் அகால மரண மடைந்த என் அருமை சக தலைவர் டாக்டர் டி.எம். நாயரை யும், “வெள்ளையன் வால் பிடிப்பவர்கள்” என்று காங்கிரசுப் பத்திரிகைகளும் தலைவர்களும் தூற்றுகின்றனர். நான் இப்பதவியை ஏற்பின் எனது புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். இதனால் பதவி ஏற்கமாட்டேன்” என்று விளக்கியிருந்தார்.

வேல்ஸ் இளவரசர் (எட்டாம் எட்வர்ட்) 17.1.1922இல் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது சென்னை துறை முகத்தில் நகர மக்கள் சார்பில் இளவரசரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆளுநர் வெலிங்டன் பிரபு, சென்னை மாநகராட்சித் தலைவர் தியாகராயரை மேனாட்டு உடையணிந்து இளவரசரை வரவேற்கும்படி கேட்டுக்கொண்டார். தியாகராயர் அதற்கு உடன்படாமல், மாநகராட்சித் துணைத் தலைவரைக் கொண்டு வரவேற்புரையை வாசிக்க ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கினார். ஆளுநர் அதற்கு உடன்பட வில்லை. வெள்ளுடை அணிந்தே தியாகராயர் வரவேற்புரையை வாசித்தளிக்க ஆளுநர் இசைந்தார்.

காங்கிரசுக் கட்சியினர், இளவரசருக்கு வரவேற்பளிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தியாகராயருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். தியாகராயர் இல்லத்திலும் கல் லெறிந்து கலகம் விளைவித்தனர்.

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதைத் தடுத்துத் தீர்மானம், தியாக ராயர் தலைமையில் 9.5.1922இல் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி மன்ற தலைமைப் பதவியிலிருந்து 23.10.1923 அன்று விலகினார்.

“போக போக்கியத்தை விட்டுத் தாமாகவே கள்ளும் முள்ளும் காட்டாறும் கருங்குழியும் நிரம்பிய பாதை வழியே செல்லத் தொடங்கினார். அவர் களத்தில் தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின்கீழ் நின்று தான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம்” என்றார், அறிஞர் அண்ணா.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்பதற்கிணங்க, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர்; எதற்கும் எவர்க்கும் அஞ்சாது மனச் சான்றுக்குத் தோன்றுவதை மறைக்காது உள்ளது உள்ள படியே பேசிடும் உத்தமர். அரசியல் தலைவர்களில் இப்படி ஓர் ஒப்பற்ற தலைவரைக் காண்பது அருமையிலும் அருமை யாகும்.

தியாக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகச் செம்மல்-திராவிட மக்களின் பெருந்தலைவர் 28.4.1925 அன்று மக்களைத் துன்பக் கடலில் ஆழ்த்திவிட்டு இப்பூவு லகை விட்டு மறைந்தார்.

தியாகராயர் கட்டிக்காத்த கடமையையும், அவர் கொண்டிருந்தஅரசியல் பண்பையும் நாகரிகத்தையும் போற்றி அவர் வழிநடக்க உறுதி கொள்வோம். வாழ்க, அவர் புகழ்!

28.4.2017 அன்று தியாகராயர் நினைவு போற்றும் நாள்!

Pin It