"சிந்தூரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ் சாறுகொண்ட
சுந்தத் தோளுடையான் சுழலையில் நின்று உய்துங்கொலோ"
ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியின் அழகிய பாசுரம். மந்திர மலையை மத்தாக வைத்துக் கடைந்து, அமுதம் கொண்ட திருமாலிருஞ் சோலையின் சுந்தரத் தோளுைடையான் அழகரைப் பிரிந்திருக்கும் துயர் தாங்காது பாடுகிறாள் கோதை.
எங்கள் திவ்யப் பிரபந்த இசை வகுப்பில், ஆசிரியர் திரு சங்கர் அவர்கள் கற்றுக் கொடுத்தபடி திலக்காமேஷ் ராகத்தில் பாடுவோம். மிக இனிமையாக இருக்கும். பாடும் போது நெற்றியில் இட்டுக் கொள்ளும் சிவப்பு சிந்தூரப் பொடி போல் மாலிருஞ் சோலையெங்கும் பரந்திருந்த இந்திரக் கோபங்கள் எதுவாக இருக்கும் என்று தோன்றியது. என்னிடமிருந்த உரையில் பட்டுப்பூச்சிகள் என்றிருக்க, சிவப்பான பட்டாம் பூச்சிகள் சோலையெங்கும் நிறைந்திருந்தன என்று நானாக நினைத்துக் கொண்டேன்.
ஆண்டுகள் பல கடந்து, திரு சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய 'வேள்பாரி' புதினத்தை ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தேன். அதில் வைகைக் கரையில் அடர்ந்த மரங்களிடையே, அழுகின்ற அவ்விடத்து இனக்குழுத் தலைவனின் குழந்தைக்கு, அதன் தாய் சிவந்த பட்டுப் போன்ற மென்மையான செம்மூதாய்ப் பூச்சியைக் காட்டி அழுகையை மாற்றுவாள்.
மூதாய்ப் பூச்சி என்று இணையத்தில் தேடினால் அதில் இருந்தது, நான் சிறு வயதில் விருதுநகரில் எங்கள் தோட்டத்தில் கண்டு விளையாடிய வெல்வெட் பூச்சி! நல்ல பளீர் சிவப்பில் வெல்வெட் துணி போன்று மென்மையாக இருக்கும். எட்டு கால்களுடன் சிவந்த பட்டுப் போன்ற உடலமைப்புடன் குறுகுறுவென்று ஓடும். தொட்டால் கால்களை மடக்கி அப்படியே கிடக்கும். சற்று நேரத்தில் மறுபடி ஓடும்.
சிலந்தி, தேள் வகுப்பில் Trombidiidae குடும்பத்தைச் சேர்ந்த இப்பூச்சியினத்தில் சிறு வேறுபாடுகளுடன் பல வகைகள் காணப்படுகின்றன. Rain mite, Red velvet mite, Bride of the seafarer, Birbahuti, Sadhaba baby (oriya,) Arudhru brugu (andhra), பட்டுப்பூச்சி, தாம்பலப்பூச்சி (தாம்பூலச் சிவப்பில் இருப்பதால்) என்றெல்லாம் பல இடங்களில் பலவாறு அழைக்கப் படுகின்றன.
மழைக்காலம் ஆரம்பித்தவுடன் சில வாரங்கள் தான் தென்படும். அதையறியாமல் தோட்டத்திற்குச் செல்லும் போதெல்லாம் இப்பூச்சி இருக்கிறதா என்று பார்த்திருக்கிறேன். நம்மைக் கவரும் அழகிய சிவப்பு நிறமே அதற்குப் பாதுகாப்பு. சிவந்த நிறத்தைக் கண்டு இதன் எதிரிகள் பயந்து சென்று விடுமாம்!
சிறுவயதில் இப்பூச்சிகளை வளர்க்கிறேன் என்று தீப்பெட்டியில் ஓட்டை போட்டு பள்ளிக்கு எடுத்துச் சென்றது, இடம் காணாதோ என்று பெரிய அழகிய தகர பிஸ்கட் டப்பாவில் துளை போட்டு, குறுமணலிட்டு, புல் மெத்தை வைத்தது - எல்லாம் நெஞ்சில் தோன்றிய அழகான நினைவலைகள்! ஆனால் ஒரு நாளுக்கு மேல் தாக்குப் பிடித்ததில்லை. கரையான், சிலந்தி போன்றவற்றின் முட்டைகள் தான் இதன் உணவு என்பது இப்பொழுது தானே தெரிகிறது.
முப்பது வருடங்களுக்கு முன் என் பிள்ளைகளுக்கும் காட்டியிருக்கிறேன். நாங்கள் அவற்றைக் கண்டும், கொண்டும் விளையாடியது போல் 2000 ஆண்டுகளுக்கு முன்னும் விளையாடி இருக்கிறார்கள்! ஆம், சங்க இலக்கியங்களில் மூதாய், செம்மூதாய், ஈயன் மூதாய், கோபம், கோவம் என்றெல்லாம் இப்பூச்சி குறிப்பிடப் பட்டிருக்கிறது.
தலைவனும் தலைவியும் களவு மணம் புரிவதற்காக வீட்டை விட்டு வெளியேறி காட்டு வழி சென்று கொண்டிருக்கின்றனர். கார்காலம் தொடங்கி முதல் மழையும் பெய்கின்றது. குளிர்ந்த மழை மேகங்கள் சூழ்ந்த அழகு மிக்க காடு. அங்கு அகன்ற இடமெல்லாம் காணப்படும், விரைந்து ஓடும் சிவந்த மூதாய்ப்பூச்சிகளைப் பார்த்தும், பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடுவாய் என்று களைப்புற்ற அப்பெண்ணிடம் அந்த ஆண்மகன் கூறுகின்றானாம்.
"தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டும் கொண்டும்
நீ விளை யாடுக சிறிதே"
இது நற்றிணை 362(2-4) காட்டும் காட்சியாகும்.
"வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின் நன்பல
முல்லை வீகழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செந்நிலப் புறவு"
காடும் காடு சார்ந்த இடமான சிவந்த முல்லை நிலத்தைப் பற்றி சீத்தலையார் என்ற புலவர் அகநானுற்றில் (134) வடித்த சொல்லோவியம் இது!
வானம் தவறாது பொழிகிறது. அதனால் அழகு பெற்ற காட்டில் நிறைந்த சூல் பெற்ற கரிய மேகங்கள் கார் காலத்தை உண்டாக்கி, தங்கியிருக்கின்றன. நீலமணி போன்ற நீலநிறக் காயா மலர்களிடையே, சிவந்த மேற்புறத்தையுடைய மூதாய்ப் பூச்சிகள் ஆங்காங்கே இருக்க, முல்லை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இப்படி கார்காலக் காட்டு முல்லை நிலம் ஓவிக்கலை வல்லோன் தன் திறமெல்லாம் கொட்டித் தீட்டிய ஓவியம் போல் இருக்கின்றதாம்.
சங்கப் புலவர்கள் வெறும் சொற்குவியல்களைத் ஆக்கவில்லை. இயற்கையோடு இயைந்து நின்று, இயற்கை அரங்கின் கோலங்களை முழுமையாகவும், நுட்பமாகவும் கூர்ந்து நோக்கி அறிந்தார்கள்; அனுபவித்து உணர்ந்தார்கள்; போலித் தன்மையும் இயல்பிறந்த தன்மையும் இன்றி, உண்மையும் எளிமையும் திகழ, உணர்வுகளைத் தக்க சொற்களால் கவிதையாக்கியிருக்கிறார்கள்.
மழைக்காலம் ஆரம்பிக்கின்றது; செந்நிற மூதாய்ப் பூச்சிகள் சிறு வயிற்றுடன் குறுகுறுவென்று, வாடிய நீல நிறக் காயா மலர்களிடையே நீலமணிகளிடையே பவளம் போன்று ஓடித் திரிகின்றன. இரத்தம் போன்ற சிவந்த பூச்சிகள் புற்கள் பசுந்தளிர்களுடன் திகழும் கானகத்தே செந்நிறம் ஊட்டிய பஞ்சின் பிசிர் போலப் பரவிக்கிடக்கின்றன. இவ்வாறெல்லாம் பல இடங்களில் எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன.
"குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவளம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஔிப்பன மறைய" (அகம் 374)
"குருதி யுருவின் ஒண்செம் மூதாய்" (அகநானூறு 74)
"புல்நுகும்பு எடுத்த நல்நெடுங் கானத்து
ஊட்டு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப" (அகம் 283)
"பெய்புல மூதாய் புகர்நிறத் துகிரின்" (கலித்தொகை 85)
(புகர் - கருஞ்சிவப்பு நிறம், துகிர் - பவளம்)
பத்துப் பாட்டு நூல்களான திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை 'கோபம்' என்று இப்பூச்சிகளைக் குறிப்பிடுகின்றன. இந்திரனின் பூப்போன்ற ஆடை நிறம் ஊட்டப்படாமல் கோபப் புழுக்களைப் போன்று இயல்பான சிவப்பில் இருந்தது,
"கோபத் தன்ன தோயாப் பூந்துகில்"
என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது.
"கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்"
இது சிறுபாணாற்றுப் படையின் கூற்று.
அடை மழைக்காலம் வருவதை உணர்த்தும் அறிகுறிகளாகவே இப்பூச்சிகளை அக்கால மக்கள் கண்டிருக்கிறார்கள்! கவிதைகளில் சொல்லோவியமாகத் தீட்டியும் இருக்கிறார்கள்! ஆமாம், நினைத்துப் பார்த்தால் அப்பொழுதெல்லாம் நாள்காட்டி, காலண்டர் இருந்ததாஎன்ன? இயற்கை அளித்த குறிப்புகளை வைத்துத் தானே காலத்தைக் கணித்தார்கள்!
முல்லை நிலம், கார்காலத்தைப் பிண்ணணியாகக் கொண்டு மனித உணர்ச்சிகளை பிரிதல், பிரிதல் நிமித்தமும் என்று இலக்கியம் படைத்தார்கள். இதன் தொடர்ச்சியாகவே சூடிக்கொடுத்த சுடக்கொடி ஆண்டாளும் சிந்தூரச் செம்பொடி போல் சிவந்த இந்திரக் கோபங்கள் திருமாலிருஞ்சோலை எங்கும் பரந்து தென்படுகின்றனவே! மழைக்காலம் ஆரம்பித்து விட்டதே! என் அழகன் சுந்தரத் தோளுடையானாம் திருமாலின் பிரிவுத் துயரிலிருந்து எவ்வாறு விடுபடுவேன் என்று பாடுகிறாள்.
10ம் நூற்றாண்டிற்குப் பின் வந்த கம்பராமாயணத்தில், கொவ்வைப் பழம் போன்ற பெண்களின் இதழ்களைத் தங்கள் உணவான இந்திரக்கோபங்களோ என்று மயில்கள் நோக்கின,
"கொவ்வை நோக்கிய வாய்களை இந்திரக்கோபம்
கவ்வி நோக்கின காட்டுஇன மயில்கள்"
என்று வருகிறது.
மழையை உணர்த்தி நிற்கும் ஈரநிலத்து இப்பூச்சிகளை விருதுநகரில் பார்த்திருக்கிறோம். இப்பொழுதும் காணக் கிடைக்கிறதா தெரியவில்லை. சமீபத்தில் புனே அருகில் ஒரு மலைப் பகுதியில் இப்பூச்சி ஒன்றைக் கண்டு படமெடுத்து வந்தாள். முகநூலிலும் சிலர் சில இடங்களில் பார்த்துப் பதிவிட்டிருந்தனர்.
இன்னொரு செய்தியும் காணக் கிடைத்தது. ருத்திரனைப் போலச் சிவந்த நிறப்புழு என்ற பொருளில் 'ஆருத்திரப்புருகு' என்ற தெலுங்கில் அழைக்கப் படுகிறது. இந்த ஆருத்திரப்புருகுவை கிலோக் கணக்கில் வாங்குவதால் மக்கள் இவற்றைப் பிடித்து விற்கிறார்கள். ஏற்கனவே மனிதன் உருவாக்கிய இயற்கை மாற்றத்தால் இப்பூச்சிகள் குறைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது வேறு!
இப்பூச்சியில் ஒருவகை வாதநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. அதற்காகவோ வேறு எதற்காகவோ தெரியவில்லை! இயற்கையின் சூழல் பாதுகாப்பில் ஒவ்வொன்றும் அவசியம், முக்கியம் இல்லையா! தானாக அழிவதோடு மனிதனும் அழிக்கிறான்! இவையெல்லாம் சரியா?
சிறிய வயதில் பார்த்த சின்னஞ் சிறிய பூச்சி! அதுவும் எத்துணையோ காலமாக பூமியில் இருந்து கொண்டிருக்கிறது. சங்க இலக்கியம் தொடங்கி, ஆண்டாள் பாசுரத்தில் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதில் ஏதோ ஒரு வியப்பு! மகிழ்ச்சி! அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்!
- பொற்செல்வி ஜெயப்பிரகாஷ்