கொரோனா நோய்த் தொற்றால் இலட்சக்கணக்கான மக்கள் உலகமெங்கும் கொத்துக் கொத்தாக பலியாகிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவில் நோய்த் தொற்று 4 இலட்சத்தைக் கடந்து விட்டது, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கின்றார்கள். மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. மக்களுக்கு சோறு போட துப்பில்லாமல் லாக்டவுனை நீக்கிய அரசுகள், தற்போது அவர்களுக்கு தரமான மருத்துவத்தைத் தரவும் வக்கில்லாமல் ‘எப்படியோ நாசமாய்ப் போ’ என கைவிரித்துள்ளன.
வரும் காலங்களில் மிகப் பெரிய சமூகப் பரவலாக மாறி, இலட்சக்கணக்கான மக்களை கொரோனா காவு வாங்கக் காத்திருக்கின்றது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல், தற்போது வர்க்க வேறுபாடுகள் இன்றி நோய்த் தொற்று ஏற்பட்டுக் கொண்டு இருப்பதால், இத்தனை நாளாக பெயரளவுக்கு களத்திற்கு வந்து உதவிகள் செய்த அரசியல்வாதிகளும், தன்னார்வலர்களும் கூட இனி களத்திற்கு வர அச்சப்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய நாடுகள் எல்லாம் கொரோனா முன் மண்டியிட்டு இருக்கும் சூழ்நிலையில், எந்தவித அறிவியல் அறிவும் இல்லாத, கடும் பிற்போக்குக் கும்பலின் பிடியில் சிக்கியுள்ள இந்திய மக்களின் நிலைதான் வரும் நாட்களில் உலகில் மிக மோசமாக இருக்கப் போகின்றது. கை தட்டினால் கொரோனா ஒழிந்து விடும், விளக்கேற்றினால் கொரோனா போய் விடும், மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனா குணமாகி விடும் என சொல்லிச் சொல்லி, தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை 4 லட்சத்தில் கொண்டு வந்து நிறுத்தி, 13 ஆயிரம் பேரை சாகடித்திருக்கின்றார்கள்.
முட்டாள்கள் ஒருபோதும் தான் சொய்யும் கொடும் செயலை குற்றவுணர்வோடு அணுகுவதில்லை என்பதால், எத்தனை வீட்டில் இழவு விழுந்தாலும் (தன் வீட்டில் இழவு விழும் வரை) தங்களுடைய கேடுகெட்ட பொய் பித்தலாட்டப் பரப்புரையை நிறுத்துவதில்லை. அதனால்தான் உலக நாடுகள் எல்லாம் மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது, எவ்விதக் கூச்சமும் இன்றி “கோவிட்-19 நோய்த்தொற்று சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது. 'பிரணாயம்', என்னும் ஒருவகை சுவாசப் பயிற்சி நமது சுவாச மண்டலத்தை வலிமையாக்க மிகவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால், அது நோய்க்கு எதிராகப் போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கென யோகா பயிற்சிகள் உள்ளன” என்று மோடியால் சொல்ல முடிகின்றது. இழவு வீட்டில் கூட சனாதனப் பரப்புரை செய்யும் மன திடம் சங்கிகள் தவிர வேறு யாரிடமும் கிடையாது.
இந்த நோயை குணப்படுத்தும் மருந்து எதுவும் இதுவரை அதிகாரப் பூர்வமாக கண்டுபிடிக்கப் படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, மக்களை தனித்திருக்கச் செய்வதன் மூலமே பல நாடுகள் இந்த நோயை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்தியாவோ உழைக்கும் கோடான கோடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழியற்ற தனது தோல்வியை மறைக்கவும், இந்த நெருக்கடியான காலத்தில் கூட பெரு முதலாளிகளின் லாபம் குறையாமல் இருக்கவும் லாக்டவுனைத் தளர்த்தி, கொரோனா மிகப் பெரிய சமூக பரவலாக மாறத் தெரிந்தே துரோகம் இழைத்திருக்கின்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் சுமார் 12.2 கோடி பேர் வேலை இழந்திருப்பதாகவும், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 21.1 ஆக அதிகரித்திருப்பதாகவும் இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE) தெரிவித்துள்ளது. வேலையிழந்த 122 மில்லியன் பேரில் 91.3 மில்லியன் பேர் சிறுவணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களில் சம்பளத் தொழிலாளர்கள் 17.8 மில்லியன் பேரும், சுயதொழில் செய்பவர்களில் 18.2 மில்லியன் பேரும் அடங்குவார்கள். இவர்களில் சுமார் 1.2 கோடி பேர் இந்த ஆண்டு கொடிய வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் இந்த அமைப்பு கணித்துள்ளது.
இவர்கள் அனைவரும் இன்று ஒருவேளை சோற்றுக்கு வழியற்று, பட்டினிச் சாவை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றார்கள். இவர்களிடம் தான் நமது மாண்புமிகு பிரதமர் யோகா செய்யச் சொல்கின்றார்.
ரயில்வே பாதுகாப்புப் படையின் தரவுகளின் படி மே 9 முதல் மே 27 வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்த 80 புலம்பெயர் தொழிலாளர்கள் பசியாலும், வெப்ப நோயாலும் இறந்துள்ளனர். சாலைகள் மற்றும் ரயில்களில் அடிபட்டு 170க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சாலைகளில் நடந்து செல்லும் போது கடுமையான வெப்பத்தினாலும் பலர் இறந்து போனார்கள். இவர்கள் எல்லாம் ஒருவேளை யோகா செய்திருந்தால் பசியில் இருந்தும், வெப்பத்தின் தாக்குதலில் இருந்தும் காப்பாற்றப் பட்டிருப்பார்களா? மனித உயிர்கள் பற்றிய மதிப்பு சிறிதும் இல்லாத ஒருவரால் மட்டுமே இது போன்ற சமயங்களில் கூட இப்படி அறிவுரை சொல்ல முடியும்.
யோகா செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதே அறிவியலுக்குப் புறம்பான கடைந்தெடுத்த பொய்யாகும். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது நமது உடலில் நோய் உண்டாகும்போது மட்டுமே உருவாவது. உடலில் நோய் இல்லாத சமயத்தில் எவ்வித நோய் எதிர்ப்பு சக்தியும் நமது உடலில் உருவாவதில்லை. அப்படி இருக்கும் போது யோகா செய்வதால் எப்படி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்? ஒருவேளை ஹெர்ட் இம்யூனிட்டி முறையைக் கையாண்டால் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்குள் பல கோடி மக்கள் பலியாகி இருப்பார்கள். இப்போதைக்கு மனித குலத்தைக் காக்க உள்ள ஒரே வழி நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புறவழியாக உடலில் எதிர்ப்பு சக்தியை உட்புகுத்துவதுதான். அதாவது மாத்திரை மூலமோ, தடுப்பூசி மூலமோ... வேறு எவ்வித வாய்ப்பும் இல்லை, வழியும் இல்லை.
ஆனால் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சண்டித்தனம் செய்யும் சங்கி கும்பலுக்கு மக்களின் உயிரைப் பற்றி இம்மி அளவு கூட கவலை இல்லை என்பதைத்தான் அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. 'எல்லோரும் சிரித்தார்கள் என்று பூனை பொடக்காலியில் போய் சிரித்தது' என்ற கதையாக எல்லா நாடுகளும் உருப்படியாக நோயை ஒழிக்க ஏதாவது முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே கங்கைக் கரையிலேயே உலகத்தின் அத்தனை அஞ்ஞான, மெய்ஞானங்களையும் கற்றுக் கொண்ட நாமும் நம்முடைய பங்கிற்கு ஏதாவது உளறி வைப்போம் என்ற எண்ணத்தில் - ஊரார் காறித் துப்புவார்கள் என்ற அச்ச உணர்வு துளியும் இல்லாமல் - சங்கிகள் யோகாவை முன்னிறுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் இவர்கள் சொல்வது போல யோகா செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, மனிதர்கள் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்பது உண்மையானால் அந்த யோகாவை வைத்து பெரும் பேரும் புகழும் பெற்ற ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாயிபாபா, அரவிந்தர், ரமண மகரிசி, சுவாமி சிவானந்தா, ரஜனீசு போன்றவர்கள் என்ன ஆனார்கள்? அனைவரும் கடைசியில் மண்ணோடு மண்ணாகப் போனதுதான் யோகாவின் வரலாறு. மரணமற்ற பெருவாழ்வைப் பற்றி பிதற்றிய யாரும் அதை மெய்பிப்பதற்கு இன்று நம்முடன் உயிரோடு இல்லை.
யோகா செய்தால் கிடைப்பதாய் சொல்லப்பட்ட 64 சிறு சித்திகளையும், 8 சிறப்பு சித்திகளையும் அதாவது அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், இசித்துவம், வசித்துவம் போன்றவற்றை எந்த ஒரு காவிவேட்டி கட்டிய சங்கியும் உண்மையில் நிரூபித்ததாக வரலாறும் இல்லை. முழுக்க முழுக்க பொய்களாலும் புரட்டுக்களாலும் கட்டப்பட்ட மணற்கோட்டைதான் யோகா என்பது.
நாடு அபாயகரமான சூழ்நிலையில் இருக்கும் போதுகூட ஏன் சங்கிகள் யோகாவை விடாமல் பரப்புரை செய்கின்றார்கள் என்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சிலர் அதை வெறும் உடற்பயிற்சி என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்கின்றார்கள். அது மிக ஆபத்தானதாகும். பொதுவாக யோகா பயிற்சியாளர்களிடம் செல்லும் போது முழுவதுமாக தங்களின் பழைய நிலைபாடுகளை மாற்றிக் கொண்டு, அந்த யோகா பயிற்சியளிப்பவரின் கோட்பாடுகளுடன் சித்தாந்த ரீதியாக ஒத்துப் போய் தங்களை எல்லா வகையிலும் மறுவார்ப்பு செய்து கொள்கின்றார்கள்.
முதலில் அவர்கள் நமக்குக் கற்றுத் தருவதே சமூகத்தில் இருந்து முழுவதுமாக நம்மை விடுவித்துக் கொள்வதற்குத்தான். எல்லாவித அரசியல் செயல்பாடுகளும் நமக்குள் இருந்து முடக்கப்பட்டு, முழுவதுமாக தன்னுடைய தேவைக்கு ஏற்ப ஆட்டுவிக்கும் பொம்மைகளைப் போல நம்மை மாற்றி விடுவார்கள். அதனால் யோகாவை முன்னிறுத்தும் இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது, அது பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக் கொண்ட அடிமைகளை உருவாக்குவதும், பொதுமக்கள் மத்தியில் இந்த அரசுக்கு எதிராக உருவாகி வரும் கட்டற்ற கோபத்தை மடைமாற்றுவதும்தான்.
கும்பி எரியுது, குடல் கருகுது என்று மக்கள் கதறிக் கொண்டு இருக்கும்போது அவர்களைக் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் நாட்டின் பிரதமர் யோகா செய்யுங்கள் என்கின்றார். ஆனால் யோகாவை இன்று கடைவிரித்து விற்றுக் கொண்டிருக்கும் கும்பல்களான ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, பாபா ராம்தேவ், ரவிசங்கர், அமிர்தானந்தமாயி, ஆஸ்ரம் பாபு போன்ற கார்ப்ரேட் சாமியர்கள் எல்லாம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக வலம் வருகின்றார்கள்.
அதிபயங்கரமான முட்டாள்களின் பிடியில் நாடு தற்போது மாட்டிக் கொண்டு இருக்கின்றது. இந்த மோசமான சூழலை திறம்படக் கையாளுவதற்கான எந்த உருப்படியான திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்தப் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற இவர்களிடம் இருப்பதெல்லாம் மாட்டு மூத்திரமும், மாட்டுச் சாணியும், யோகாவும்தான். உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் இப்படி ஒரு துயர நிலை வரக் கூடாது என்று பகவானை சேவிப்பதைத் தவிர சங்கிகளை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?
- செ.கார்கி