கீற்றில் தேட...

சென்ற இதழில் வெளிவந்த ஞான. அலாய்சியஸ் அவர்களின் பேட்டி இந்த இதழிலும்...

அயோத்திதாசர் மொழி வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தியதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன? இந்தியா முழுவதும் படர்ந்திருக்கும் தலித்துகளிடையே ஓர் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவதற்கு இது தடையாக இருக்கிறதே?

இதுவரை, பெரும்பாலும் தலித் போராட்டங்கள் அரசியல் களத்திலேயே, அதுவும் குறிப்பாக மத்திய அரசினை எதிர்த்தே இருந்து வந்திருக்கின்றன. தலித் என்பது யார் என்ற கேள்விக்கு, நடுவணரசு பட்டியல் சாதிகளை அரசியல் சட்டத்துடன் இணைத்துக் காட்டியுள்ளது.

அதாவது, மத்திய அரசு போட்ட பட்டியல் மூலமே தலித்துகள் யார் என்பது அறியப்படுகிறது. மேலும், அம்பேத்கரின் நாடு தழுவிய பிரதிநதித்துவம் தலித்துகளை ஓர் அமைப்புக்குள் கொண்டு வந்திருக்கின்றன. இவ்வாறு அமைந்த தலித் அரசியல் அமைப்புகளின் நோக்கம் அரசியல் நடவடிக்கைகளில் அழுத்தம் கொடுத்து, சட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட சலுகைகளை செயல்படுத்துவதுதான்.

சட்டத்தின் மூலம் அம்பேத்கரின் தலைமையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள், அம்பேத்கரின் கண்ணோட்டத்திலேயே குறைந்தபட்ச திட்டமாகத்தான் இருந்திருக்கிறது. பெருவாரியான சமூகத்துக்குள் சாதி / வர்ண முறையை ஒழித்து அதன் மூலமாகவே அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து மக்களையும் விடுவிப்பதே அம்பேத்கரின் முக்கியமான நோக்கம்.

ஆனால், சாதிய சக்திகள் அதற்கு இடம் கொடுக்காமல் அவரைத் தள்ளிக் கொண்டே வர, வாய்ப்புக் கிட்டியபோது, குறைந்தபட்சம் அடிமட்ட மக்களின் விடுதலைக்காக, சட்டத்தின் மூலம் சில உரிமைகளைப் பெற முயன்று அதில் வெற்றியும் பெற்றார். இந்த குறைந்தபட்ச திட்டத்தை, இன்றைய தலித்துகள் நிறைந்த பட்ச நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அது அம்பேத்கரியம் ஆகாது.

இந்த குறைந்தபட்ச அரசு சலுகைகளுக்காக, ஒருங்கிணைக்கப்பட்ட தலித் களம் பயன்படுகிறது. இதனால் சிறப்பாக தமிழகத்தில் சில பயன்களும் விளைந்துள்ளன. ஆனால், இந்த குறைந்தபட்ச திட்டம், ழுமையாகவுமே நடைமுறைப்படுத்தப்பட்டாலும்கூட, தலித் மக்களை ஓரளவுக்கே முன்னுக்கு இழுக்க முடியும். இதனாலேயே போராட்டங்கள் இப்பொழுது அரசையும், அடுத்து சமூகத்தின் ஆதிக்கசக்திகளையும் நோக்கி எழுகிறது. விரிந்து பரந்து பல தளங்களில் நடத்தப்படுகிறது. பல்வேறு விஷயங்களில் அரசு நேரடியான இலக்காக இல்லாமல், சமூகத்தின் ஆதிக்க சாதி சக்திகளே இலக்காக உள்ளன. இந்த ஆதிக்க சாதி சக்திகள், பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடுவதால் இடத்திற்கு இடம் யுக்திகளும், கூட்டாளிகளும் மாற வேண்டியிருக்கிறது. இதை இன்றைய தமிழ் தலித்துகளின் போராட்டங்களில் தெளிவாகக் காணலாம்.

மற்ற மாநிலங்களைவிட, தமிழ் தலித்துகளின் போராட்டங்கள் முன்னேறியோ, மாறுபட்டோ இருப்பதால், அகில இந்திய தலித் ஓர்மையில் தடங்கல் ஏற்படுவதாக எண்ண முடியாது. அன்றாட போராட்டங்களும், வெற்றி தோல்விகளும், இடையறாத வாழ்க்கை முறைகளில் மாற்றங்களும் அந்தந்த பண்பாட்டுக் குழுக்குள் இருக்கும் தலித்துகள், தலித் அல்லாதோருடன், வெட்டியோ ஒட்டியோதான் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அகில இந்திய தலித்துகளுக்கான தளம் அரசை நோக்கிய போராட்டங்களில், ஓர்மையிலேயே செல்லும். பண்பாடு, கல்வி போன்றவைகளிலான போராட்டங்கள் வட்டார அளவில் செல்ல வேண்டியிருந்ததும்; மற்ற தலித்துகளுடனான ஓர்மை Diversity ஆகவும் Federated Unity யாகவுமே கொள்ளப்படும்.

டாக்டர் அம்பேத்கர் பவுத்தத்தை ஒரு வாழ்வியல் நெறியாகப் பார்த்தார். ஆனால், அயோத்திதாசர் பவுத்தத்தை சடங்குகள் நிறைந்த ஒரு மதமாகப் போற்றுகிறார் என்ற கருத்து நிலவுகிறதே...

அயோத்திதாசர் வாழ்ந்து எழுதிய காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள். ஆனால், அம்பேத்கரோ அதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின்னரே பவுத்தம் பற்றிய தனது புரிதலை முன்வைக்கிறார். அயோத்திதாசர் பணியாற்றிய களம் தமிழகம். அம்பேத்கர் இந்திய அளவில் பணியாற்றினார். வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் அம்பேத்கர், நடுவணரசில் பல்வேறு காரணங்களால் பின்னிப் பிணைந்து இருந்தார். ஆனால், அயோத்திதாசரோ, தனிப்பட்ட முறையில் சமூகத்தில் பணியாற்றி வந்தார். அயோத்திதாசரின் காலத்தில் சுயாட்சியின் அறிகுறிகளே தென்பட்டன. ஆனால், அம்பேத்கர் விடுதலையான இந்தியாவைப் பார்த்தார். இரண்டு பேருடைய சமூகச் சூழல்களிலும், அணுகுமுறைகளிலும் இன்னும் பல வேறுபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அயோத்திதாசரின் சொல்லாடலில் பண்பாடு பெருமளவு வெளிப்படுகிறது. சமுக வாழ்வில் குறிப்பாக தள்ளப்பட்டோரின் சமூக வாழ்வில், வாழ்க்கைப் போராட்டங்களில், மேலும் பரந்த சதாயத்தின் சமூக முன்னேற்றத்தில் பண்பாடு எத்துணை பெரிய பங்கு வகிக்கின்றது என்பதை நாம் இப்பொழுதுதான் கண்டுபிடித்து வருகிறோம். பண்பாடு தவிர்த்த, முன்னேற்றத்திற்கானப் போராட்டங்கள் மூலம் உதிரியான தனிமனிதர்களே முன்னேற்றத்தையும், விடுதலையையும் காண முடியும். ஆனால், புறந்தள்ளப்பட்ட சமூகம் விடுதலை காண முடியாது. பண்பாட்டை மய்யமாகக் கொண்ட போராட்டமே சமூகம் முழுமையையும் தலைகீழாக மாற்றி, பெரும்பாலோருக்கு விடுதலை அளிக்க வல்லது. பெற்ற விடுதலையையும் நிலைநிறுத்த வல்லது.

இரண்டாவதாக, சமூக விடுதலையின் தல் படி தற்காலப் பண்பாட்டை விமர்சிப்பது, விவாதத்திற்குள்ளாக்குவது. அதனை வதைத்து, அதன் மூலம் வளர்ச்சி, திரிபுகள் முதலியவற்றை ஆராய்ந்து உண்மையை உணர்வது. இத்தகைய திறனாய்வு இல்லாத விடுதலைப் போராட்டம் வெற்றி பெறாது. ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் நிலைத்து நிற்காது. அயோத்திதாசர் அடிக்கடி சொல்வது போல், எந்த வழியால் தாழ்ந்தோமோ அந்த வழியில் சென்றுதான் விடுதலை பெற வேண்டும். அப்படிப் பெற்ற விடுதலையே நிலைத்து நிற்கும். இதனால்தான் அயோத்திதாசர் எழுத்தில் பெரும்பகுதி தற்காலப் பண்பாட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதாக இருக்கிறது. ஆனால், அயோத்திதாசர் பவுத்தத்தை இன்னொரு சடங்குகள் நிறைந்த மதமாக நிலைநிறுத்துகிறார் என்பது, அவரைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதாகும்.

அயோத்திதாசரின் உத்தியில் மூன்று படிகள் தெளிவாகத் தென்படுகின்றன. முதலாவது திரிபற்ற நிலையில் இருந்த பண்பாட்டை வெளிக் கொணருவது. இரண்டாவது, இடைப்பட்ட காலத்தில் பண்பாட்டில் ஏற்பட்ட திரிபுகளை விளக்குவது. மூன்றாவது, இன்றைக்கான பண்பாட்டை உருவாக்குவது. இந்த மூன்றாவது படி, முதல் படியையே திருப்பிக் கொண்டு வருவதல்ல. ஆனால், முதல் இரண்டு நிலைகளையும் ஆராய்ந்து காலத்திற்கேற்ப மூன்றாவது நிலையை உறுதிப் படுத்த வேண்டும். அயோத்திதாசருடைய இந்த ஆராய்ச்சி விரவிக் கிடக்கும் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கைகள், சமய வழிமுறைகள், வழிபாடுகள் இவைகளின் இடையே ஊன்றி நன்று வெளிப்படுகின்றது. பரந்துபட்ட சாதாரண மனிதர்கள் அடங்கிய சமுதாயத்தை, அவர்கள் இருக்கும் நிலையிலேயே ஒருங்கிணைத்து விடுதலையை நாடி முன்னேற முயலுகின்றது.

அயோத்திதாசர், சமத்துவம், நீதி ஆகிய நவீன கோட்பாடுகளை உள்ளடக்கிய ஓர் பரந்துபட்ட பண்பாட்டு அறிவியல் உலகத்தை, வரலாற்றின் தொடர்ச்சியாக விரித்துணர்த்த முயல்கிறார்; இம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.

ஆகவேதான் அவரது எழுத்துகளும், சிந்தனைகளும் வலுவாகவும், திறமாகவும் வெளிப்படுகின்றன. பவுத்தம் பற்றிய அயோத்திதாசரின் விரிவாக்கம், தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள பெருவாரியான சமுதாயங்களின் வாழ்க்கை, சமயம், நீதிறை இவை பற்றிய உள்ளுணர்வுகளைத் தொடுகின்றது. புதைந்து கிடக்கும், தொடர்ந்து புதைக்கப்படும் பெருவாரி சமுதாயத்தின் அடிமட்ட உள்ளுணர்வுகளைத் தூண்டி எழுப்பி, அதற்குள்ளாகவே நவீன கோட்பாடுகளின் ஆரம்பங்களைக் காணவும், அவற்றை நீர் வார்த்து வளர்க்கவும் முயற்சி செய்கிறார்.

இந்தியாவில் பெரும்பாலும் நவீனம் என்பது, 25 நூற்றாண்டுகளாக மக்கள் வாழ்ந்து, வளர்த்து வந்த போராட்ட வாழ்க்கையை ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டு, பண்பாட்டுத் தொடர்ச்சியற்ற அல்லது வேறு ஒரு பண்பாட்டில் வளர்ந்த நவீன கோட்பாடுகளை இணைப்பது. அதற்கு மாறாக, உண்மை நவீனம் என்பது வரலாறு, பண்பாடு என்பவற்றிற்குள்ளிருந்தே மலர்வது, வெளிப்படுவது.

அதன் மூலம் சமூகம் பண்பாடும் மாறுதலடையும். அயோத்திதாசருடைய எழுத்துகளை முழுமையாகப் படித்துணராமல், இங்கொன்றும் அங்கொன்றுமாக வாசிப்போருக்கு இந்தப் பிரச்சனை கட்டாயம் எழும். மேலைநாடுகளில் எல்லாம் பகுத்தறிவு, சமத்துவம் இவை பண்பாட்டுக்குள்ளிருந்தே வெளியேறின. ஆனால், அவை ஆதிக்கத்தின் மூலம் பொதுமையாக்கப்பட்டு, ஏனைய பண்பாடுகளையும் நவீனப்படுத்தும் ஏகாதிபத்திய வேலையில் இறங்கின. அப்படியான காலகட்டத்தில் அயோத்திதாசர் பண்பாட்டுச் சிறப்பையும், பகுத்தறிவையும், சமத்துவத்தையும் தோண்டியெடுக்க முயல்கிறார்.

இன்றைய மேல்மட்டத்தினரின் பண்பாடு தவிர்த்த, அதைக் கடந்ததொரு கண்ணோட்டம் மூலம் வாசிக்கும் பொழுது, அயோத்திதாசரின் சொல்லாடலில் காணப்படும் "பண்பாட்டு அடர்த்தியே' சடங்குகள் நிறைந்த மதமாகத் தென்படுகிறது. அவரது எழுத்துகளை உன்னிப்பாகப் படித்து உணர முயன்றால், வரிகளுக்கிடையில் பெருவாரி மக்களை ஒருங்கிணைத்து விடுதலை நோக்கி முன்னேறும் உந்துதலைத் தெளிவாக உணரலாம். பண்பாட்டுப் பிரச்சனைகளை வெளியில் இருந்து பாராமல், உள்ளுணர்வுடன் உணர்ந்து கொள்ள அயோத்திதாசர் வழிகாட்டுகிறார். அவர் கூறியவற்றில் சில காலகட்டத்தில் மறைந்து போகும். ஆனால், அவரது அணுகுமுறை நமக்குப் பெருமளவில் பயன்படும்.

அயோத்திதாசர், இம்மண்ணின் ஆதித்தமிழர்களான சக்கிலியர்களை மிகவும் கீழாகப் பார்த்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தும் அளவுக்கு அவருடைய எழுத்துகளில் ஆதாரம் காணப்படுகிறதே?

காலனிய ஆதிக்கத்தில் எழுச்சியடைந்த நவீன பார்ப்பனியம், பஞ்சமர் என்ற பெயரால் சமூகக் குழுக்களைத் தள்ளியும் தாழ்த்தியும் வைத்தது. அதில் பறையர், சக்கிலியர் இன்னும் பிற குழுக்களும் உட்பட்டனர். இதனைக் கண்டித்துப் பேசும் பொழுது அயோத்திதாசர், தள்ளிவைக்கப்பட்ட குழுக்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். ஒன்று வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர், மற்றொன்று தானாகவே முன்னேறாமல் பின்தங்கியோர். இதில் பறையர் சதாயத்தை முன்பிரிவிலும் சக்கிலியர் சதாயத்தைப் பின்பிரிவிலும், இன்னும் சில சமுதாயங்களோடு இணைத்தும் காட்டுகிறார்.

சக்கிலியர் சமுதாயத்தைப் பொறுத்த மட்டிலாவது, இந்தப் பிரிவினை தவறானது என்பது எனது அனுபவம். கோயம்புத்தூர் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த காலத்தில், நான் கண்ட உண்மை. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மற்ற சமுதாயங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அத்தனையும் சக்கிலியர் சமுதாயத்திற்கும் உண்டு. அவர்களும் வரலாற்றில் தாழ்த்தப்பட்டோரே. விவசாயம் தவிர்த்த ஏனைய பணிக்களங்களில் சிறப்பாக வாழ்ந்த இந்த சமுதாயம், காலனியாதிக்கத்தின் கீழேயே தன் நிலை இழந்து பெருவாரியாகத் தாழ்த்தப்பட்டது.

இந்த தாழ்த்தப்பட்ட நிலையை, அவர்களது தமிழ் இலக்கிய அறிவு மூலம் கதைகள், கவிதைகள் விடுகதைகள் மூலம் கண்டறிய முடிந்தது. இவர்களில் பெரும்பான்மையோர் இருமொழி பேசுவோர். இது குறித்து அவர்களைத் தமிழரல்லர் என்று கருதுவது தவறு. ஏனைய தமிழருக்கு இல்லாத, கூடுதலான திறமையிது என்றே கொள்ள வேண்டும். அவர்கள் இருமொழி பேசுவதால், தமிழில் அவர்களுக்குள்ள திறமை, ஏனையோருடையதைவிடச் சற்றும் குறைந்தது அல்ல.

மேலும், நவீன காலகட்டத்தில், சமுதாயக் குழுக்களைப் பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிரிப்பதிலான சிக்கல்களை சமூகவியலார் பெரிதும் விவரித்துள்ளனர். ஆகவே, அயோத்திதாசரின் இந்த வரலாற்றுக் கணிப்பு தவறானது. இதை மூடி மறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை.

மேலும், அயோத்திதாசரின் முழுமையான வரலாற்று விளக்கங்களில் ஏற்பட்டுள்ள தவறு இது மட்டுமல்ல. ஆனால், மேற்கூறிய சந்தர்ப்பத்தை ஆதரவாகக் கொண்டு, அயோத்திதாசரை சக்கிலியர் சமுதாய விரோதி என்றோ, அவர் பறையர்களின் பிரதிநிதி என்றோ, அவர் முழுமையாக சமத்துவ சமுதாயம் படைப்பதில் ஆர்வமற்றவர் என்றோ கணிப்பது முற்றிலும் தவறானது. அப்படிப்பட்ட கணிப்பு, தாழ்த்தப்பட்ட குழுக்களுக்கு மட்டுமல்லாது முழு தமிழ்ச் சமுதாயத்திற்குமே பேரிழப்பாகும்.