தற்போதைய சூழலில் உலகம் முழுக்க உள்ள ஏழைகள் உணவிற்காகத் திண்டாடி, அவர்களுடைய வாழ்வாதாரமும் நடுநிலையற்று சென்று கொண்டிருப்பதால் அவர்களுக்கான புதிய பொருளாதார மேம்பாட்டுக் கொள்கையும், சமூக ஜனநாயக அணுகுமுறையும் அவசியம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்று ஒட்டுமொத்த உலகிலும் வாழ்வதற்குச் சரியான சூழல் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், புதிய தாராளவாத முதலாளித்துவக் கொள்கையில் அரசின் கவனம் இருப்பதுதான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள இவ்வளவு இழப்புகளைத் தொடர்ந்து சந்திக்க வேண்டிய அவல நிலை ஆறு மாதங்களாக நீடிக்கிறது. சில நூற்றாண்டுகளாக நாம் எத்தனையோ தொற்றுகளைச் சந்தித்து வந்தாலும், சுகாதாரம் மற்றும் இயற்கை சார்ந்து கவனம் கொள்ளாமல் இருப்பதும், முதலாளித்துவத்தின் சொந்த நலனிற்காகக் கட்டியமைத்த கட்டமைப்பு சிதைந்து வருவதை மீண்டும் அவர்கள் அதே வேகத்தில் கட்டியமைக்க முடிந்தாலும், புவிவெப்ப மயமாதல் மற்றும் உலகின் துருவப் பகுதியான அண்டார்டிக்கா, இமயமலைப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி தெற்காசியா முழுவதும் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறிவிடும் நிலைமை வெகுதொலைவில் இல்லை.
கொரோனா காலத்தில் அனைத்து முதலாளிகளின் கட்டமைப்புகள் சற்று சிதைக்கப்பட்டிருப்பதால் சில நன்மைகளைப் பார்க்கிறோம். உலக மக்கள் அனைவரும் சரியான சூழலை உருவாக்கி வாழ முற்படத் தயாராகி இருப்பதும், ஒன்று சேர்வதும் முக்கிய நிகழ்வாகும். இது ஒரு வித அடிப்படையில் மார்க்சிய கூற்றுபோல் தோன்றுகிறது, "மாற்றமே நிலையானது" என்பதை முன்னெடுத்துச் செல்கிறது காலம்.
முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவின் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஐரோப்பாவின் யானிஸ் வாரோஃபாகிஸ் ஆகியோரால் துவக்கப்பட்ட முற்போக்கு சர்வதேசத்துடன் ஒன்றிணைவு, சர்வதேச அளவில் நடந்து வருகிறது . இப்போது கிழக்கு உலகமும் அதில் இணைந்து வருவது முதலாளித்துவ எதிர்ப்பிற்கு மிகப் பெரிய பலமாகும்.
மக்கள் வரிப்பணத்தில் மானியம் பெறும் மருந்து நிறுவனங்கள் பெரும் லாபத்தை மட்டும் பார்த்து வருவதும், மக்களுக்காகச் செயல்பட முடியாமல் முதலாளித்துவத்தின் பிடியில் இருக்கும் நிலைகள் மாறி விரைவில் சமூக உடைமையாக்கப்பட வேண்டும். மருத்துவம் மட்டும் இல்லாமல், கல்வியும் நம் நாட்டில் தனியார் வசமிருந்து பொதுவுடைமைக்கு மாற வேண்டும், மாற்ற வேண்டும்.
வளர்ந்த நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவை நாம் ஒப்பிடத் தேவையில்லை, மக்களுக்காகச் செயல்படாத எந்த நாடாய் இருந்தாலும் பேரிடர் காலங்களில் திணறிக் கொண்டு இருப்பது, அதற்கான பின்னடைவையும் முதலாளித்துவத்தின் அழிவுப் பாதைக்கும் வழி வகுத்து விடும், கறுப்பினத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் மற்றும் தொற்றை சரியாகக் கையாளத் தெரியாமல் திணறுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்ததை நாம் பார்க்கிறோம். தொழில்நுட்பம் அதிகம் இருந்தும் இத்தொற்று நோய் கட்டுப்பாடு இல்லாமல் அழிவிற்கு வழிவகுத்து விட்டது.
ஜனநாயகம் என்கிற போர்வையில் தனியார்வச கட்டமைப்புகளில் அதிக அக்கறை காட்டி வரும் நம் நாட்டுப் பிரதமர் மோடியின் கொள்கையில் இந்தியா திணறிக் கொண்டிருப்பது இன்றைய சூழலில் பெரிய நெருக்கடி. உலக நாடுகளே முடங்கி உள்ள இந்த காலகட்டத்தில் பிற நாடுகளை நாம் சார்ந்து வாழக் கூடாது என்கிற படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்த ஆண்டு.
சமூகப் பொருளாதார அமைப்பு முதலாளிகளின் பிடியில் இருப்பதால் எதிர்காலத்தில் மனித குலம் வாழும் இருப்பிடமாக பூமி இருக்குமா என்கிற சந்தேகத்துடன் கூடிய இந்தக் கேள்வியிலிருந்து நாம் தெரிந்து கொள்வதெல்லாம், பூமியை எப்பொழுதும் மனிதன் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதை அறிவித்துவிட்டது இந்த வைரஸ் தொற்று. பொருளாதாரத்தை எப்பொழுது ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறோமோ அப்பொழுதுதான் அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதாவது முதலாளித்துவத்தின் குவித்தல் அடிப்படையில் செயல்படும் பொருளாதாரக் கட்டமைப்பை உடைத்தால் மட்டும் மக்கள் பலனைப் பெற முடியும்.
மூலதனத்தின் பொருளாதார குவித்தலுக்கு எதிராகவும், உற்பத்தி சக்திகளின் உயர்மட்ட வளர்ச்சிக்குத் துணையாக நிற்கும் இயற்கை வளக் கொள்ளையடிப்பிற்கும் எதிராக நிற்பது சோசலிசம். பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளில் மனித வளம் சீர்குலையும் பொழுது தானாகவே முதலாளித்துவம் சிதைந்து அழிய ஆரம்பிக்கும். அதை இந்த ஆண்டில் பல்வேறு படிநிலையில் தீவிரப்படுத்தியுள்ளது இந்தப் பேரிடர் தொற்று.
இப்படியே மூலதனக் குவித்தலில் அதிக ஈடுபாடு காட்டும்பொழுது , இன்னும் இதைவிடக் கடுமையான பேரிடரில் சிதைந்து தரைமட்டமாகி விடுவார்கள் முதலாளிகள். இந்த பூமி பிழைத்திருக்க இடதுசாரி சிந்தனையுள்ள மனிதர்கள் நீண்டதொரு புரட்சியின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இயற்கையானது மூலதனத்தின் இயக்கவிதியை எதிர்த்து நகர ஆரம்பித்து விட்டது. இந்த முதலாளித்துவ கட்டமைப்பைக் கடந்து சென்று நிச்சயமாகப் பூமியை முற்போக்கு சர்வதேசியமாக மாற்ற, புதிய வடிவங்களை போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லும். இதற்கு சில காலங்கள் ஆகலாமே தவிர, முதலாளித்துவம் தன்னை முழுமையாகக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
சோசலிச நாடுகள் எப்பொழுதும் நேசக்கரம் நீட்டத் தயாராக இருக்கின்றன. அதன் அடிப்படையில் கியூபா இன்றும் இத்தாலிக்கு உதவி வருகிறது, அதைத் தாண்டி அனைத்து நாடுகளுக்கும் உதவ முன்னிற்கிறது. இதற்கு எப்பொழுதும் முதலாளித்துவ நாடுகள் தடையாய் நின்று தோற்றுக் கொண்டிருக்கின்றன. பிறகு எப்படி மனித நேயமும் மனிதர்களும் தங்கள் உடைமைகளைப் பெற்று வாழ முடியும்?
உலக அளவில் பல செயல்பாடுகளை கொரோனா வைரஸ் முடக்கி விட்டது. சர்வதேச வணிகம், சுகாதாரம், வைரஸ் கிருமிகளை மையப்படுத்தி ஒரு நாட்டின் மேல் அதிகாரம் செலுத்துவது மற்றும் சர்வதேச அளவில் வேலை இழப்பு போன்ற நெருக்கடிகளைக் காரணமாக வைத்து கடைநிலை மனிதர்களை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளத் துடிக்கிறது முதலாளித்துவம்.
91 வயதான நோம் சோம்சுக்கி என்கிற அமெரிக்க தத்துவவியல் நிபுணரும், இடது சாரி சிந்தனையாளருமான பேரறிஞர், மொழியியல் மற்றும் அறிதிறன் அறிவியலில் பெரும் புரட்சியைத் தூண்டியவர், "கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுள்ள சீனா, தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் மேற்கத்திய நாடுகளான ஜெர்மனி போன்ற நாடுகள் அவர்களைச் சுயநலமாகக் காத்துக் கொண்டாலும், மற்ற நாடுகள் இந்த நடவடிக்கைகளில் தோற்று விட்டன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மோசமாகத் தோற்றுவிட்டது" என்று தெரிவித்தார். அதிலும் இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இனியாவது சுகாதாரம் மற்றும் கல்விக் கொள்கைகளை மேம்படுத்தி, அரசே இந்த இரண்டு துறைகளையும் இயக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பேரிடரிலிருந்து நாம் எதிர்காலத்தில் மீண்டு விட்டாலும், அடுத்த அச்சுறுத்தலான அணு ஆயுதப் போர், புவியைச் சுரண்டுதல் மற்றும் புவி வெப்ப மயமாதல் ஆகியவற்றிலிருந்து நாம் தப்பிக்கவே இயலாது. அந்த அழிவை நாம் தடுத்து நிறுத்தினால் மட்டும், புவி மனிதர்கள் வாழத் தகுதியாக இருக்கும். அதற்குத் துணையாக எப்பொழுதும் முற்போக்கு சிந்தனையாளர்களும், சோசலிஸ்டுகளும் செயல்படுவார்கள்.
கொரோனா வைரசால் ஏற்பட்ட ஒரே நன்மை, எந்த மாதிரியான சூழல் மனிதன் வாழத் தேவை என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை மனிதனிடமே விட்டுவிட்டது மற்றும் சந்தையின் மகத்தான தோல்வி மற்றும் கண்மூடித்தனமான தாராளமயமாக்கல் கொள்கைகளால் சிதைக்கப்பட்ட சமூக பொருளாதாரத்தை இனி சந்தைகள் தீர்மானிக்க இயலாது என்பதை வெளிக்காட்டியது. அப்படி மீண்டும் முதலாளித்துவம் மூலதனத்தைக் குவித்தால் பரிணாமக் கோட்பாட்டில் புவியின் சுழற்சி கடுமையாக இருக்கும்.
- ப.தனஞ்ஜெயன்