சமீபத்தில் இயக்குநர் நசிம் சிக்குய் (Nessim Chikhaoui) அவர்கள் இயக்கிய ஸ்ட்ரைக்கிங் தி பேலஸ் (Stricking the palace) என்ற 87 நிமிடங்கள் கொண்ட பிரான்சிய மொழி திரைப்படத்தை பார்த்தேன். இப்படம் 1 மே, 2024 (பிரான்ஸ்) அன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படம் என்பதால் படத்தைப் புரிந்து கொள்வதற்கான மொழிச் சிக்கல் ஏதுமில்லை. கதைக்கு முக்கியத்துவம் இல்லாத காட்சிகளை தவிர்த்து மிக எளிமையாக படத்தை நகர்த்தியிருப்பது அருமை.
ஒரு நட்சத்திர விடுதியில் துப்புரவுப் பணி (House Keeping) செய்யும் பெண்கள் குழுதான் கதையின் நாயகிகள். பெரியதொரு நட்சத்திர ஹோட்டலில் தங்கும் விருந்தினரிடம் நாள் ஒன்றிற்கு வசூலிக்கும் கட்டண தொகையை விட, அன்றாடம் அந்த நட்சத்திர விடுதியின் அறைகளை சுத்தம் செய்து பராமரிக்கும் பெண் பணியாளர்களின் மாத ஊதியம் மிகக் குறைவாகவே உள்ளது. எந்தவொரு தொழிலாளிக்கும் பெரும் முதலாளிகள் நியாயமான ஊதியத்தைக் கொடுப்பதில்லை என்பதே படத்தின் சாராம்சமாக இருக்கிறது. ஆக இப்படம் பேசும் அரசியல், தொழிலாளர் வர்க்கப் பிரச்சனையையும், அவர்கள் அவற்றிலிந்து தங்களின் எதிர்ப்புணர்வை காட்டும் விதங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
உழைப்புச் சுரண்டல்
நட்சத்திர விடுதியில் அறைகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் பெண் பணியாளர்கள் தங்களை நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் நிர்வாகம் அதற்கு இடம் தராமல், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஏற்கனவே குத்தகைக்கு எடுத்த நிறுவனம், இன்னொரு நிறுவனத்திற்கு அவர்கள் குத்தகைக்கு (Sub-contract) விட்டு விடுகின்றனர். அதனால் பணியாளர்கள் தங்களின் பணிநேரத்திற்கும் கூடுதலாக பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதோடு அதற்குரிய ஊதியமும் கொடுப்பதில்லை. பணிகளை உடனுக்குடன் வேகமாகவும், அவர்கள் எதிர்பார்ப்பது போல செய்து முடிக்கப்படாவிட்டால் அத்தகைய பணியாளர்களை பணிநீக்கம் அல்லது பணியிலிருந்து விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்கிறார்கள். அதனால் அப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்க வழி ஏதும் உண்டா? எனும் போது, இதேபோன்ற பிரச்சனையில் ஏற்கனவே எதிர்கொண்ட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கவனித்து அவர்களோடு சேர்ந்து அந்த நட்சத்திர விடுதி நிர்வாகத்திற்கு எதிராக போராடுகின்றனர்.
தொடக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளோடு, அந்த நட்சத்திர விடுதிக்கு முன்னால் நின்று தினமும் போராடுகிறார்கள். அப்பணியாளருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை மற்ற பெண் பணியாளர்கள் உணர்ந்தாலும், அவரவரின் குடும்பச் சூழல் கருதி, தன்னுடன் பணியாற்றிய பெண்ணுக்கு ஆதரவாகப் போராடாமல், அவரைக் கடந்து பணிக்கு வருகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவால், உடல் மற்றும் மனதளவில் பெரும் துன்பங்களை எதிர்கொள்ளும் அப்பெண் தொழிலாளர்கள் ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கும் குழுவினரோடு இணைந்து கொள்கிறார்கள். இதற்கு மேலும் நாம் நிர்வாகம் சொல்லும் வேலைகளை செய்து கொண்டிருப்பது சரியான அணுகுமுறையல்ல. இவர்கள் நம்மை அடிமைகள் போன்று பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று அப்பெண்கள் உணரத் தலைப்படதும் மொத்தமாகப் போராட தொடங்குகின்றனர்.
வலுப்பெறும் போராட்டம்
போராட்ட களத்தில் அந்த நட்சத்திர விடுதியில் பணியாற்றிய பெண்கள் ஒவ்வொருவராக இணைந்ததும், அவர்கள் எழுச்சிமிக்க கோஷங்களை எழுப்புகிறார்கள். அதில், ”முதுகு வலி, கை வலி, கால் வலி, கழுத்து வலி, உடம்பு வலி என்றும் ”இனிமேலும் எங்களால் முடியாது… நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல…” என்று அவர்கள் கூட்டாக எழுப்பும் கோஷங்கள் அவர்கள் வேலைத்தளத்தில் எத்தனை இம்சைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டுகின்றன.
விடுதி நிர்வாகம் குத்தகைக்கு விட்ட பின்னர், அவர்கள் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தில் கமிஷன் எடுத்துக் கொள்வதும், அதேநேரத்தில் கூடுதல் வேலையை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும், அதற்காக கூடுதல் ஊதியம் ஏதும் தராமல் அப்பெண் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் தொடர் நடவடிக்கைக்கு எதிராகத்தான் அவர்கள் ஒன்று திரண்டிருக்கிறார்கள்.
அப்பெண் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக நேரடியாக விடுதி நிர்வாகமே எங்களிடமிருந்து வேலை வாங்க வேண்டும். குத்தகைக்கு அமர்த்திய நிறுவனத்தை திரும்பப் பெற வேண்டும். அதோடு தொழிலாளர்களின் குறைகளை காது கொடுத்து கேட்கப்பட வேண்டும், அவர்கள் உணவு உண்ண போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும், அவர்கள் உட்கார அனுமதிக்கப்படவும், அதற்கான உரிமையும் வேண்டும் என்பது உள்பட அவர்களின் கோரிக்கை குரல் ஒலிக்கிறது. குத்தகை முறையில் பணியாளர்களின் சுதந்திரம் பறிப்போவதோடு, அவர்கள் ஒவ்வொருவரையும், அவ்வப்போது கண்காணிப்பதற்கென அதிகாரிகள் நின்று கொண்டு, பெரும் தொல்லை தரும் போக்கு உள்பட மாற வேண்டும் என்பதை அவர்களின் போராட்டங்களில் சுட்டிக் காட்டுகிறார்கள். இதுபோன்ற எண்ணற்ற பிரச்சனைகளை அனைத்து நாடுகளை சார்ந்த தொழிலாளர்களும் இன்றையச் சூழலில் எதிர்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
போராட்டமும் வெற்றியும்
நட்சத்திர விடுதிக்கு முன்னால் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்துகின்றனர். அப்பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனாலும் அவரின் மீது காவல்துறையினர் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் விடாப்பிடியாக நான்கு பேர் சேர்ந்து, தூக்கிச் சென்று வேனில் ஏற்றிச் செல்கின்றனர். இப்படியாக நிர்வாகத்திற்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க முற்படுகிறது அரசு நிர்வாகம். ஆனாலும் போலீசாரின் அடக்கு முறைக்கு பயப்படாமல் மறுபடியும் அவர்கள் வழக்கம் போல தங்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
பெண் தொழிலாளர்களின் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்து நடைபெறுவதால் அவர்களுக்குள் ஒருவித சலிப்பு தோன்றுகிறது. அதிலிருந்து அவர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளவும் உற்சாகம் பெறவும், ஒரு யுத்தியை கையாள்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாடலிங் ஷோ ஒன்றை நடத்துகிறார்கள். அவற்றில் விதவிதமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட உடைகள் மற்றும் தோற்றத்துடன் அவர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள். அதில் பொதுமக்களின் கவனமும் படுகிறது. இதன் வழியாக அவர்களின் போராட்டம் கவனம் பெறுவதோடு, கலகலப்பான நிகழ்வாகவும் மாறிவிடுகிறது. இப்படியாக சில வழிமுறைகளைப் பின்பற்றி தொடர் போராட்டங்களை அவர்கள் செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்களின் குடும்பத்தினரும், பொது மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்து போராடும் நபர்களின் எண்ணிக்கை கூடுகிறது.
இறுதியாக வேறு வழியில்லாமல் ஹோட்டல் நிர்வாகம் பணிகிறது. பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறது. அப்போது தொழிலாளர்களுடனும், தலைவர்களுடனும் நேரடியாகப் பேச வராமல், இணைய வழியிலான பேச்சு வார்த்தையை விடுதி நிர்வாகம் மேற்கொள்கிறது. அவற்றில் ஒருசில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். அதனால் தொழிலாளர்கள் மனவருத்தம் அடைந்து, அவர்களின் போராட்டத்தை தொடர்கிறார்கள். இதன் பின்னர் போதிய பணியாளர்கள் இல்லாததால் விடுதியை ஒவ்வொரு பகுதியாக மூடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இப்போது வேறு வழியில்லாமல், இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த நிர்வாகம், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளிக்கிறது. அதைத் தொடர்ந்து அவர்களின் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
அந்த மகிழ்ச்சியை தொழிற்சங்கத் தலைவர் அனைவரின் முன்னிலையிலும் போராட்டக் களத்தில் பகிர்ந்து கொள்கிறார். அப்போது அந்தப் போராட்ட குழுவில் இணைந்திருந்த தொழிற்சங்கப் பிரதிநிதி இவ்வாறு சொல்கிறார். ”நான் கடந்த ஆண்டுகளில் எத்தனையோ போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் கோரிக்கைகள் அனைத்தையும், அதோடு இத்தனை சீக்கிரமாக நிர்வாகம் ஒப்புக் கொண்டதில்லை. உண்மையில் உங்களின் உறுதி மிக்கப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிதான் இது” என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். பெண் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை உறுதியாக முன்வைத்து போராடியதின் விளைவே இத்தகைய வெற்றி என்பதை இப்படம் பறைசாற்றுகிறது. அப்போராட்டத்தையும் பெண் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணியை இடதுசாரி அமைப்பே செய்கிறது. இதுபோன்ற போராட்ட முன்னெடுப்புகளில் உலகளவில் பெரும்பாலும் இடதுசாரி அமைப்பே முன்நிற்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
பொதுப் பார்வை
இச்சமூகத்தில் கடைக்கோடியில் இருப்பவர்கள் பெண்கள். அதிலும் வீட்டு வேலைகள் உள்பட வேலைகளை வகைப்படுத்துவதில் துப்புரவுப் பணி என்பது நமது சமூகத்தில் மதிப்பு குறைவான பணியாக கருதப்படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் அப்படியல்ல. ஆனாலும் அப்பணிகள் விடுதி போன்றவற்றில் மேற்கொள்ளும் போது உடலுழைப்பு குறைவான வேலை என்று கணக்கீடு செய்யப்படுவதால் பெண்களே அதிகம் பணியமர்த்தப்படுகிறார்கள். அதனால் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்வது பெரும்பாலும் பெண்களே. அது வீடாக இருப்பினும், அல்லது வேலைத்தளமாக இருப்பினும் உண்மையில் பெண்களே அதிகளவில் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதைப் பொதுவாகவே சமூகத்தில் ஒரு தொழிலாகப் பார்க்கப் பழகிக் கொண்டாலும், அதை சுகாதாரக் குறைவான வேலையாக கருதுவதால் அப்பணிகளுக்குப் போதிய ஊதியம் பெரும்பாலும் தர முற்படுவதில்லை. இத்தகைய போக்கு அனைத்து இடங்களிலும், நாடுகளிலும் இருக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது போலும்.
பெரும்பாலும் வீடுகளில் துப்புரவுப் பணியை சம்பளம் பெறாத வேலையாளாக பெண்கள் செய்வதால், அவ்வேலையின் தரமும் சிரமமும் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். நமது நாட்டில் வீட்டு வேலைகளை செய்யும் பெண்களை, ஒரு ஆண் வெளியே போய் சம்பாதிப்பதிற்கு இணையான வேலையை வீட்டில் செய்கிறார் என்பதை பெண்கள் உள்பட பலரும் உணர்வதே இல்லை. இந்தச் சிக்கலான புரிதலால் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்ற பொதுப் புரிதல் பலருக்கும் உள்ளது. அதனால் சம்பளம் பெறாத தன்மையை கணக்கில் கொண்டு, அவர்களின் வேலையையையும் மதிப்பளிக்காத நிலை இன்றைக்கும் சமூகத்தில் நீடிக்கிறது. அத்தகைய போக்குதான் பெண்கள் பெரிய விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் துப்புரவுப் பணி செய்தாலும் அவர்களுக்குப் போதிய ஊதியமும், மதிப்பும், அதற்குரிய அங்கீகாரமும் கொடுக்கப்படுவதில்லை என்பதை ட்ரைக்கிங் தி பேலஸ் திரைப்படம் மிக எதார்த்தமாக உணர்த்துகிறது.
காட்சிகளின் படிமம்
ஒரு காட்சியில் இளம் பெண் (கதாநாயகி) ஒருவர் தன் நண்பருடன் (கதாநாயகன்) மாலை நேரத்தில் சாலையில் உலாவிக் கொண்டிருக்கும் போது கல்லறை வழியாக நடக்கிறார்கள். அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அவர்கள் ஒவ்வொரு கல்லறை குறித்தும், அதன் தரம் பற்றியும், இறந்தவரின் பொருளாதர நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது உள்பட பேசிக் கொண்டே செல்கிறார்கள். அதில் ஒரு வசனம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ”இந்தக் கல்லறைகளை எல்லாம் பார்க்கும் போது, இறந்த பிறகும் இங்க யாரும் சமமில்லை என்பது உண்மை என்றே தோன்றுகிறது” எனச் சொல்வது இன்றைக்கும் பொருந்தக்கூடிய வகையில் அந்தக் கல்லறைகளில் இருக்கும் வேறுபாடுகள் மற்றும் அவற்றின் தரம் ஆகியவையே அந்த உண்மையை பறைசாற்றிக் கொண்டிருந்தன. இந்தக் காட்சியும், அப்படத்தின் காட்டப்படும் சில காட்சிகளும் வர்க்க வேறுபாடுகளை சுட்டிக் காட்டும் விதமாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது படத்தில் சொல்லப்படும் செய்தியை மேலும் கூர்த்தீட்டுவது போன்று அமைந்து வலுவூட்டியது.
தொழிலாளர் என்ற அடிப்படையில் நிற பேதம் ஏதுமில்லை. அனைத்து தரப்பிலும் ஏழைகள் இருக்கிறார்கள். இருப்பார்கள்… என்பதையே காட்சிகளின் வழியாக இப்படம் நம்மிடம் கடத்தியிருக்கிறது. சலிப்பூட்டாத வகையில் சுவாரசியமாக படத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வர்க்கப் போராட்டம் என்பதை கடந்து அன்றாடம் நமது வீடுகளிலும் துப்புரவுப் பணி உள்ளிட்ட மதிப்பும் கவனமும் பெறாத பணிகளில் ஒன்றாக கருதப்படும், பெண்களின் பாடுகளை புரிந்து கொள்ள, பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றுதான் ”ஸ்ட்ரைக்கிங் தி பேலஸ்”
- மு.தமிழ்ச்செல்வன்