கொரோனா தொற்று பீதியாலும், திடீர் ஊரடங்கு நடவடிக்கையாலும் நாட்டு மக்களின் மொத்த வாழ்வாதாரமும் முடக்கப்பட்டு கிடக்கிறது. ‘மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி’ என்பதுபோல விவசாயிகளுக்கு திரும்பிய பக்கமெல்லாம் தொடர்ந்து பலத்த அடி விழுகிறது. அத்தியாவசியத் தேவை என்பதால் விவசாயப் பணிகளுக்கு அரசு ஊரடங்கிலிருந்து விலக்களித்தது. (விலக்களிக்காமல் இருந்தாலும் விவசாயிகளால் கைவிட முடியாது என்பதுதான் எதார்த்தம்!) ஆனால் “மக்கள் கூடுகிறார்கள். ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்றுவதில்லை.” என்ற காரணங்களை முன்வைத்து விளைபொருள்களை விற்கும் கிராம சந்தைகளை, கமிஷன் மண்டிகளை மூடி விட்டார்கள். உழவர் சந்தைகளை நகரின் பேருந்து நிலையங்களுக்கு மாற்றினார்கள். வெளியூர் வியாபாரிகள் கிராமங்களுக்கும், கமிஷன் மண்டிகளுக்கும் செல்ல முடியவில்லை. விளைபொருள்களை தூக்கிக் கொண்டு விவசாயிகளால் ஊர் ஊராக ஓட முடியுமா? வேறுவழியின்றி அறுவடைப் பணிகளையே கைவிட்டு விட்டார்கள்.

farming 650காய்கறிகள், நிலக்கடலை மற்றும் வாழை, திராட்சை போன்ற பழப்பயிர்களும் நிலத்திலேயே காய்ந்து கருகி வருகிறது. எஞ்சியவற்றை உள்ளூர் சிறு வியாபாரிகளுக்கு சொற்ப விலைக்கு விற்று வருகிறார்கள். உள்ளூர் விவசாயம் இவ்வாறு முடக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாகிக் கிடப்பதால், ஒப்பீட்டளவில் சில காலத்திற்கு இருப்பு வைத்து விற்கும் மலைப்பயிர்களான கோஸ், முள்ளங்கி, கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை மட்டுமே இன்று பரவலாக சந்தைகளில் விற்பனையாகி வருகிறது.

மேற்கண்ட கள நிலவரங்களைப் பற்றிய உண்மையை அறியாமல், “அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் மக்களுக்குத் தொய்வின்றி கிடைப்பதற்கு அரசு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறது” என முகத்தை மூடிக் கொண்டு பேட்டி அளிக்கிறார் எடப்பாடி! ஆனால் விவசாயிகளின் இன்றைய அவலத்திற்கு உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு அதிகாரியும் முன்வருவதில்லை. மூன்று பேருக்கு மேல் கூட்டம் கூடாமல், ஒரு மீட்டர் இடைவெளியில் நடமாடிக் கொண்டே, கைகழுவிக் கொண்டே, எப்படி கமிசன் மண்டி நடத்துவது, சந்தைகள் எப்படி இயங்குவது என்று யாரும் (விவசாயிகள் உட்பட) அதிகாரிகளைக் கேள்வி கேட்பதில்லை! இது நடைமுறை சாத்தியமா என்று அதிகாரிகளும் சிந்திப்பதில்லை. “கூட்டம் கூடினால் தொற்றுப் பரவி விடும். எனவே கூட்டம் கூடக்கூடாது” - இதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே சட்டம்! விவசாயிகளும், விவசாய சங்கங்களும் ‘எல்லாம் நம்ம தலையெழுத்து’ என்று முடங்கிக் கொள்கிறார்கள்.

மதுரையைச் சேர்ந்த ஒரு விவசாயி, ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து 10 ஏக்கரில் பயிரிட்ட வாழையை வாங்க ஆளில்லை. குலையிலேயே பழுத்து அழுகி வருவதைக் காண சகிக்காமல், தன் கிராமத்தில் வீட்டிற்கு ஒரு தாரை வெட்டி எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டார்.

மன்னார்குடி, காஞ்சிபுரத்தில் அறுவடையான நெல்லை அரசு கொள்முதல் செய்ய முன்வரவில்லை. போக்குவரத்து முடக்கத்தால் வெளியூர் வியாபாரிகளும் வரவில்லை. விவசாயிகளோ விளைந்த நெல்லை குவித்து வைத்துக் கொண்டு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். குடும்ப செலவுகளுக்காக உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்று வயிற்றைக் கழுவி வருகிறார்கள்! இதே நிலைமைதான் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

பல வட மாநில அரசுகளும் ஏப்ரல் 20 வரை கொள்முதலை அதிகாரப் பூர்வமாக நிறுத்தி வைத்தன. அரசின் சேமிப்புக் கிடங்குகளும் மூடப்பட்டு விட்டது. ராஜஸ்தானில் அறுவடை செய்யப்பட்ட பார்லி, கடுகு, கோதுமை, நெல் பயிர்களை விற்பதற்கு வழியின்றி வீடுகளில், வாசலில், பாதுகாப்பற்ற திறந்த வெளியிலும் சேமித்து வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். “ஒவ்வொரு விவசாயியிடமும் சராசரியாக 100 முதல் 200 மூடை கோதுமையும், 40 முதல் 50 மூடை பார்லி, கடுகும் இருப்பு இருக்கிறது. போதிய இடவசதியின்றி தவிக்கும் எங்களால் மழை, எலி ஆகியவற்றிடமிருந்து எப்படி விளைபொருள்களைப் பாதுகாக்க முடியும்?" என்று பொருமுகிறார்கள்.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள 119 கரும்பு ஆலைகள், 2020 ஏப்ரல் 8 வரை 28,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள கரும்பை விவசாயிகளிடம் கொள்முதல் செய்துள்ளன. ஆனால் இதுவரை 15,430 கோடி ரூபாய் மட்டுமே பட்டுவாடா செய்திருக்கிறார்கள். இதே ஆலைகள் கடந்த ஆண்டிலும் (2019) 10,000 கோடியை நிலுவையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது நடைமுறை செலவுகளுக்காக வெல்லம் காய்ச்சும் சிறு குறு நிறுவனங்களுக்கு கரும்பை விற்று வந்த நிலையில். திடீர் ஊரடங்கினால் இந்நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. “வெல்லம் காய்ச்சும் தொழிலை அரசு அனுமதித்தாலும் போலீசு அனுமதிப்பதில்லை. தொழிலாளிகளை அடித்து விரட்டுகிறார்கள்” என விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்! விளைந்த கரும்பு வயலில் வீணாகக் காய்ந்து கிடக்கிறது.

விவசாயம் மட்டுமல்ல, விவசாயத்தோடு தொடர்புடைய பூச்சி மருந்து தெளிப்பு, டிராக்டர் உழவு, கூலியாட்களை அழைத்துச் செல்லும் ஆட்டோ, வேன், மற்றும் விளைபொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், இவற்றை பழுதுநீக்கும் ஒர்க்ஸாப், வயரிங்க் போன்ற தொழில்களும் முற்றிலுமாக முடங்கி விட்டன.

பஞ்சாப்பில் விவசாயி ஒருவர், நெல் அறுவடை எந்திரம் வாங்குவதற்கு 22 லட்சம் ரூபாயை மும்பை நிறுவனத்திற்கு செலுத்தி விட்டார். எந்திரம் தயாராகி டெலிவரி செய்ய இருந்த நிலையில் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்து விட்டார். இரு மாநில எல்லைகளைக் கடந்து கொண்டு வர முடியாத நிலைமையால் அறுவடை எந்திரம் மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கைவசமுள்ள பழைய எந்திரமும் பழுதாகி நிற்பதால் தொழில் செய்யவும் வழியின்றி, கைவசமிருந்த முதலீட்டையும் முடக்கிவிட்டு வெறுங்கையோடு நிற்கிறார் அந்த விவசாயி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போலவே, பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், மோடி அரசால் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்த ஊரடங்கு நடவடிக்கையும். ஆனால் பணமதிப்பிழப்பு காலத்தைவிட இந்த ஊரடங்கு விவசாயிகளையும், உழைப்பாளி மக்களையும் நிரந்தரமாக முடமாக்கியுள்ளது.

வருவாயும் இல்லை. கையிருப்பும் கரைந்து, தற்போது வாய்ப்பிருப்பவர்கள் நகைகளை அடமானம் வைத்தும், ஊரடங்கை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி அடுத்த விவசாயத்திற்கு தேவைப்படும் முதலீட்டுக்கு என்ன செய்வது? யாரிடம் கையேந்துவது? என்று தெரியாமல் உள்ளனர். அம்பானி, அதானிகளின் தொழில் நெருக்கடியைத் தீர்க்க 1.5 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த மத்திய அரசு, விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் தரும் திட்டத்தில் 2000 ரூபாயை மட்டும் கிள்ளிக் கொடுத்து கடமையை முடித்துக் கொள்கிறது.

grocery at whatsappகொரோனா பீதி, மற்றும் திடீர் ஊரடங்கை முன்வைத்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆன்லைன் வர்த்தகத்தை விவசாயத்தில் தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு. “வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். 2000 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 47 பொருள்கள் வீடு தேடி வருகிறது” என்று அரசே கிராமங்களில் விளம்பரம் செய்கிறது. இதற்குப் பரிசாக தங்கம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். நேரடி வியாபாரம் செய்யும் பல சரக்குக் கடைகளை சீல் வைத்து, வாட்ஸ் அப்-பி‌ல் ஆர்டர் பெற்று வீடுகளுக்கு விநியோகம் செய்யுங்கள் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். அரசு நேரடி கொள்முதலை நிறுத்திவிட்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களை கொள்முதல் செய்ய ஊக்குவிக்கிறார்கள். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள வருவாய் பிரிவினரிடம் ஆன்-லைன் வர்த்தகத்தின் பிடியில் கொண்டு வருவதற்கான முயற்சி அரங்கேற்றப்பட்டு வருகிறது. அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை அத்தியாவசிய சேவையில் ஈடுபட அனுமதித்துள்ளதன் பின்னணியில் இத்தகைய மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளாகவே விவசாயத் தொழில் கடும் நெருக்கடிக்கு ஆளாகி நாட்டின் மொத்த உற்பத்தியில் தனது பங்களிப்பை படிப்படியாக இழந்து வருகிறது. விவசாயத் துறையின் முதலிடத்தை சேவைத்துறை பிடித்து விட்டது. இதனால் விவசாயத்தில் வேலையிழந்தவர்கள், பிழைப்பிற்காக முன்னேறிய நகரங்களில் குடும்பத்தோடு குவியத் தொடங்கினர். அமைப்புசாராத் தொழிலாளர்கள் என்று அறியப்படும் இவர்கள் திடீர் ஊரடங்கினால், நகரங்களை விட்டு மீண்டும் கிராமங்களில் குடியேறி வருகின்றனர்.

கொரோனா தாக்கம் எப்போது முடிவடையும் என்ற உத்தரவாதமற்ற நிலைமையாலும், ஏற்கனவே கிராமங்களில் இருப்பவர்களுக்கே வேலைவாய்ப்பு வரம்பிற்கு உட்பட்டதாக இருப்பதாலும், இவர்களின் வருகை கிராமப்புற வாழ்க்கையை மேலும் கூடுதல் சிக்கலாக்கியுள்ளது. நடப்பிலுள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்களில் இவர்கள் பயன்பெற முடியாது என்பதால், இவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும். வறுமையும், பட்டினியும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு கிராமங்களில் அதிகாரிக்கும். இது மாநில அரசுகளுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கப் போவது நிச்சயம்.

நாட்டின் பெருவாரியான மக்கள் எதிர்கொண்டிருக்கும் மேற்கண்ட கொடூரமான நெருக்கடியைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆளுங்கட்சிகளின் நன்கொடையாளர்களை தோளில் சுமந்து கொண்டு, மக்களை 'கை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள்;, என்று கேளிக்கைப் பொருளாக்கி வருகிறார்கள்.

தனது நாட்டு மக்களின் வாழ்நிலை பற்றிய அறிவோ, கவலையோ அற்றவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கினால், மக்களின் நிலை என்னவாகும் என்பதற்கு மோடி - எடப்பாடி அரசுகளே சிறந்த உதாரணம்.

- தேனி மாறன்

Pin It