கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியா என்கிற வடிவம் எந்தக் காலத்திலும் இருந்ததே இல்லை. இசுலாமிய மதத்தைப் பின்பற்றிய பல இனக்குழுக்கள் இந்தியாவின் மீது படையெடுத் தனர். மொகலாயர் ஆட்சிக்காலம் பாபருக்குப் பின் உறுதி செய்யப்பட்டது. மொகலாயர் அவுரங்கசீப் வரை-இன்றைய ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வங்க தேசம் இன்றைய இந்தியாவின் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றி ஏறக்குறைய 350 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். நான்கு ஐரோப்பியக் குழுமங்கள் 18ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகத்தை மேற்கொண்டனர். காரல் மார்க்சு இந்த வரலாற்று நிகழ்வுகளை மிக அழகாகச் சுட்டியுள்ளார். மொகலாயர்களின் பேரதிகாரம் மொகலாயப் போர்படைத் தளபதிகளால் உடைக்கப்பட்டது. மொகலாயப் படைத்தலைவர்களின் செல்வாக்கு மராட்டியர்களால் உடைக்கப்பட்டது. மராட்டியர்களின் அரசியலதிகாரம் ஆப்கான் நாட்டினரால் உடைக்கப் பட்டது. இவ்வாறு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்து எல்லோரும் ஒருவருக்கொருவர் போராடிக் கொண்டிருக்கும் போது இங்கிலாந்து இந்தியப் பகுதிக்குள் விரைந்தது. இவர்கள் அனைவரையும் அடக்கியது. இருந்தாலும் இந்திய நாடு இசுலாமியர் என்றும் இந்துக்கள் என்றும் பிளவுபடவில்லை. ஆனால் பல்வேறு சாதிகளுக்கு இடையில் பிளவுப்பட்டது (The paramount power of the Great Mogul was broken by the Mogul Viceroys. The power of the Viceroys was broken by the Maharattas. The power of the Maharattas was broken by the Afghans, and while were struggling against all, the Briton rushed in and was enabled to subdue them all. A country not only divided between Mohammedan and Hindu, but between tribe and tribe, between, caste and caste. Karl Marx and Fredrick Engels – On the National and Colonial Questions – Selected Writings – edited by Aijaz Ahmed, 2001,p.70 என்கிறார்.

amit shah 6201857இல் பிரிட்டிஷ் ஆட்சியை இங்கிலாந்து அரசு நேரடியான நிர்வாகத்தின் கீழ் இந்தியத் துணைக்கண் டத்தைக் கொண்டு வந்தது. அப்போது இன்றைய பாகிஸ்தான் வங்க தேசம் பர்மா இலங்கை ஆகிய பகுதிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன. 1888ஆம் ஆண்டிற்குள் பிரித்தானிய அரசு தனது நிர்வாகத் திறனால் இந்தியாவை உறுதியுடன் கட்டமைத்தது. இந்தக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குத் துணை நின்றவர்களில் முதன்மையானவர் கவர்னர்-ஜெனரல் குழுவில் இருந்த ஜான் ஸ்டிராச் என்பவர். பணி ஓய்வு பெற்ற பிறகு அவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இந்தியாவைப் பற்றிய ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவ்வுரையில் இந்தியாவில் இருந்த நாடுகளுக்கிடையேயான வேற்றுமையின் அளவு, ஐரோப்பிய நாடுகளுக்கு கிடையே இருந்த வேற்றுமையின் அளவைவிட அதிகமானதாகும். இந்தியாவில் இன மொழி மத வேறுபாடுகள் பெரிய அளவில் உள்ளது. இவைகளுக்கு அரசியல் சமூக தனித்தன்மையான கூறுகள் இல்லை. இந்தியாவைப் பற்றி முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், ஐரோப்பிய நாடுகளைப் போல இந்திய நாடுகள் ஒருவிதமான ஒற்றுமையோ அரசியல் சமூக மத புவி அமைப்புக் கூறுகளோ பெற்றிருக்கவில்லை. கடந்த காலங்களில் இந்தியா என்ற ஒரு நாடு இருந்தது இல்லை. எதிர்காலத்திலும் அதற்கு வாய்ப்பில்லை. பொதுவாக பஞ்சாப் வங்காளம் சென்னை மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணங் களில் இருப்பவர்கள் எப்பொழுதுமே ஒரு நாடு என்ற உணர்வினைப் பெற்றிருக்கவில்லை. இவ்வாறு காந்திக்குப் பிறகு இந்தியா என்ற நூலில் ராமச்சந்திர குகா ஸ்டிரேச்சின் மேற்கோள்களைக் காட்டி, அவரின் கருத்து ஒரு வரலாறு தந்த தீர்ப்பாக கருத வேண்டும் என்று கூறுகிறார் (Strachey’s remarks were intended as a historical judgement).

இந்தியத் துணைக்கண்டம் பல நாடுகளின் கூட்ட மைப்பாக இருந்து 1947க்குப் பிறகு பல தனி நாடு களாகப் பிரிந்து, இன்று இந்தியா என்று அழைக்கப் படுகிறது. 7 திசம்பர் 2019 அன்று வெளி வந்த அரசியல் பொருளாதாரம் இதழில் தெவி என்ற ஆய்வாளர் இந்தியை இந்தியாவில் திணிக்கக்கூடாது என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் கருதுவது போன்று இந்தி பேசுபவர்கள் இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 4 பகுதிகளுக்கு ஒன்றாகத்தான் உள்ளார் கள் என்று குறிப்பிடுகிறார்.

காரணம் இந்தியோடு பல்வேறு வேற்றுமைகளையும் தனித்தத் தன்மைகளையும் உடைய 53 துணை மொழிகளையும் இணைத்து 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகரித்துக் காட்டியுள்ளது என்று பல தரவுகளுடன் விளக்கியுள்ளார். இவரும் ஸ்டிரேச்சி கூறியது போன்று இந்தியா ஒரு நாடன்று என்று விளக்கியுள்ளார்.

தமிழில் நாடு என்ற சொல் இடைக்காலத்தில் லத்தீன் மொழியில் இருந்து வந்தது. ஒரு நாட்டிற்கு இலக்கணம் ஒரு மொழி பேசுகிற மக்கள் இணைந்து வாழ்வதே நாடு என்று 19ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் ஒப்புக் கொண்டனர் என்று கூறுகிறார். இந்திய ஆட்சிப் பணி உயர் அலுவலராக இருந்த ஜார்ஜ் கிரியர்சன் என்பவர் தலைமையில் 1898இல் அமைக்கப்பட்ட மொழிக் கணக்கெடுப்புக் குழு 1928வரை 30 ஆண்டுகள் மொழிக் கணக்கெடுப்பை நடத்தியது. 11 நூல்களாக பிரித்தானிய அரசு வெளியிட்டது. இந்தக் கணக்கெடுப் பின்படி இந்தியத் துணைக் கண்டத்தில் 189 மொழிகள் எழுத்து வடிவம் பெற்றதாகவும் மற்ற இதர மொழிகள் பேச்சு வழக்கில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த அடிப்படைகளையும் மொழி, இன, பண்பாட்டு வேறு பாடுகளையும் அறிந்த காங்கிரசுக் கட்சி இதன் காரணமாகத்தான் 1927இல் காங்கிரசு மாநாட்டில் மொழிவழி மாநிலங்கள் அமைப்போம் என்று உறுதி கூறப்பட்டது.

எனவே இன்றளவும் இந்து, இந்தி, இந்தியா என்று பேசுவது ஒரு பொய்யான கூற்றாகும். 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் ஜே.எஸ். வர்மா, நீதியரசர் என்.பி.சிங், நீதியரசர் வெங்கடசாமி ஆகியோர் அளித்தத் தீர்ப்பில் இந்து மதம் இந்துத்துவா போன்ற கருத்துருக் கள் குறுகிய மனப்பான்மையோடு உருவாக்கப் பட்டவை என இரண்டு அமர்வுத் தீர்ப்புகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த உண்மை களை எல்லாம் மறைத்துவிட்டு உயர் சாதி வெறியோடு 1923ஆம் ஆண்டில் இந்து மகா சபையின் தலைவராக இருந்து சாவர்க்கர் இந்துத்துவா: யார், இந்து? (Hindutva: Who is Hindu?) என்ற நூலை எழுதினார். இதைத்தான் கொள்கையாக ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் இன்றைய பாஜக இந்துத்துவா - இந்து ராட்டிரம் என்று அழைக்கிறார்கள். இந்த வழக்கு சிவசேனாவின் தலைவராக இருந்த பால் தாக்கரேக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்காகும். அன்றைக்கு மராட்டிய மாநிலத்தில் இந்து நாடு அமைப்போம் என்று கூறிய சிவசேனா, இன்று இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்ற மேலவையில் வந்த போது பின்வாங்கியது. மேலும் டிசம்பர் 20 2019இல் மும்பையில் அறிஞர்கள், கலைஞர்கள், திரைத்துறையினர் பல ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத் திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பாதுகாப்பையும் அனுமதியையும் வழங்கியுள்ளார், இன்றைய சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே.

இந்தியாவின் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 3 விழுக்காட்டிற்குக் கீழ் வீழ்ந்து வருகிறது. வேளாண் தொழில் கட்டமைப்புத் துறைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. பணித் துறையில்தான் பெரிய அளவிற்குச் சரிவுகள் ஏற்பட வில்லை. இதற்குக் காரணம் மென் பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பல மாநிலங்கள் முன்னிலை வகிக் கின்றன. ஏற்றுமதியும் செய்கின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எரிசக்திப் பொருள்கள் இசுலாமிய நாடுகளான ஈரான் ஈராக் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது இந்தியாவின் ஒட்டு மொத்த எரிபொருள் தேவை அளவில் 80 விழுக்காடாகும். வளைகுடா நாடுகளில் பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாகத் தென்னக மாநிலங்களில் இருந்துதான் அதிகமானோர் அங்குப் பணிபுரிகின்றனர். கேரள மாநிலத்திற்கே அதிக அளவு பணவிடைத் தாள்கள் வழியாக அதிக அளவிற்குப் பணத்தொகை வருகிறது. எனவேதான் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கூட்டணியும் எதிர்க்கட்சியான காங்கிரசுக் கூட்டணியும் இணைந்தே இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

உலக வங்கி இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்குச் சென்று பணிபுரிபவர்களும் அந்நாடுகளில் குடியுரிமைப் பெற்றவர்களும் இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தொகையைக் கணக்கிட்டு 2018இல் வெளியிட்டுள்ளது. அப்புள்ளி விவரப்படி மேற்குறிப்பிட்டவர்கள் அனுப்புகிற தொகை 2018ஆம் ஆண்டில் மட்டும் ரூபாய் 5 இலட்சத்து 53 ஆயிரம் கோடி ஆகும். இந்தியாவிற்கு அடுத்த நிலையில் சீனா மெக்சிகோ பிலிப்பைன்ஸ் எகிப்து போன்ற நாடுகள் உள்ளன. இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்து அயல்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களும் பெறாதவர்களும் அனுப்புகிற தொகையைக் குறைத்தாலே, இந்தியப் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்து உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்குக் கீழ்ச் சென்றுவிடும் என்பதை தில்லியில் ஆட்சி புரியும் இந்து ஏகாதிபத்தியவாதிகள் உணராமலும், பின்விளைவுகள் எதிர்விளைவுகளைச் பற்றிக் கவலைப்படாமலும் அறிவு வறட்சியோடு செயல் படுகின்றனர்.

மேலும் இந்தியா 1948இல் ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்ட மனித உரிமைப் பிரகடனத்தில் கையெழுத் திட்டுள்ளது. இந்தச் சட்டம் மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தன்மைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும் இந்தச் சட்டத்தின் விளைவுகள் அமைகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குடிமக்களின் முதன்மையான உரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. சம உரிமை, சுதந்தரம், ஒன்று கூடுகிற உரிமை பேச்சுரிமை, கருத்துரிமை அமைப்புகளை உருவாக்கும் உரிமை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடி பெயர்ந்து வாழும் உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14 முதல் 31 வரை மக்களுக்கு வழங்குகின்றன. மேற்குறிப்பிட்ட மனித உரிமைகளை, அரசோ தனி நபரோ பறிக்க முற்பட்டால் அரசமைப்புச் சட்டத்தின் 32 மற்றும் 35 பிரிவுகள் மக்கள் தங்கள் உரிமைகளைச் சட்டத்தின் வழியாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைகளையும் வழங்குகின்றன.

எனவே ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்சாவும், பிரதமர் மோடியும் இந்து திருவிளையாடல்களை இச்சட்டத்தின் வழியாகத் தொடங்கி, நாட்டில் பெரும் குழப்பத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்கு பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பணியாளர்களாகச் சென்று இன்றளவும் குடியுரிமை பெறாத தமிழர்களைப் பற்றியும், அமித்சா அறியாமையில் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றவர்கள் தொடர்பாக இலங்கையின் டட்லி சேனநாயகாவும் பிரதமர் நேருவும் செய்து கொண்ட ஒப்பந்தம், ஸ்ரீமதி சீறிமாவோ பண்டார நாயக மற்றும் பிரதமர் சாஸ்திரி செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி குடியுரிமை பெற்றவர்களைப் பற்றி அமித்சா கூறியது கண்டனத்திற்கு உரியதாகும்.

இச்சட்டத்தில் அரசியல் காரணமாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய இந்துக்கள் கிறித்தவர்கள் சீக்கியர்கள் பார்சிகள் பௌத்தர்கள் சமணர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் இச்சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இச்சட்டம் பாதுகாப்பை வழங்கவில்லை. பாசகவின் அடிமை அரசாகச் செயல்படும் தமிழக முதல்வர் இதுபற்றி உள்துறை அமைச்சரிடம் நேரடியாக விளக்கியுள்ள தாகக் கூறுவது தமிழர்களை ஏமாற்றும் அரசியல் மோசடியேயாகும்.

மேலும் உலகமயமாதல் கொள்கையை ஏற்றுக் கொண்டு பல இலட்சம் கோடி அளவிற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு குசராத்தி முதலாளிகளுக்கும் வரிச் சலுகைகளை அளித்து வரும் இரு குசராத்திகளால் ஆளப்படும் ஒன்றிய அரசு, தமிழர்களை மட்டுமல்ல இந்தி யாவில் வாழும் இசுலாமியர் உட்பட பல்வேறு தேசிய இனங்களைக் கொச்சைப்படுத்தும் வகை யிலேயே இச்சட்டத்தை இயற்றியுள்ளனர். இது இந்து நாடா? குஜராத்தி முதலாளிகளின் கைப் பாவைகள் ஆளும் ஆட்சியா? இதற்கு ஒரு நாடு என்ற ஒரு இலக்கணம் தேவையா? என்ற பல் வேறு வினாக்களுக்குப் பதில் கூற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.