பகவான் தாஸ் (23.4.1927 – 18.11.2010)
டாக்டர் அம்பேத்கரின் அரிய ஆங்கில நூல் தொகுப்புகள், இன்று நமக்கு கிடைப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே (1963 – 1980) நான்கு தொகுப்புகளை தன் சொந்த முயற்சியால் வெளியிட்டவர் பகவான் தாஸ். தன்னுடைய 16ஆவது வயதில் "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில்' தன்னை இணைத்துக் கொண்ட பகவான் தாஸ், அம்பேத்கருடைய இறுதிக் கட்டத்தில் (1955 – 56) அவருக்கு ஆய்வு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தில் தூய்மைத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த இவர், மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்துவிட்டு, இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய விமானப் படையின் ராடார் பிரிவில் பணியாற்றினார். 1957இல் பகவான்தாஸ் ரமா தேவியை வாழ்விணையராக்கிக் கொண்டார். இவர்களுக்கு ராகுல் தாஸ் என்ற மகனும், சுரா தராபுரி மற்றும் சோயா ஹட்கே என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். அம்பேத்கரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பகவான் தாஸ், தன்னையும் குடும்பத்தையும் பவுத்தத்தில் இணைத்துக் கொண்டார்.
1970–களுக்குப் பிறகு அரசியல் விஞ்ஞானத்திலும், சட்டத்திலும் தேர்ச்சி பெற்ற பகவான் தாஸ், 20–க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக, "நான் ஒரு தூய்மைத் தொழிலாளி' என்ற இந்தி நூல், தனிச் சிறப்பைக் கொண்ட புகழ் பெற்ற நூலாகும். 1983 இல் ஜெனிவாவில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில், தீண்டாமை தொடர்பான ஆதாரங்களை முன்வைத்து, அவர் ஆற்றிய உரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1998 இல் மலேசியாவில் நடைபெற்ற உலக தலித் மாநாட்டிலும் முக்கியப் பங்காற்றினார். நமக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான நேரடி தொடர்பாகத் திகழ்ந்த பகவான் தாஸ் என்ற ஆளுமை – நவம்பர் 18, 2010 அன்றோடு நம்மை விட்டுச் சென்றது. இருப்பினும், அம்பேத்கர் மீதும் அவர் கொள்கைகள் மீதும் அவர் வைத்திருந்த ஆழமான பற்று நம்மை தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கும், தலித் இயக்கங்களுக்கும் உற்ற தோழராக, இறுதிவரை ஓர் அம்பேத்கரியவாதியாகவே வாழ்ந்த பகவான் தாஸ் அவர்களுக்கு நம் வீர வணக்கம்!
பகவான் தாஸ் அவர்களின் நேர்காணல்
தலித் இயக்கத்தோடு நீங்கள் உங்களை எவ்வாறு இணைத்துக் கொண்டீர்கள்?
நான் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு தீண்டத்தகாத குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை ஓர் அஞ்சல் அலுவலகத்தில் துப்புரவுப் பணி செய்து வந்தார். என்னுடைய தாயும் தூய்மைப் பணி செய்யும் குடும்பத்தில் இருந்து வந்தவர்தான்! பல தருணங்களில் டாக்டர் அம்பேத்கரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1943 ஆம் ஆண்டுதான் நான் அவரை முதலில் சந்தித்தேன். நான் விமானப் படையில் சேர்ந்த பிறகு, மும்பையில் வேலை கிடைத்தது. அப்போதெல்லாம் நான் அம்பேத்கருடைய வீட்டுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் சென்று அவரை சந்திப்பேன். அவருக்கு தேவையான – நாளேடுகளிலிருந்து நறுக்குகளை வெட்டி எடுப்பது, தட்டச்சு செய்வது, பல்வேறு அலுவலகங்களில் இருந்து அவர் கேட்கும் தகவல்களை சேகரித்து தருவது என – பல உதவிகளை செய்து கொடுத்தேன். இந்த வகையில்தான் தலித் போராட்டத்துடன் என்னை இணைத்துக் கொண்டேன். 1956 இல் டாக்டர் அம்பேத்கர் பவுத்தத்திற்கு மாறிய பிறகு, அவர் வழியைப் பின்பற்றி, 1957இல் நானும் என்னுடைய குடும்பத்தினருடன் பவுத்தத்தை தழுவினேன்.
டாக்டர் அம்பேத்கர் ஏன் பவுத்தத்திற்கு மாறினார்?
தலித் மக்கள் எப்பொழுதுமே இந்துக்களாக இருந்ததில்லை. "அவர்ணர்'களான அவர்கள், நால்வர்ண இந்து சாதிய அமைப்பிற்கு வெளியில்தான் இருந்தனர். டாக்டர் அம்பேத்கரைப் பொருத்தவரை, பவுத்தம்தான் தலித் மக்களுடைய உண்மையான மதமாக இருந்தது. அது, சுதந்திரத்தையும் விடுதலையையும் உள்ளடக்கிய மதமாகும். டாக்டர் அம்பேத்கர் மிகச் சரியாக நம்பியதைப் போல, அனைத்து முக்கிய சமூக மற்றும் அரசியல் புரட்சிகள் நடைபெறுவதற்கு முன்னால் – மத மற்றும் பண்பாட்டுப் புரட்சிகள் நடைபெற்றாக வேண்டும். தலித் போராட்டத்திற்கு, மதமாற்றம் என்பது ஓர் அடிப்படைத் தேவையாகும்.
தலித் மக்களாகிய நாம் ஒருபோதும் இந்துக்களாக இருந்தது இல்லை. உண்மையில், நமக்கு நம்முடைய சொந்த மத அமைப்பு முறை ஒன்று இருந்தது. அது, பார்ப்பனிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. என்னுடைய சொந்த சமூகத்தையே (பாங்கிஸ்) எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுடைய நிலையே நிச்சயமற்றதாக இருந்தது. அவர்கள் இந்துக்களும் அல்லர்; முஸ்லிம்களும் அல்லர். எங்களை குறிப்பாக, ஏதேனும் ஒரு சமூகத்தில் பொருத்திக் கொள்வதில் சிரமம் இருந்தது. ஏனெனில், நாங்கள் எந்த இந்து கடவுளர்களை யும் வணங்கவில்லை; தொழுவதற்கென்று எந்த மசூதிக்கும் செல்லவில்லை. எங்களுக்கென்று கிராமத்து நாயகர்கள் இருந்தனர். அவர்களைத்தான் நாங்கள் வழிபட்டோம். ஆனால், இவ்வழக்கம் தற்பொழுது மறைந்து வருகிறது. ஏனெனில், இந்து அமைப்புகள் எங்களை துணிந்து இந்துமயமாக்கி வரு கின்றன. தூய்மைப் பணியாளர்களாகிய எங்களுக்கு லால் பெக் என்றொரு ரட்சகர் இருந்தார். அதற்குப் பிறகு நாங்கள் ராமாயணத்தை எழுதிய வால்மீகி வழிவந்தவர்கள் என்று கூறி, ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள் எங்களை இந்துக்களாக மாற்ற முயன்றனர். ஆனால், நான் இத்தகைய கட்டுக்கதைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
லால் பெக் என்பவர் யார்?
லால் பெக் என்பவர் உண்மையில் லால் பிக்கு என்ற பவுத்த துறவிதான் என்று சிலர் சொல்கின்றனர். வட இந்தியாவில் உள்ள தூய்மைத் தொழில் செய்யும் சமூகத்தினரின் வழிபாட்டுப் பாடல்களை படித்தீர்கள் என்றால், அவை லால் பெக்குக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதை அறியலாம். இத்தகைய வேண்டுதல்கள் "குர்சி நாமா' என்று அழைக்கப்பட்டன. தற்பொழுது, பல இடங்களில் குர்சி நாமா, லால் பெக் மற்றும் பாலா ஷா போன்றவர்களின் பெயர்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. பாலா ஷா என்பவர், பஞ்சாபில் உள்ள முன்னணி சூபி மார்க்கத்தை சேர்ந்த துறவி. பஞ்சாபி சூபியான வாரிஸ் ஷா தன்னுடைய நூலில் பாடியுள்ளவை, உண்மையில் அவருடைய காலத்தில் பஞ்சாபின் கலைக்களஞ்சியமாகப் போற்றப்படுகின்றன. பாலா ஷா என்பவர் இரு வகையான கீழ் சாதியினர் என்று அழைக்கப்படும் தூய்மைத் தொழிலாளர்கள் அல்லது சுஹ்ராஸ் என்று அழைக்கப்படுபவர்களின் ஆசான்.
தூய்மைத் தொழிலாளர்கள் இன்றளவும் இத்தகைய மரபைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்களா?
கெடுவாய்ப்பாக, வெகு சிலரே இது குறித்து அறிந்துள்ளனர். இம்மரபு வேகமாக அழிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்து அமைப்புகள் தங்களுடைய மதத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காக, தூய்மைத் தொழிலாளர்களை இந்து வட்டத்திற்குள் இழுத்துக் கொள்கின்றன. தூய்மைத் தொழில் செய்யும் சமூகத்தினர், 1873 இல் தொடங்கி 1931 வரை நடந்தது போல, அவர்கள் அனைவரும் கிறித்துவத்திற்கு மாறி விடுவார்களோ என்று இந்து அமைப்பினர் அஞ்சுகின்றனர். எனவே, இவர்களுடைய விரிவான செயல் திட்டத்தின்படி, ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் வழிவந்தவர்களே வால்மீகிக்கள் என்ற கட்டுக் கதையை பரப்பத் தொடங்கினர். இம்மக்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பாலா ஷா, லால் பெக் என்பவையெல்லாம் வால்மீகியின் இன்னொரு பெயர்கள் என்று திரிக்கின்றனர்.
வால்மீகி எப்படி ராமாயணத்தில் சாதி அமைப்புக்கு ஓர் அங்கீகாரத்தை அளிக்கிறார்? தியானம் செய்தான் என்பதற்காகவே சம்புகன் என்ற சூத்திரனின் தலையை ராமன் வெட்டினான் என்று வால்மீகி கூறுகிறாரே?
எந்த வால்மீகியைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள்? வர்ணனின் பத்தாவது மகனாக தன்னை சொல்லிக் கொள்கின்றவனையா? அல்லது புராணங்களில் கொள்ளைக்காரனாக காட்டப்படும் வால்மீகியையா? அப்பட்டமான கட்டுக் கதை இது! பார்ப்பனியம் முன்வைக்கும் வால்மீகி ஒரு பார்ப்பனர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி, சாதி அமைப்பை ஆதரிக்கிறார். இந்நிலையில் அவர் எப்படி தூய்மைத் தொழில் செய்பவராக இருக்க முடியும்? உண்மையில் வால்மீகி ஒரு பார்ப்பனர்.
இத்தகைய கற்பனைக் கதைகளை, தூய்மைத் தொழிலாளர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம் (சமற்கிருதமயமாக்கல்) தங்களுடைய சமூக நிலையை அவர்களால் உயர்த்திக் கொள்ள முடிந்ததா?
இல்லை. இல்லவே இல்லை. நான் இத் தகைய போக்கை சமஸ்கிருதமயமாக்கல் என்று சொல்ல மாட்டேன். மாறாக, வெறுக்கத் தக்க இப்பார்ப்பனியப் பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றுவது என்கிறேன். சமஸ்கிருதமயமாக்கல், தூய்மைப் பணியாளர்களின் நிலையில் எவ்வித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. சாதியின் பிரச்சினையே என்னவென்றால், நீங்கள் அதை வீட்டிலுள்ள முன் கதவு வழியாக தூக்கி எறிந்தால், அது மீண்டும் ஜன்னல் வழியாகவோ, வீட்டின் பின்புற வழியாகவோ நுழைந்து விடுகிறது. கிறித்துவம், சீக்கியம் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களுக்கு சென்ற தலித் மக்களுடைய மதமாற்ற இயக்கங்களின் நிலை இதுதான். இவை கொள்கை அளவில் இந்து மதத்தைப் போல் அல்லாது சமத்துவமான மதங்கள்தான். சமஸ்கிருதமயமாக்கல் என்பது, சில பழக்க வழக்கங்களையும், பெயர்களையும் மேம்போக்காக மாற்றக்கூடியது. ஆனால், அது தலித்துகள் மீதான "மேல் சாதி'யினர் என்று சொல்லப்படுகின்றவர்களின் பார்வையை மாற்றுவதில்லை. தற்பொழுது வால்மீகிக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களின் அனுபவம் இது. எனவே, ஒரு தூய்மைப் பணியாளர் தன்னை வால்மீகி அல்லது சமார் அல்லது ரவிதாசி அல்லது அதீ – தர்மி அல்லது தச்சர் – விஸ்வகர்மா என்று எப்படி அழைத்துக் கொண்டாலும், இவர்கள் மீதான இந்துக்களின் மனநிலையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படுவதில்லை!
தலித் விடுதலைக்கானப் போராட்டத்தில், சமஸ்கிருதமயமாக்கல் எத்தகைய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது?
என் கருத்துப்படி, தலித் மக்களை இந்து மதத்திற்கு அல்லது இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் – பார்ப்பனியத்திற்கு மாற்றுவதற்கு மற்றொரு பெயர்தான சமஸ்கிருதமயமாக்கல்! தலித் விடுதலைக்கான வேட்கையில் இது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது, தலித்துகளை மேலும் பிளவுபடுத்துகிறது. வடஇந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ள "சமார்'களை எடுத்துக் கொள்ளுங்கள். சமஸ்கிருதமயமாக்கலால் அவர்கள் தற்பொழுது 62 உட்சாதிகளாகப் பிளவுபட்டுள்ளனர். இவர்களுக்கிடையே திருமண உறவுகள் இல்லை. உத்திரப் பிரதேசத்தில் தூய்மைத் தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருக்கின்றனர். இது தவிர, பல நூற்றாண்டுகளாக இம்மக்கள் மீது தீண்டாமையை கடைப்பிடிக்கும் மக்களின் மனநிலையில், சமஸ்கிருதமயமாக்கல் உண்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வடிவங் கள் மாறலாம், முறைகள் மாறலாம், ஆனால் ஆழமான வன்மம் நிலைத்திருக்கிறது.
தலித்துகளை இந்துமயமாக்குவது, தலித் எழுச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. ஏனெனில், அதிகளவுக்கு இந்துமயமாக்கப்பட்ட தலித்துகள், இந்துமயமாக்கலுக்கு ஆட்படாத தங்கள் சொந்த சகோதரர்களையே வெறுக்கின்றனர். இப்பொழுது, ஒரு வால்மீகி ஆணை மற்றொரு உட்சாதியான "தானுக்' அல்லது "பன்ஸ்பாட்' பெண்ணை மணந்து கொள்ளச் சொன்னால், அவர்கள் வால்மீகிகள் அளவுக்கு இந்துமயமாக்கலுக்கு ஆட்படாததால், அவர்களை திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகின்றனர்.
தலித் விடுதலைக்கானப் போராட்டத்தில், இந்துத்துவ செயல்திட்டம் எத்தகைய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது?
இந்துக்கள் அல்லாத தலித் மக்களை இந்துத்துவ அமைப்புகள் இந்து வட்டத்திற்குள் கொண்டுவந்து, அவர்களை அடிநிலையிலேயே விட்டுவிடும். காந்தியும் இதைத்தான் செய்ய முயன்றார். உயர் சாதியினர் என்று சொல்லப்படுகின்றவர்களுக்கு அடிமை ஊழியம் செய்யவே கடவுள் தலித் மக்களை உருவாக்கினார் என்றும், எனவே தலித்துகள் தங்கள் சாதிக்குரிய தொழில்களை தொடர்ந்து செய்ய வேண்டும்; அப்போதுதான் அடுத்த பிறவியிலாவது "உயர்சாதி'யினராகப் பிறக்க முடியும் என்றார் காந்தி. இந்துத்துவ செயல்திட்டம் என்று சொல்லப்படுபவை எல்லாமே இதுதான். எனவே, என் பார்வையில், இந்துத்துவத்தின் எழுச்சி என்பது மிக ஆபத்தான வளர்ச்சியாகும். நீங்கள் உண்மையில், மேம்போக்காக இல்லாமல் மிக அடிப்படையான – அமைப்பு ரீதியான மாற்றத்தைக் கொண்டு வருவதில் அக்கறையோடு இருந்தால், நீங்கள் சாதி அமைப்பையும் அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கும் மதக் கொள்கையையும் தாக்க வேண்டும். ஆனால், இதை இந்துத்துவ அமைப்புகளால் செய்ய முடியாது.
இந்துத்துவ அமைப்பில், தலித் மக்களின் நிலை என்ன?
இந்துத்துவ திட்டத்தில், உண்மையான "பொற்காலம்' என்று சொல்லப்படுகின்ற, வேதங்கள் – ராமாயணம் – கீதை – மநுஸ்மிருதி காலத்திற்கு அவர்கள் நம்மை இட்டுச் செல்ல விரும்புகின்றனர். அப்போது தலித் மற்றும் சூத்திரர்களின் நிலை எவ்வாறு இருந்தது? நாம் அடிமைகளைவிட மோசமாக நடத்தப்பட்டோம். இத்தகையதொரு அடிமைத்தனத்திற்குதான் – இந்துத்துவவாதிகள் முன்னிறுத்தும் பார்ப்பனிய வேதங்கள் மத அங்கீகாரம் அளித்துள்ளன. எனவே, இது கண்டிப்பாக அவர்களுக்கான "பொற்கால'மாகத்தான் இருக்கும். சந்தேகத்திற்கிடமின்றி, இது தலித்துகளின் வரலாற்றில் இருண்ட பக்கங்கள். நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், அனைத்து இந்துத்துவ அமைப்புகளும் ஏதோ ஒரு வகையில் வர்ண அமைப்பு முறை நடைமுறைப்படுத்தப்படுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தலித் மக்கள் மீது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நான் அண்மையில், ஆர்.எஸ்.எஸ். முன்னோடியான கோல்வால்கர் எழுதிய நூலை படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், சாதி அமைப்பு நம்மிடையே எந்தத் தீமையையும் விளைவிக்கவில்லை என்கிறார். இதுபோன்ற சாதியைப் பற்றிய புகழுரைகள் அவர்களுக்கு வேண்டுமானால் நன்மை பயக்கும்; நமக்கு கண்டிப்பாக நன்மை பயக்காது. தலித் எழுச்சியின் விளைவாகத்தான் இந்துத்துவ சக்திகள் வளரத் தொடங்கியுள்ளன. தலித்துகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதால், பார்ப்பனிய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்துத்துவ குழுக்கள், தலித்துகளின் விடுதலை வேட்கையை திசை திருப்பி – முஸ்லிம்களுடனும், கிறித்துவர்களுடனும் மோத வைக்கின்றன.
தலித் போராட்டத்தில் மதத்தின் பங்கு இருப்பதாக நினைக்கிறீர்களா?
நான் தனிப்பட்ட முறையில் என்ன கருதுகிறேன் என்றால், ஒரு சமூகம் முறையாக இயங்குவதற்கு மூன்று நிறுவனங்கள் தேவையாக இருக்கின்றன. முதலில் திருமணம் (குடும்பம்); இரண்டாவது அரசு என்ற நிறுவனம்; மூன்றாவது மக்களுக்கு ஓர் அறநெறியை அளித்து, அவர்களை இயக்கக்கூடிய மதம் என்ற நிறுவனம். இந்து மதத்தை விட்டொழிக்க எண்ணிய டாக்டர் அம்பேத்கருக்கு, இது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. எனவேதான் அவர் பவுத்தத்திற்கு ஒரு புது விளக்கத்தை அளித்தார். இது, பல வகையில் தென் அமெரிக்க கத்தோலிக்கர்களின் விடுதலை இறையியலை ஒத்ததாக இருந்தது. அவருடைய மதத்திற்கான தேடலின் முதல்புள்ளி : சமூகத்தில் மதத்தின் பங்கு என்ன? என்பதுதான். மதம் ஒரு நல்ல பாதுகாவலனாகவும் இருக்கலாம்; மோசமான முதலாளியாகவும் இருக்கலாம். ஏனெனில், வரலாற்று ரீதியாக மதம் என்ற நிறுவனம் – ஆக்க ரீதியாகவும் அழிவு ரீதியாகவும் பங்காற்றியுள்ளது.
ஆனால், பல மகாயானவாதிகளும், தேரவாத பவுத்தர்களும் அம்பேத்கர் பவுத்தத்திற்கு அளிக்கும் விளக்கம், பவுத்தத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருப்பதாக சொல்கின்றனரே?
பவுத்த தம்மத்திற்கான டாக்டர் அம்பேத்கரின் விளக்கவுரைகள், மகாயான, தேரவாத விளக்கங்களி லிருந்து பல முக்கிய இடங்களில் வேறுபடுகிறது என்பது உண்மைதான். ஆனால், பவுத்தத்தின் தொடக்கக் காலத்திலிருந்து அவர் மறைவுக்குப் பிறகான காலகட்டம் வரை, பவுத்தம் பன்முகத்தன்மைகளால் விவரிக்கப்பட்டே வந்தது. எடுத்துக்காட்டாக, ஜப்பானில் 1,260 வகையான பவுத்த பிரிவுகள் உள்ளன.
தலித் கிறித்துவ இறையியல் என்ற கருத்துருவாக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வளர்ந்து வரும் தலித் எழுச்சியின் விளைவாக, ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு தலித் கிறித்துவ இறையியல் உருவானது. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், தேவாலயங்களில் உள்ள "மேல் சாதி'யினரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் பேசுவதற்கான தற்காப்பாகவே தலித்தியத்தைப் பயன்படுத்தினர். இருப்பினும், தலித் கிறித்துவ இறையியல் குறிப்பிடத்தக்க விளைவுகளை, தலித் அல்லாத கிறித்துவர்களிடையே ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. உண்மையில் திடீரென தலித் மக்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள தேவாலயத்தின் நோக்கத்தை, சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே தலித் அல்லாத கிறித்துவர்கள் பார்க்கின்றனர். இடஒதுக்கீடுக்காக, பல்வேறு தலித் குழுக்கள் தேவாலயத்தை விட்டுச் செல்வதால், கிறித்துவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பதைக் கண்டு – தேவாலயத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் பெருமளவிற்கு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். எனவே, தலித் கிறித்துவ இறையியல் என்பது, இதைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒன்றாகவும் இருக்கலாம்.
இன்றைய நிலையில் தலித்துகள் – கிறித்துவத்திற்கு செல்வதைவிட, பவுத்தத்திற்கு மாறவே விரும்புகின்றனர் என்று சொல்வீர்களா?
ஆம். இப்பொழுதுதான் நாம் இவ்வாறு பார்க்க முடிகிறது. பவுத்தம் ஒருவித பெருமிதத்தையும், அடையாளத்தையும் கொடுத்து, தங்களுடைய வரலாற்றில் ஓர் பெருமைமிகு அத்தியாயத்தை இணைத்துள்ளது. ஆனால், பவுத்த மதமாற்ற இயக்கம் நாம் நினைத்த அளவுக்கு வேகமாக இதை முன்னெடுத்துச் செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம், பவுத்த துறவிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தியும்கூட, அதன்மீது போதிய அக்கறை செலுத்தப்படவில்லை. நாலந்தா மற்றும் தட்சசீல பல்கலைக் கழகங்கள் தொடக்க காலத்தில் பவுத்த துறவிகளுக்கு இடையறாது அளித்த பயிற்சிகள் போல நடத்தப்பட வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். இதன் தொடக்கமாக, நம் பவுத்த துறவிகளை பயிற்சிக்காக தாய்லாந்திற்கு அனுப்பினோம். ஆனால், இதில் பலரும் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து பணியாற்றுவதற்கு பதில் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றுவிட்டனர். எனவே, இது நம்மிடையே உள்ள ஒரு பெரிய சிக்கல். ஆனால், உத்திரப்பிரதேசத்தில் ஒரு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு வருகிறோம். அங்கு பவுத்த நூல்கள் மற்றும் அம்பேத்கரியம் மற்றும் பிற மதங்கள் தொடர்பாக கற்றுத் தரப்படும்.
மகாராட்டிராவைச் சேர்ந்த மக்களிடையே, பவுத்த மதமாற்றம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது?
அவர்கள் மதம் மாறிய பிறகும் அவர்கள் கடைப் பிடித்து வந்த சடங்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படாததால், அவர்களுடைய சமூக நிலையில் பெரிய மாற்றங்கள் தென்படவில்லை. ஆனால் மதமாற்றத்தால், பலர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இந்து கடவுளர்களான ராமனையும், கிருஷ்ணனையும் வணங்குவதை கைவிட்டுள்ளனர். மதமாற்றம் இம்மக்களிடையே – புது அடையாளத்தையும், சுயமரியாதையையும் அளித்துள்ளது.
சந்திப்பு : யோகிந்தர் சிக்கந்த், பிப்ரவரி 2005
தமிழில் : புலேந்திரன்