கொரோனா என்கிற வழக்கமான ஒரு தீநுண்மி(virus) புதிய வகையான அரசியல், பொருளியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் இந்த கொரோனா நோயை ஒரு மக்கள் நலப் பிரச்சனையாக மட்டும் அணுகாமல், ஓர் அரசியல், பொருளியல் சிக்கலாகவுமே பெரும்பான்மையான நாட்டு அரசுகள் அணுகி வருகின்றன.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை சீனாவுக்கு எதிரான தனது வணிகப் போட்டிக்கு பயன்படுத்துகிறார். சீனாவே இந்த கோவியட்-19 எனும் தீநுண்மியை ஆய்வகத்தில் தயாரித்து ஓர் உயிரியல் போரை உலகத்தின் மீது தொடுத்துள்ளதாக ஓயாமல் பரப்புரை செய்து வருகிறார். அமெரிக்க ஆதரவு நாடுகள் சில அமெரிக்காவின் கோயபல்ஸ் பரப்புரையை ஆதரித்து உலக அரங்கில் பேசவும் செய்கிறது.
உலக சுகாதார அமைப்பு(WHO) அமெரிக்கா சொல்வதைப் போல இந்த் கொரோனா தீநுண்மி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதல்ல எனத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
விடுவாரா டிரம்ப்? உலக சுகாதர நிறுவனத்திற்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தாத் தொகையை கொடுக்க முடியாது என அறிவித்து WHO-வையே மிரட்டி வருகிறார்.
இதே போல இந்திய ஒன்றிய அரசும் கொரானோ கால முடக்கத்திலிருந்து மீள்வதற்கான ஒரு திட்டம் என்ற பெயரில் ஒரு செயல் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
பாஜக அரசின் கொரோனா பேரிடர் கால செயல் திட்டம் முழுக்க முழுக்க மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டுவதாகவுமே உள்ளன.
மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் இருந்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயல்பாடுகள் அனைத்தையும் மின் சீர் திருத்தச் சட்டம் 2020 -ன் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றம் செய்ய முயற்சிக்கிறது மோடி அரசு.
இந்த புதிய மின் சீர் திருத்தச் சட்டம்-2020 விவசாயிகளையும் சிறுவீத உற்பத்தியாளர்களையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும்.
விவசாயிகளுக்கு தமிழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல நலிந்த பிரிவினராக உள்ள உழைக்கும் மக்களுக்கு வீட்டுப் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட அளவு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப் படுகிறது.
வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் விசைத்தறிகளுககு குறிப்பிட்ட அளவு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப் படுகிறது.
கொரானோ கால மின் திருத்தச் சட்டம் -2020 மாநில அரசு மக்கள் நலனுக்காகச் செய்து வரும் திட்டங்கள் அனைத்தையும் செய்ய இயலா வண்ணம் தடுக்கிறது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான உரிமைகள் அனைத்தையும் அம்பானி, அதானி போன்ற பல கார்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்கிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த மின் சீர்திருத்தச் சட்டம்-2020ஐ கடுமையாக எதிர்த்து ஒன்றிய அரசுக்கு மடல் எழுதியுள்ளார்.
கொரானோ ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதைப் பயன்படுத்தி பாரத் பெட்ரோலியத்தின்- IDPL திட்டத்திற்கு நிலம் எடுக்கும் பணிகளை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் தற்போது தொடங்கி உள்ளனர். விவசாயிகளுக்கு நில எடுப்பு அறிவிக்கைகளை வேகமாக வழங்கத் தொடங்கி உள்ளனர்.
தமிழகம், ஆந்திரம், கருநாடகம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் 1450 கி.மீ. நீளம் கொண்ட புதிய எண்ணெய்க் குழாய்த் திட்டம் ஒன்றை இந்தியன் ஆயில் கார்பரேசன் அறிவித்துள்ளது. இந்த மெகாத் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ 6000/(ஆறாயிரம்) கோடி என்றும் அந்த அறிவிப்பில் உள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதரங்களைப் பறித்து கார்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை முனைந்து செய்து வருகிறது பாஜகவின் மோடி அரசு.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் டெல்லி அரசோடு ஜனநாயக வழியில் போராட தமிழக மக்களை அணிதிரட்ட முன்வராமல் பாசாங்கு காட்டி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே அணியில் திரட்டி டெல்லி ஒன்றிய அரசிற்கு எதிராக ஜனநாயக வழியிலான வலுவான போராட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் கட்டமைத்துச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அனைத்துக் கட்சிகளையும், பல்வேறு அமைப்புகளையும் அணிதிரட்டும் பெரும் பொறுப்பைத் தட்டிக் கழித்து தமிழ மக்களைப் பிளவு படுத்தும் நடவடிக்கைகளையே எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்து வருவது வேதனையாக உள்ளது.
எதிர்க் கட்சியான திமுகவை காவல்துறையைப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்கும் முயற்சியில் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. இதர எதிர்க் கட்சிகளையும் உதாசீனப்படுத்தியே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அணுகுமுறை தமிழகத்திலுள்ள அரசியல் சக்திகளை ஓரணியில் திரட்ட பெரும் தடையாக உள்ளது.
உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தமிழகத்திலுள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைக்கும் பெருமுயற்சி நடைபெற்று வருகிறது.
பல்வேறு விவசாயசங்கத் தலைவர்களும் முன்வந்து இந்த அரிய முயற்சி வெற்றி பெற களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜுலை -5 உழவர்களின் தியாகிகள் நாள்.
1970-களில் அன்றைய கோவை மாவட்டம் பெருமாநல்லூரில் மாபெரும் மின் கட்டண உயர்வு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
யூனிட் மின்சாரத்திற்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தியதை குறைக்கக் கோரியே இந்தப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.
பெருமாநல்லூரில் எழுந்த விவசாயிகளின் எழுச்சியை அடக்கி ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில்
1) இராமசாமிக் கவுண்டர்
2) மாரப்பகவுண்டர்
3) ஆயிக்கவுண்டர்
என்ற மூன்று இளம் விவசாயிகளின் இன்னுயிர் பறி போனது. தமிழக வரலாற்றில் மின்கட்டண உயர்வுக்கான தியாக வரலாற்றை பெருமாநல்லூர் தொடங்கி வைத்தது. அந்த மாபெரும் தியாகிகள் பெற்றுத் தந்த மின்சார உரிமையைப் பாதுகாக்க சூளுரை ஏற்கும் நாளாக ஜூலை-5, 2020 எதிர்கொள்வோம்.
எண்ணெய்க் குழாய், உயர்மின்கோபுரம் போன்ற திட்டங்களால் வாழ்வாதாரமான நிலம் பறிக்கப்படுவதையும், 60 இன்னுயிர்களைத் தந்து போராடிப் பெற்ற இலவச மின்சார உரிமையைப் பாதுகாக்கவும் ஒன்றிணைவோம்.
கொரோனா என்ற கொள்ளை நோயைக் காட்டி, ஊரடங்கு சட்டத்தைப் போட்டுக் கொண்டு மக்கள் மீது கொடூர அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம்.
விவசாய இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அனைத்து அமைப்புகளோடும் தற்சார்பு விவசாயிகள் சங்கம் இணைந்து முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
- கி.வே.பொன்னையன், தலைவர் & இரா.பாலசுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்.