வாசம், நறவு, நறுமணம், சுகந்தம், வாடை, நாற்றம் – மனதின் சந்துபொந்துகளில் உள்ள ஏதொவொரு இடுக்கில் ஒட்டிக் கொண்டோ ஒளிந்து கொண்டோ இருக்கும் மனிதர்களை, இடங்களை, நினைவுகளை மீட்டுத் தர வல்ல சாதனங்கள் இவையும்தான் என்ற அவதானிப்பு சற்றே தாமதமாக வந்திருப்பது வியப்பைத் தருகிறது…. கூடவே களிப்பையும்!

            இவ்வெண்ணத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு அதற்கே என்னை ஒப்புக்கொடுத்து ஒரு நாளின் இயல்பான நிகழ்வுகளைக் கூட வாசனைகளின் பின்புலத்தில் அணுக முற்பட்டேன். கூடத்தில் நுழையும் போதே, “அம்மா! வேர்க்கடலை சட்னி, வெண்டைக்காய் அவியல், தீயல்… தானே?” என்று கேட்கவும் அடுக்களையில் இருந்தவாறே “மாடி வரைக்கும் மணக்குதோ? எப்பிடி இப்பிடி?” என்ற வினாவெதிர் விடைக்கு, எனது உடன்பிறப்பு எனப்படும் உயிரினம் “மனுசங்களுக்கு நாக்குல மட்டும்தான் சொரணை இருக்கும்…. முட்டாளுக்குத்தான் மூக்குலயும்…..” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்து அந்நாளை இனிதே துவக்கி வைத்தது. வெண்டைக்காயை இப்படிச் சமைத்தால் சுதாவிற்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் கல்லூரிக் காலங்களில் நான் இதைச் சாப்பிட்டதே இல்லை என்பதை விட அவள் என்னைச் சாப்பிட விட்டதே இல்லை என்பதுதான் சரியாக இருக்கும்.

எனக்கு எப்போதுமே நட்பு வட்டம் என்றெலாம் இருந்ததில்லை. நட்பு புள்ளிதான். இந்தப் புள்ளிக்காரி மட்டும் இருந்திராவிட்டால் ‘நட்பு’ என்பதைக் கெட்ட வார்த்தையாகவே பாவித்திருப்பேன். அப்படியே கல்லூரியின் தொடக்க காலத்திற்கு இட்டுச் சென்றாள் சுதா. முதல் நாள் இடைவேளை நேரத்தில் தோழிகளுடனான உணவு பரிமாற்றத்தின் போது ரேஷன் அரிசியின் வாடையை ஏற்க முடியாமல் திணறியது, அத்திணறலை முகத்தில் வெளிப்படுத்தாமல் மறைத்தது, அவ்வுணவில் உறைந்திருந்த வாடை அவர்களது அன்பில் மறைந்தொழிந்து போனது எல்லாம் நினைவுக்குழியில் இன்னும் ஆழ அமிழ்ந்தே கிடக்கின்றன. அவர்களின் அன்பும் பாசமுமே இன்னும் பழைய சாதத்தில் வாசம் கொண்டிருக்கின்றன. பழைய சாதத்தின் இன்சுவையை எனக்கு ரசிக்கக் கற்றுத் தந்த அவர்களைத் தவிர, வேறு யாராலோ வேறு சூழ்நிலையிலோ அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் இந்த அளவிற்கு என் மனதிற்கு நெருக்கமாகிப் போயிருக்காது அச்சுவை. இவற்றையெல்லாம் அசைபோட்டுக் கொண்டே காலை உணவிற்கு அமர்ந்தால் எனக்குக் கிடைத்தது என்னவோ வெறும் வேர்க்கடலைச் சட்னியும் சுடச் சுட இட்லியும் தான்….. ப்ச்! திடீரென அத்தோழிகளின் அன்பை உணர வேண்டும்போல் இருந்தது. ‘அம்மா! நாளை காலைக்கு எனக்கு பழைய சாதமும் கொத்தமல்லித் துவையலும் தர்றியா?’

            விஞ்சை விலாஸில் இன்னமும் விறகு அடுப்பில்தான் சமைக்கிறார்களோ என்னவோ? விறகு எரியும் போது கிளம்பும் புகை, அப்படியே இட்லி, தாளித்த கெட்டிச் சட்னி, தக்காளி ஊத்தப்பம் என எல்லாவற்றிலும் ஏறி அமர்ந்து கொண்டு உணவுக்கே ஒரு தனி மணத்தைக் கொடுக்கும். அது வேணு வனத்தின் வாசம்!

            திருநெல்வேலியில் இருந்து கொண்டு அல்வாவின் மணத்தைப் பற்றிக் கூறாமல் விட்டால் காந்திமதியே என்னை மன்னிக்க மாட்டாள். புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வாவை விட, முழுக்க முழுக்க சுத்தமான நெய்யிலும் பொதிகை ஊற்று நீரிலும் செய்யப்பட்ட பொதிகை ஸ்வீட்ஸின் அல்வாவிலே தான் அதிக மணம் கமழ்வதாகத் தோன்றும். வாசற்படி ஏறும் போதே, “அம்மை! நல்லாருக்கியா?” என்று கேட்டவாறே வந்து என்னை இறுகக் கட்டிபிடித்துப் பாசம் காட்டும் கல்யாணி அத்தை ஒவ்வொரு முறையும் மறக்காமல் பொதிகை அல்வாவோடு தான் வருவாள். அம்மாவைத் தவிர என்னை “அம்மை!” என விளிப்பது அத்தை மட்டும்தான். ஒவ்வொரு வாய் அல்வாவும் அவள் குரலில் என்னை நலம் விசாரித்தபடியேதான் தனது மணத்திற்குக் கட்டிப் போடுகிறது.

            பாளை நூற்றாண்டு மண்டபத்திற்கு வெளியில் பல தட்டுக்கடைகள் உண்டு. அவ்வீதியில் கண்ணை மூடி நடந்து செல்லுங்கள். பூண்டு தோசை, மல்லி தொசை, பொடி தோசை, அடை தோசை – இவற்றின் வாசம் ஒரு சேர நுகரக் கிடைக்கும் இடத்தைத் தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைத்து விட வேண்டாம். இப்போது நீங்கள் கண்களைத் திறந்து வாசலை ஒட்டிய இடதுபுற தட்டுக் கடையில் நின்று கொண்டிருப்பதாக உணரும் முன்னரே அங்குள்ள அண்ணா உங்களை வரவேற்று அமர வைத்து உணவு பரிமாற ஆரம்பிப்பார். அங்கிள் ஒருவர் தள்ளுவண்டியின் உட்புறமாக நின்று உணவு தயாரித்தவாறே உங்களைப் புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருப்பார். அக்கடையினர் தேவையான பொருட்களைக் கொண்டு வரும் மாருதி ஆம்னியில் எழுதியிருக்கும் ‘குரங்கனியம்மன் துணை’ என்பது என்ன மாதிரியான தற்செயல் நிகழ்வு என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. இப்பகுதியில் பெரிய அளவில் மதமாற்றம் நிகழ்ந்த போது மதம் மாறியவர்களுக்காக குரங்கனியம்மன் திருவிழாவிற்கு எதிர்வினையாக 200 ஆண்டுகளுக்கு முன் ஆனி மாதம் தொடங்கப்பட்ட மாம்பழச் சங்கத் திருவிழா இவ்வீதியில் வைத்துதான் நடைபெற்று வருகிறது. அதைத் துவக்கி வைத்த சமூக ஆர்வலரான ரேனியஸ் அவர்களின் கல்லறையும் கூட அருகில்தான் உள்ளது. கமகமக்கும் விதவிதமான தோசைகளுக்கு நடுவே தோழர் ரமேஷ் அங்கிளிடம் இவ்வரலாற்றை செவிக்கு உணவாகப் பெற்றுக்கொண்டிருந்த போதுதான் அத்தட்டுக்கடையின் வாசத்திற்கு அடிமையாகி வயிற்றுக்கும் நிறையவே ஈயப்பட்டது.

            பெயர் தெரியாத எவ்வித வாசமும் இல்லாத அந்த றோஸ் (நல்ல அடர் நிறமாக இருந்ததால் ஒரு எட்டு நாகர்கோவில் வரை போக வேண்டியதாயிற்று!) நிறப் பூ, ‘எந்தப் பூவிலும் வாசம் உண்டு’ என்ற பாடல் வரியைக் கேட்டால் என்ன நினைக்கும்? அந்த அழகிய புலரியில் இக்கேள்வியும் சேர்ந்தே உதித்தது. இப்பூ சிரித்தே நான் கண்டதில்லை. வாசம்தான் பூக்களுக்குச் சிரிக்கக் கற்றுத்தருகிறது போலும். விழிகள் மூடி பூக்களின் சுகந்தத்தை நுகர்ந்து கிறங்கத் துவங்கும் நொடிப் பொழுதில் நம் முகத்தில் தோன்றும் குறுநகைதான் நுகரப்படும் பூவிலும் எதிரொளிக்கிறதோ என்னவோ! “எந்தத் தாவரத்திற்கும் மருத்துவக் குணம் உண்டு. அவை இயற்கையா வளரும் இடத்தில… அதாவது அதற்கேற்ற மண், தட்பவெட்பம்னு அமையும் போது மட்டும்தான் அதன் மருத்துவக் குணம் தக்கவைக்கப்படும். சம்பந்தமே இல்லாம வேற நாட்டுல வேற ஊருல வேற மண்ணுல ஊன்றி வச்சா அதோட குணங்களும் இயல்புகளும் மாறிடும். அப்படித்தான் குரோட்டன்ஸ் செடி மருத்துவ பயன்பாட்டை இழந்து நம்ம நாட்டுல வெறும் அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுது” – தொ.ப அவர்களிடம் கேட்கப் பெற்ற இவ்வரிகள் அவ்வாசமின்மைக்குக் கரணியம் கூறியது.

தன்னைச் சம்பந்தமே இல்லாத இடத்தில் நட்டு வைத்ததற்காய் அப்பூ இப்போது என்னைப் பார்த்து முறைப்பதாகவே தோன்றியது. விழைவின் பொருட்டோ பிழைப்பின் பொருட்டோ வேறு நாடுகளில் தங்களை ஊன்றிக் கொள்ளும் மனிதர்களும் கூட தன்னியல்பை இழந்த தாவரங்கள்தானோ?! அதற்காக இவர்களை எல்லாம் வாசமில்லா ‘பூக்கள்’ என்று கூற இயலாது. வலுக்கட்டாயமாக வாசம் (இருப்பிடம்) பறிக்கப்பட்ட உலகத்துக்கானவர்களை மட்டுமே பூக்கள் என விளிக்கத் தோன்றுகிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் மலர்ந்து கொண்டிருக்கும் சுகந்தமற்ற போது உதிரும் முன்னர் நம்மைப் பார்த்து உதிர்க்கும் அந்த ஏளனப் பார்வையை அச்சுப் பிசகாமல் அப்படியே உலகத்துக்கானவர்களிடமும் காணலாம். இப்படித்தான் நமது கையாலாகத்தனத்தின் கண் எழுந்த கோழைத்தனத்தைக் கண்ட ஏதிலிகளின் ‘ஏகடியம்’ வாசமின்மைக்குரிய பண்பாகிப் போயிருக்க வேண்டும்!

            எல்லா புத்தகங்களும் வாசிக்கப்படுவதற்கு முன் ஒரே வாசனையைத்தான் தருகின்றன. அதைக் கூட வெறும் காகிதங்களின் மணம் என்று புறந்தள்ளிவிட இயலாது; வாசிப்பு தரப் போகும் உவப்பின் வாசம் அது! ஒரு புத்தகம் வாசிக்க வாசிக்க அதன் களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட வாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னில் ஏற்றி முடிவில் அப்புத்தகத்தின் கருப்பொருளில் தன்னை முழுமையாகத் தோய்த்தெடுத்த வாசனையைப் பூசிக் கொள்கிறது. புதுமைப்பித்தன், வண்ணதாசன், கலாப்ரியா, சுகா, மாரி செல்வராஜ்…… இவர்களின் பனுவல்களுக்குப் பொருநையின் நறவு அல்லாது வேறு எதைச் சாற்ற முடியும்? கரிசல் காட்டின் புழுதிக் காற்று நாசியில் ஏறும்போது, அம்மண்ணை எவ்வளவு ருசித்துத் தின்றிருந்தாலும் இன்றைக்கும் தெவிட்டவில்லை என்ற கி.ரா வைஅன்றி வேறு யாரை நினைத்துக் கொள்வது? புகை மண்டியே கிடக்கும் (அல்லது அப்படித் தோன்றும்) Farenheit 451ல் மண்ணெண்ணெய் நெடி நிரந்தரமாகக் குடியேறிவிட்டது. காலதர்கள் தென்றலை அறைக்குள் கொண்டு வரும்போதும் ஈரமும் நசநசப்பும் கலந்த ஓர் அடித்தள அறையின் புழுக்க வாடையை நுகராமல் Book Thief உடன் ஒன்றிப் போதல் கடினம்.

            தனி அறை, அமைதியான புறச்சூழல், அருமையான புத்தகம் – இவற்றால் கிட்டும் உவகையை, மழைக்குக் கட்டியம் கூறும் மண் வாசனை பலமுறை பன்மடங்காகப் பெருக்கித் தந்திருக்கின்றது. ‘என்ன கருமம் பிடிச்ச வாடை இது?’ – கொண்டலின் வருகைக்கே மூக்கை மூடிக் கொள்ளும் ஒருவரைக் கூட நான் இதுவரை அறியவில்லை. நிலவைப் போல மண் வாசனையும் பல கவிஞர்களால் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டிருப்பதால் அதனை ரசித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஒரு வேளை தள்ளப்பட்டிருப்பார்களோ? ஊருக்கு ஊர் மண் வேறுபட்டாலும் கூட ஆலியும் தூறலும் மண்ணை சமைத்துக் கிளப்பும் அந்த நறவு மட்டும் உலகெங்கிலும் எங்ஙனம் ஒரே மாதிரி இருக்கிறது?!

            “அங்கிள்! நீங்க மொதல்ல டீ குடிச்சு முடிச்சுக்கோங்க…” என்றதற்கு “பரவாயில்லம்மா…. வண்டில பெட்ரோல் நிரப்பிட்டு அப்புறம் குடிச்சிட்டா போச்சு… எவ்வளவுக்கு?” என வினவியவாறே வந்தார். ஆட்களே இல்லாத அவ்வேளையிலும் கருமமே கண்ணாகப் பணியாற்றினார். சற்று நேரம் பெட்ரோலின் நெடியால் சூழப்பட்டோம். மீண்டும் தேநீர்க் கோப்பையுடன் எனக்கு மீதம் சில்லறை தந்து கொண்டிருந்தவரிடம் “நாள் முழுக்க இந்த வாடைக்குள்ளேவா நிப்பீங்க? ஏதாவது மாஸ்க் போடுங்க அங்கிள்” என்ற என்னை வித்தியாசமாகப் பார்த்தார். “அது ஒண்ணும் பெரிய அளவுல உபயோகப்படாதும்மா. அதப் போட்டு சும்ம ஒங்களையும் என்னையும் ஏமாத்திக்கலாம். வண்டி ஓடுற வரை ஓடட்டும்னு விட்டுற வேண்டியதுதான்”. “அதுக்காக தெரிஞ்சே….” என்னை முடிக்க விடவில்லை. விட்டிருந்தாலும் என்ன பெரிதாய் சொல்லியிருக்கப் போகிறேன்? “முடங்கி விழுற நாள் வரைக்கும் இந்த வண்டி ஓட பெட்ரோல் ஊத்தணுமே. வயித்த நிரப்ப வண்டிய நிரப்புறப்ப உள்ள வாடையை சகிச்சுக்கிடத்தான் வேணும்”.

என்னிடம் வற்றிப் போன வார்த்தைகளுக்கும் சேர்த்து அங்கிளே பேசினார். “இந்த ஒலகத்துல பொறந்து கொண்டாடீட்டோம்…. கழுத கடைசில எங்கன அப்பிடி இழுத்துட்டு போதுன்னுதான் பாப்பமே”. பிறப்பை முதல் போலவும் அதன் பிறகான எல்லாவற்றையும் லாபக் கணக்கிலும் எழுதி வைக்கும் அங்கிளின் இவ்வரிகள் அப்படியே பெட்ரோலில் ஒட்டிக் கொண்டு விட்டன போலும். அதன் பிறகு ஒவ்வொரு தடவையும் எங்கு பெட்ரோல் நிரப்பினாலும் அவ்வாடை இவ்வார்த்தைகளையும் கையோடு அழைத்து வருகின்றன. தண்டி தண்டியாக எழுதப்பட்ட எந்த சுய முன்னேற்றப் புத்தகத்தாலும் இவ்வளவு சிறப்பாக அருமையாக நம்பிக்கையின் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது! “இவங்கள இன்னும் கொஞ்சம் பேச வச்சு கேட்கலாமே” என்று சிலரைப் பார்த்துத் தோன்றும் ஒவ்வொரு முறையும் அதெப்படி இந்த நாசமாய்ப் போகிற சூழல் குறுக்கிட்டு கூறு கெடுக்கிறது?!

            பிறிதொரு நாளில் மதியம் 1.30 மணிக்கு வாளி, ஃபினாயில், வாரியல், பிளீச்சிங் பவுடர், பிரஷ் என சகல ஆயுதங்களுடன் எதிர்ப்பட்ட இராஜம்மாள் அக்காவிடம் வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின், “இந்நேரத்துல எங்க இங்க? சாப்பிட்டுட்டு மெதுவா அப்புறமா வந்து சுத்தம் பண்றதுதானே அக்கா?” என்று கேட்டதற்கு “அட போங்கம்மா! நீங்க வேற…. கெமிஸ்டரி லேப்ல ஆறு மாசமா கெடந்து வெந்து நாத்தம் தாங்க முடியாம எளப்பு வந்ததுதான் மிச்சம். கெஞ்சி கூத்தாடி இப்போதான் கொஞ்ச நாளா இந்த பில்டிங்குக்கு மாறியிருக்கேன். சூப்பர்வைசரு எங்க எப்போ சுத்தம் பண்ண சொல்றாரோ போக வேண்டியதுதான்.” இப்போது அக்கம் பக்கம் ஆள் நடமாட்டம் ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்த பின் “எல்லாம் அந்த மனுசனால வந்தது. குடிச்சு குடிச்சு வீட அம்போன்னு விட்டுட்டாரு என் வூட்டுக்காரரு. நானெல்லாம் இருவது வயசு வர செல்லமா வளந்த புள்ளம்மா… ஒரு வேல பாக்க விட மாட்டா எங்கம்மா. கொடுக்காபுளியா பறிச்சு பாவாடைல வச்சு வெளையாண்டுட்டு இருந்த புள்ளைய கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா. எப்பிடி எப்பிடியோ போய்ட்டும்மா வாழ்க்கை… மூணு புள்ளைங்க பொறந்த பொறவும் பொறுப்பில்லாம சுத்திட்டு இருந்த மனுசன நாந்தான் நாரோயிலுக்கு அனுப்பி வச்சேன். ‘ஒங்குடிக்கு நீயே சம்பாதிச்சுக்கோ… எங்கள வுட்ரு’னு சொல்லிட்டு இங்க வேலைக்கு வந்துட்டேன். அந்தாளும் ‘என்னமும் போங்க’னு போய்ட்டாரு… மொதல்லலாம் இந்தக் கருமத்துல நின்னு நின்னு சோத்துல கூட பிளீச்சிங் பவுடர கொட்டி சாப்புடுறாப்புலதான் இருந்துச்சு.. இதுதான் இனிமேல்னு பழகிப் போச்சும்மா…. இந்த ஏழாயிரம் சம்பளம்தான் காண மாட்டேங்குது. கேட்டா கான்ட்ராக்டையே முடிச்சு அனுப்பிருவாங்க” என்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த இராஜம்மா அக்காவின் கண்கள் கண்ணீரை வெளியே கொண்டு வரவா வேண்டாமா என கடுமையாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போதே அவர்களின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

“அய்யே! கையெல்லாம் ஃபினாயில் வாடை… என்னம்மா நீங்க..?” என்றவாறே கைகளை விடுவிக்கத் துவங்கினார். “மொதல்ல போய் சாப்பிடுங்க அக்கா..” இருவரும் விடை பெற்றுக் கொண்டோம். தாயீ அக்கா, பொன்னி அக்கா, பட்டத்தி அக்கா எனப் பலரும், ‘தூப்புக்காரி’யில் வரும் பூவரசியைப் போல, கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு சூழலில்தான் இப்பணிக்கு வர நேர்ந்ததாகச் சொல்லியிருந்தார்கள். இப்போதெல்லாம் பிளீச்சிங் பவுடர் மற்றும் ஃபினாயிலின் அடர்ந்த வாடை அவர்களின் துயரங்களை நினைவுபடுத்துவதாலோ என்னவோ கதவிடுக்கில் விரல் நசுங்கியதைப் போன்ற வலியைத் தருகிறது. கொஞ்ச நேரமேனும் மனதை அழுத்தத்தான் செய்கிறது. இராஜம்மா அக்காவின் தேங்கியிருந்த கண்கள் போதுமாயிருந்தன, மீதமிருந்த அந்நாளை கனத்து மௌனிக்கச் செய்ய! முதன்முறை துக்கத்தைத் தொண்டைக்கு மேல் அனுப்பித் தள்ளியதில், அவ்வளவு கஷ்டங்களும் வார்த்தைகளாக உருப்பெற்று தமது காதிலே விழுந்த போது உண்டான உணர்ச்சிப்புயல் மழையாகக் கண்களின் வழியே வெளிப்பட்டதைப் பார்த்தால் கண்டிப்பாக இதற்கு முன் இதை வேறு யாரிடமும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது. ஒருவர் நம்மிடம் மனம் விட்டு எல்லா துயரங்களையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நம்மை அழுந்திக் கவியும் கனத்த மௌனத்தினின்று விடுபடும் வழியை யாரேனும் அறிந்திருந்தால் சொல்லுங்களேன்.

            சமீபத்தில் தாய்மை அடைந்தோருக்கே உரியதான பூரிப்பைத் தரும் பால் மணம், அவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நிலா கச்சிதமாகக் கடத்தும் பால் சாதத்தின் மணம், பலாச்சுளைகளின் ஊரைக் கூட்டும் வாசம், சாணம் மெழுகப்பட்டு (கண்ட கழுதைக் குப்பைகளையும் மாடு உணவாக்கிக் கொள்ளாத காலகட்டத்தில்) மணக்கும் முற்றம், பதற்றத்தையும் பயத்தையும் தரும் டெட்டால் மற்றும் டிஞ்சர் கலந்த மருத்துவமனை வாடை…… ஒவ்வொரு வாசமும் ஓர் உணர்வினுள் உறைந்திருப்பது போல் ஒவ்வொரு உணர்வும் ஏதோவொரு வாசத்தில் வாசம் கொண்டிருக்கும்தானே?

- சோம.அழகு

Pin It