செந்தமிழ் நாட்டுச் சிரோர் நம்மவர் சிறப்புடன் வாழ்ந்த செய்தியைச் சொல்லும் அகநானூறு எனும் நெடுந்தொகை உன்னதப் பண்பாட்டை உலகுப் பறைசாற்றிய நன்னகம் எனப் பெயர் பெற்றது நமது தமிழகம். கற்கண்டின்பாகும் கனிமூன்றின் சாறும் போல் சொற்கொண்டு எழுந்தது நம் புலவர்களின் கவிதைகள்.

தமிழர்தம் கலைகளைத் தமதென உரிமை கொண்டாடும் தறுதலை அயலவர்கள் நமது கலைகளை, கலைப்பெருஞ்செல்வங்களை… மருத்துவத்தை… அறிவியலை அதன் மகத்துவத்தைத் தமதெனக் கொண்டார்கள். நம் தமிழ் மக்கள் இதையெல்லாம் மறந்து அறியாமையில் மூழ்கிப் போனார்கள்!.

உண்ணவும், உடுத்தவும், படிக்கவும், படுக்கவும் அந்நியர்களிடம் அடிபணிந்து நிற்கும் அவலநிலை ஏன்? இன்று, வலைதளத்தில் வார்செருப்புக்காகக் கையேந்தி நிற்கிறோம்.

கால் செருப்பைக் கூடக் கை நேர்த்தியாய்ச் செய்ய உலகுக்குக் கற்றுக் கொடுத்தவன் நம் தமிழன்.

தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
கடி சுனைத் தௌந்த மணி மருள் தீம் நீர்
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி,
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்,
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?

இச்சிற்பமானது ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி (ஆத்மநாதர்) கோவில் தூணில் உள்ளது.

aavudaiyaar temple sculptureஇஃது அகநானூறில் 368ம் பாடலில் வரும் காட்சி. இதனை மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ளார். தலைவனுக்குத் தோழி கூறுவதாக அமைந்த பாடல். மாலைப் பொழுதின் மயக்கத்தில் உறவாடி காளையும், கன்னியும் களிக்கின்ற காலம். கடிமணம் புரிய அவன் காதில் படக் கூறுகின்றாள் தோழி.

காலிற் செருப்பணிகின்ற கானவன். அவன் சுட்டெரித்த தினைக்கொல்லைக் கரிக்கட்டைகளை சட்டென்று மழை பெய்து கழுவிச் செல்லும். அதன் ஈரத்திலே தினை பசுமையாய் விளைந்துவிடும். கதிர்களுக்கு மகளிர் காவலிருப்பர். தினைக் காவல் மகளிர் ஊசல் (ஊஞ்சல்) ஆடக் காத்திருக்கும் வேங்கை மரங்கள் பூத்திருக்கும், மயிலின் கொண்டைபோல் தோன்றும், அப்படியான மலைக்குச் சொந்தக்கார மலைநாடன் நம் தலைவன்.

காந்தள் மலர் விளைந்த சோலை. குரங்குகளும் ஏறமுடியா உயர் மரங்கள். ஆனைதன் பிடியுடன் ஆடிய போலே தேனருவியிலேயே திரிந்தோம் பல நாள் கூடி. வேற்றுப்புலம் பெயர்ந்த தலைவனால் வேதனை பெருகியது. மூங்கிலில் விளைந்த முதிர்தேன் கள்ளின் தேறலை, வண்டுகள் மொய்க்கும் கண்ணி களணிந்து (மலர்மாலைகள்) உண்டு மகிழ்கின்றனர் ஊர்மக்கள். அந்த ஊறு வாயற்களால் நம்மைப் பற்றி அலர் பேசப்படுகின்றது. கொங்குநாட்டுக் கூத்தர்கள் இடுப்பிலே மணிகள் இசைக்க ஆடும் “உள்ளித்திருவிழா”வில் கூட நம்மைப் பற்றி நாலுவிதமாகப் பேசப்படுகின்ற அலர் அவர் காதுகளில் விழவில்லையோ? என்னேடீ !...தோழி! இது! காலில் செருப்பணிந்த காளை, நம் மனம் நோவதை கால்நோகுமென்று மறந்தும் இருந்தானோ? என்று கூறுவதாக அமைந்த காட்சியைக் காண்கிறோம்.

தமிழ்ப் பண்பாட்டைப் பேணி வளர்ப்போம் !
தமிழர்களாக வாழ்வோம்! உள்நாட்டுப்பொருட்களையே வாங்குவோம்!.
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம் !

- பனையவயல் முனைவர் கா.காளிதாஸ்