தங்களுடைய சொந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக, தாங்கள் புரிந்த குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டு மென சிங்கள பவுத்தர்களிடம் நாங்கள் வேண்டுகோள் வைக்க விரும்புகிறோம்.ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயும், காயமடைந்தும், வல்லுறவுக்கு ஆட்பட்டும், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தும், தடுத்து வைக்கப்பட்டும் உள்ள சூழலில் போர் வெற்றிகளைக் கொண்டாடுவது, தம்மத்திற்கு முற்றிலும் எதிரானது.

பாலி மொழியில் மன்னித்தலுக்கு "அபயா' அதாவது அச்சமின்மை என்று பொருள். நாம் ஆன்மீக அச்சமின்மையை வளர்த்தெடுக்க வேண்டும். பிறரின் உருவாக்கத்திலிருந்தே அச்சம் எழுகிறது. பிறரின் உருவாக்கம் என்பது, தன்னிலிருந்து பிறரை வேறுபடுத்துவதாலேயே எழுகிறது. இது, அறியாமை. உண்மையான எதிரி என்பது பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை. அச்சமின்றி இருக்க, ஒருவர் அறியாமை மற்றும் பேராசை ஆகிய தளைகளிலிருந்து விடுபட வேண்டும்.

பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஓர் அரசின் மீது கொண்ட பற்றுதலே இந்தப் போரை உருவாக்கி, கடும் துன்பங்களுக்கு வித்திட்டுள்ளது. பெரும்பான்மை, சிறுபான்மை ஆகியவை குறித்த கருத்தாக்கம் என்பது தவறான புரிதலாகும். நாம்அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள் அல்லது "இணை உயிர்கள்.' இணை உயிர்களை உணர்ந்தவர்கள் அச்சமின்றி இருப்பர். இந்த அச்சமின்மையே, காலனி கட்டமைப்பினைக் கொண்ட இலங்கை ஒற்றை ஆட்சியை மாற்ற உதவக் கூடியது. இந்த கட்டமைப்பு, பேராசை மற்றும் வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த பவுத்த தியானத்தின் மூலம் இணை உயிர்களை நாம் உணர முடியும். நாம் பல இன அடையாளங்களைக் கொண்டவர்களாயினும், உண்மையில் நாம் அனைவரும் நண்பர்கள். சரியான மனநிலையில் ("சம்ம ஸ்மாதி') நோக்கினால் மட்டுமே, அவர்கள் அனைவரும் நமது எதிரிகள் அல்லர்; நண்பர்கள் என்பதை காண முடியும். போர் வெற்றி வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியவை தவறான புரிதல்களே. ஒருவருடைய மரியாதையை மற்றவர் மதித்து நாம் இணைந்து வாழலாம். தமிழர்களும் மனிதர்களே.

எனவே, அவர்கள் நம்மைப் போலவே அடிப்படை மனித உரிமை கள் கொண்ட வாழ்க்கையை வாழ வேண்டும். சிங்களர்களைப் போலவே தாங்களும் தங்களின் சொந்த மண்ணில் வாழ விரும்புகின்றனர். வன்முறையிலிருந்து அன்பான கருணை கொண்டவராக மாறி, தனது அரச எல்லைக்குள் வாழ்ந்த அனைத்து இன மக்களையும் மரியாதை யுடனும் சம மதிப்புடனும் நடத்திய மாமன்னர் அசோகரின் வழியை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கும் உலகத்தை அமைதி, உண்மை மற்றும் அன்பினால் கட்டமைக்க, நாம் அந்த உயரிய பவுத்த மாமன்னரைப் பின்பற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு பண்பு மாற்றம் தேவை.

சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான நயவஞ்சகப் போக்கு முடிவுக்கு வருகிறது. பவுத்த அறிவுரையான "அனிக்கா' நிலையற்றத் தன்மை கூறுவது போல, ரோம் மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகள் முடிவை கண்டன. அமெரிக்கா சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மனித இனத்தின் எதிர்காலம் அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தைச் சார்ந்து இருக்கிறது. உண்மையின் பலம் காந்தியால் மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. அது புத்தரால் அறிவிக்கப்பட்டது.

துன்பம் எனும் உண்மையை நாம் எதிர்கொண்டு விட்டால் தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல சமூக அளவிலும் அதன் பிறகே துன்பத்தின் காரணங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். பேராசை "லோபா' (முதலாளித்துவம் மற்றும் நுகர்வுப் பண்பாடு), வெறுப்பு "தோசா' (தேசியம், ராணுவம், அரை குறை ஜனநாயகம்), "மாய மோஹா' (தலைக்கு அழுத்தம் கொடுத்து மனதை வளர்த்தெடுக்காத பொது கல்வி முறை, பெரும் ஊடகங்கள்) ஆகியவற்றுடன் துன்பம் நேரடியாகத் தொடர்புடையது.

சீலத்தின் உன்னத எண்முனைப் பாதையான, தன்னை மற்றும் பிறரை சுரண்டாத தன்மை, சமாதி, தன்னை அறிவதற்கான ஆழ்நிலை தியானப் பயிற்சி மற்றும் "பன்னா' அல்லது அறிவு அல்லது உண்மையான புரிதல் மூலம் நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்களே என்பதை உணர்வதன் மூலம் சமூகத் துன்பங்களை நாம் வெல்லலாம். தமிழர்களும் சிங்களர்களும் சகோதர, சகோதரிகளாக இருக்க வேண்டும்.

இது எட்ட முடியாத கருத்தாக கருதப்படாமல், ஒரு நிச்சய உண்மையாக எடுத்துக் கொள்ளப்படுமானால், இலங்கை உண்மையிலேயே புத்தரின் தேசமாக இருக்கலாம். தமிழர்களும் சிங்களர்களும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு அருகருகே இருக்கலாம். இது உண்மையில் இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு சிறப்பான உதாரணமான நாடாக இருக்கும். இந்த நூற்றாண்டு, போலித்தனம் மற்றும் பலவீனங்களைக் கடந்த ஆன்மீக பலத்தைக் கொண்ட நூற்றாண்டாகத் திகழும்.

தமிழில் : கண்ணன்

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பவுத்தரான சுலக் சிவரக்சா, அமைதிக்கான மாற்று நோபல் பரிசு பெற்றவர்; சமூக மேம்பாட்டுக்கான பவுத்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தாய்லாந்தில் சமூக இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். தன்னை ஒரு பவுத்த நாடு என்று கூறிக் கொள்ளும் இலங்கையில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசின் இனப்படுகொலையை கண்டித்து அவர் எழுதிய கடிதம்

 

Pin It