நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பார்வை வெளிநாடுகளை நோக்கி இருக்கிறது. சுமாராகப் படிக்கும் மாணவர்களின் பார்வை அவர்கள் படித்த துறைக்கு சம்மந்தம் இல்லாத வேலையை நோக்கி இருக்கிறது. படிப்பு ஏறாமல் இருக்கும் மாணவர்களின் பார்வை ஸ்மார்ட்போனை நோக்கி இருக்கிறது. அரசியல்வாதிகளின் பிள்ளைகளாக இருக்கும் மாணவர்களின் பார்வை அரசியல் வாரிசை நோக்கி இருக்கிறது. கோராவில் இருக்கும் மாணவர்களின் பார்வை அறிவை நோக்கி இருக்கிறது. அதிகமாகப் பேசும் மாணவர்களின் பார்வை போராட்டத்தை நோக்கி இருக்கிறது – மாணவர்களின் தற்போதைய நிலையினை குறித்து ஒரு எழுத்தாளனின் புரிதல் இது

chennai students against caaஅரசியல்வாதிகள் தங்களது அரசியலை மாணவர்களை வைத்து நடத்திய காலங்கள் மாறி, மாணவர்களின் அரசியலை அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டிய நிலை உருவாகி இருக்கின்றது. மாணவர்கள் வகுப்பறையிலேயே அரசியல் பேசுகின்றனர். அவர்கள் இதுவரை கண்ட அரசியலின் தாக்கத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

படிக்கின்ற மாணவர்களுக்கு அரசியல் அவசியமா? என சில மேதாவிகள் பேசலாம். ஆனால் வரலாற்றில் பின்னோக்கிச் சென்று பார்த்தோமேயானால், 1965ல் நடந்த இந்தித் திணிப்புப் போராட்டம் மிகச் சிறந்த மாணவ தன்னெழுச்சி என்பதைக் கூறும்.

என்னதான் சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியே ஆனாலும் சரி, அதன் கிங்மேக்கராக காமராஜராகவே இருந்தாலும் சரி, திணிப்பின் மூலம் அரசியல் நடத்திட முற்பட்டால் தோல்வியே தழுவிட வேண்டும் என்ற வரலாறு நிதர்சனமானது.

இறுதியாக மாணவர்களின் தலைவரான அண்ணாவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்ததும் இத்தகைய மாணவர்கள் தான்.

தற்போது மாணவர்கள் தாங்கள் பயிலும் பிரிவுகளின் அடிப்படையிலும். கல்லூரியின் அடிப்படையிலும் பல்வேறாகப் பிரிந்திருக்கின்றனர். கலைப் பிரிவு மாணவர்கள் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஆகாமலும், மருத்துவம் பயிலும் மாணவர்கள் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு ஓரம் கட்டுவதுதும், மாணவர்கள் தனக்கு ஏன் வம்பு எனக் கலைவதும், அவர்களின் மீது தற்போது உள்ள பொருளாதார அழுத்தம், கலாச்சார அழுத்தம், கேளிக்கை அழுத்தம் அவர்களை சமூகத்திற்கான முன்னெடுப்புகளை செய்வதைத் தடுக்கின்றது. ஆனால் இந்நிலை தற்போது மாறிக் கொண்டு வருகின்றது

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு அடித்தளமிட்டதே மாணவர்கள் தான். அவர்களின் நேர்த்தியான ஒழுக்கமான செயல்பாடுகளினால் உலகமே பாராட்டியது. ஸ்டெர்லைட் போராட்டத்தினை நுறு நாட்களுக்கு வழிநடத்தியவர்களில் ’ஸ்னோலின்' என்ற மாணவியும் ஒருவர். சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்தும், பருவநிலை மாறுதல் குறித்தும் உலகத் தலைவர்களுக்கு “எதிர்காலத்திற்கான வெள்ளி" என்ற பெயரில் போராட்டங்களை பரவச் செய்த 'கிரேட்டா தன்பெருக்'கும் மாணவியாக இருந்தவர்தான்.

குடியுரிமைத் திருத்த மசோதா என்னும் பெயரில் பார்ப்பநிய மநு தர்மத்தினை இந்தியாவில் நிலைப்படுத்த பாஜக அரசு கொண்டுவரும் மநுதர்ம குறியீட்டுச் சட்டத்தினை மக்கள் எழுச்சிப் போராட்டமாக பரவ விட்டதும் ஜாமியா கல்லூரி மாணவர்கள்தான்.

இன்னும் பல வகையிலான போராட்டங்களின் மூலம் நாடெங்கும் இவர்களின் முன்னெடுப்பு பரவி வருகின்றது. இவர்களின் போராட்டங்களே அரசியல் கட்சிகளுக்கு ஒரு பலமாக இருந்தது என சொன்னால் அது மிகையில்லை!

வரலாறு திரும்புகின்றது. பொதுநலம் பேசும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்களின் வீரியமிக்க மக்கள் நலச் செயல்பாடுகள் அடக்குமுறையில் நாட்டமுள்ள பாஜக அரசுக்குப் பேரிடியாக இருக்கின்றது. தங்களது அரசியலுக்கு ABVP என்னும் மாணவ அமைப்பினை உறுதுணையாகக் கொண்ட பாஜகவே, மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் எனப் பேசுவதும், பல்கலைக் கழகத்திலேயே தாக்குவதும் இவர்களின் அச்சத்தினைப் பறை சாற்றுகின்றது. 

மாணவர்கள் கல்வியோடு சேர்த்து சமூகத்தின் நலன் சார்ந்த விஷயங்களிலும் இன்றுபோல என்றென்றும் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நாளை இந்தியா இன்றைய மாணவர்களிடத்தில்...

- நவாஸ்