‘கீற்று’ இணையத்தினூடாக தமிழக சிந்தனைத்தளத்தை தொடர்ந்து அவதானித்து வருகின்றேன். பொதுவாகவே தமிழகத்தின் அரசியல் மற்றும் சிந்தனைப் போக்குகளை ஈழத்தவர்களாகிய நாம் அவதானிப்பதும், ஈழத்தின் அரசியல் மற்றும் சிந்தனைப் போக்குகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அவதானிப்பதும் ஒரு தொடர் செயற்பாடாகவே நீடித்து வருகின்றது. அப்படித்தான் சமீபத்தில் கீற்றில் இணைக்கப்பட்டுள்ள ‘தலித்முரசு’ இதழ்களை அவதானித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கருத்தைப் பார்த்தேன். அது 2006 செப்டம்பரில் வெளியான ‘தலித் முரசு’ இதழில் இடம்பெற்றிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டதே இக்கட்டுரை.

அயோத்திதாசரின் தமிழன் இதழ்களின் திரட்டிய தொகுப்பு வெளியீட்டின்போது பேசிய தொல்.திருமாவளவன், பௌத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அவர் கூறியிருப்பது கீழே...

“உலகிலேயே மூத்த மதம் பவுத்த மதமாகும். அதன் பிறகே பிற மதங்கள் தோன்றி தங்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகளை பவுத்தத்திலிருந்தே பெற்றுக் கொண்டன. உலகுக்கு பவுத்தத்தின் கொடை என்பது தமிழர்களின் கொடையாகும். பவுத்தம் ஒரு மதமன்று, அது தோன்றிய காலம் முதலே அவைதீக நடைமுறையைச் சார்ந்த பகுத்தறிவு இயக்கமாகும். அன்றும் இன்றும் ஒடுக்கப்படவர்களின் ஆயுதமாக பவுத்தம் திகழ்கின்றது.” (‘தலித்முரசு செம்டம்பர்- 2006’)

2

தமிழகத்தில் தலித்திய சிந்தனையை முன்னிறுத்தி செயற்படுபவர்கள் மத்தியில் பௌத்தத்தை ஒரு விடுதலை சிந்தனையாக குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிந்தனையாக விவாதிக்கும் போக்கொன்று நிலவி வருகின்றது. அம்பேத்கர் வழிவந்த இந்த சிந்தனைப் போக்கை தமிழக தலித்திய அரசியல் மற்றும் இலக்கிய செயற்பாட்டாளர்கள் முதன்மைப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. பௌத்தம் ஒரு விடுதலைச் சிந்தனையென்று வாதிடும் இவர்களிடம், அதன் சமகால போக்கு குறித்து எந்தவிதமான விமர்சனங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளில் ஒருவரான தொல்.திருமாவளவன் ஈழத்தில் பௌத்தம் சிங்கள ஒடுக்குமுறை அரசியலில் எவ்வாறு பங்காற்றி வந்தது, வருகிறது என்பது பற்றிய ஆராய்வில்லாமல் ‘பௌத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாகத் திகழ்கின்றது’ என்று குறிப்பிடுவது பொருத்தமான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை.

பௌத்தம் தோன்றிய நாடு இந்தியா எனினும் அது தோன்றிய நாட்டிலேயே நிலைகொள்ள முடியாதளவிற்கு பௌத்த இயக்கம் வைதீக எதிர்ப்புக்களைச் சந்தித்தது, இறுதியில் சிதைந்து போனது. பௌத்தம் ஒரு மதமல்ல, அது ஒரு தத்துவம் என்ற வாதத்தை கருத்து நிலையில் ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், அது நிலைகொண்டுள்ள நாடுகளில் அதனால் ஒரு மதமாகத்தான் உயிர்வாழ முடிந்ததேயொழிய தத்துவமாக அல்ல. பௌத்தத்தின் அடிப்படையான - உயிர்களை மதித்தல் என்னும் வாதம் அதனை பின்பற்றும் நாடுகளில் வலுவிழந்த ஒன்றாகவே இருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம்தான் சிறிலங்கா தேசமாகும்.

கடவுள் - மதம் என்ற விடயங்கள் குறித்து எனக்கு எந்தவிதமான ஈடுபாடுகள் இல்லாவிட்டாலும், நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு - ஒரு வேளை இலங்கையில் பௌத்தம் சிங்கள இனவாதத்தின் ஊதுகுழலாக தொழிற்படாது இருந்திருக்குமானால் நான் ஒரு தமிழ் பௌத்தனாக இருந்திருக்கக் கூடும். ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

இலங்கையில் நிலவும் மேலாதிக்க அரசியலின் அடிப்படையே - இலங்கை என்பது ஒரு சிங்கள பௌத்த நாடாகும் என்ற பெரும்பான்மை நிலைப்பாடுதான். சிங்களத்தின் சகலவிதமான அரசியல் உரையாடல்களும் இந்த நிலைப்பாட்டில்தான் வேர் கொண்டிருக்கின்றது. இன்றைய சிங்களப் பேரினவாத கருத்துருவம் என்பதே பௌத்த மத நோக்கிலிருந்தும் அதனைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பௌத்தமத சங்கங்களிலிருந்தும் உருப்பெற்றதாகவே வரலாற்றியல் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். இலங்கையின் சமகால சிங்களத்துவ அரசியல் நகர்வுகளின் போதெல்லாம் இது வெள்ளிடைமலையாகத் தெரியும் ஒரு நடைமுறை உண்மையாகும். கொழும்பின் அரசியல் தலைமையை கைப்பற்றும் ஒவ்வொரு ஆட்சியாளரும் தமது முதல் கடமை சிங்கள பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதுதான் என்று கருதுகின்றனர். இலங்கையைப் பொருத்தவரையில் சிங்கள ஆளும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கான ஒரு கருத்தியலாகவே பௌத்தம் தொழிற்பட்டு வருகின்றது என்பதில் விவாதங்களுக்கு இடமில்லை.

இந்த இடத்தில் இலங்கையில் பௌத்தத்தின் தோற்றம் குறித்தும் சில விடயங்களை இணைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் பௌத்தத்தின் வருகையானது இந்தியாவின் ஊடாகவே நிகழ்ந்தது. வடஇந்தியாவில் உருவாகிய பௌத்தம் தென் இந்தியா வரை பரவியதுடன் இந்தியாவிற்கு வெளியிலும் பரவலாயிற்று. பொதுவாக இந்தியாவில் ஏற்படும் அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் இலங்கையைப் பாதிப்பது வழக்கமான ஒன்று என்ற அடிப்படையிலேயே இதனை நாம் நோக்க வேண்டும். ஆனால் கி.பி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பௌத்த சிந்தனைக்குள் ஏற்பட்ட தேரவாதம் - மகாயாணம் என்னும் பிளவானது பௌத்தம் பரவிய இடங்களிலும் முரன்பாடுகளை தோற்றுவித்தது.

மகாயானம் தென் இந்தியாவிற்கு பரவியதுடன் அங்கிருந்து இலங்கையினுள்ளும் பரவியது. இதனால் இலங்கையிலும் தேரவாதம் - மகாயானம் என்ற முரண்பாடுகள் வலுவடைந்தன. இந்த முரண்பாடுகள் வன்முறைகளாகவும் நாடுகடத்தல்களாவும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. தென்னிந்திய தமிழ் பிக்குவான சங்கமித்திரே மகாசேனன் என்ற மன்னனை மகாயான பிரிவுக்கு மதமாற்றம் செய்தார். இதனைத் தொடர்ந்தே இலங்கையில் தேரவாதப் பரிவு பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இதுவே காலப்போக்கில் தமிழ் - சிங்கள முரண்பாடாக உருப்பெற்றதாகவே வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். இது பற்றி போராசியர் எஸ்.பத்மநாதனின் கருத்து இந்த இடத்தில் இணைக்கத்தக்கது.

“மகாசேனன் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 207 - 30) மகாயானத் தத்துவங்களை எடுத்துரைத்தவர்களின் செல்வாக்கிற்கு அரசசபை உட்பட்டது. மகாசேனன் மகாயானத்தைத் தழுவிக் கொண்டான். சோழ நாட்டிலிருந்து வந்த சங்கமித்தர் என்ற பிக்குவே அரசனை மதம் மாற்றினார். சங்கமித்தரின் தலைமையில் மகாயானவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மகாவிகாரை பெரிதும் பாதிப்புற்றது. மகாசேனன் காலத்தில் மகாவிகாரை அடக்கி ஒடுக்கப்பட்டமை அதன் ஆதரவாளர்களின் மத்தியில் மிகக் கசப்பான நினைவுகளை ஆழப்பதித்தது. இந்த நிகழ்வின் விழைவாக தமிழர்களின் அரசியற் பண்பாட்டுச் செல்வாக்கிற்கெதிரான பகைமையுணர்வு வலுப்பெற்றது”

“பௌத்த மதம் சிங்கள இனத்தின் இணைப்பாக்க சமயமாயிற்று. ஆனால் அது தமிழ் நாட்டில் ஒரு போதும் முன்னிலையில் நின்றதில்லை. அது செழிப்புற்றிருந்த நிலையங்கள் (பௌத்த நிலையங்கள்) மகாயான செல்வாக்கிற்குட்பட்டிருந்தன. இந்நிலையங்களிலிருந்து மகாயான சிந்தனைகள் இத்தீவிற்கு பரவின. மகா விகாரையின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் அழித்துவிடக் கூடியளவிற்கு மகாயானச் செல்வாக்கு ஓங்கியிருந்தது.”

இதிலிருந்து நாம் தமிழ்நாட்டில் செல்வாக்கடைந்திருந்தது மகாயான பௌத்தம் என்பதைக் காணலாம். ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் பிக்குகள் என்ற வேறுபாடுகள் இருக்கவில்லை. புகழ் பெற்ற பௌத்த தர்க்கவியல் அறிஞர்களான திக்குநாகர், நாலந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த தர்மபாலதேரர் மற்றும் போதிதர்மதேரர் ஆகியோர் காஞ்சியைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர். ஆனால் தேரவாத - மகாயான கருத்து முரண்பாடுகள் பின்னர் தமிழ் - சிங்கள முரண்பாடாக வளர்ச்சியடைந்தது. இது முதலில் இந்திய எதிர்ப்பாகவும் பின்னர் தமிழர் எதிர்ப்பாகவும் வளர்ச்சியடைந்து உறுதியடைந்தது. இன்றைய ஈழத் தமிழர் விரோத அரசியல் என்னும் மரத்தின் வேர்கள், ஆழப்பதிந்திருப்பதோ மேற்படி வரலாற்றில்தான்.

இலங்கையில் பௌத்தத்தின் நிலைமை இதுவென்றால், இந்தியாவில் நடந்ததோ வேறு. குறிப்பாக தமிழகத்தில் ஆரம்பத்தில் தேரவாத - மகாயான கருத்து முரண்பாடுகளாக இருந்த பௌத்த மதச் சிக்கல்கள் பின்னர் இந்து - பௌத்தமத முரண்பாடாக உருமாறியது. ஏலவே படிப்படியாக சரிவடைந்துவந்த பௌத்தம் கி.பி 6ஆம் நூற்றாண்டளவில் இந்துமதத்தின் வலுவான எதிர்ப்புக்களை எதிர்கொண்டிருக்கிறது. இங்கு எதிர்ப்புக்குள்ளாகியது மகாயான பௌத்தமே தவிர தேரவாத பௌத்தம் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலைமையின் தொடர்சியாக காலப்போக்கில் இந்துமதம் மகாயான பௌத்தத்தை தனக்குள் உள்வாங்கி கரைத்துக் கொண்டது. இது பற்றி வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கர் குறிப்பிடும் கருத்துக்கள் இந்த இடத்தில் பொருத்தமானது.

“கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் புத்த பிரான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு அவர் வழிப்பாட்டிற்குரிய கடவுளாக பிரகடனப்படுத்தப்பட்டார். மச்ச புராணத்தில் இவர் அவதாரங்களில் ஒருவராக இணைக்கப்பட்டுள்ளார். பாகவத புராணமும் புத்தபிரானை விஷ்ணுவின் ஓர் அவதாரம் என்று கூறுகிறது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டின் மூலம் தென்னிந்தியாவிலும் புத்த பிரான் ஒரு அவதாரமாகக் கணிக்கப்பட்டார் என அறியமுடிகின்றது”

நான் மீண்டும் எனது பிரதான விடயத்திற்கு வருகிறேன். இந்த வரலாற்று பின்புலத்தில் பார்த்தால் பௌத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக இருக்கிறதென்ற வாதத்தில் பௌத்தத்தை பொதுமைப்படுத்தி நோக்கும் ஆபத்து நிகழ்ந்திருக்கிறது. அதாவது பௌத்தத்தில் தமக்கான விமோசனத்தைத் தேடும் தலித்தியர்களிடம் மகாயான - தேரவாத பௌத்த முரண்பாடுகள் குறித்த சரியான மதிப்பீடுகள் இல்லை. இது ஒரு குறைபாடு. மற்றையது ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு மதத்தை பயன்படுத்திக் கொள்ள முற்படும்போது அதன் நீடித்த தன்மை குறித்த பார்வை இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படியொரு பார்வை இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எமது அனுபவத்தில் பார்த்தால் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை எதிர்ப்பு நோக்கில் கிறிஸ்தவத்தை தழுவிக் கொள்ளும் போக்கொன்றும் இருந்தது. அன்றைய சூழலில், அது ஒரு தற்காலிக விமோசனத்தை வழங்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்டவர்களும் தமது புதிய கிறிஸ்தவ வாழ்க்கையில் தமது முன்னைய இந்துமதச் சடங்குகளை, வழமைகளை பின்பற்றுபவர்களாக இருந்தனரே தவிர கிறிஸ்தவ தத்துவத்தையோ அதன் ஏற்றத்தாழ்வுகளை மறுதலிக்கும் போக்கையோ பின்பற்றவில்லை. அவர்கள் இறை வழிபாட்டில் கிறிஸ்தவர்களாகவும் நடைமுறை வாழ்வில் இந்துக்களாகவுமே இருந்தனர். இப்படியொரு நிலைமை பௌத்திற்கு நேராது என்று நாம் எப்படி வாதிட முடியும்.

ஒரு மொழியைப் பேசும் மக்கள் என்னவிதமாக நம்பிக்கைளைக் கொண்டிருந்தபோதும் அவர்கள் மத்தியில் வழக்கமாக இருந்துவரும் நடைமுறைகளை அவர்களது புதிய நம்பிக்கைள் அழித்துவிடுவதில்லை என்ற உண்மையைத்தான் மதத்தை விமோசனமாகக் கொள்வோரிடமிருந்து நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. சமூக கட்டமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்விற்கான அடிப்படைகளை தகர்க்காமல் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளாமல் அவற்றை வெறுமனே மதச் சிந்தனைகளால் அழித்துவிட முடியுமென நம்புவது ஒரு அறிவியல் தழுவிய வாதமல்ல என்பதே எனது துணிபு.

எனவே தொல்.திருமாவளவன் கூறும், ‘பவுத்தம் அன்றும் இன்றும் ஒடுக்கப்படவர்களின் ஆயுதமாக திகழ்கின்றது’ என்னும் வாதம், இன்று பௌத்தம் உயிர்வாழும் நாடுகளின் அரசியல் அனுபங்களிலிருந்து நோக்கும்போது கனதியிழந்து போகிறது. திருமாவளவன் சொல்வது போன்று அன்று பௌத்தம் அப்படியொரு பங்கை வகித்திருக்கலாம் ஆனால் இன்று அது அவ்வறானதொரு பங்கை ஆற்றவில்லை.

“தனது தத்துவ போதனைகள் 500 வருடங்கள் மாத்திரம் நிலைக்கும்” என்று புத்தர் கூறியதாக ஒரு பாரம்பரிய செய்தி உண்டு. ஆனால் அது இன்று வேறு தன்மையில் நிலைத்திருக்கிறது. புத்தரின் போதனைகள் மிகவும் சுருக்கமானவை, ஆசைகள் துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆசைகளைத் துறந்தவன் விடுதலை பெறுகிறான். நன்கு வேயப்படாத வீட்டுக் கூரையிலுள்ள துவாரத்தினூடாக மழை நீர் உள்நுழைவதுபோல் ஜம்புலனை அடக்காதவரிடம் தீயசெயல்கள் குடி கொள்கின்றன. கோபம், பேராசை, தீய நடத்தை என்பவற்றைத் துறந்தவனே துறவி. கொல்லாமை அவனுடைய மிகப்பெரிய நற்செயல். ஆனால் இதிலுள்ள அவலம் என்னவென்றால், இலங்கையில் அவர் அடங்கா வெறியின் குறியீடாக மாறிப்போயிருப்பதுதான்.

இலங்கையில் புத்தர்சிலை என்பது ஆக்கிரப்பின் குறியீடாகத் திகழ்கின்றது. எனவே இலங்கை அனுபவத்தில் நின்று நோக்கும் போது, ஒரே நேரத்தில் பௌத்தம் ஒடுக்குமுறை அரசியலுக்கான கருத்தியலாகவும் தமிழக தலித்திய அர்த்தத்தில் விடுதலையின் குறியீடாவும் இருக்க முடியுமென்பது ஒரு சரியான தெரிவாகவோ அல்லது ஒரு சரியான பார்வையாகவோ இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகும். எனினும் இது குறித்து பரந்த தளத்தில் உரையாடல்கள் இடம்பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

- யதீந்திரா

Pin It