"என்னங்க, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். கடிதம் போட்டிருகிறார்கள். நான் போய் பார்த்துவிட்டு வரட்டுமா?" எனக்கு எரிச்சல். என்ன, அடிக்கடி அம்மா வீட்டுக்கு?
"ம்ஹும். போகக்கூடாது" ஒரு நிமிடம் மெளனம்.
"இல்லை...நான் போவேன்"
"நான் சொல்லுகிறேன். நீ போகக்கூடாதென்று."
"நான் சொல்லுகிறேன். போவேனென்று."
"என்னுடைய அனுமதி இல்லாமல் நீ எப்படிப் போகிறாயென்று நான் பார்க்கிறேன்."
"என்னுடைய வீட்டுக்குப்போக எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை."
"நீ என்னுடைய மனைவி என்பது ஞாபகம் இருக்கட்டும்."
"அதற்காக எனக்கு அம்மா இல்லாமல் போய்விடுவார்களாக்கும்."
"ம்ம்... அதிசயமான மகள்."
"ம்ம்... அதிசயமான புருஷன்."
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு."
வாக்குவாதம் நின்றுவிட்டது. அதற்கப்புறம் அபிநயங்கள் மாத்திரம் அரங்கேறின. நான் முறைத்தேன். பற்களை நறநறத்தேன். ம்ஹும்...என்னுடைய மனைவி அதையெல்லாம் கவனித்ததாகக்கூட காட்டிக்கொள்ளவில்லை.
சீச்சீ...கல்லைக் கிள்ளினால் கைதானே வலிக்கும் என்று வெறுப்புடன் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டேன். அடுத்த ரயிலில் என்னுடைய மனைவி அவளுடைய அம்மா வீட்டுக்கு புறப்பட்டுப் போய்விட்டாள்.
தோல்வி! மிகப்பெரும் தோல்வி! ஆதாமிற்கு அடுத்தபடியாக இதோ ஒரு ஆண்மகன் தோற்றுப் போயிருக்கிறான். ரோட்டிலும், பள்ளிக்கூடத்திலும், பலகாரக் கடையிலும், கடற்கரையிலும், நடந்துகொண்டும், உட்கார்ந்துகொண்டும், மென்றுகொண்டும், படுத்துக்கொண்டும் யோசித்துப்பார்த்தேன். ஏன் இப்படி நடந்தது? மூளையை கசக்கி விட்டுக்கொண்டு யோசித்தேன். அதன் பலனாகவோ என்னவோ காரணம் பிடிபட்டது. அதனால் இப்போது பயனில்லை. என்னுடைய மனைவி இந்நேரம் அவளுடைய அம்மா வீடு போய்ச்சேர்ந்திருப்பாள்.
இன்று காலையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு காரணம் நிச்சயமாக கடவுள்தான். அறிவு மரத்தின் பழத்தை தின்னக்கூடாது என்றல்லவா கடவுள் கட்டளை போட்டிருந்தார். அந்தக்கட்டளையை மீறும் பெரும் பொறுப்பை சாத்தான் எடுத்துக்கொண்டான். ஏவாளைப் பயன்படுத்தி அதைச் செய்தும் முடித்துவிட்டான். கூடாது என்ற சொல் ஒரு சவாலாக அல்லவா நம்முடைய காதில் ஒலிக்கிறது. எதிர்ப்பும், அதிகாரமும், கொடூரமும் அல்லவா அந்தச் சொல்லில் தோய்ந்திருக்கின்றன. சவாலை ஏற்றுக் கொள்ளுவதுதானே மனிதனின் குணம்!
அன்றைய தினம் கூடாது என்ற சொல்லை கடவுள் பயன்படுத்தாமல் இருந்திருப்பாரேயானால் இன்றைய தினம் மனிதர்கள் பாவிகளாக திரிந்து கொண்டிருக்கமாட்டார்கள் இல்லையா?
ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு முன் என்னுடைய மகனை அழைத்து குரோட்டன்ஸ் இலையெல்லாம் பறிக்கக்கூடாது என்று எச்சரித்து வைத்தேன். கால்சட்டை நாடாவைப் பிடித்திழுத்துக்கொண்டு அவன் லேசாக சிரித்தான். அந்த சிரிப்பின் பொருள் அன்று மாலையில்தான் எனக்குத் தெரிந்தது. குரோட்டன்ஸ் இலைகளெல்லாம் புழு தின்றவை போலாகியிருந்தன.
போன மாதம் வந்து சேர்ந்த வேலைக்காரியின் கதையும் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. "இதோ பார். பையும் பணமும் வைத்திருக்கிறேன். கடைக்குப்போய் காய்கறி வாங்கிவா. என்னிடம் பொய்க்கணக்கு சொல்லக்கூடாது. பார்த்துக்கொள். எனக்கு அதெல்லாம் பிடிக்காது," என்று உபதேசம் செய்து என்மனைவி வேலைக்காரியை கடைக்கு அனுப்பி வைத்தாள்.
'எதிலாவது பொய் சொல்ல முடியுமா?' என்று யோசித்தபடிதான் அவள் நடையைக் கட்டியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பிவந்து கணக்கு ஒப்பிக்கும்போது ஐந்து ரூபாய்க்கு வாங்கிய பாகற்காயை ஏழு ரூபாய் என்றும், ஏழு ரூபாய்க்கு வாங்கிய பச்சை முள்ளங்கியை பத்து ரூபாய் என்றும் பத்து ரூபாய்க்கு வாங்கிய காரட்டை பன்னிரண்டு ரூபாயென்றும் சொல்லியிருப்பாளா?
'படிக்காமல் இருக்கக்கூடாது' 'ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொள்ளக் கூடாது', 'கெட்ட பையன்களோடு சேரக்கூடாது', 'புகை பிடிக்கக்கூடாது' என்றெல்லாம் புத்திமதி சொல்லித்தான் நாம் நம்முடைய பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகிறோம். ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு சவாலாகத்தான் அவனுக்கு ஒலிக்கிறது. சவாலை ஏற்றுக்கொள்ளாத வாலிபனும் உண்டா இந்த உலகத்தில்? பலன் என்ன தெரியுமா?
பாடம் படிப்பது, வகுப்பில் கவனிப்பது போன்ற சாதாரண விஷயங்களை வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு நண்பர்களை சம்பாதிக்கிற முக்கியமான வேலையைப் பார்க்கிறான். முடியுமானால் நான்கைந்து வம்புகளை தேடிப்போகிறான். புகைபிடிக்கும் வித்தைகளையும் தெரிந்துகொள்ளாமல் விடுவதில்லை.
'விளம்பரம் ஒட்டக்கூடாது' என்ற வாசகத்தை அக்கறையோடு நம்வீட்டு சுவரில் எழுதிவைக்கிறோமே, என்ன நடக்கிறது? அடுத்தநாள் காலையில் அந்த வாசகம் ஒரு சினிமா போஸ்டருக்குள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.
'இங்கே துப்பக்கூடாது' என்ற எழுதப்பட்ட போர்டுகள் ஆயிரம் பணிக்கங்களின் சேவையை செய்து கொண்டிருக்கும். நகரப் பூங்காக்களில் புதிதாக வர்ணம் பூசிய பெஞ்சுகளில் 'தொடக்கூடாது' என்று எழுதிய போர்டுகளை வைத்திருப்பார்கள். அதை லட்சியம் செய்யாமல் பக்கத்து மரங்களில் விரலைத் தேய்ப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்!
நம்முடைய பேருந்துகளிலெல்லாம் 'கைகளை வெளியே நீட்டக்கூடாது' என்றும் 'தலையை வெளியே நீட்டக்கூடாது' என்றும் 'பஸ் ஓடும்போது வெளியே துப்பக்கூடாது' என்றும் எழுதி வைத்திருப்பார்கள். இவற்றையெல்லாம் கொஞ்சம் மாற்றி எழுதக்கூடாதா?
'கைகளையோ தலையையோ வெளியே நீட்டுபவர்கள் அவை இல்லாமல் பயணம் செய்ய வேண்டியிருக்கும்' என்று எழுதலாம். 'ஓடும் பஸ்ஸிலிருந்து வெளியே துப்புகிறவர்கள் தங்களுடைய பற்களை கைகளில் ஏந்திச் செல்ல நேரிடலாம்' என்று கூட எழுதி வைக்கலாம்.
நமக்கு இபோதாவது ஞானோதயம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். நண்பர்களே! நம்முடைய ஆண்வர்க்கம் தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், நம்முடைய பத்தினிமார் கள் பிறந்த வீட்டுக்குப் போக வேண்டுமென்று அபிப்பிராயப்படும்போது உரையாடல் இப்படி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
"என்னங்க, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். கடிதம் வந்திருக்கிறது. நான் போய் பார்த்துவிட்டு வரட்டுமா?"
"சரி போய்வா. ஏதாவது காரணம் சொல்லி போகாமல் இருந்துவிடாதே. நானும் கூட வரட்டுமா?"
"உங்களுக்கு ஏதுங்க லீவு?"
"லீவா? காஷுவல் லீவு பூஜ்யம்தான். சம்பளமில்லாத லீவு எடுத்துக் கொள்ளலாம்."
"வேண்டாங்க. நான் மட்டும் காலையிலே போய்விட்டு மறுநாள் சாயங்காலம் திரும்பி விடுகிறேன்."
"வேண்டாம்! வேண்டாம்! பிரயாண அலைச்சல் உன் உடம்புக்கு ஆகாது. நாலு நாள், ஒரு வாரம் கழித்து உன் அம்மா குணமானதற்கு அப்புறம் புறப்பட்டு வந்தால் போதும்."
"அது சரி. சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்களாம்?"
"அதற்கா கஷ்டம்? ஹோட்டலில் இருந்து எடுப்புச் சாப்பாடு கொண்டுவந்தால் போயிற்று. இருபத்தைந்து ரூபாய்தானே, ஒரு நாளைக்கு! வெறும் இருபத்தைந்து ரூபாய். நீ அவசியம் போக வேண்டும். ரொம்பவும் முக்கியமான விஷயம். ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிப் போகாமல் இருந்துவிடாதே!"
"வேண்டாங்க, நான் போகவில்லை. அடுத்த மாதமாவது போய்விட்டு வர முடியுமா என்று பார்க்கிறேன்."
வெற்றி. நமக்கு வெற்றி!
ஆதாமுக்குக்கூட கிடைக்காத வெற்றி நமக்கு கிடைத்திருக்கிறது.
- மு.குருமூர்த்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கூடாது...கூடவே கூடாது!
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: கட்டுரைகள்