பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற போர்வையில் நடைபெறுகின்ற இந்த சமுதாயக் கொள்ளையை முழுவதுமாக இன்னும் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல, இந்தியாவிலிருக்கிற பல்வேறு அரசியல் கட்சிகள்கூட உணரத் தலைப்படாத காலத்தில், அதனுடைய ஆபத்துகளை அறிந்து, அதனைத் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கின்ற அரசியல் கட்சி உண்டென்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை எனக்கு முன்னாலே உரையாற்றியவர்கள் எல்லோரும் பேசினார்கள்.

அந்த முன்னெடுப்பைக் கலைஞர் எடுத்தார்; அதற்குப் பிறகு இன்றைக்கு திராவிட மாடலை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற நமது மகத்தான தலைவர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதனை வழிமொழிந்தது மட்டுமல்ல; வலுவான குரலை உச்சநீதிமன்றம்வரை எழுப்பியிருக்கிறார்.a raja at kovai meetingஅரசியலமைப்புச் சட்டத்தில் ‘socially and educationally backward classes’ என்றுதான் அம்பேத்கர் கொண்டு வருகிறார். சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்குதான் இட ஒதுக்கீடு, வறுமையில் இருப்பவர்களுக்கு அல்ல.

வெள்ளைக்காரர்களுக்கு ஒரு மனிதாபிமானம் இருந்தது. கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று பரிவோடு எண்ணினர். இட ஒதுக்கீடு வழங்கினர். அப்போது யாரும் போராடவில்லை. போராடும் நிலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. அவர்களுக்கு அத்தகைய துணிவே கிடையாது. அப்படியான மனநிலையை, தாழ்வு மனப்பான்மையை ‘ஜாதி’ என்கிற மனோபாவம் கொடுத்தது. இந்த ஜாதி என்ற உளவியல் பண்பை உடைப்பதுதான் சமூகநீதி; அப்படி உடைப்பதற்காகத்தான் இட ஒதுக்கீடும் கல்வியும்.

வெள்ளைக்காரர்களைப் பெரியார் வரவேற்றதற்கு என்ன காரணம்? வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த ‘Made over’ தான் சுதந்திரம் என்றாரே! “எனக்கு சுதந்திர நாள் துக்கநாள்தான். ஆங்கிலேயர் வெளியேறி விடுவதால் ஜாதி ஒழியப் போவதில்லை; தாழ்த்தப்பட்டோர்களுக்கும் பிற்படுத்தப் பட்டோர்களுக்கும் கல்வி வந்துவிடப் போவதில்லை; வெள்ளையராவது மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டனர். நமக்குப் படிப்பைக் கொடுத்ததும், மனிதனாக நம்மை நடத்தியதும் வெள்ளைக்காரன்தான்” என்றார் பெரியார்.

2000 ஆண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை நான் கேட்காமலேயே கொடுக்கும் கொடை மனத்தைப் பெற்றிருந்தான் வெள்ளைக்காரன்; ஆனால் கேட்காமலேயே எங்கள் உரிமையை நாடாளுமன்றத்திலே வைத்து திருடிக் கொண்டு போகிறாயே; நீங்கள் நல்லவர்களா? அவர்கள் நல்லவர்களா?.

எல்லாவற்றிற்கும் பதில் பெரியாரிடம் இருக்கிறது. வேறெங்கும் போக வேண்டியதில்லை.

- ஆ.இராசா

(மாநாட்டில் பேசிய உரையிலிருந்து சிறு பகுதி)

Pin It