தமிழ் நாட்டில் எல்லோருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்த ஒரு நிகழ்வு (கடந்த) மார்ச் மாதம் நடந்தேறியுள்ளது. பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வரவில்லை, எழுதவில்லை என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு. ஏறத்தாழ 45,000 பத்தாம் வகுப்பு மாணவர்களும் 50,000 பனிரெண்டாம் வகுப்பு மணவர்களும் தேர்வு எழுதவில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. ஆசிரியர்களும், பெற்றோர்களும் தமிழக அரசும் இதனை ஒரு மிகவும் முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு உள்வாங்கி சிந்தித்தது. இதற்கு காரணங்கள் என்னவாயிருக்கும் என்றாய்ந்து இளம் மாணவர்களை வழிநடத்த வேண்டும். இது ஒன்றும் மாணவர்களின் தவறோ, குறைபாடோ அல்ல. இது இன்றைய தமிழ் நாட்டின் கல்வி நிலையைப் பிரதிபலிக்கின்ற ஒரு காட்சி என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கான காரணங்கள் என்னவாயிருக்கும்?

முதலாவதாக, தமிழ்நாட்டில் மட்டும்தான் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடக்கின்றது. வேறு எந்த மாநிலத்திலும் மற்றும் சிபிஸ்இ (CBSE) போன்ற தேசிய அளவிலான தேர்வு வாரியங்களும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவது இல்லை. மாணவர்கள் தங்களது முதல் பொதுத் தேர்வை பத்தாம் வகுப்பு முடியும்போது எழுதுகிறார்கள். பத்து வருட பொது கல்விக்குப் பிறகு ஒரு பொதுத் தேர்வு வேண்டும். அதன் பிறகு மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களை படிக்க வழி வகை செய்யும் வகையில் +2 எனப்படுகிற மேல்நிலைக் கல்வி இரண்டாண்டுகளாக இருக்க வேண்டுமென்று 1986ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கை தனது புதிய பள்ளிக்கு கல்விக் கட்டமைப்பை (structure) பரிந்துரை செய்தது. இதனை தமிழ் நாடு உள்பட எல்லா மாநிலங்களும் நடைமுறைபடுத்தியுள்ளன.

ஒரு பொதுவான (common) கல்வி முறை தற்போது மாநில சூழல்களுக்கு ஏற்றாற்போல் நடைமுறையில் உள்ளது. பொதுவான கல்வி முறை என்பது ஒரே மாதிரியான கல்வி முறை அல்ல. 10+2 என்கின்ற பொதுவான முறையில் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம். பொதுத் தேர்வு என்று வருகிறபோது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்குப் பிறகே என்ற முறைதான் இந்தியா முழுவதும், தமிழ் நாட்டைத் தவிர நடைமுறையில் உள்ளது. இது தேசிய கலைத்திட்டம் பரிந்துரைக்கின்ற அடிப்படையிலும், மாணவர்களின் உளம் சார்ந்த மற்றும் அறிவு வளர்ச்சி அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.public exam studentsதமிழ் நாட்டிலும் பதின்னொன்றம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு சில ஆண்டுகளாகத்தான் நடைமுறையில் இருக்கின்றது. இந்த பொதுத் தேர்விற்கு கொடுக்கப்பட்ட காரணம் மிகவும் வினோதமானது. பல பள்ளிகள், குறிப்பாக தனியார் பள்ளிகள் பனிரெண்டாம் வகுப்பிற்கான படங்களை பதினொன்றாம் வகுப்பியிலேயே நடத்துகின்றன. பதினொன்றாம் வகுப்புப் பாடங்களை கற்காமலே மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பிற்குத் தேர்ச்சி அடைகின்றார்கள் என்பதுதான். இது மிகவும் வினோதமான காரணமாகும். பேனுக்கு அஞ்சி தலையை மொட்டை அடிப்பதைப் போன்றது இது.

பாடத்திட்டம் ஒரு ஏறுமுக, அதாவது தெரிந்ததிலிருந்து தெரியாதது, எளிமையிலிருந்து கடினமான கருத்துகள் என்ற அடிப்படையில் தான் வடிவமைக்கப்படுகிறது. அதாவது, பதின்னொன்றாம் வகுப்பு பாடங்களை, கருத்துக்களை கற்காமல் பனிரெண்டாம் வகுப்புப் படங்களை கற்பது மாணவர்களுக்கும் கடினமானது. மேலும் இது ஆசிரியர்களுக்கும் கற்பிக்க சிரமனானது. இதனை உணராமல் பல பள்ளிகள் தவறான இந்த நடைமுறையைத் தொடங்கின. அரசு வேறு வழியின்றி கட்டாய பொதுத்தேர்வை பதினொன்றாம் வகுப்பிற்கும் அறிமுகப்படுத்தியது.

கல்வி என்பது தனிமனித வளர்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் இதன் மூலம் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குமான ஓர் அடிப்படை. இன்னும் சொல்லப் போனாமல் கல்வி இவற்றிற்கு எல்லாம் ஆயுதம். ஆகவே கற்பதுதான் நோக்கம், இந்த கட்டாயப் பொதுத் தேர்வு மாணவர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்பதுதான் மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு முக்கிய காரணம். நமது குழந்தைகள் பள்ளியில், குறிப்பாக பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் படிக்கும்போதுதான் இந்தக் கஷ்டம் நமக்குப் புரியும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு, ஆசிரியர்களின் அழுத்தம், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, "எங்கே தோற்று விடுவோமோ" என்கின்ற கவலை, பயம் எல்லாம் சேர்ந்து குழந்தைகளை மிகவும் வாட்டி வதைக்கின்றன. இதன் ஒரு வகையான வெளிப்பாடுதான் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வான, தேர்வுக்கு வருகை தராதது. இதற்கு தீர்வு பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை மாற்றி, பள்ளி சார்ந்த அல்லது மாவட்ட அளவிலான ஒரு தேர்வாக நடத்துவதுதான்.

'நாட்டின் வருங்காலம்', 'நாட்டின் செல்வங்கள்' என்றெல்லாம் நமது குழந்தைகளை பாட்டிலும் பேச்சிலும் வர்ணிக்கின்றோம். அவர்களை பொக்கிஷத்திலும் பொக்கிஷமாக குழந்தை பருவத்தில் வளர்க்கின்றோம். ஆனால் அதே குழந்தைகள் வளர்ந்து பள்ளியில் கற்கும்போது அவர்களை ஒரு இயந்திரமாகப் பாவிக்கின்றோம். இது எப்படி நியாயம்? உலகில் எந்த நாட்டிலேயும் நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளதுபோல் தேர்வுக் கொடுமைகள் இல்லை. கல்வி இங்கு பளுவாகிப் போனது, பாரமாகிப் போனது. ஆசிரியர்-மாணவரிடையே ஓர் இணக்கமான உறவு இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்த மாணவர்கள் தங்களின் தேர்வு பயத்தை ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டு தைரியத்தவுடன் தேர்வு எழுத முயற்சித்திருப்பார்கள்.

பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசவே பயப்படுகிறார்கள். குழந்தைகள் உலகம் புரியாமல் வளர்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது. திட்டினால் குழந்தைகள் ஏதாவது செய்து கொள்வார்கள், உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்கிற பயத்தில் பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். இதோடு சேர்ந்து கொண்ட குடி கெடுக்கின்ற 'குடி' கொடுமைகள். ஸெல்ப் எஸ்ட்ஈம் (self esteem) என்கின்ற தன்னம்பிக்கை பெற்றோர்களிடமும் இல்லை, மாணவர்களிடமும் இல்லை. கல்வித்துறையோ அதிகாரத்தை நன்றாகப் பயன்படுத்துவதில் 'நன்றாக' செயல்படுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் - வேதனையுடன் கூடிய வேடிக்கை - தமிழ்நாட்டின் கல்விச் செலவு மற்ற பல மாநிலங்களைவிட அதிகம். தமிழ் நாட்டில் தான் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள், இலவசங்கள். இவைகள் எல்லாம் இருந்தும் ஏன் இந்த நிலை? இதில் முக்கிய பங்கு காரணி, ஆசிரியர்கள். ஆசிரியர்கள் நினைத்திருந்த்தால், நினைத்தால் எல்லாக் குழந்தைகளும் கற்பார்கள், கற்க வைக்கலாம். தேர்வுக்கு வர வைக்கலாம் தேர்ச்சி பெறவும் வைக்கலாம்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் முதல் பொதுத்தேர்வு பனிரெண்டு வருட பள்ளிப் படிப்புக்கு பிறகுதான் நடத்தப்படுகிறது. அதுவும் இந்த அளவிற்கு மாணவர்களைப் பாதிக்கின்ற வகையில் தேர்வுகள் முதன்மை படுத்தப்படுவதில்லை. தொடர் நிலை தேர்வுகள் (continuous assessment) மூலம் மாணவர்களின் கற்றல் மற்றும் அடைவுகளை வருடமும் முழுவதும் பதிவு செய்து மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

வருடா வருடம் தேர்வு முடிவுகளின்போதும், நீட் போன்ற போட்டித்தேர்வுகளின் போதும் நடக்கின்ற கொடுமையான தற்கொலைகள் நாம் எல்லோரும் அறிந்ததே. இருந்தாலும் நாம் நமது குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டோமா என்று தெரியவில்லை. கடந்த வாரம் என்னிடம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மாணவன் கேட்டான், "இந்த உலகத்திலேயே மிகவும் கஷ்டமான தருணம், நிலை எது தெரியுமா?" என்று . நான் யோசித்தேன், கடுங்குளிர் காலமா? நிலநடுக்கம் வருகின்ற நேரமா? என்று. அதற்கு அவன் சொன்னான், "இல்லை, இல்லை. தருணம் - பொதுத்தேர்வு நேரம். நிலை - தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவனாக இருப்பது" என்று.

பெற்றோர்களே, ஆசிரியர்களே, அரசாங்கமே! தயவு செய்து இந்தக் குழந்தைகளை 'தரமான கல்வி' என்கிற பெயரில் நடக்கிற இந்தக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுங்கள். இதில் மாணவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை, 'தைரியமாய் இருங்கள், இதுவும் கடந்து போகும்' என்பதைத் தவிர. ஏனென்றால் இந்த எல்லா விஷயங்களிலும் - பாடத்திட்டம் முதல் தேர்வு வரை மாணவர்கள் சொல்வதற்கோ, அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கோ யாருமில்லை.

- Dr. இராமானுஜம் மேகநாதன்,

பேராசிரியர் - மொழிக்கல்வி,

மொழிக் கல்வித் துறை

தேசிய பள்ளிக் கல்வி ஆராய்ச்சி குழுமம்,

சிறி அரபிந்தோ மார்க், புது தில்லி 110016

Pin It