கீற்றில் தேட...

inland letterவாழ்வின் அதிவேக ஓட்டத்தில் உலகம் சுருங்கியது போல.... உணர்ச்சிகளும் உள்ள வெளிப்பாடுகளும் கூட சுருங்கி விட்டதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எல்லாமே ஒற்றைக் குறுஞ்செய்தியில் முடிந்து விடுகிறது. எல்லாமே இப்போது பார்வாடிங்தான்... ஒவ்வொரு நாளையும் நாம் பார்வாடிங்கில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால்.. முன்பொரு பொற்காலம் இருந்தது. அங்கே கடிதங்களும் கார்டுகளும் வாழ்த்தட்டைகளும் சிறகு விரித்து நலம் விசாரித்தன. அன்பையும் பிரியங்களையும் வரி வரியாக வந்து காதில் கிசுகிசுத்தன. தபால்காரர் என்ற தேவதூதன் இருந்தார். அவரின் வருகை தினமும் ஒரு வகை உற்சாகத்தை வீதிக்குத் தந்தது.

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது என்பது பெரும்பாலும் இல்லாமலே போய் விட்டது.

நான் சிறுவயதில்... உருளிக்கல் நாட்களில் ஊட்டியில் இருந்த என் அப்பாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். ஊரில் இருந்த என் பாட்டி தாத்தாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். ஆறாவது ஏழாவது படிக்கையில் ஊரிலிருந்து மாமாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்பாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். சித்தப்பாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். மறுகடிதம் வரும் வரைக்கும் அந்த வந்த கடிதத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டே படித்துத் திரிந்த நினைவு வருகிறது.

என் நண்பன் சிவகுமார்க்கு கார்டில் கடிதம் எழுதி இருக்கிறேன். அவனும் உடுமலையில் இருந்து எனக்கு எழுதி இருக்கிறான். அது வீட்டைப் பிரிந்து படித்துக் கொண்டிருந்த எனக்கு மிக ஆறுதலான நம்பிக்கையைத் தந்திருக்கிறது. நம்பிக்கைக்கு உரியோர்கள் எல்லாம் நமக்கு கடிதம் எழுதுவதன் மூலமாக அதை நிரூபித்துக் கொண்டே இருந்தார்கள். தூரத்து அன்பை வார்த்தைகளில் தூது அனுப்பித், தெரிந்து கொண்ட காலம் பெரிதாக கற்காத காலமாக இருந்தாலும்... மனதால் பொற்காலம் தான். சொற்களின் காலத்தில் சொந்தங்கள் பிரியவே இல்லை.

நீல வண்ணத்தில் அந்தக் கடிதமே கதை சொல்லும். பிரித்துப் படிக்கும் முன்பாகவே உள்ளுக்குள் பக்கம் பக்கமாய் அன்பை விரிக்கும்.

சுருண்டிருக்கும் எழுத்துக்களில் சுமையும் இருக்கும். சுகமும் இருக்கும். 'அறிவுமதி'யின் ஒரு கவிதை இருக்கிறது...

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்

கடிதத்தின் தீர்க்கம் எத்தனை ஆதுர்யமானது. அது தனக்கென்று வைத்துக் கொண்ட முகத்தில் அன்பை மட்டுமே உள்ளிருந்து எடுக்கும் புதையலாகிக் கொண்டிருந்தது. அது சொல்லொணா அன்பையும்... சொல்ல வேண்டிய ஆசையையும் சதா சுமந்து கொண்டே அலைந்தது. தூது செல்லும்.. நீலக் காகிதத்தில் பெரும்பாலும் எழுதுபவரின் குருதி தான் நீல மையாக இருக்கிறது. அதீதம் தான் என்றாலும்... அது சிந்திக்க நன்றாக இருக்கிறது. நல்லதோ கெட்டதோ... தெரியப் படுத்த வேண்டும், பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு கடிதங்களே ஆதாரங்கள். கடிதங்கள் செய்திகள் பரிமாற்றும் கருவி அல்ல. அது மனதைத் திறந்து காட்டும் மாற்றுருவம்.

அநேகமாக நம்மில் பலர்... ஆறாவதுக்கு மேல் படிக்க ஊர்களுக்குச் சென்றிருப்போம். அப்போது எஸ்டேட்டில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு.... கடிதம் எழுதி இருப்போம். விடுதியில் தங்கிப் படிக்கையில்.... வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் எத்தனை நம்பிக்கையானவை. அது தனிமை போக்கி. அடுத்த கடிதம் வரும் வரை வந்த கடிதமே பாக்கெட்டில் இருந்து சாந்தப்படுத்தும் அம்மாவின் கண்கள்.

நமக்கு வந்த கடிதம் சில நேரங்களில் பக்கத்துக்கு வீட்டுக்குப் போயிருக்கும். அவர்களும் பத்திரமாக எடுத்து வைத்திருந்து அன்று மாலை வீடு வந்து கொடுப்பார்கள். அல்லது தண்ணீர் பிடிக்கையில்.. "எக்கா... உங்க லெட்டர் எங்க வீட்டுக்கு வந்துருச்சு... சின்னவள அனுப்புங்க... குடுத்து விடறேன்..." என்று சொல்வார்கள்.

"எங்களுக்கு வந்ததுன்னு தெரியாம கிழிச்சிட்டோம்" என்பதெல்லாம் ரெம்ப இயல்பானதாக இருக்கும். பெரும்பாலும் வால்பாறை கடிதங்களில் ரகசியங்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். யாருக்கு யார் எழுதி இருப்பார்கள் என்று பெரும்பாலும் பக்கத்து வீடுகளுக்கும் தெரியும் வண்ணம் தான் வாழ்வின் அடுக்குகள் அன்றிருந்ததாக நினைவு.

பார்த்து எடுத்த நம் முகச் சாயலின் நிறமிக் காட்டுக்குள் மேகக் குளிர்தலின் கனிவோடு ஓடி வரும் வரிகளின் சம்போகமென நலம் காண பின் உன் நிழல் காண கனவுகளைக் கொண்டு இல்லாமல் செய்து கொள்ளும் சித்திரப் பிறழ்வின் வெளிப்பாடுகளைப் போலதான் ஒரு திரும்புதலின் சொர்க்கமென இக்கடிதமும்.

இப்படி காதல் கடிதங்களும்.... இதில் அடங்கும்.

படிப்பதற்கும் எழுதுவதற்கும் உள்ள இடைவெளி முழுக்க நிறைந்து ததும்பும் வாழ்வின் பிம்பங்களை முழுதாய் மடை திறக்கும் ஞாபகக் குரல் தான் கடிதங்கள். சிறகுக்கு.... சிறகு முளைத்த அதற்கு வயதாவதேயில்லை. வீடு சுத்தம் செய்கையில்... பல வருடங்களுக்கு முன் வந்த கடிதங்களைப் பார்க்க நேர்கையில்... குறுநகை பூத்தோ கண்ணீர்த் துளி நீர்த்தோ மீண்டும் படிக்க நேரும் அற்புதங்கள் சினிமாவுக்கு மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு நிஜ கதாபாத்திரத்துக்கும் சொந்தம். சில நேரங்களில்.. யாருக்கு எழுதினோமோ அவர்களோடு சேர்ந்தே அந்த எழுதியவர் படிப்பது இருக்கிறதே... விவரிக்க முடியாத விதியின் ஒடிசலான வளைவுகள் நிறைந்தவை. அளவிடமுடியாத ஆலாபனை நிமிடங்கள் அவை.

காலத்தின் கதவுகளை இன்னமும் போய் சேராத கடிதங்கள் தட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. உரிய கைகளைச் சேரும் வரை அது தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு இறகைப் போல அலைந்து கொண்டே இருக்கிறது. எப்போது படித்தாலும்... கடிதத்தில் இருக்கும் உணர்வுகளுக்கு வயதாவதேயில்லை. இளமையின் பிம்பமாய் இலைகளின் சூட்சுமமாய்.. ஒளிகளின் தூவலாய்... ஒவ்வொரு கடிதத்துள்ளும் ஓர் உள்ளம் மறைந்து கொண்டிருக்கிறது. அது தீரா தீர்க்கத்தின் நிறையாய் மீண்டும் மீண்டும் அன்பின் வெளிப்பாடுகளை எந்தக் காட்சிக்குள்ளும் நிரப்பிக் கொண்டே இருக்கிறது.

நரைத்துக் கிடக்கும்... ஞாபகக் காட்சிக்குள் நிறம் செய்தே வயதாகும் சூரியனையும் ஒளித்துக் கொண்டு திரியும் ஒரு காதல் கடிதம். உயிர் பிசையும் சூழ் கொண்ட மகரந்த வடிதலின் வலுவற்ற வலுவின் கோரப் பிடிக்குள் கட்டுண்டு முரண்டு பிடிக்கும் முத்தக் கூம்பின் பிறழ் தேசம் கடிதங்களை நம்பியே செய்யப்பட்டது.

நிகழ்த்துக் கலையின் ஒத்திசைவைப் போல அசைந்து விட்ட தேயிலைக் காடுகளில் தலை விரித்தே கிடக்கிறது கடிதங்களுக்கான உறவுகள். நயனம் அரட்டும் கிரீச் கலவரங்களில் மரம் ஒவ்வொன்றுக்கும் காவல் காத்துக் கிடக்கின்றன அதன் வரிகள். வழி நீண்டு வழியாகி வழி தேடும் தாண்டுதலின் நோக்கம்.. அன்பின் பரிமாறுதல்கள் என்பதை நானும் உரக்க சொல்கிறேன். அதி நவீன வளர்ச்சியின் பிடியில்.. எல்லார் கையிலும் முகம் கண்டு பேசும் தொழில் நுட்பம் வந்து விட்ட பிறகு மனித இயல்பு ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நகர்ந்து விட்டது.

எங்கேனும் அன்று கண்ட அந்த வாழ்வின் படிமம் மீண்டும் கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தின் நீண்ட கற்பனையை காகிதமாக்கி... எழுதா சொற்களின் நிறம் பூசி கொட்டித் தீர்த்து விட குரல்வளை நெறிதலின் வலியோடு முடித்துக் கொள்கிறேன் இக்கடிதத்தையும்.

முகவரியற்று தொலைவதில் இது எத்தனையாவது கடிதம் என்று எனக்குத் தெரியவில்லை. கண்டவர்... படிக்காமலும் கிழித்தும் போடலாம். அதன் நோக்கம் அப்படியே ஆகட்டும் என்பதோடு வார்த்தைகளால் வாக்கியம் செய்து வாக்கியத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறது என் தூரத்து அன்பின் நலம்... நலம் அறிய ஆவல்.

- கவிஜி