அரசியல் சமுதாயம் சாதியொழிப்பு முகாம்கள் இப்படி எங்கு திரும்பினாலும் சாதியாகவே இருக்கும் ஒரு சமுதாயத்தில் இந்தச் சாதியமைப்பை வெறுக்கும் ஒரு தனிநபர் நான் சாதியற்றவர் என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பது மிக மிக இயல்பானது. நிச்சயமாக அப்படி ஒரு வெறி நமக்கு வரத்தான் செய்யும். அப்படியொரு மனநிலையின் வெளிப் பாடுதானோ என்னவோ தோழர் சிநேகா தான் சாதியற்றோர் என்கின்ற சான்றிதழைப் பெற்றது.

sneha castelessஆனந்தகிருஷ்ணன் - மணிமொழி தம்பதியரின் மூத்த மகள் நான். காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா எனப் பெயரிட்டனர். அம்மாவின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்தது அப்பாவின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனேன்....

இது சிநேகா அவர்கள் தன்னைப் பற்றி கூறியிருக்கும் வரிகள். ஓர் ஆழமான கருத்தியலுக்குச் சொந்தக்காரர் என்பதை இவ்வரிகள் நமக்கு பறைசாற்றுகின்றன. மேலும் ஒரு கொள்கைப் பாரம்பரியம் உள்ள குடும்பத்தின் வழித்தோன்றல் என்பதும் தெளிவாகிறது. இவரை இப்படியொரு சாதியற்றோர் சான்றிதழ பெறத் தூண்டியது எதுவென அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம் முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர்.....

இப்படி தான் தொடங்கியது என் முதல் பிரச்சாரம்....

பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை....என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் அவ்வண்ணமே வளர்த்தனர்.... என் இணையர் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழா சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம்.... ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி எனப் பெயரிட்டு எங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்க்கிறோம்.....சாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் இந்த அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம்....

வாழ்வில் சாதி தன்னை வெளிப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் அதனை மறுத்தும் அதற்கு எதிரிடையான வினைகள் புரிந்தும் தனது ஆழமான சாதி எதிர்ப்பு உணர்வை சமுதாயத்தில் பதிவு செய்பவராக அவர் இருந்திருக்கிறார். இருக்கிறார். இந்த இடம் வரை அவருடைய வாழ்க்கையும் என்னைப் போன்ற சுயமரியாதை இயக்க திராவிட இயக்கக் குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பலரது வாழ்க்கையும் ஒன்று பட்டு நிற்கின்றன. தனது அகவாழ்வில் இதனை விட தீவிரமான சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த பலரையும் நாங்கள் சந்தித்தே இருக்கிறோம்.

தனது சாதித் தொழிலை செய்ய மறுத்தவர்கள். தனது சாதித் தொழிலை பிற சாதியினர் செய்வதற்கு ஏதுவான வேலைகள் செய்ய முற்பட்டவர்கள். சாதி மறுப்புத் திருமணத்திற்காக கொடுப்பதற்கரிய விலை பலவற்றை கொடுத்தவர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு போகும்.... அது மட்டுமல்ல அவ்வாறு செய்ய முடியாத நிலையில் உக்கி உருக்குலைந்தோரையும் நான் பார்த்திருக்கிறேன். என் தாத்தா முத்துச்சாமி அவர்களின் நண்பர் பெயர் மணி. சைக்கிள் கடை வைத்திருந்தார். ஏழ்மை அவருக்கு நிரந்தர நண்பனாக இருந்தது. பெண்ணுக்குச் சாதி மறுப்புச் சுயமரியாதைத் திருமணம் செய்ய ஆசை. வெறும் கொள்கையை வைத்துக் கொண்டு நின்ற அவரிடம் பெண் எடுக்கும் அளவுக்குக் கொள்கைவாதிகள் கிடைக்கவில்லை. தனது சொந்த சாதியில் கோவிலில் திருமணம். பத்திரிகை கொடுக்க வந்தவர் அழுதார். கோவில்ல வைக்கிறதையாவது நிறுத்தலாம்னு பார்த்தேன். முடியலை என்று சொன்னவரால் மேலே பேச முடியவில்லை. நான் அப்போது சிறுமி. அவரின் கண்ணீர் என் நினைவுகளில் பதிந்து போனது.

தெருக்களில் பள்ளிக் கூடத்தில் இப்படி கால் வைத்த இடத்திலெல்லாம் படைச்ச சாமியை இல்லைன்னு சொல்ற.... நீ எப்படி நல்லாயிருக்கப் போறேன்னு இந்த சமுதாயம் பலவாறாகக் கேட்ட கேள்விகளிலும் கேள்வி என்கின்ற பெயரில் ஏவப்பட்ட ஏச்சுக்களையும் கடந்து சீரணித்துதான் எங்களைப் போன்றோரின் வாழ்க்கை நின்று கொண்டிருக்கிறது. நான் படித்த பள்ளிக் கூடத்தில் அதன் பொது அசெம்பிளியில் கடவுள் எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்து என்னை ஆட்கொள்ள வேண்டுமென்று ஜெபித்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அவர்களின் கடவுளுக்கு அவர்கள் பிரார்த்தனை இன்னும் கேட்கவேயில்லை. பாவம் அந்த ஆசிரியர்கள் எனக்காக எத்தனை முறை ஜெபித்தார்கள்?

இந்தச் சமுதாயத்தில் சாதியை, மதத்தை எப்படி மறுப்பது?

வாழும் முறையிலேயே சாதியை மறுக்கும் புது வாழ்க்கை நெறி தந்தவர் பெரியார். பொட்டு வைக்கவில்லை ... கிறித்துவரா என்பார்கள் இல்லை என்போம். இஸ்லாமியரா என்பார்கள் இல்லை என்போம். இப்போதுதான் பள்ளிக் கூடத்தில் மட்டும் கேட்கிறார்கள். அப்போதெல்லாம் பேருந்துக்குக் காத்திருக்கையில் கூட கேட்பார்கள். பேருந்தில் அமர்ந்திருக்கும் போதும் கேட்பார்கள். யார் வேண்டுமானாலும் கேட்பார்கள். நீ யார் கேட்பதற்கு என்று யாரையும் நாங்கள் திருப்பிக் கேட்டதில்லை. அந்தக் கேள்விக்குக் காத்திருப்பவர்கள் போல் பதிலளிப்போம். மதம் இல்லை என்று சொல்வோம். ஆம் மதமறுப்புப் பிரச்சாரத்தை நெற்றியிலேயே வைத்திருக்கிறோம் நாங்கள்.

sneha with casteless certificateபொட்டு, பூ, நகை துறக்கச் சொன்னார் பெரியார். துறந்த இடங்களிலெல்லாம் கேள்விகள் வந்தன. மதமறுப்பு சான்றிதழாய் வாழ்ந்தோம் வாழ்கிறோம் நாங்கள். தாலி கட்டவில்லையே அப்ப உன்னைக் கல்யாணமானவன்னு நாங்க எடுத்துக்க வேண்டிய அவசியமில்லையேன்னு கேட்டவனையெல்லாம் எதிர்கொண்டுதான் நீ கட்டாத தாலியை நான் ஏண்டா கட்டணும்னு கேட்டோம். எங்களைக் காப்பாத்த தாலி வேண்டாண்டா செருப்பு போதும்னு சொன்னோம். பொறுக்கி மட்டுமல்ல போலீசும் அதே கேள்வியைத்தான் கேட்டது. இப்போது பிரபலமாக இருக்கும் எங்கள் தோழர்களில் ஒரு தம்பதியர் ஒருமுறை இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்கு போய்விட்டு வந்து போலீஸ் ஸ்டேசன்ல போய் உட்காரும்படி ஆகி விட்டது. தாலி இல்லைன்னா கணவன் மனைவின்னு எப்படி நம்புறதுன்னு கேட்டார் அந்தக் காவல்துறை அதிகாரி......ஒருமுறை இன்னொரு தோழர் ஒருவர் அலுத்துப் போய் சரி அண்ணன் தங்கச்சின்னு சொல்றேன். அதையாவது நம்பு. அதுக்கு தாலி வேணாம்ல. ஆளை விடு என்றார்.

இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேட்கிறீங்களா...? சாதியும் மதமும் அதற்கு எதிர்மறையாய் மாத்தி வாழ்ந்து காட்டி தீர்க்க வேண்டிய சமுதாய நோய்கள். நான் மேலே குறிப்பிட்ட சூழல்கள் மாறியிருக்கலாம். ஆனால் முடிந்து போய் விடவில்லை. சரி. இப்போது மறுபடியும் சிநேகாவிடம் வருவோம். அவரின் புரிதல் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ்... என்று தொடங்கியிருக்கிறார். அப்படியென்றால்...? இந்த இடத்தில் சாதிச் சான்றிதழ் பற்றி நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. சாதி சான்றிதழ் சாதி ஒழிப்பு இயக்கத்தவரால் தோற்றுவிக்கப் பட்டது. அது சாதியொழிப்புப் பணிக்கு ஆதாரமானதே யொழிய சாதி அமைப்பின் ஆதாரமுமல்ல அடையாளமுமல்ல. சாதி அமைப்பின் அடையாளம் என்கின்ற முத்திரையை அதற்குத் தருவது பேராபத்து.

சரி. இந்தச் சான்றிதழால் இவர் என்ன சமூகச் செயற்பாட்டை ஏற்படுத்த நினைக்கிறார் என்பதும் நமக்குப் புரியவில்லை. அடுத்து இந்தச் சான்றிதழ் என்ன அடிப்படையில் வழங்கப் பட்டது சாதியற்றோர் என்கின்ற வார்த்தைக்கான வரையறை என்ன என்பதும் வெளிப் படுத்தப் படவில்லை. சாதியை மறுப்போர் அல்லது பள்ளியில் சாதி சொல்ல விரும்பாதவர்கள் சாதியற்றவர்கள் என்று வகுக்கப் பட்டால்.. முடிந்தது கதை. பிறகு அம்பேக்கர் சிலைக்கு அடியில் உட்கார்ந்து நாம் அழத்தான் வேண்டும்.

சட்டப்படி பள்ளியில் சாதி சொல்ல விரும்பாதவர்கள் சான்றிதழில் சாதியற்றோர்தான். அவர்கள் தாராளமாக சாதியில்லாமல் பள்ளியில் சேர முடியும். தனியார் பள்ளிகள் இதனைக் கடைப் பிடிக்க மறுக்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும். யார் சட்டப்படி நடக்கவில்லையோ அவர்களைத் திருத்த வேண்டும். அதை விட்டு விட்டு சாதியற்றோர் என்கின்ற சான்றிதழ் எதற்கு?

இதில் மதமற்றோர் என்பதையும் சாதியற்றோர் என்பதும் இருவேறு விசயங்கள். இதெல்லாம் இருக்கட்டும் சாதியில்லை என்பது முற்போக்குதானே? எதுக்கு இவ்வளவு பஞ்சாயத்து? நல்லது நடக்க விடமாட்டீங்களா என்கின்ற ரேஞ்சுக்கு பேசத் தொடங்கிடாதீங்க. கமலகாசன் பாராட்டு ....சார்பதிவாளர் பிரியங்கா பங்கஜம் வழங்கிய சான்றிதழ்..... சாதி ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஒரு புரட்சியின் தொடக்கம் என்றுரைத்திருக்கும் மோடி.... கொஞ்சம் நிதானமாக விவாதிக்கலாமே?

Pin It