குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019, பாகுபாடு கொண்டது; அதன் பிரிவுகள் எதேச்சதிகாரமானவை; அரசியல் சட்டத்திற்கு விரோதமானவை. அவை தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுடன் இணைக்கப்படும் செயல்பாடுகள் கோடிக்கணக்கான மக்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கி, அவர்களை நாடற்றவர்களாக, உரிமைகள் அற்றவர்களாக ஆக்கி விடும் அச்சுறுத்தல் கொண்டவை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுடனும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுடனும் சேர்ந்து நமது சமுதாயமும் கொள்கையும் நிலையாகவும் ஒத்திசைவுடனும் செயல்படுவதற்குத் தீங்கிழைக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

no caa agitationகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கும் எதிரான தன்னெழுச்சியான, விரிந்து பரந்த ஆற்றல் மிக்க போராட்டங்களும் அந்தப் போராடத்தின் சமூக உள்ளடக்கமும் எனது நினைவில் உள்ள வரை இதற்குமுன் ஒருபோதும் கண்டிராதவை. சில மாநிலங்களில், இந்த எதிர்ப்புகள் கொடூரமான முறையில் அடக்கப்படுகின்றன, ஆனாலும் இந்த எதிர்ப்புக்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்த உத்தரவுகளை (உண்மையில் இது இப்போது சட்டமாகி விட்டது) ஆதரிப்போர் முதன்மையாகப் பின்வரும் வகையில் வாதிட்டு வருகிறார்கள்: முதலாவது, இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களைப் பாதிக்காது, ஏனென்றால், இது குடியுரிமை வழங்குவது தொடர்பானது, அதைப் பறிப்பது தொடர்பானதல்ல. இரண்டாவது, தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மூன்றாவது, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான்காவது, தேசிய குடிமக்கள் பதிவு நடத்தப்பட்டாலும் கூட இந்தியக் குடிமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதே இந்தக் கட்டுரையில் எனது அடிப்படையான வாதமாகும். இந்தத் திருத்தங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதே என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதற்கான எதிர்ப்புகள் நியாயமானவை, இந்த எதிர்ப்புகள் தொடரப்பட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறினால், அப்போதும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் எதிர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் அவை மிகவும் தீமையானவை, குறிப்பாக ஏழை மக்களுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் மிகவும் கேடு விளைவிப்பவை.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் குடிமக்கள் என்று கூறிக் கொள்ளும் நபர்களின் கூட்டத்தை விரிவுபடுத்துகிறது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் தேசிய குடிமக்கள் பதிவேடும் இந்தியக் குடிமக்களின் இறுதிப்படுத்தப்பட்ட குடிமக்கள் பட்டியலைத் தீர்மானிப்பதற்கான தரவுகளையும் நடைமுறைகளையும் அளிக்கின்றன. அந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அயல் நாட்டினர் அல்லது நாடற்றவர்களாக நடத்தப்பட்டு, உரிமைகள் அற்றவர்களாக ஆக்கப்படுவர். தற்போது இந்த மூன்று உத்தரவுகளும் இணைக்கப்படுகிற அதே வேளையில், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றாலும் கூட, அவை அபாயகரமானவை, எதிர்க்கப்பட வேண்டியவையே.

ஒரு காகிதத்தில் துன்பப்படும் குழுக்களுக்கு குடியுரிமை அளிப்பதில் அல்லது ஒரு குடியுரிமைப் பதிவேட்டைப் பராமரிப்பதில் என்ன தவறு இருந்துவிட முடியும் என்று தோன்றலாம். ஆனால், ஒருவர் இந்த விடயத்தை ஆழமாகப் பார்த்தால், பேரழிவை ஏற்படுத்தும் பின்விளைவுகளை அறிந்துணர முடியும். அவற்றின் உண்மையான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கு, அரசியல் சட்டத்தின் மீதும் கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையிலும் இது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை விரித்துரைக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஆனால் கருத்து வேறுபாட்டுக்குரிய இந்த மூன்று உத்தரவுகளையும் பற்றி தற்போது விளக்கமாகப் பேசுவதற்கு முன்னதாக, அவற்றை வரலாற்றுச் சூழமைவில் முன்வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

குடியுரிமை என்ற கருத்தாக்கம்

குடியுரிமை என்ற கருத்தாக்கம் ஒன்றும் நவீனத்துவத்தின் பங்களிப்பு அல்ல. அரிஸ்டாட்டில் இதைப் பற்றி எழுதியுள்ளார், அதற்குப் பிறகு பலரும் எழுதியுள்ளனர். ஆனால் முன்னாளின் கருத்தாக்கங்களில் குறிப்பிட்ட சில குறைபாடுகள் இருந்தன, அவை தற்போதைய காலங்களில் அகற்றப்பட வேண்டியுள்ளன. முதலாவதாக, முந்தைய குடியுரிமைக் கருத்தாக்கத்தில் தனிநபர்கள் உரிமைகளை விட அவர்கள் முடியாட்சிக்குத் அல்லது அரசுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றித்தான் மிகுதியாக இருந்தது. இரண்டாவதாக, அவை உரிமைகள் பற்றிப் பேசினாலும் கூட, அது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட குடியுரிமையாக இருந்தது. அதில் அடிமைகள், பெண்கள், கல்வியறிவு அற்றவர்கள் மற்றும் பிற சொத்துடைமை இல்லாத வர்க்கங்களும் இடம் பெறவில்லை. மூன்றாவதாக, அந்தக் கருத்தாக்கம் ஒரு சில குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் பற்றி மட்டுமே பேசியது, இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றி விரிவாகப் பேசவில்லை. அதே நேரத்தில் சமூகப் பொருளாதார உரிமைகள் மாறுபாட்டுக்கு இடமின்றி விலக்கி வைக்கப்பட்டிருந்தன. சாராம்சத்தில், மக்கள் உரிமை பெற்ற குடிமக்களாக இருந்ததைவிட கீழ்ப்படிந்தவர்களாகவே இருந்தனர்.

நிரஜா ஜெயல் (2013) கூறியுள்ளது போல, குடியுரிமையின் சட்டப்பூர்வ அந்தஸ்து தெளிவற்றதாகவும் புரிந்து கொள்ள இயலாததாகவும் இருக்கிறது என்பது முக்கியமானது. எதிலிருந்து அது பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது என்பதுதான் அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான முன்நிபந்தனையாகும்.

இந்த முன் நிபந்தனையை ஒருவர் கடந்து செல்லவில்லை என்றால், உரிமைகள் என்பவை ஒரு கானல் நீராக ஆகிவிடும், மேலும் அதன்மூலம் தற்போதைய காலங்களில் குடியுரிமை என்பது உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியமானதாகும். தற்போது, தளர்வாகச் சொன்னால், குடியுரிமை அந்தஸ்து என்பது ஒரு எல்லைக்குட்பட்ட ஆட்சிப் பகுதிக்குள் சட்டத்தின் முன்பு சமமாக நடத்தப்படும், குடிமை, அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளைப் பெற்ற தனிநபர்கள் என்பதாகும். இந்த உரிமைகள் எந்த அளவுக்குக் கிடைக்கும் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். உண்மையில், இன்றைய புதிய தாராளவாத காலத்தில், தனிநபர்களுக்கு உரிமைகள் அளிப்பது அவர்களைச் சோம்பேறிகள் ஆக்கிவிடும் சுயதிருப்தி அடைந்தவர்களாக ஆக்கிவிடும், தேவை என்னவென்றால், அவர்களுடைய கடமைகளுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற பாசாங்கான காரணங்கள் அடிப்படையில் குடியுரிமை அந்தஸ்து என்ற கருத்தாக்கத்தின் மீது மிகப் பெரிய தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

இந்தியாவில், உரிமைகள் கொண்ட குடியுரிமை அந்தஸ்து அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின்பே உறுதியானது. முழுமை பெறாத ஒரு வகையான குடியுரிமை அந்தஸ்து அதற்கும் முன்பே வளர்ச்சி பெற்றிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, ஒரு வரம்புக்குட்பட்ட வாக்குரிமை இருந்தது. 1919 இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் பகுதியளவுக்கு விரிவாக்கப்பட்டது. இது 1935 இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் மேலும் விரிவாக்கப்பட்டது. ஆனால் அந்த விரிவாக்கப்பட்ட வாக்குரிமை கல்வி, வருவாய், சொத்துடமை ஆகிய நிபந்தனைகளைக் கொண்டதாக இருந்தது. அப்போது வயது வந்தவர்களில் ஆறில் ஒரு பங்கினர் மட்டுமே வாக்களிக்க முடிந்தது. இந்தச் சட்டமியற்றும் அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மிகவும் வரையறைக்கு உட்பட்டவையாக இருந்தன. மேலும் இந்தச் சட்டங்களின் கீழ் அடிப்படை உரிமைகள் அல்லது பிற உரிமைகள் குறித்த கருத்தாக்கம் எதுவும் இல்லை. குடியிருப்புவாசிகள் முற்றிலுமாக உரிமையற்றவர்களாக இல்லை – எடுத்துக்காட்டாக, 1860 இல் கொண்டு வரப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம் முழுமையுமே இந்த உரிமைகள் இருப்பதற்கான சாட்சியமாகும் – இந்த உரிமைகள் தனிநபர்களுக்கிடையிலான உரிமைகளாக இருந்தாலும் கூட, அரசாங்கத்திடமும் அதன் அதிகாரிகளிடமும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்புக்கள் மீறப்படுவது குறித்து அந்தச் சட்டம் பேசியது. “தேசத் துரோகம்”, அரசாங்கத்துக்கு எதிராகப் “போர் தொடுப்பது” ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பிரிவுகள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

காலனியவாதிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியா ஒரு நாடாக இருப்பதற்கான வளர்ச்சியைப் பெறவில்லை என்று நம்பினார்கள். ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை, சாதி, மொழி, மற்றும் மத வழிகளில் பிரிந்து கிடக்கும் ஒரு சமுதாயம் குடியுரிமை அந்தஸ்து என்ற ஒரு கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் குடியுரிமை அந்தஸ்து என்பது ஒரு தனிநபர் கருத்தாக்கம். இந்திய சமுதாயத்தில் தனிநபர்கள் எப்போதும் குடும்பங்கள், சாதிகள், குலங்கள், பழங்குடிகள், சமூகங்கள் இன்னபிற ஆகியவற்றின் மூலம் சமரசப்படுத்தப் படுகிறார்கள். ஜெயல் (2013) சுட்டிக்காட்டுவது போல, காலனியக் கண்ணோட்டம் என்பது போதுமான அளவுக்கு தனிநபர்மயமாக்கப்படாத மொழி, சாதி, மற்றும் மதத்தால் பிளவுபடுத்தப்பட்டுள்ள சமூக அமைப்பாக இருந்ததால், இந்திய சமுதாயம் குடியுரிமை அந்தஸ்து குறித்த கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது, மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தனிநபர்கள் குடியுரிமை அந்தஸ்து பெற்றவர்களாக இருக்க முடியும்.

இந்தியச் சூழமைவில் குடியுரிமை அந்தஸ்து குறித்து அவர்கள் பேசினாலும் கூட, அது முதன்மையாக பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ்ப்படியக் கூடியவர்களாக இருக்கச் செய்வதும் அதை நியாயப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.

ஆட்சிப் பரப்பு உடைமை என்பது குடியுரிமை அந்தஸ்துக்கான ஒரு முன் நிபந்தனையாகும், மேலும் இந்தியா சுதந்திரமடைந்து, குடியரசு வடிவ அரசாங்கத்தை ஏற்க முடிவு செய்ததும், குடியுரிமை அந்தஸ்து பற்றிப் பேசுவது அரசியல் சட்டத்திற்கு அவசியமானதாக ஆனது.

அரசியல் சாசனப் பிரிவுகள்

அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது, குடியுரிமை அந்தஸ்து மிகவும் விவாதிக்கப்பட்ட பொருள்களில் ஒன்றாக இருந்தது, குறிப்பாக முந்தைய இந்தியாவில் பிரிவினை எல்லைப் பகுதி மாற்றம் ஏற்பட்டதும், அதன் காரணமாக முன்னெப்போதும் கண்டிராத இடப்பெயர்வும், சமூகப் பிரிவினரிடம் வன்முறையும் நிகழ்ந்தது. அரசியல் சட்டம் அறிவிக்கப்படும் போது அது குடியுரிமை அந்தஸ்து பற்றியும் பேச வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அரசியல் சாசனம் அறிவிக்கப்படும் நேரத்தில், (i). இந்திய ஆட்சிப் பகுதியில் பிறந்திருந்த அனைவரும் அல்லது (ii). ஓருவரின் பெற்றோர் இந்திய ஆட்சிப் பகுதியில் பிறந்திருந்தாலும் அல்லது (iii). 1950 ஜனவரி 26 க்கு முன்பு ஐந்து ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பகுதிக்குள் சாதாரணமாக குடியிருந்து வந்திருந்தாலும் அவர்கள் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர். இந்தியாவின் ஆட்சிப் பகுதி என்பது அரசியல் சட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்த பகுதி என்றும், பிரிக்கப்படாத இந்திய ஆட்சிப் பகுதி அல்ல என்றும் வரையறுக்கப்பட்டது.1 இவ்வாறாக, இந்தியாவில் பிறந்திருந்தாலும் போதும், அல்லது இந்தியாவில் ஐந்தாண்டுகள் குடியிருந்து வந்தாலும் போதும் என்று இருந்தது.

பாகிஸ்தானிலிருந்து குடியேறியிருந்தவர்கள் பற்றிய பிரச்சனைதான் மிகப் பெரிதாக இருந்தது. 1948 ஜூலை 19க்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஒரு நபர் தானாகவே இந்தியக் குடியுரிமை அந்தஸ்துக்கு உரிமை பெற்றவராக இருப்பார். மேலும் அந்த நாளுக்குப் பிறகு, ஆனால் 1950 ஜனவரி 26 க்கு முன்பாக குடியேறியவர்களும் அரசாங்கம் நியமித்த ஓர் அதிகாரியால் குடிமகன் என்று பதிவு பெற்றிருந்தாலும் குடியுரிமை அந்தஸ்து அளிக்கப்படும். இது அந்த நபர், அல்லது அவரது பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டி பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாக இருந்தது.

ஜவஹர்லால் நேரு அரசியல் நிர்ணய சபையில், ஓர் இடையீட்டில், 1949 ஆகஸ்டு 12 அன்று தெரிவித்ததாவது:

இப்போது, இந்த விடயம் குறித்து பெரிய அளவுக்கு ஒரு தவறான புரிதல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரிவினையைத் தொடர்ந்த இந்தப் பின்விளைவுகளைப் பொருத்தவரை, நமது பொதுவான விதி, நீங்கள் காணப் போவது போல, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த குடியேற்றப் பேரலையை எந்த ஆட்சேபணையோ விசாரணையோ இன்றி நடைமுறையில் நாம் ஏற்றுக் கொள்ளப் போகிறோம். அவர்களை 1948 ஜூலையில் ஒரு நாள் வரை குடிமக்களாக ஏற்றுக் கொள்வோம். அந்த ஆண்டின் போக்கில் பல தவறான நபர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள் என்பது சாத்தியம்தான். அவர்கள் ஒவ்வொருவரையும் பரிசீலிக்கும் போது அவர்களை நாம் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்; ஆனால் அத்தகைய ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பரிசீலிப்பதும் அப்படியே அனைவரையும் ஏற்றுக் கொள்வதும் சாத்தியமல்ல. 1948 ஜூலைக்குப் பிறகு, அதாவது, ஒராண்டுக்கும் முன்பு, நாம் ஒரு வகையான விசாரணையை நடத்தினோம், ஒரு முதலேற்பு முகாந்திரம் இருந்தால் குற்றவியல் நடுவர் அவற்றைப் பதிவு செய்வார்; இல்லாவிட்டால் அவர் மேற்கொண்டு விசாரணை செய்து, இறுதியாக அவர் அதைப் பதிவு செய்ய மட்டார் அல்லது நிராகரிப்பார். இப்போது இந்த விதிகள் எல்லாம் இயற்கையாகவே இந்துக்கள், முஸ்லிம்கள், மற்றும் சீக்கியர்கள் அல்லது கிறித்தவர்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும் பொருந்தும். இந்துக்களூக்கும், முஸ்லிம்களுக்கும், அல்லது கிறித்தவர்களுக்கும் மட்டும் என்று நீங்கள் விதிகளை வைத்துக் கொள்ள முடியாது.2

பிரிவினையின் போது இந்தியாவை விட்டு, பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள் (முதன்மையாக முஸ்லிம்கள்) ஆனால் திரும்பி வந்து விட்டவர்கள் பற்றிய பிரச்சனை மிகவும் சூடாக நடத்தப்பட்ட விவாதங்களில் ஒன்றாக இருந்தது. பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குச் சென்று விட்டவர்கள், மீண்டும் திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று வாதிடப்பட்டது. ஆனால், பி.ஆர்.அம்பேத்கர், நேரு, மற்றும் வல்லபாய் படேலும் கூட அத்தகைய நபர்கள் குடியுரிமை பெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று விரும்பியதால் அந்த ஆட்சேபணை நிராகரிக்கப்பட்டது. இறுதியாக, 1947 மார்ச் 1 க்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் குடியேறிச் சென்றவர்கள் அனைவரும் இந்தியக் குடியுரிமை பெற மாட்டார்கள் என்றும், நிரந்தரமாக மீள்குடியேற்றம் பெறுவதற்கு அல்லது எந்தச் சட்டத்தின் படியாவது நிரந்தரமாகத் திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவார்கள் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது வன்முறை காரணமாகவோ, வன்முறை குறித்த அச்சம் காரணமாகவோ தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குக் குடியேறிய, ஆனால் பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி வந்த பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் குடியுரிமை பெறுவதற்கு அனுமதித்தது.3

பிரிவினை மற்றும் கட்டவிழ்த்து விடப்பட்ட மத வன்முறை மற்றும் பாகிஸ்தான் மத வழியில் உருவாக்கப்பட்டிருந்த பின்னணி இருந்தபோதும், இந்திய அரசியல் சட்டம் எந்தக் கட்டத்திலும் குடியுரிமைக்கு மதத்தை ஒரு தீர்மானகரமான அம்சமாகக் குறிப்பிடவில்லை. சாராம்சத்தில், அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், தற்போதைய இந்தியாவில் பிறந்தவர்கள், பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குக் குடியேறியவர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதுதான் குடியுரிமை அந்தஸ்துக்கான தீர்மானகரமான அம்சமாக இருந்தது.

குடியுரிமைச் சட்டம் 1955

1950 ஜனவரி 26 க்குப் பிறகான குடியுரிமைக் கோரிக்கைகளைக் கையாள்வதற்கு 1955 இல் பாராளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தான் இன்றுவரை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இப்போது கருத்து வேறுபாட்டுக்கான திருத்தம் இந்தச் சட்டத்திற்குத்தான், மேலும் தேசிய குடியுரிமைப் பதிவேடு விதிகளும் இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன. இந்தச் சட்டம் பற்றிச் சுருக்கமாகக் காண வேன்டியது அவசியமாகும்.

இந்தக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை அந்தஸ்து பெறுவதற்கான ஐந்து முறைகளை அளிக்கிறது. நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால், நீங்கள் இந்தியாவின் குடிமகன். பின்னர், இது சில மாற்றங்களுக்கு உட்பட்டது, அதை நாம் அடுத்துப் பார்ப்போம். இரண்டாவது, வழிவந்த வகையில், அதாவது, பரந்த அளவில், இந்தியாவுக்கு வெளியே பிறந்த இந்தியர்கள், குழந்தையின் தந்தை இந்தியாவின் குடிமகனாக இருந்தால், மற்றும் 1992 டிசம்பர் 10 க்குப் பிறகு, பிறந்த நேரத்தில் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமக்களில் ஒருவராக இருந்தால் இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குகிறது. மூன்றவதாக, பதிவின் மூலம் குடியுரிமை பெறுதல். இது இந்தியாவில் பிறந்தவர்கள் ஆனால் இந்தியக் குடியுரிமை இல்லாதவர்கள், மற்றும் இந்தியக் குடிமக்கள் அல்லாத, ஆனால் இந்தியக் குடிமக்களை மணந்தவர்கள், இந்தியாவில் குறிப்பிட்ட ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள். நான்காவது, குடியுரிமைப் பேறு அளித்தல். முன்னதாக, மூன்று அம்சங்கள் அவர்கள் “இந்தியர்களாக” இருப்பதால் – அதாவது, இங்கு பிறந்தவர்கள், இந்தியர்களை மணந்தவர்கள், இந்தியக் குடிமக்கள் அல்லாதவர்கள், இந்தியக் குடியுரிமையைப் பெற விரும்புவோர் - என்பதால் குடியுரிமை வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன, ஆனால், மொத்தத்தில், நீங்கள் இந்தியாவில் 11 வருடங்களாக குடியிருந்திருக்க வேண்டும், மேலும் வேறு எங்காவது குடியுரிமை பெற்றிருந்தால் அதைக் கைவிடத் தயாராக இருக்க வேண்டும். கடைசி அம்சம், இந்திய ஆட்சிப் பகுதிக்குள் தங்கள் பகுதியை இணைத்துக் கொண்ட போது இந்தியாவில் வசித்தவர்கள், எடுத்துக்காட்டாக, கோவா அல்லது சிக்கிம். 1955 சட்டத்திலேயே விதிகள் வகுக்கப்பட்டன, அவற்றுக்குப் பதிலாக 2009 விதிகள் மாற்றப்பட்டன.

ஒரு நபரின் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கோ பறிப்பதற்கோ அரசாங்கத்துக்கு சாத்தியமாக இருக்கும் அதேவேளையில் பதிவு மூலமாகவோ குடியுரிமையளிப்பு மூலமாகவோ குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை சில நிபந்தனைகளின் கீழ்தான் அப்படிச் செய்ய முடியும். பிறப்பின் மூலம் குடியுரிமை பெற்றவரின் குடியுரிமையைப் பறிப்பதற்கு ஒரே வழி, அவர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் குடியுரிமையைத் துறந்தாலோ, தாமாகவே முன்வந்து இன்னொரு நாட்டின் குடியுரிமையை ஏற்றுக் கொண்டாலோ தான் முடியும். இல்லாவிட்டால், பிறப்பினால் குடியுரிமையைப் பெற்ற ஒரு நபரின் குடியுரிமையை எந்தச் சூழ்நிலையிலும் பறிக்க முடியாது.4

இருப்பினும், குடியுரிமைச் சட்டமோ விதிகளோ பிறப்பினால் குடியுரிமையை நிரூபிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்துத் தெரிவிக்கவில்லை. குடியுரிமைப் பதிவேட்டுக்கோ, தேசிய மக்கள் தொகை ஆய்வுக்கோ இந்தச் சட்டத்தில் இடமில்லை.

முந்தைய திருத்தங்கள்

1980-களில், பிறப்பினால் குடியுரிமை பெறுவது தொடர்பாக இந்தச் சட்டத்தில் முக்கிய மாற்றங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது, அது குடியுரிமை பெறுவதற்கான ஆறாவது வழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இது அசாம் கிளர்ச்சியின் பின்னணியில் நிகழ்ந்தது. இந்தத் திருத்தத்திற்கு முன்னதாக, 1926 ஜனவரி 26க்குப் பிறகு இந்தியாவில் பிறந்திருந்தால் போதுமானதாக இருந்தது. அந்தச் சட்டத்தில் 1987 இல் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், இப்போது 1987 ஜூலை 1க்கு முன்னதாகப் பிறந்தவர்கள் அப்போதும் பிறப்பினால் குடியுரிமை பெறுவார்கள், ஆனால் 1987 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் மட்டும் போதாது, அவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், 1987 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கு, உங்கள் சொந்தப் பிறப்பு அந்தஸ்தை நிரூபித்தால் மட்டும் போதாது, உங்கள் பெற்றோர்களில் ஒருவராவது உங்கள் பிறப்பின் போது இந்தியக் குடிமகனாக இருந்திருக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான மாற்றம் அசாம் தொடர்பானதாகும். கிளர்ச்சியின் காரணமாக, 1985 டிசம்பர் அன்று குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு 6 அ-வைச் சேர்த்துக் கொள்ளும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி, 1966 ஜனவரி 1 க்கு முன்னதாக வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து, தொடர்ந்து அசாமில் வசித்து வருபவர்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவார்கள். 1966 ஜனவரி 1க்கும் 1971 மார்ச் 25க்கும் இடையில் வந்தவர் அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்டிருந்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை பெறுவார்; மேலும் 1971 மார்ச் 25க்குப் பிறகு வங்க தேசத்திலிருந்து அசாமுக்குள் வந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கு உரிமை இல்லை. இதில் எந்த மதம் தொடர்பான பாகுபாடும் இருக்கவில்லை.

அடுத்த முக்கிய மாற்றம் 2003-2004 இல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் போது கொண்டு வரப்பட்டது. அதன் படி, 2004 டிசம்பர் 30 க்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்களுக்கு, குழந்தை பிறந்த போது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டுமே (ஏற்கெனவே 1987 திருத்தத்தில் குறிப்பிட்டது போல) குடியுரிமை அளிக்கப்படும். மேலும் 2014 திருத்தத்தில் ஒரு புதிய நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட்டது, அதாவது, இரண்டாவது பெற்றோர் ஒரு சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது. இதன் பொருள் ஒரு குழந்தை சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்திருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்ட இந்தியத் தந்தைக்குப் பிறந்திருந்தால், அந்தக் குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு உரிமை இல்லை. 2004 டிசம்பர் 30க்குப் பிறகு இந்தியாவில் பிறந்த குழந்தை, இந்தியாவில் பிறந்தது என்பதை மட்டுமின்றி, அதன் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்பதையும், இன்னொரு பெற்றோர் சட்டவிரோதக் குடியேறி அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

இந்தத் திருத்தம் சட்டவிரோதக் குடியேறி என்பதை, முறையான பயண ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் நுழைந்தவர் அல்லது முறையான பயண ஆவணங்கள் இருந்து அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்த பின்பும் தங்கியிருப்பவர் என்று வரையறை செய்தது. சாதாரணமாக, அத்தகைய ஒரு சட்டவிரோதக் குடியேறி இந்தியாவில் குறிப்பிட்ட ஆண்டுகள் குடியிருந்து பதிவு செய்தோ, குடியுரிமை அளிப்பு மூலமாகவோ குடியுரிமைக்கு மனு செய்திருக்கலாம். ஆனால் அத்தகைய குடியேறி 2003 திருத்தத்தின்படி பதிவு செய்தோ, குடியுரிமை அளிப்பு மூலமாகவோ குடியுரிமைக்கு மனு செய்ய முடியாது. இவ்வாறாக, ஒரு வங்க தேசத்தவர் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வந்து, ஓர் இந்தியக் குடிமகனை மணந்திருந்தாலும், 60 ஆண்டுகள் தங்கியிருந்தாலும், இந்தியாவில் அவருக்குக் குழந்தைகள் இருந்தாலும் அவர் குடியுரிமை பெறுவதற்கு உரிமையில்லாதவர்தான். அத்தகைய ஒரு குழந்தையும் கூட ஒருபோதும் இந்தியக் குடியுரிமைக்கு உரிமை பெற முடியாது. 1992 இல் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கைப்படி ஒரு குழந்தை பிறப்பிலிருந்தே தேசிய உரிமையைப் பெறும். இந்த உடன்படிக்கைக்கு இந்தியா ஏற்பளித்துள்ளது. இந்தத் திருத்தம் அந்த உடன்படிக்கைக்கு முற்றிலும் எதிரானதாகும்.5

இந்த அம்சத்தின் மீதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2003-2004 இல் வேறு சில மாற்றங்களும் நிகழ்ந்தன, ஆனால் அவற்றைப் பற்றி அடுத்து பேசுவோம்.

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019

இந்தக் கருத்து வேறுபாட்டுக்குரிய திருத்தம் சட்டவிரோதக் குடியேறிகளுக்கான குடியுரிமை உரிமைகள் தொடர்பான 2003-04 தடையை மாற்றுகிறது. 2004 திருத்தத்தின்படி, ஒரு சட்டவிரோதக் குடியேறி எந்தச் சூழ்நிலையிலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது என்பதை நினைவில் வைக்க வேண்டும். பிறப்பினால் மட்டும் அல்ல, பதிவு செய்ததன் மூலமோ குடியுரிமை அளிப்பு மூலமோ கூட அதைப் பெற முடியாது என்பது தெளிவாகும். 2019 திருத்தம் சொல்வது என்னவென்றால், எந்த ஒரு சட்டவிரோதக் குடியேறியும் வங்க தேசம், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 டிசம்பர் 31க்கு முன்னதாக இந்தியாவுக்குள் வந்திருந்தால், மேலும் அப்படிப்பட்ட ஒரு குடியேறி இந்து, கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தவர், பார்சி அல்லது ஜெயின் சமூகங்களைச் சேர்ந்தவராக இருந்தால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் குடியுரிமை அளிப்பு மூலம் குடியுரிமை பெறுவதற்கு உரிமை பெற்றவராக இருப்பார். இவ்வாறாக, அத்தகைய நபர்கள் அனைவரும் 2020 ஜனவரி 1 இல் குடியுரிமை பெறுவதற்கு உரிமையுள்ளவராக இருப்பார்.

எல்லை கடந்து வந்த பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சாதாரணமாக, இது குடியுரிமை அளிப்பதன் மூலம் செய்யப்படுவதில்லை, மாறாக நீண்ட கால விசா மற்றும் பிற அனுமதிகள் மூலம் அகதி அந்தஸ்து அளிக்கப்படுவதன் மூலம் செய்யப்படுகிறது. இப்படித்தான் திபெத்திய அகதிகளும், இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளனர். இப்போது குடியுரிமை அளிப்பதற்குச் செய்யப்படுவது நடுநிலையாகவும் பாகுபாடின்றியும் செய்யப்படுமானால் இதுவும் ஒப்புக் கொள்ளத் தக்கதே.

எல்லைப்புற நாடுகளிலிருந்து மத, சமூக விலக்கம், அரசியல் நம்பிக்கைகள் போன்ற பல்வேறு காரணங்களால் துன்புறுத்தப்படும் குழுக்கள் அல்லது தனிநபர்கள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டு, அத்தகைய நபர்களுக்குக் குடியுரிமை அளிக்க முடிவு செய்யப்படுமானால் அதற்கு எந்த ஆட்சேபணையும் இருக்காது. ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 செய்வது என்னவென்றால், முதல் முறையாக, மதத்தை, அதிலும் குறிப்பிட்ட குழுக்களை மட்டும், குடியுரிமை அளிப்பதற்கோ நிராகரிப்பதற்கோ ஒரு நிபந்தனையாக ஆக்குகிறது. இது அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது செய்யப்படவில்லை, அல்லது குடியுரிமைச் சட்டத்திலும் செய்யப்படவில்லை, அல்லது முந்தைய திருத்தங்களிலும் செய்யப்படவில்லை, அல்லது அசாம் ஒப்பந்தத்தின் போதும் செய்யப்படவில்லை.

இது அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மையை – உச்ச நீதிமன்றத்தால் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதியாகக் கூறப்பட்டுள்ளதை மீறுவது என்பது தெளிவாகிறது, மேலும் அரசியல் சாசனத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகும். பிற அடிப்படை உரிமைகளைப் போல அல்லாமல், சமத்துவம், சமமான பாதுகாப்பு ஆகியவை பற்றிப் பேசுகிற பிரிவு 14, குடிமக்கள் அல்லாதோருக்குக் கூட – அதாவது, அயல்நாட்டவருக்குக் கூட பொருந்தக் கூடியதாகும். இருப்பினும், பிரிவு 14 வகைப்படுத்தலை, அத்தகைய வகைப்படுத்தல் சட்டபூர்வத் தன்மையையும் உரிய கருதுகோள்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால் தடுப்பதில்லை. ஒவ்வொரு வகைப்படுத்தலும், சட்டப்பூர்வத் தன்மை கொண்டதாக, செல்லத்தக்கதாக, அனுமதிக்கத்தக்கதாக இருப்பதற்காக, இரட்டைச் சோதனையை நிறைவேற்ற வேண்டும், அதாவது, (i) அந்த வகைப்படுத்தல், ஒரு குழுவில் விடுபட்டவர்களிடமிருந்து குழுவாக சேர்க்கக்கூடிய நபர்கள் அல்லது விடயங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேன்டும். மற்றும் (ii) அத்தகைய வேறுபாடுகள் பிரச்சனையில் உள்ள சட்டமியற்றலின் மூலம் அடையக்கூடிய குறிக்கோளுடன் அறிவார்ந்த உறவைக் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு சோதனைகளும் உடனிகழ்வாக நிறைவு செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்றமும் ஒரு சோதனையை விதித்துள்ளது, அதாவது, ஒரு சட்டத்தின் பிரிவுகள் எதேச்சதிகாரமானவையாக இருக்குமானால், பின்னர் வகைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் நீக்கப்படலாம்.

பாகுபாடு கொண்டதும், தன்னிச்சையானதும்

அப்படியானால் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தச் சோதனைகளில் தேர்ச்சி பெறுகிறதா என்று பார்ப்போம். மூன்று மட்டங்களில் வேறுபாடு உருவாக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. முதலாவது, நாடுகள் அடிப்படையில், அதாவது, இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகியவற்றிலிருந்து குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இரண்டாவது, மத மற்றும் பிற வகை துன்புறுத்தல் அடிப்படையில் மட்டும் பொருந்தும். மூன்றாவது, மதச் சமூகங்களுக்குள் கூட, ஆறு மதக் குழுக்களைப் பற்றி மட்டும் பேசுகிறது.

நாடுகள் அடிப்படையில், ஏன் மூன்று நாடுகளிலிருந்து மட்டும் சட்டவிரோதக் குடியேறிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பது எந்தத் தர்க்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாமல் இருக்கிறது. பிரிவினை ஒரு காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் பிரிவினையின் போது ஆப்கானிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இல்லை. சட்டவிரோதக் குடியேறிகள் பிற நாடுகளிலிருந்தும் வந்திருக்கிறார்கள். இவர்களில் இலங்கையிலிருந்து துன்புறுத்தப்பட்ட வந்த லட்சக்கணக்கான தமிழர்களும், மியான்மரிலிருந்து துன்புறுத்தப்பட்டு வந்த 40,000 ரோஹிங்கியா மக்களும், சீனாவிலிருந்து துன்புறுத்தப்பட்டு வந்த திபெத்தியர்களும், வங்க தேசத்திலிருந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான சக்மாக்கள் (அவர்களில் சிலர் முஸ்லிம்கள், எஞ்சியோர் பௌத்தர்கள்) ஆகியோரும் அடங்குவர். ரோகிங்கியாக்கள் சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கான முதலேற்பு முகாந்திரம் உள்ளது.

ஏன் இந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எடுத்துக்காட்டாக, இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் வேண்டுமென்றே விடப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. ஏனென்றால் அது பௌத்தப் பெரும்பான்மை நாடு மதரீதியாகத் துன்புறுத்தக் கூடிய திறன் கொண்டது. அது மியான்மருக்கும் பொருந்தும். அது மட்டுமின்றி, அதன் தர்க்கத்தின் மூலம் இந்துப் பெரும்பான்மை (அல்லது கிறித்தவ அல்லது யூதப் பெரும்பான்மை நாடு அதன்) மதச் சிறுபான்மையினர் விடயத்தில் அதே குற்றச்சாட்டுக்கு ஆளாகாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

இரண்டாவது, மதக் முழுக்களிலிருந்து துன்புறுத்தப்பட்ட சமூகங்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது ஏன் என்பது தெளிவாகவில்லை. அகதிகள் உடன்படிக்கை 1951, மற்றும் அகதிகள் உடன்பாடு 1967 இன்படி கூட அகதிகள் அந்தஸ்தில் மத ரீதியாகத் துன்புறுத்தப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. இனரீதியாகவும், தேசிய இனரீதியாகவும், ஒரு சமூகக் குழுவின் அல்லது அரசியல் கருத்துக்களின் உறுப்பினர்கள் தாம் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த இரண்டு உடன்பாடுகளிலும் இந்தியா கையெழுத்திடவில்லை. ஆனால் துன்புறுத்தல் அடிப்படையில் வகைப்படுத்தல் என்று வரும்போது இந்த வகை நபர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்த மூன்று நாடுகளிலும் உள்ள நாத்திகர்கள், மதவிரோதக் குற்றம் சாட்டப்பட்டோர், ஷியாக்கள், ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலின மாறுபாட்டுக்கு உள்ளானோர், மற்றும் இன்னபிறரும் இவர்களில் அடங்குவர். மேலும் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு பாதுகாப்பு தேவைப்படும் சில பழங்குடிக் குழுக்களும் இருக்கின்றனர்.

மூன்றாவது, ஆறு மதச் சமூகங்கள் மட்டும் ஏன் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன என்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. எடுத்துக்காட்டாக, 1974 இல் பாகிஸ்தானில் அஹமதியர்கள் அரசியல் சட்டப்படி முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டனர். மேலும் 1984 இல் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் அஹமதியர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதும், அவர்களுடைய மதத்தை இஸ்லாம் என்று கூறிக் கொள்வதும், வெளிப்படையாக இஸ்லாமைப் பின்பற்றுவதும் குற்றச் செயலாக ஆக்கப்பட்டது. அதேபோல, பாகிஸ்தானில் உள்ள ஷியாக்கள் எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்; மேலும் தங்கள் மொழியாலும் இனவரைவாலும் ஹசாரா ஷியாக்கள் வேறுபடுத்தப்படுகின்றனர். 2008 இலிருந்து 500க்கும் மேற்பட்ட ஷியா ஹசாராக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த ஐ.நா.ஆணையத்தின் இன்னொரு அறிக்கை 1999க்கும் 2003க்கும் இடையில் 600 ஷியாக்கள் கொல்லப்பட்டதாகவும், கராச்சியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தங்கள் சகாக்கள் கொல்லப்பட்டதன் விளைவாக ஏறத்தாழ 500 மருத்துவர்கள் நாட்டை விட்டே ஓடி விட்டதாகவும் தெரிவிக்கிறது.

2015 அக்டோபரில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் பாகிஸ்தான் அரசாங்கத்திடம், அதன் குடிமக்களை, ஷியா முஸ்லிம்கள் உட்பட பாதுகாக்குமாறு வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில், 2007 இல் பஹா ஐ பிரிவினர் இஸ்லாம் விரோதிகளாக ஃபத்வா அறிவிக்கப்பட்டது. ஹசாராக்கள், ஆப்கானிஸ்தானிலும் கூட, பல நூற்றாண்டுகளாகத் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். 1800-களிலிருந்து ஏறத்தாழ அவர்களில் பாதிப்பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதுமட்டுமின்றி ஹசாராக்களைக் கொல்வது ஒவ்வொருவரின் கடமை என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். துன்புறுத்தப்பட்ட இவர்களில் பலர் எல்லை கடந்து இந்தியாவுக்குள் வந்து சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அதில் புரிந்து கொள்ளக் கூடிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்தச் சட்டம் மோசமானது, ஏனென்றால் அது தன்னிச்சையானது. இதில் தெரிவு செய்யப்படுவதன் பின்னால் எந்த பகுத்தறிவுப் பார்வையும் இல்லை. இதில் சேர்க்கப்பட்டுள்ள குழுக்கள் துன்புறுத்தப்படுகின்றன என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் குடியுரிமை அந்தஸ்து என்பது தனிநபர் தொடர்பானது, இது குழுசார்ந்த விடயம் அல்ல. எனவே, ஒவ்வொரு தனிநபரும் தான் துன்புறுத்தப்பட்டார் என்பதை அல்லது இந்தியாவுக்குள் நுழைந்த நேரத்தில் துன்புறுத்தப்படும் உண்மையான அச்சுறுத்தலில் இருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்தத் திருத்தச் சட்டத்தில் துன்புறுத்தல் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஒரு குழப்பம் உள்ளது. வாஜ்பாய் அரசாங்கக் காலத்திலிருந்தே பாரதிய ஜனதாக் கட்சியின் திட்டம் தெளிவாக இருந்து வருகிறது. இந்தத் திருத்தத்துக்கு முன்னோட்டமாக, அப்போது 2015 மற்றும் 2016 இல் கடவுச் சீட்டு (இந்தியாவுக்குள் நுழைவதற்கு) விதிகள் 1950, அயல்நாட்டவர் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழையும் எந்த ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு கடவுச் சீட்டு (இந்தியாவுக்குள் நுழைவதற்கு) விதிகள் வழிவகை செய்தன. 1948 அயல்நாட்டவர் ஒழுங்கு விதிகளும், (1946 அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டன) இதே போன்ற பின்விளைவுகளுக்கு வழிவகுத்தன.

2015 மற்றும் 2016 இல், தேசிய ஜனநாயக அரசாங்கத்தின் போது, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவற்றிலிருந்து வரும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த நபர்களுக்கு, அதாவது, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு, அவர்கள் மதரீதியான துன்புறுத்தல் அல்லது துன்புறுத்தப்படும் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் புகலிடம் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் இந்த இரு விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டன. அதாவது 2014 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்னதாக முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் நுழைந்தவர்கள் (அதாவது, சட்டவிரோதக் குடியேறிகள்) இந்த சட்டவிதிகளிலிருந்து விலக்களிக்கபட்டனர்.

இவ்வாறாக, அத்தகைய சட்டவிரோதக் குடியேறிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவோ வெளியேற்றப்படவோ முடியாது. இப்போதைய திருத்தம் இந்த நபர்களுக்கு, அவர்கள் கடவுச் சீட்டு விதிகள் மற்றும் அயல்நாட்டவர் சட்ட விதிகள் ஆகியவற்றின் நிபந்தனைகளை நிறைவேற்றினால், குடியுரிமை அளிக்கிறது. அந்த துன்புறுத்தலோ துன்புறுத்தலுக்கான அச்சுறுத்தலோ இருக்க வேண்டும் என்பது திருத்ததின் விதிகளின் நிபந்தனைகளில் ஒன்றாகும். மேலும் இவ்வாறாக, குடியுரிமைத் திருத்தச் சட்டமும் கூட துன்புறுத்தல் நிபந்தனையை நிறைவு செய்வது அந்தச் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த விதிகளை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தச் சட்டத்தின் பின்னால் உள்ள தெளிவாகத் தெரியும் நோக்கம் என்னவென்றால், இஸ்லாம் அதன் இயல்பிலேயே அடிப்படைவாதமுடையது, அது முஸ்லிம்கள் அல்லாதோரைத் துன்புறுத்துகிறது, அதை எதிர்க்க வேண்டும் என்பதுதான். இது முற்றிலும் ஒரு மதவாதச் சட்டமாகும்.

நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவை ஒருபோதும் நிகழாது என்றாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் இருந்துவரும், மேலும் சில சமூகத்தவருக்கு குடியுரிமை வழங்கும், பிற சமூகங்களை விலக்கி வைக்கும். இத்துடன் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகிய இரண்டும் சேர்ந்து கொண்டால், அது இன்னும் கொடூரமானதாக இருக்கும்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் தேசிய குடியுரிமைப் பதிவேடும்

2003 குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டின் குடியுரிமை விதிகள் (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல்) ஆகியவற்றுடன் முதல் முறையாக தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு குறித்த கருத்து வந்தது. 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விதிகள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு, ஒவ்வொரு குடிமகனும் எந்த பொதுப் பட்டியலிலும் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அரசியல் சட்டத்தின் பிரிவு 326 குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று விதித்துள்ளது. இவ்வாறாக, நீங்கள் ஒரு வாக்காளராக இருந்தால், தானாகவே நீங்கள் ஒரு குடிமகனாக இருப்பீர்கள். அதேபோல, கடவுச் சீட்டுச் சட்டப்படி, கடவுச் சீட்டுக்கள் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒரு குடிமகனுக்கு மட்டுமே விவசாய நிலம் சொந்தமாக இருக்க முடியும். அதன் விளைவாக ஒரு எளிய சூத்திரத்தின் படி, நீங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தாலோ, அல்லது கடவுச் சீட்டு வைத்திருந்தாலோ, அல்லது சொந்தமாக விவசாய நிலம் வைத்திருந்தாலோ நீங்கள் ஒரு குடிமகனாக இருப்பீர்கள். அதேபோல உங்களுக்கு இந்தியாவில் பிறந்த குழந்தையும் இந்தியக் குடிமகனாக இருக்கும். நடைமுறையில் ஒரு தனிப் பதிவேட்டுக்கான தேவை முற்றிலும் இல்லை.

எந்த ஒருவரையாவது ஊடுருவல்காரர் அல்லது சட்டவிரோதக் குடியேறி என்று அரசு சந்தேகப்பட்டால், அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்வதற்கு, விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, அந்த நபரை நாடு கடத்துவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இருந்தது. அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ், தாம் அயல்நாட்டவர் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்டவருடையதுதான், அரசுடையது அல்ல. மேலும் அத்தகைய பல வழக்கு விசாரணைகள் நாடெங்கும் நடத்தப்பட்டுள்ளன, அவற்றில் பல வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. ஆவணப்படுத்தப்பட்ட குடியுரிமைக்கான தேவை இருக்கவில்லை.

குடியுரிமைக்கான நிரூபணம் தேவையாக இருந்தால், அது பிறப்பால் தான் இருந்தது. பிறப்பின் முதன்மையான நிரூபணம் பிறப்புச் சான்றிதழ் தான். 1987க்கு முன்பு பிறந்தவர்களுக்கு, அவர்களுடைய சொந்தப் பிறப்பை நிரூபிப்பது போதுமானதாக இருந்தது. 1987க்கும் 2004க்கும் இடையில் பிறந்தவர்களுக்கு, பெற்றோர் இருவரின் குடியுரிமையும் நிரூபிக்கப்பட வேண்டும். பிறப்பு, இறப்புக் கட்டாய பதிவுச் சட்டம் 1969 இல் கொண்டு வரப்பட்டது. தேசிய குடும்ப நல ஆய்வில் அண்மைத் தரவுகளின்படி, 2015 – 16 இல், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளில் ஐந்தில் மூன்று (62.3%) பிறப்பு பதிவு செய்யப்பட்டு, பிறப்புச் சான்றிதழ் வைத்திருந்தது. இது 2005-06 இன் இருந்த 26.9%இலிருந்து மேம்பட்டதாக இருந்தது. ஆனால், தற்போதைய தரவு மிகைப்படுத்தலாகத் தெரிகிறது. எப்படியானாலும், அண்மைப் புள்ளிவிவரங்களின்படி கூட, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து வயதுக்கும் குறைவான ஏறத்தாழ 24 மில்லியன் குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்று ஐ.நா. கலாச்சார மற்றும் கல்வி நிதியம் மதிப்பிட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு, அந்தப் புள்ளி விவரம் மிகவும் அதிகமாக இருக்கும்.

பழங்குடியினர், தலித்துக்கள், மற்றும் ஏழைச் சமூகங்களிடையே பதிவின்மை மிகவும் கூடுதலாக இருக்கும். மேலும் கூடுதலாக, இந்தியாவிற்குள் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் குடியேறிய தொழிலாளர்கள் ஆவர், அவர்களுக்குப் பிறப்போ அல்லது எந்த ஆவணமோ இல்லை. 2001இல் ஐ.நா. கலாச்சார மற்றும் கல்வி நிதியம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமான பிறப்புப் பதிவு விகிதம் 34.7% விழுக்காடு மட்டுமே. இதிலும் கூட, உத்தரப் பிரதேசத்தில் பிறப்புப் பதிவு விகிதம் வெறும் 6.5% மட்டுமே. இந்தப் புள்ளிவிவரங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்திருந்தாலும் கூட, அனைத்துப் பிறப்புகளும் பதிவு செய்யப்படுவதற்கு இன்னும் வெகுகாலம் பிடிக்கும்.

அசாமின் எடுத்துக்காட்டை எடுத்துக் கொண்டால், ஏராளமானவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர், ஏனென்றால் அவர்களின் ஆவணங்களில் எழுத்துக்களில் சிறிய குறைபாடு இருந்தது. அங்கு பெண்களே மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர், ஏனென்றால் அவர்கள் பிறந்த கிராமங்களில் ஆவணப்படுத்தல் இல்லை, அவர்கள் திருமணம் செய்து கொண்ட கிராமங்களில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஆவணப்படுத்தல் தான் இருக்குமே தவிர, பிறப்பு குறித்த ஆவணப்படுத்தல் இருக்காது. அதோடல்லாமல், திருமணத்திற்குப் பிறகு பெயர்களும் மாற்றப்படுகின்றன. மேலும் புதிய இணையர்க்கு முந்தைய பெயரைத் தொடர்புபடுத்துவதற்குப் பெரும்பாலும் எதுவும் இருக்காது. இந்தப் பிரச்சனை பாலின மாற்றத்திற்கு உள்ளானவர்களுக்கும் ஏற்படும்.

குடியுரிமைப் பதிவு விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த விதிகளின்படி, முதலில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து ஒரு மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இது மக்கள் தொகைப் பதிவு, இது 2020 ஏப்ரல் மற்றும் செப்டம்பருக்கு இடையில் செய்யப்பட வேண்டும். வேறு எந்தச் சட்டத்திலும் மக்கள் தொகைப் பதிவேடு என்ற கருத்தாக்கமே இல்லை. இதைச் செய்ய வேண்டுமென்றால், இதைத் தொடர்ந்து தேசிய குடியுரிமைப் பதிவேட்டைத் தயாரிக்க வேண்டும். அரசாங்கம் இவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்று கூறுவது பச்சைப் பொய்யாகும். நாட்டின் மக்கள் தொகையின் அளவையும் அதன் பிரிவுகளை நுண்ணளவிலும் தீர்மானிக்கும் நோக்கங்களுக்காக ஓர் ஆய்வை ஒருவர் விரும்பினால், நீங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வீர்கள். 1872 இலிருந்து மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் சுதந்திரம் பெற்றதிலிருந்து, அது 1948 மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் துல்லியமான நோக்கம் (மக்கள் தொகை பற்றி அறிந்து கொள்வதற்காக மட்டுமின்றி) அரசாங்கத்தின் நலத் திட்டங்களுக்கு உதவும் வகையில் பொருளாதாரச் சூழலைக் கண்டறிவதுதான்.

அப்படியானால் பின்வரும் கேள்வி எழுகிறது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 2010 இல் தேசிய மக்கள் தொகைப் பதிவினை ஏன் நடத்தியது? அது ஒரு புதிராக இருக்கிறது. ஆனால் ஒரு விடயம் தெளிவாகிறது – அதாவது, இது குடியுரிமையைத் தீர்மானிப்பதற்கானது அல்ல. 2010-இலேயே சட்டம் நிலைநிறுத்தப்பட்டு விட்டது. 1987க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, பெற்றோர்களில் ஒருவரின் குடியுரிமை இன்றியமையாதது. குடியுரிமை நோக்கத்துக்காக, தேசிய மக்கள் தொகைப் பதிவுக்கு இந்தத் தகவல் தேவை. தேசிய மக்கள் தொகைப் பதிவு அந்த நேரத்தில் தொடங்கியிருந்த ஆதார் திட்டத்துடன் இணைப்பதற்காகச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், ஆதார் அட்டையை குடியுரிமைக்கான அட்டையாகப் பயன்படுத்துவதற்காக இருக்கலாம். ஆதார் சட்டம் தேசிய ஜனநாயக அரசாங்கத்தால் பின்னர் 2014 இல் தான் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆதார் அட்டை குடியுரிமைக்கான நிரூபணம் அல்ல என்று இந்தச் சட்டத்தின் பிரிவு 9 கூறுகிறது. ஆனால், இதெல்லாம் வெறும் யூக நிலைமையில் தான் இருக்கிறது. தேசியக் குடியுரிமைப் பதிவு விதிகளின்படி, தேசிய மக்கள் தொகைப் பதிவின் ஒரே நோக்கம் அதை தேசியப் குடியுரிமைப் பதிவுடன் தொடர்வதுதான் என்பது தெளிவாகிறது. இப்போது செய்ய முயற்சிக்கப்படுவது என்னவென்றால், பெற்றோரின் பிறப்பு குறித்த விவரங்கள் தொடர்பான கேள்விகளைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வதுதான். மேலும், ஆதார் அட்டை விவரங்கள் இன்னபிறவும் மிகப் பெரிய அளவில் உளவுக் கண்காணிப்புக்கு இட்டுச் செல்லவே செய்யும்.

அது செயல்படும் விதத்தில் மக்கள் தொகைப் பதிவேடு வட்டார அளவில் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு, அது சரிபார்க்கப்பட்டு, வட்டாரப் பதிவாளரால் ஆய்வு செய்யப்படும் (கிராமத்தில் அல்லது வார்டு மட்டத்தில் கடைநிலை அதிகாரி). மேலும் எந்த ஒருவரின் குடியுரிமையானது சந்தேகத்துக்கு இடமாக இருக்குமானால் அத்தகைய ஒரு நபர் அல்லது குடும்பம் அவர்களுடைய குடியுரிமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இங்குதான் பிரச்சனை எழுகிறது. சந்தேகத்துக்கிடமான குடிமகனாக நடத்தப்படுபவர் கீழ்மட்ட அதிகாரியால் தீர்மானிக்கப்படுவார். அத்தகைய ஒரு நபர் குறிப்பிட்ட சில சமூகங்கள் அல்லது சாதியினரை சந்தேகத்துக்கு இடமானவர்களாக அறிவிக்குமாறு உத்தரவிடுவதற்கு உறுதியான வாய்ப்பு இருக்கிறது. அல்லது, அது மிகப்பெரிய ஊழலுக்கு இட்டுச் செல்லலாம். அது ஏழைகளுக்கு எதிராகச் செயல்படும் என்பது தெளிவானது. ஒரு குடும்ப அட்டை வாங்குவதற்குக் கூட நிலையாக கையூட்டு கொடுக்க வேண்டிய ஒரு நாட்டில், குடியுரிமைக்கு இன்னும் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.

எப்படியானாலும், உங்கள் பெயர் அப்போதும் சேர்க்கப்படாமல் இருந்தால், நீங்கள் மாவட்டப் பதிவாளருக்கு மேல்முறையீடு செய்யலாம். இப்போது, அயல்நாட்டவர் தீர்ப்பாயத் திருத்த ஆணை 2019 இன் கீழ், அயல்நாட்டவர் தீர்ப்பாயத்திற்கு முன்பாக ஒரு மேல்முறையீடு செய்ய முடியும். அதுவே இறுதி முடிவை எடுக்கும். நீங்கள் குடியுரிமையை நிரூபிக்க இயலாவிட்டால், நீங்கள் ஒர் அயல்நாட்டவராக அறிவிக்கப்பட்டு, உங்களை ஏற்றுக் கொள்ள முன்வரும் ஒரு நாட்டிற்கு வெளியேற்றும்வரை ஒரு தடுப்பு முகாமில் வைக்கப்படுவீர்கள். அயல்நாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட ஒரு நபர் தடுப்பு முகாமில் வைக்கப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் நாடற்றவராக, உரிமைகள் அற்றவராக, கல்வி, உணவு, வேலைவாய்ப்புத் திட்டங்களைப் பெற முடியாதவராக அலைந்து கொண்டிருக்கலாம். மேலும் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படும் அபாயத்தைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்குழும நிறுவனங்கள் உரிமைகள் ஏதுமற்ற அடிமையாக உங்கள் உழைப்பைச் சுரண்டலாம்.

அசாம் எடுத்துக்காட்டைப் பார்ப்போமானால், அயல்நாட்டவர் தீர்ப்பாயங்கள் ஒரு பேரழிவாகும். இயற்கை நீதியின் கோட்பாடுகள் தொடர்ந்து மீறப்பட்டன; எந்த சட்ட உதவியும் வழங்கப்படுவதில்லை; இவை ரகசியமாக விசாரிக்கப்படுகின்றன; தீர்ப்பாய தலைமை நடுவர்கள் பலரும் நீதித்துறை அனுபவமோ, சட்டத்துறை அனுபவமோ அற்றவர்கள்; அவர்களுக்கு குறிப்பிட்ட நபர்களை அயல்நாட்டவர் என்று அறிவிக்க அறிவுறுத்தப் பட்டிருந்தததாகவும், அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்கள் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. மேலும், குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருடையதுதான். அசாம் பொதுமக்கள் ஆவணங்களைத் திரட்டுவதற்காகவும், அயல்நாட்டவர் தீர்ப்பாயங்களுக்குச் சென்று வரவும், வழக்கறிஞர்களுக்குச் செலவிடவும் ஏராளமான தொகையைச் செலவழிக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பலர் தங்கள் நிலங்களை விற்க வேண்டியிருந்தது; மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

குடியுரிமை விதிகளின்படி, வீடு வீடாக ஆய்வு செய்ய வரும் நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒருவர் பதில் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. விதி 7 இன்படி, இந்தியக் குடிமக்கள் வட்டாரப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும், மேலும் அதே விதியின்படி, மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்படும்போது, குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத் தலைவரின் பொறுப்பாகும். அந்த விதியை மீறினால் ரூ.1000/- அபராதம் விதிக்கலாம். ஒருவர் அந்த அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு முன்வந்தாலும், கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இருந்தாலும், அதன் பின்விளைவு, அத்தகைய ஒரு நபர் சந்தேகத்துக்குரிய குடிமகனாக நடத்தப்படுவதாகவும், ஓர் அயல்நாட்டவராக நடத்தப்படும் சாத்தியமாகவும் இருக்கலாம். ஒத்துழையாமைப் பின்பற்றுவதானால் அது மிகப் பரவலாக இருக்க வேண்டும். ஆங்காங்கே நடப்பதாக இருக்கக் கூடாது, அதனால் பயனிருக்காது.

முடிவுரை

குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAA) முற்றிலும் அரசியல் சட்ட விரோதத் திருத்தமாகும். அதை அகற்றியே ஆக வேண்டும். தேசிய மக்கள் தொகைப் பதிவவேடு (NPR) மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC) ஆகியவை மிகப் பெரிய அளவுக்குப் பணத்தை வீணடிப்பதாகும், மேலும் தேசிய அளவில் முன்னெப்போதும் கண்டிராத துயரத்துக்கு இட்டுச் செல்லும், கோடிக்கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறிக்கவும், அவர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்கும் இட்டுச் செல்லும். மக்கள் தொகையை உருவரைவு செய்வது, குறிப்பாக தற்போதைய அரசியல் சூழலில் அப்படிச் செய்வது எளிதான ஒன்றல்ல. அது சாதி, மத ரீதியான தாக்குதலுக்கு வழி வகுக்கும். இது மக்களை உளவு பார்க்கும் ஒரு கண்காணிப்பு அரசாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதாக ஆகி விடும். அதேவேளையில் முஸ்லிம்கள் இலக்காக ஆக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தலித்துக்கள், பழங்குடிகள், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை பிற சமூகங்களிலிருந்து விலக்கி வைப்பதற்கு இந்த தேசிய மக்கள் தொகைப் பதிவவேடு (NPR) மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC) இட்டுச் செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை.

குறிப்புகள்

1. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 1 மற்றும் 5.

2. https://indiankanoon.org/doc/215406/.

3. இந்திய அரசியல் சட்டம்பிரிவு 7.

4. குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவுகள் 8 இலிருந்து 10 வரை.

5. குழந்தைகள் உரிமை உடன்படிக்கை, “பிரிவு 7. (1) குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்ய வேண்டும், பிறப்பிலிருந்து ஒரு பெயரை வைத்துக் கொள்ளவும், ஒரு தேசிய இனத்தைச் சார்ந்திருக்கவும், முடிந்தவரை, தனது பெற்றோரை அறிந்து கொள்ளவும் அவர்களுடைய பராமரிப்பில் இருக்கவும் உரிமை உண்டு. (2) அரசுகள், தரப்புக்கள் அவர்களுடைய தேசியச் சட்டத்திற்கு ஏற்ற வகையிலும் இந்தத் துறையில் உரிய சர்வதேச சட்டங்களின்படி அவர்களுடைய கடப்பாடுகளுக்கு ஏற்ற வகையிலும், குறிப்பாக அந்தக் குழந்தை நாடற்றவராக இருக்கும் இடங்களில், இந்த உரிமைகள் நடைமுறைப் படுத்தப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.”

பார்வை:

ஜெயல், நிரஜா கோபால் (2013): குடியுரிமையும் அதன் மீதான நிறைவின்மையும்: ஓர் இந்திய வரலாறு, ஜனவரி 1, ஹார்வார்டு பல்கலைக்கழக வெளியீடு.

நன்றி: EPW 15th Feb, 2020.

ஆங்கிலத்தில்: மிஹிர் தேசாய் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். – மும்பை உயர்நீதி மன்றத்தில் பணீயாற்றும் வழக்கறிஞராவார்.

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It